Pages

Sunday, May 29, 2022

விக்ரம் (1986) பின்னணி இசைத் தொகுப்பு.

கமல்ஹாசனின் பெரும் படைப்புகளின் விதையாக அமைந்த “விக்ரம்" திரைப்படம் வெளிவந்து இன்றோடு 36 ஆண்டுகளைத்  தொடுகின்றது. “ராஜ பார்வை” படத்துக்குப் பின் பெரும் பொருட்செலவில் ஒரு கோடிக் கனவு என்ற தொனியில் எடுத்து வெளியானது விக்ரம்.

எழுத்தாளர் சுஜாதா குமுதத்தில் “விக்ரம்” கதையைத் தொடராக வெளியிட்டிருந்தார். சமகாலத்தில் படப்பிடிப்பின் காட்சிகளும் தொடரோடு வந்தது தனிச்சிறப்பாகக் கவனிக்கப்பட்டது. அக்னி புத்திரன் என்ற ஏவுகணை சுகிர்தராஜா (சத்யராஜ்) என்ற நாசகாரனால் கைப்பற்றப்படுகின்றது. அவன் சலாமியா என்ற விநோத ராஜ்ஜியத்தில் மறைந்திருப்பது தெரிய வந்ததும் கம்பியூட்டர் என்ஜினியர் ப்ரீத்தி (லிஸி)யோடு விக்ரம் (கமல்) அந்த நாட்டுக்குப் பயணப்பட்டு எதிரியை அழிப்பது தான் கதை.

கமல்ஹாசனோடு பரிதாபமாகச் செத்துப் போகும் அம்பிகா, லிஸி (இங்கே ப்ரீத்தி என்று), சத்யராஜ், மனோரமா, ஜனகராஜ், சாருஹாசன் இவர்களோடு வட நாட்டின் முக்கிய நட்சத்திரங்கள் அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா போன்றோர் இணைந்த பெரும் எடுப்பிலான திரைச் சித்திரம் இது.

விக்ரம் படத்தின் அனைத்துப் பாடல்களும் சோடை வைக்காத சொக்கத் தங்கம். படத்துக்காகப் படமாக்கப்பட்டு வெளிவராத “சிப்பிக்குள் ஒரு முத்து மலர்ந்தது” https://www.youtube.com/watch?v=NxT-G1j_9oY பாடல் உட்பட. விக்ரம் படத்தில் தெலுங்குப் பதிப்பான ஏஜெண்ட் விக்ரம் 007 படத்தில் கமலுக்காகப் பின்னணி கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். “விக்ரம் விக்ரம்” பாடலைத் தெலுங்கில் கமலோடு பாடியவரும் அவரே.

கமல்ஹாசனின் எண்ணம் பெரிது, தூர நோக்கிலானது. ஆனால் விக்ரம் அதை எந்த அளவு சாத்தியப்படுத்தியிருக்கிறது என்ற கேள்வியை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் கேட்டால் கமலுக்குக் கூடத் திருப்தி இல்லை என்ற பதிலே வந்திருக்கும். ஆரம்பத்தில் ராக்கெட் வேகத்தில் பயணிக்கும் கதை அம்பிகா கொலையோடு உளவாளியைப் பிடிப்பதோடு சோர்ந்து போகின்றது. ப்ரீத்தியுடன் ஆணா பெண்ணா என்று வீண் வம்பு வளர்ப்பது, ஜனகராஜின் பச்சையான இரட்டை அர்த்த வசனங்கள், ஒரு கட்டத்தில் சலித்துப் போகும் சலாமியா மொழி என்று இடையில் சில ஓட்டைகள். 

வில்லனைக் கண்டுபிடிக்கும் சாமர்த்தியம் பின்னர் அவனைப் பற்றி எந்தவித கரிசனையும் இல்லாதது போலவும், வில்லன் பக்கமும் பெரிய ஆளணி இல்லாத ஜெய்சங்கர் காலம் போலவும் குழப்பம்.

எல்லாவற்றுக்கும் பெரிய ஓட்டையாக கடைசியில் வில்லன் சத்யராஜ் பாரசூட்டில் தப்பும் போது எந்தவித ஆயமும் இல்லாமல் கமலும், ப்ரீத்தியும் ஹெலிகொப்டரில் இருந்து சத்யராஜ் மேல் பாய்ந்து நடத்தும் போராட்டம் கிராபிக்ஸுக்காக வலிந்திழுத்தது போலத் தோன்றியதோடு அந்தக் காட்சியும் படு செயற்கையாகத் தெரிந்தது. ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களில் கூட இந்த மாதிரியான தந்திரக் காட்சி நுட்பமாகப் படமாக்கப்படும். ஒரு கட்டத்தில் விக்ரம் பட இயக்குநர் ராஜசேகர் விலகினார் என்ற செய்தியை மெய்ப்பிப்பது போல அந்த இறுதிக் காட்சிகள்.

விக்ரம் கதையை மிகவும் செம்மையாக மீண்டும் எடுத்திருக்க முடியும். தேவையில்லாத இடைச் செருகல்கள் இல்லாமல்.

விக்ரம் பின்னணி இசையைத் தேடித் தேடி எடுத்துக் கோவையாக்கி மீள் ஒலியேற்றம்செய்து முடித்தாயிற்று. 27 நிமிடங்களை அண்மிக்கின்றது. 

இந்த வேலையில் படத்தையும் மீளப் பார்க்கும் போது ஒன்றே  ஒன்று தான் காலத்தைத் தாண்டி இன்றைக்கும் சவால் விடுகிறது.

அது

இளையராஜாவின் மிரட்டலான இசை மட்டுமே. இசைஞானி இளையராஜா மட்டுமே இந்தக் கனவுப் படைப்புக்கு மானசீகமாக உழைத்திருக்கிறார் என்பது புரியும்.

இதோ

விக்ரம் (1986) பின்னணி இசையைக் கேட்டு இன்புறுங்கள்.

https://www.youtube.com/watch?v=F2RQwx-36pA

கானா பிரபா

29.05.2022

0 comments: