Pages

Monday, November 14, 2022

அப்பிடிப் பாக்குறதுன்னா வேணாம் 💜❤️


சுற்றிச் சுழன்றிடும் கண்ணில்

இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே

பற்றி இழுத்தென்னை அள்ளும்

கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே....

அடித்துப் போட்டது போலதொரு களைப்பில் அமர்ந்தவன் இந்தப் பாடலை ஏனோ கேட்கவேண்டும் என்று தோன்ற கடந்த 1 மணி நேரமாகச் சுழற்றிச் சுழற்றிக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

சிலர் சாப்பிடும் போது பார்த்திருப்பீர்கள் தட்டில் அடுக்கி வைக்கப்பட்ட கறிகளை ஒவ்வொன்றாக நோகாமல் மெல்ல எடுத்துச் சாதத்தோடு கலந்து ஆற அமரச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரம் அவர்களுக்குத் தேவையாக இருக்கும். கருமமே கண்ணாயினர் என்பது போல வேறெங்கும் கவனமில்லாது அன்னப் படையலை உருசி காண்பதே அவரின் சிந்தனையில் இருக்கும். சாப்பாடு ஒன்றே தான் ஆனால் அதை மள மளவென்று அள்ளி வாயில் திணித்து, கோப்பையை வழித்துத் துடைத்து ஐந்து நிமிடத்துக்குள் தமது "வேலை" முடிந்ததே என்று போய்க் கொண்டிருப்பர்.

அது போலத் தான் ஒரு பாடலை அனுபவித்துக் கேட்பதும்.

ஐந்து நிமிடப் பாடல் தான் ஆனால் அந்தப் பாடலின் மெட்டமைப்பு, வரிகளின் பொருத்தப்பாடு, இவற்றையெல்லாம் சுவை கூட்டிச் செவிக் குணவாகத் தரும் இசைக் கோவை இவற்றையெல்லாம் நேசித்துக் கேட்கும் போது அந்தப் பாடல் பதிலுக்கு நம்மிடம் காட்டும் நேசம் இருக்கிறதே ஆஹா.

அப்படி ஒரு பாடலோடு தான் இன்று வந்திருக்கிறேன்.

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம் கண்ணுல தாக்குறதுன்னா வேணாம்" இயக்குநர் பார்த்திபன் சில வருடங்களுக்கு முன் இந்தப் பாடல் பிறந்த கதையை எள்ளுப் போலச் சொல்லியிருந்தார்.

ஒரு சம்பாஷணைக்குண்டான இந்த வரிகளை இசைஞானி இளையராஜா ஆரம்ப வரிகளாக்கிச் சுடச் சுட மெட்டமைத்துப் பிரமிக்க வைத்ததாகப் பார்த்திபன் கூற்று.

இனி நான் முன் சொன்ன விடயத்துக்கு வருகிறேன்.

முதலில் இதைக் கேளுங்கள்

https://soundcloud.com/ashaheer/appadi-parkarathu

இந்த இசைக் குளிகை பாடலின் இரண்டாவது சரணத்தில் பிரவாகமாகப் பாயும். கேட்கும் போது கடல் குளியலில் கைகளைச் சுதந்தரமாக அகல விரித்து நீர்வலையை அலம்பும் போது பிறக்கும் இன்பம் வருகிறதா இல்லையா.

சரி இனி இந்தப் பாடலின் ஆரம்ப இசைக்குப் போவோம்.

https://m.soundcloud.com/ravinat14/appadi?in=ravinat14/sets/ring-tones-raja

இளமைத் துள்ளலாய்க் குதிக்கும் இந்த ஆரம்ப இசையைப் பிரசவித்த போது இசைஞானிக்கு 59 வயது. எண்பதுகளில் வந்த பாடல்களையே மீளவும் கொடுத்துக் கொண்டிருக்கலாம் என்றொரு கருத்தைக் கொண்டிருப்போரின் எண்ணத்தையெல்லாம் இது மாதிரியான புத்திசை கரைத்து விடும். இந்தப் பாடல் வந்த போது 20 வருடங்களுக்குப் பின் இன்று போல் கரைந்து போய் விடுவேன் என்று நினைத்தே இருக்கவில்லை.காலம் போன பின் தான் இன்னும் இனிக்கிறது.

தன் வாழ்நாள் பூராகவும் புதிது புதிதாய் தேடிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கெல்லாம் தான் கட்டிக் காத்த ரசிகச் சூழலுக்குள் (comfort zone) நின்று கொண்டு படைக்க முடியாது.

இது இசைக்கு மட்டுமல்ல எல்லா விதமான வினைத் திறனிலும் உச்சத்தைத் தேடிக் கொண்டிருப்போருக்கான அடிப்படைப் பண்பு. அதுதான் அவரை மாண்பு மிக்கோர் ஆக உயர்த்தும்.

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம்" 

https://soundcloud.com/sridharravi/appadi-parkirthenna-ivan

மாதங்கியின் மயக்கும் குரலோடு இடை இசையில் ஜதி ஒன்று சொல்லி அவரை முழுமையாகப் பாட விட்டு இரண்டாவது சரணத்தோடு இணைந்து கொள்வார் உன்னிகிருஷ்ணன்.

இசைஞானி இளையராஜாவின் இசை மேதமையால் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றிருக்கும் இயக்குநர் குழாம் ஒரு புறமிருக்க, அவரை உள்ளார்ந்த நேசத்தோடு காதலித்துப் போற்றும்

மிகச் சில இயக்குநர்களில் பார்த்திபனும் ஒருவர்.

பொண்டாட்டி தேவை படத்தில் இருந்து இளையராஜாவோடு பார்த்திபன் கூட்டில் இசைப் படையல்கள் வாய்த்ததும் அவை பாடல்களிலும் குறை வைக்காதவை என்றாலும் பார்த்திபனின் குருநாதர்கள் ராஜாவோடு பணியாற்றிய போது கிட்டிய பரவலான வெகுஜன அந்தஸ்த்தைக் கொடுக்கக் கூடிய வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

பாடகி சுதா ரகு நாதன் தமிழ்த் திரையிசையில் பாட வந்து இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் “நிறைந்திருக்கிறது"

“எனை என்ன செய்தாய் வேங்குழலே” வாலியின் கை வண்ணம்,

https://www.youtube.com/watch?v=WQMs5enVRTs

“எனக்கிணை யார் இங்கே இசையில்" 

https://www.youtube.com/watch?v=Hc5uqId_APw

“கண்ணன் நீயென் இசை நாத ஓவியம்"

https://www.youtube.com/watch?v=0jchEUXPTw0

கவிஞர் முத்துலிங்கம் கணக்கில் இரண்டு என்று முத்தான மூன்று பாடல்களோடு, இசைஞானி இளையராஜா இசையில் இருபது வருடங்களுக்கு முன்னர் திரையிசையில் அறிமுகமானார் சாஸ்திரிய சங்கீதப் பாடகி சுதா ரகுநாதன்.

பின்னாளில் பார்த்திபனின் சிஷ்யர் கரு.பழனியப்பன் இயக்கிய “மந்திரப் புன்னகை” படத்தில் இன்னொரு தேமதுரைப் பாடல்

“என்ன குறையோ” என்று தொடங்கும் கண்ணன் பாடலையும் சுதா ரகுநாதன் பாடியளித்ததை ரசித்துப் பகிர்ந்துள்ளேன்.

http://www.radiospathy.com/2010/12/blog-post.html

இசைஞானி இளையராஜாவின் “இவன்" பாடல்களில் வாலி, முத்துலிங்கம், மேத்தா, இளையராஜா, பழநிபாரதி, கபிலன், நா.முத்துக்குமார் என்று பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் கவிஞர் குழாம் ஆகா.....

“அப்படி பாக்குறதுன்னா வேணா

கண் மேலே தாக்குறது வேணா

தத்தித் தாவுறதுன்னா னானா

தள்ளாடும் ஆசைகள் தானா”

தன் மேல் படரும் காதலன் கண்களைத் தவிர்ப்பதற்குத் தான் திரையிசை நாயகிகள் எத்தனை பாடல்களைப் பாடியிருப்பார்கள் இதற்கு முன்பும். அவை காலத்தால் அழியாதவை என்றால் இதுவும் தானே?

“வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சு ஓடுதே”

போலத் தன் பாட்டுகளில் இசையையும், வாழ்க்கையையும் பிணைத்துக் கவி பாடும் திறனாளர் பழநிபாரதி அவர்கள்.

அதனால் தான் கண்களை இசைத்தட்டாகச் சுழற்றி விடுகிறார்.

“இவன்” பார்வையை அவள் தடுக்க, இவனோ அந்தப் பார்வையின் தேடலில் விளைந்ததை உச்சபட்ச உவமைகளோடு ஒப்புவிக்கிறான்.

அந்தப் பேரின்ப வெள்ளத்தில் விழுந்தவர்கள் நாமும் தான்.

தீக்க்ஷண்யாவின் கண்களில் “இவன்” விழுந்தான்.

“பேரின்ப வெள்ளத்தில்

நான் மூழ்கிப் போனேனே.....”

இந்தப் பேரின்ப இசையில் “இவன்” விழுந்தேன்”

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம்" இன்று முழு நாளையும் என்னை ஆக்கிரமித்திருக்கும் இசை விருந்து.

ஆதி தாளம் போட்டு

எனை பாதியாக செய்து

தத்தளிக்க விட்டாயே


https://www.youtube.com/watch?v=Azodz4PitV8


கானா பிரபா


0 comments: