Pages

Saturday, June 25, 2016

கவியரசு கண்ணதாசன் முழுப் பாடல்களும் எழுதிய "பகலில் ஓர் இரவு"


ஐ.வி.சசி மலையாள சினிமா உலகின் முக்கியமான நட்சத்திர இயக்குநராகத் திகழ்ந்தவர். அதே சமயம் இயக்குநர் பாஸில் அவர்களுக்கு முன்னோடியாகத் தமிழிலும் வெற்றிகரமான திரைப்படங்களை அளித்தவர். தன் திரை நாயகி சீமாவையே வாழ்க்கையிலும் நாயகி ஆக்கினார். கமல் நடித்து ஐ.வி.சசி இயக்கிய "குரு" படம் இலங்கையில் ஒரு வருடம் ஓடிய சிறப்பு மிகுந்தது. அதற்குப் பின் எந்த ஒரு படமும் அவ்வளவு பெரிய சாதனையை இலங்கைச் சினிமா அரங்கில் எட்டவில்லை.
அதே காலகட்டத்தில் ஐ.வி.சசி இயக்கிய படம்  "பகலில் ஓர் இரவு" இது குரு படத்துக்கு முந்தியது.

விஜய்குமார், ஶ்ரீதேவி,சீமா, ரவிகுமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். ஏனென்றால் அந்தப் படக் கதையே மனோவியாதியை மையப்படுத்தி, மர்மம் நிறைந்த காட்சிகளோடு படமாக்கப்பட்டதே காரணம். ஶ்ரீதேவியைக் குணப்படுத்த முனையும் காட்சி ஒன்றைப் பார்த்த பின் தான் இந்த முடிவு. எனக்கு இந்த மாதிரி மர்மக் கதை, பேய், பிசாசு என்றால் ஜூட் விட்டுவிடுவேன்.
ஆனால் பாடல்களை விட்டதில்லை.

"பகலில் ஓர் இரவு" திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே தேனில் முக்கி எடுத்த பலாச் சுளைகளுக்கு நிகரானது. கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ் நாதன் கூட்டணி வெகு பிரசித்தமென்றால், பின்னர் வந்த இசைஞானி இளையராஜாவுக்குக் கண்ணதாசன் கொடுத்த பாடல்கள் இன்னொரு புது அனுபவம்.
பகலில் ஓர் இரவு திரைப்படத்தின் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் அவர்களே எழுதினார். அந்தக் காலத்து இலங்கை வானொலி வர்த்தக சேவையில் இந்தப் படத்தின் ஒரு பாடலைக் கூட மிச்சம் விடாமல் பிரபலமாக்கி விட்டிருந்தனர்.

"இளமை எனும் பூங்காற்று" பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குக் கிடைத்த உச்ச பட்ச மெலடிப் பாடல்களில் தலையாயது. இந்தப் பாடலின் இசை வடிவமே பல நூறு பேரால் பல்வேறு வாத்தியங்களில் இன்னமும் வாசிக்கப்படும் மகத்துவம் நிறைந்தது. நான் நினைப்பேன் கே.ஜே.ஜேசுதாஸ் இற்கு "என் இனிய பொன் நிலாவே" எஸ்.பி.பி க்கு இந்தப் பாட்டு என்று ராஜா பங்கு பிரித்திருப்பாரோ என்று. ஆனால் இப்பேர்ப்பட்ட அழகு மிகுந்த பாடலை விரகதாபம் கொண்ட காட்சிக்குள் போட்டு விட்டாரே இயக்குநர் என்ற கோபம் இன்றும் உண்டு.
https://youtu.be/yej6UCRLvuk

"பொன்னாரம் பூவாரம்" பாடலை அந்தப் பாடல் காட்சியமைப்புக்காக அடிக்கடி YouTube இல் பார்ப்பேன். அந்தத் தேயிலைத் தோட்டங்களின் காட்சியமைப்பு நான் ஹட்டனில் இருந்த சிறு வயது நினைவுகளைத் தட்டியெழுப்பும். இளமையெனும் பூங்காற்று பாடல் காட்சியமைப்பில் செய்த பங்கத்தைத் துடைத்து எறிகிறது வண்ணக் கலவையால் எழில் கொஞ்சும் படப்பிடிப்பு.
https://youtu.be/bEfik-k7Mo4

ஜெயச்சந்திரன் பாடிய "கலையோ சிலையோ" கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்ட அற்புதமான சாஸ்திர சங்கீத ஆலாபனை. இந்தப் பாடலில் இவர் காட்டியிருக்கும் பாவத்தை அப்படியே அள்ளித் தரும் இளம் பாடகர் யாரேனும் இருக்கிறார்களா என்ன 
ஒவ்வொரு சொல்லும் ஜெயச்சந்திரன் நாவில் துள்ளிக் குதிக்குது.
https://youtu.be/Knlu4ygeJoE

அடுத்து வரும் இரண்டு பாடல்களும் கங்கை அமரன் எழுதியதோ என்று எண்ண வைக்கும் கங்கையின் பாணியில் கவியரசர் கை வண்ணம்.

"தோட்டம் கொண்ட ராசாவே" என்று இளையராஜாவும் ஜென்ஸியும் பாடும் போது "மச்சானை வச்சுக்கடி முந்தானை முடிச்சுல தான்" பாடல் ஒரு கரையால் போய்க் கொண்டிருக்கும்.
இந்தப் பாடல் வரிகளில் கிராமிய மணம் கங்கை அமரனை ஞாபகப்படுத்தும்.
"தோட்டம் கொண்ட ராசாவே" பாடலில் கொடுத்திருக்கும் ஏலா ஏலேலா ஏலேலேலாலா 
கோரஸ் குரல் பாட்டு முடிந்ததும் எதிரொலிக்கும்.
https://youtu.be/gcxleYbKGOk

"தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்" எஸ்.ஜானகி பாடும் பாட்டு இந்தப் படத்தின் இன்னொரு முத்து. பாடல் வரிகளில் எஸ்.ஜானகி கொடுக்கும் சிலிர்ப்புடன் கூடிய அந்த நளினம் தான் பாடலின் முக்கியமான ஆணி வேர்.
"தம்தன நம்தன தாளம் வரும்" என்ற பாடலும் சரி "தானத்தந்தம் தீனத்தத்தம் தைய" என்று இடையில் கோரஸோடு ஒலிக்கும் "பூத்தத்து பூந்தோப்பு பாத்துப் பாத்து" பாடலும் சரி கங்கை அமரன் வரிகளில் வரும் போது நினைத்துக் கொள்வேன் இந்த மெட்டுக்குப் பாட்டு வரிகள் மட்டுமல்ல ஜதிகளையும் அழகாகப் போடுவதில் கங்கை அமரன் சமர்த்தர் என்று. இங்கே கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு முன்னாலும் அழகான மணியாரமாய் வந்து ஆலாபனை வெகு சிறப்பு.
https://youtu.be/_oyERh73WzI

கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த பாடல்கள் ஏராளமுண்டு. இங்கே நவீனம், சாஸ்திரிய சங்கீதம், தெம்மாங்கு என்று "பகலில் ஓர் இரவு"  பாடல்கள் மறக்க முடியாததொன்று.

0 comments: