Pages

Thursday, November 10, 2022

காலங்கள்.. மழைக்காலங்கள்...❤️


தேன் குடித்த வண்டுக்குத் தேன் தான் கள்ளு. அது போல இந்தப் பாடலைக் கேட்டால் இசைத்தேன் இன்பதேன். அதுவே கள்(ளு) ஆகியும் விடுமல்லவா? 

தேன் குடித்த வண்டின் களிப்பு இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் எனக்கெழும். 

கவியரசர் கண்ணதாசனும் “காலங்கள் மழைக்காலங்கள்” பாடலில் “கள்” ஐப் பரவ விட்டிருக்கிறார். ஒவ்வொரு அடிகளும் கள்ளால் நிறைவுற்றிருக்கும்.

வெறும் “கள்” உண்ட மயக்கத்தை அனுபவித்ததில்லை, ஆனால் தாயகத்தில் இருந்த காலத்தில் அப்பம் செய்வதற்குக் கள்ளைப் பயன்படுத்தி மாவைப் புளிக்க வைக்கும் வழக்கம் இருந்ததால் அந்தக் கள் சுவை எப்படியோ ஒட்டிக் கொண்டு விட்டிருக்கலாம்.

“கள் பெற்ற பெருவாழ்வு” டாக்டர் மு.வரதராசனர் எழுதிய அந்தக் கட்டுரையில் “கள்” என்ற விகுதியின் பொருள் மயக்கத்தைப் பற்றி எழுதியிருப்பார். அந்தக் கட்டுரை நம் பள்ளிக்காலத்துத் தமிழ்ப் பாட நூலின் ஒரு அங்கமாக அப்போது இருந்தது.

“கள் பெற்ற பெருவாழ்வு” கட்டுரையைப் படிக்க

https://madhuramoli.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0.../

“கள்ளோ காவியமோ” என்ற நாவலைக் கூட டாக்டர் மு.வரதராசன் எழுதியளித்தும் உள்ளார்.

“காலங்கள் மழைக்காலங்கள்” பாடல் இடம் பிடித்த “இதயத்தில் ஓர் இடம்” படத்தில் ஜெயச்சந்திரனுக்கு ஒரு துள்ளிசை “காவேரி கங்கைக்கு மேலே”  https://www.youtube.com/watch?v=RUTVbpv2CWs  

இலங்கை வானொலியின் அந்தக் காலத்துப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்களில் ஒன்றாகிப் போன “மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள்” https://www.youtube.com/watch?v=krYjIaZeT8c

ஜேசுதாஸ் குரலில் ஒலித்தது பலரின் மலரின் நினைவுகளில் கறுப்பு வெள்ளையாக நிழலாடும்.

இளையராஜா இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடவே இல்லை என்று அலும்பு பிடிப்பவர்களின் மூக்கை உடைக்க இதே படத்தில் அவரோடு  சந்திரன் பாடிய “மணப்பாறை சந்தையிலே” https://www.youtube.com/watch?v=Ew7N1LZYtd8 பாடலும் உண்டு.

மலேசியா வாசுதேவன் அவர்களின் தலை சிறந்த பத்துப் பாடல்களைக் கொடுக்கச் சொன்னால் இந்தப் பாடலை எப்படியாவது முதல் மூன்றுக்குள் நுழைத்து விடுவேன்.

“மணி முத்தங்கள்

நகை மின்னல்கள்

சிரிக்கின்ற பெண்கள் 

காவியங்கள்

மலர் மொட்டுக்கள்

இளஞ்சிட்டுக்கள்

அணைக்கின்ற ஆண்கள் 

ஓவியங்கள்

நேரங்கள் நதி ஓரங்கள்

ஆனந்த காலங்கள்”

என்று மனுஷர் உருகித் தத்தளிக்க, 

“எனை அள்ளுங்கள்

கதை சொல்லுங்கள்

அழகென்னும் தேரில் 

நடை போடுங்கள்

மலர் மஞ்சங்கள்

இரு நெஞ்சங்கள்

பிறர் காண வேண்டாம் 

திரை போடுங்கள்”

சுதந்திரப் பறவையாய் ஜானகியார் கடந்து விடுவார்.

“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “தண்ணி கருத்திருச்சு” போன்ற பாடல்களில் ஒரு கிராமியத்தனமான குரலாக வெங்கலமாக மிளிர்ந்தவர், மிக மெருதுவானதொரு குரல் அலைவரிசைக்கு மாறிப் போய் இந்த மாதிரியான பாடல்களில் அடங்கிப் போய் விடுவார்.

கோடு கிழித்த அந்த அலைவரிசைக்கு மேலே எழாது தன் கோட்டுக்குக் கீழேயே நின்று ஜாலம் செய்யும் மலேசியா அண்ணரின் குரல்.

கிட்டார் மழைத்துளிகள், தபேலாவின் முத்தங்கள், 

உச்சி மோந்து வருடும் புல்லாங்குழல்கள்.....வயலின்கள்

இந்த ராகதேவன் பாடல்கள் சொர்க்கங்கள்

ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள் 

பூக்கள்….

காலங்கள் 

மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள்……

https://www.youtube.com/watch?v=jfVoCIS0xv0

கானா பிரபா

0 comments: