Pages

Saturday, May 28, 2022

“சுப்பண்ணா சொன்னாருன்னா சுதந்திரம் வந்ததுன்னு



“சுப்பண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியலேன்னார்
அப்பண்ணா நாம இன்னும்
அடிமைகள் தானா அண்ணா”

காலை எழுந்ததுமே காத்திருந்து காதில் போட வேண்டும் என்று நினைத்திருக்கும் போல இந்தப் பாட்டு.
உடனே ஓடிச் சென்று கேட்டு விட்டுத்தான் மறுவேலை.

பாடல் வரிகளில் தொழிலாள வர்க்கத்தின் மனக்குமுறல் வெளிப்பட்டாலும் இது இலங்கைத்தீவின் அரசியல் சீர்கேட்டை அன்றே கண்ணதாசன் பாடி வைத்துவிட்டாரோ என்றே எண்ணத் தோன்றும்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தப் பாடலும், முக்கிய காட்சிகள்
இலங்கையில் படமாக்கப்பட்ட ஒற்றுமையும் கூடவே பொருந்தும்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் இது முக்கியமானது. காரணம் கே.பாலாஜியோடு இலங்கையின் உச்ச பணக்காரர் மஹாராஜா நிறுவனம் தயாரித்தது. இலங்கைக் கலைஞர்களும் பயன்பட்டார்கள் ஆனால் பங்கு போடவில்லை. இது முழுதான ரஜினி சினிமா என்ற தோற்றப்பாடே முக்கியமாக இருந்தது.
அந்தக் காலத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அங்கே படம் எடுத்த கதைகளைப் பின்னாளில் சொல்லியிருக்கிறார்கள். மஹாராஜாவின் ஒரு பெரிய வாகனம் ஒன்று இந்தப் படத்துக்குப் பயன்படுத்தப்பட்டு அதன் மேல் வெளிச்சம் பட்டது.

ஒருமுறை உலகத்தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் பேட்டி என்பது எப்படி அமைய வேண்டும் என்பதற்கு உதாரணமாக ரஜினிகாந்தோடு தான் எடுத்த பேட்டியைச் சொல்லிச் சிரித்தார்.
ரஜினிகாந்திடம் பேட்டி எடுக்க வந்தாயிற்று. ஹமீத் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ரஜினி “ஆம்”, “இல்லை” என்றே சொல்லிக் கொண்டு போகிறார். என்னடா இதுவென்று இவர் முழித்து விட்டுப் பிறகு தான் புரிந்ததாம் கேள்விகளுக்குள்ளேயே பதில்களையும் வைத்துக் கொண்டு தான் கேட்டதாக 😀

1980 ஜனவரி 26 இந்தியக் குடியரசு தினத்தன்று வெளியாகி ரஜினிக்கு மாபெரும் அங்கீகாரத்தைக் கொடுத்தது “பில்லா” திரைப்படம். இன்றளவும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது அனல் பறக்கும்.
அது போல் கே.பாலாஜி மீண்டும் ரஜினியோடு இணைந்து
1981 ஜனவரி 26 இல் வெளியிட்டது “தீ”.

பில்லாவை இயக்கிய கிருஷ்ணமூர்த்தியே படத்தை இயக்கினார்.
ஒப்பீட்டளவில் “பில்லா” வின் சாதனையை “தீ” எட்டவில்லை. இரண்டுமே அமிதாப் நடித்த ஹிந்திப்படங்களின் மீள் உருவாக்கங்கள் தான், “தீவார்” படமே “தீ” ஆனது. பில்லா போலவே கெட்ட சவகாசத்தால் அழிவது போன்ற கதைப் பின்னணி இருந்தாலும், கூடவே சுமன் பங்கு போட்டது படத்தின் வெற்றியில் பாதிப்பை எழுப்பியிருக்கும்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் எண்பதுகளிலும் களைப்பில்லாத சிங்கம் என்பதற்கு “தீ” படப் பாடல்களும் நல்லுதாரணம். “சுப்பண்ணா சொன்னாருன்னா” ரஜினிக்குக் கிடைத்த ஒரே பாட்டு. ரஜினிக்கான சூழல் பாடலாக எல்.ஆர்.ஈஸ்வரி பாடும்
“வாரே வா வா இது இந்திர லோகம்”
https://www.youtube.com/watch?v=23v3MkW7yVw
ஆகா என்னவொரு மயக்கக் கிறக்கம் ஈஸ்வரியார் குரலில்.

“ஐயாவுக்கு மனசிருக்கு” https://www.youtube.com/watch?v=svhmC67kYcY ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம் கூட்டணியின் இன்னொரு ஹிட். தவிர இந்தப் பாடலைத் தான் பட விளம்பரங்களின் முகப்புப் பாடலாக வானொலியில் அப்போது பயன்படுத்தினார்கள்.

“சுப்பண்ணா சொன்னாருன்னா” மலேசியா வாசுதேவனோடு, கோவை செளந்தரராஜன், எஸ்.என்.சுரேந்தர் பாடிய அற்புதமான பாடல்.

ஊர் முழுக்க வாடுது அப்பா
ஒண்ணு ரெண்டு வாழுது அப்பா
சோசலிசப் பாடலைக் கேக்குறோம்
பானையைப் பாக்குறோம்
ஒண்ணையும் காணோமே….

சுப்பண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியலேன்னார்
அப்பண்ணா நாம இன்னும்
அடிமைகள் தானா அண்ணா

https://www.youtube.com/watch?v=3myRaqfoN68

கானா பிரபா


0 comments: