Pages

Monday, December 28, 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்

எழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது.

இளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.

ரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான "ரங்கீலா". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் "ரங்கீலா"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல்த்தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார். ரங்கீலா குறித்த இன்னொரு விபரமான பதிவைப் பின்னர் பார்ப்போம்.

அடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் "ஹிந்துஸ்தானி" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.

இந்தத் தொடரில் ரஹ்மானின் இசையில் ஹிந்தியில் வெளியான தனித்துவமான திரைப்படங்கள் குறித்த பார்வை இடம்பெறப் போகின்றது. அதில் முதலாவதாக வருவது 1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான்.

இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன. இப்படத்தில் வந்த Banno Raani பாடல் மேலே மேலே இருக்கிறானே என்றும் Ruth Aa Gayee Re என்ற பாடல் "மச்ச மச்சினியே" என்றும் பின்னர் தமிழ் பேசின. Dheemi Dheemi என்ற ஹரிஹரன் பாடல் அப்பட்டமான வட இந்திய இசைமெட்டுக்கு ஒரு சாம்பிள். Yeh Jo Zindagi Hai என்ற பாடலில் சிறீனிவாசைப் பயன்படுத்தியிருப்பார் அதை மீண்டும் சுக்விந்தர் சிங்கோடு இணைத்தும் இன்னொரு பாடலாகத் தந்திருப்பார், அழகாக வந்திருக்கிறது. சிறீனிவாஸ் போன்று சுஜாதா என்ற இன்னொரு தென்னாட்டுக் குயிலையும் Ishwar Allah பாடலில் தேர்ந்தெடுத்தது பொருத்தமான தெரிவுகள்.

1947: Earth படத்தில் வந்த முத்துக்களில் சில இங்கே

படத்தின் மூலப்பின்னணி இசைக் கோர்ப்புபியானோ இசையில் இன்னொரு கலவை


சுக்விந்தர் சிங் குழுவோடு பாடும் Ruth Aa Gayee Re, நளினமான இசையோடு அளவெடுத்த சுக்விந்தர் குரல் எவ்வளவு இனிமையைக் கொடுக்கிறது பாருங்கள். இந்தப் பாடல் ஹிந்தியில் வசீகரித்த அளவுக்கு தமிழில் எடுபடவில்லை.


ஹரிஹரன் பாடல் Dheemi Dheemi


Yeh Jo Zindagi Hai பாடலில் இணையும் சிறினிவாஸ், சுக்விந்தர் சிங் குழுவினர்

21 comments:

ஆயில்யன் said...

//மூலப்பின்னணி இசைக் கோர்ப்பு// முன்பு எங்கோ கேட்ட ஞாபகம் - தொலைத்திருந்தேன் - திரும்பவும் கிடைச்சுடுச்சு கேட்பதற்கு...!

நன்றி பாஸ் - ஹிந்தி இசையுலகுக்கு அழைச்சிக்கிட்டு போறதுக்கும் சேர்த்து ! :)

MyFriend said...

அருமையா தொகுப்பு..

இரவி சுகா said...

அருமையான பதிவு. பல விதமான கோணங்களில் இருந்து கருத்துகளை விவரித்திருப்பதற்கு சபாஷ்!

கண்ணா.. said...

நல்ல தொகுப்பு பிரபா...

விரிவான அலசலும் கூட

அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங்..

சி தயாளன் said...

//ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான "ரங்கீலா".//

உண்மை...

1947 Earth- அருமையான படம், இந்தப்படத்தை ”பாடத்துக்காக” போன வருடம் தான் பார்த்தேன்...

வழிப்போக்கன் said...

கானா அண்ணா, உங்கள் கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேன். இந்தியாவில் உலகி அழகி, கோக்-பெப்சி, பீசா, தீம்பார்க், ஆடம்பர ஆடியோ செட்டுகள், எம்.டி.வி, இன்டெர்நெட் என நுகர்வு கலாச்சாரம் இந்தியாவில் நுழைந்தகாலமும் ரகுமான் இசையுலகில் நுழைந்தகாலமும் ஒன்று. அந்த நேரத்தில் இந்தி-தமிழில் இருந்தவர்கள எல்லாம் பழைய இசை மரபில் கொட்டைபோட்ட இசையமைப்பாளர்கள் அல்லது திறமை குறைந்த 'also ran" கேசுகள் இவர்கள் யாருக்கும் உலகமயத்தின் எம்டீவி இசையை சுவீகரித்துக்கொள்ள திறமை போதவில்லை.. ஆனால் ரகுமானுக்கு மற்ற திறமையை விட 'அந்த திறமை' அதிகமிருந்தது.

இளைஞராயிருந்தார், பெயர் குலோபலாக இருந்தது, இசை புதுசா இருந்தது, இது போதா பத்திரிக்களுக்கு இந்திய அர்பன் இளைஞர்களுக்கான இசையின் ஸ்டார்களாக இளையராஜாவயும் ஆஷாவையும் காட்ட முடியாமல் தவித்தவர்கள் ரகுமான், அலிஷா என புதிய தலைமுறையினை ஜாக்கி வைத்து தூக்கினர்... இதிலும் திரையிசையில் காலூன்றியிருந்தபடியால் மற்றவர்களை காட்டிலும் ரகுமானுக்கு மறைமுக பாப்புலாரிடி அதிகம் கிடைத்தது ..உயர்ந்தார்... பிடித்தது சோனி.. அவருக்கு முடியை வளர்த்து 'மாதுஜே சலாம்' என பாடவிட்டது..அதை எம்டீவியில் ஆயிரம் முறை ஓடவிட்டது.. ... ரகுமானும் சோனியை போல ஒரு 'தேசிய பிரான்ட்' ஆகிப்போனார்.. மீடியா ஸ்பேஸ் கூடியது..பெரிய பேனர்கள் மொய்தன...

இவைகள் ரகுமானின் இந்தி(ய) வெற்றிக்கு காரணம். இது முழுக்க முழுக்க பொருளாதார-கலாச்சார மதிப்பீடுகளில் நுகர்வுமயம் நுழைந்தமையால் கிட்டிய வெற்றி இதில் அவரது தனிப்பட்ட இசை அறிவுக்கும் சம்பந்தமேயில்லை யென்றால் மிகையல்ல.. இது ரகுமானின் ரசிகர்களை கடுப்பேற்றக்கூடும் ஆனால் உண்மையை அமைதியாக யோசித்தால் புரியும்..

கானா பிரபா said...

வணக்கம் வழிப்போக்கன்

ஏ.ஆர்.ரஹ்மானின் வரவும் ரசிகர்களின் புதிய ரசனை மாற்றமும் முக்கிய காரணம் என்றாலும், அவர் இன்று வரை ஹிந்தியில் உழைத்த படங்களின் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள், ஒரு சீரான வளர்ச்சியும் இசையின் மேம்பட்ட பரிமாணமும் தெரியும்.

தென்னாட்டவர்களை அதிகம் சீண்டாத வட நாட்டைக் கவர அதிகம் உழைக்க வேண்டும், தன்னை நிலை நிறுத்த வேண்டும். அதை ரஹ்மான் தொடர்ந்தும் செய்கிறார். வெறும் சோனி விளம்பரம் மூலமோ வேறேதேனும் காரணிகளாலோ இவர் தனித்து நிலைக்க முடியும் என்று என்னால் ஏற்க முடியாது. அவை இவரை இன்னும் சந்தைப்படுத்த உதவின. சரக்கிருந்தால் தான் சந்தையில் இன்னும் அதிகம் விலை போகும்.

வழிப்போக்கன் said...

சரக்கிருந்தால் தான் சந்தையில் இன்னும் அதிகம் விலை போகும்@@@

சந்தையில் விலைபோவதெல்லாம் சரக்கிருப்பவையல்ல என்பது வேறு விசயம்... ஆனால் நான் மேலே கூறியிருப்பது அவரது இந்தி வெற்றிக்கும் திறமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது. இளையராஜாவை போலவோ எஸ்டி பர்மனை போலவோ அவர் உழைத்து அரசனாகவில்லை, அவர் அரசனாக்கப்பட்டார், பிறகு இசைத்தவையெல்லாம் அரசனின் இசையாக விற்கப்பட்டது. தவிர தென்னாட்டவரை வடநாட்டவர் சீண்டவில்லையென்பதெல்லாம் சினிமாவில் உண்மையே அல்ல.. இந்திப்படங்கள் பாதி தென்னாடுகளை நம்பித்தான் இயங்கிவந்தது. பல தெழில்நுட்ப வேலைகள் சென்னையில் நடந்தது யதார்தம்.

மற்றபடி ரகுமானின் உழைப்பை நான் மதிக்கின்ற அதே நேரத்தில் அவரின் அதிகமான உழைப்பும் இசையரிவும் அவரது வெற்றிக்கு காரணம் என்பதை மறுக்கிறேன். ஆண்டுக்கு ஒரு 'சினிமா' என இசைப்பவரின் உழைப்பை நான் எதோடு போய் ஒப்பிட்டு கடுமையான உழைப்பென்பது?

கானா பிரபா said...

வழிப்போக்கன்

உங்கள் பார்வையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
ஆண்டுக்கு ஒரு படம் உழைப்பது அதைச் சிறப்பாகக் கொடுப்பது என்பது ஒரு இசையமைப்பாளருக்கோ, இயக்குனருக்கோ உள்ள உரிமை.
ஒரு ரசிகனின் தேவை எத்தனை படம் இசையமைக்கிறார் என்று கணக்கு வைப்பது அல்ல எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் அவரிடம் இருக்கும் தனித்துவத்தைத் தேடுவது மட்டுமே.

சந்தையில் விலைபோகும் சரக்கு விஷயத்தில் நான் சொன்ன விளக்கம் அவரிடம் திறமையும் இருந்தது அதைக் கொண்டு போகக் கூடிய ஊடகங்களை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதே.

இங்கே நான் ராஜா ரஹ்மான் உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஒப்பீடு சார்ந்த தொடராக எழுத வரவில்லை. அறிமுகப்பதிவில் ரஹ்மான் ஹிந்தித் திரையுலகில் தன்னைப் பயன்படுத்திய திறமையை மட்டுமே சொல்லி வைத்தேன்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ஆயில்ஸ் மற்றும் மைப்ரெண்ட், இரவி சுகா

வழிப்போக்கன் said...

ராஜா ரஹ்மான் உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஒப்பீடு சார்ந்த தொடராக எழுத வரவில்லை.@@@

நானும் அதை சொல்லவில்லை, ரகுமானின் வெற்றிக்கும் அவரது திறமைக்கும்-உழைப்புக்கும் தொடர்பில்லை என்கிறேன். அவ்வளவே..எங்கேயாவது அவருக்கு திறமையில்லை என்று எழுதியிருக்கிறேனா..இல்லையே!

ஊக்கமருந்து உண்டு ஒலிம்பிக்கில் ஓடினால் அவர் தடைசெய்யப்படுவார். அவரது திறமை அங்கு கணக்கில் கொள்ளப்படாது.அதற்காக அவருக்கு திறமையில்லை என்று அர்த்தமாகிவிடாது.. அது போலத்தான் ரகுமானின் இந்தி(ய) வெற்றிக்கும் அவரது திறமைக்கும் தொடர்பில்லை அது நுகர்வுகலாச்சாரம் என்ற ஊக்கமருந்து கொடுத்த வெற்றி.

கடைசியாக கடும் உழைப்புக்கு ஈடாகத்தான் நான் சினிமாவின் எண்ணிக்கையை முன்வைத்தேன். என்னை பொருத்தவரை அவர் கடும் உழைப்பாளியல்ல, அவர் சமீபத்தில் கொடுத்துவரும் சுமாரான ஹிட் பாடல்களுக்கு ஒரு வருட காலமெல்லாம் தேவையில்லை என்பதிலிருந்து வந்த கருத்து. அவர் மேலும் நல்ல தரமான பாடல்கள் இசைக்க உண்மையிலேயே கடுமையாக உழைக்கவேண்டும் என்பதிலிருந்து வந்த கருத்து..

கானா பிரபா said...

கண்ணா மற்றும் டொன் லீ

மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

JK said...

Nice one Kana,

I am very happy u brought out different genders of music now. It doesn't matter who made the music, end of the day good music matters most and we give due respect to those who make those good music.

I love Dheemi Dheemi especially, Hariharan's rendition is so nice. What a voice exposure!

Good luck to the series. Not as an advice, but an opinion.. It would be nice to moderate the comments and limit everything with relevance to the post and scope. That will be helpful to keep our moods even when reading the comments.

Its so nice u never fell into the comparison traps, every talent is unique and there is no necessity to compare.

Thanks again and good luck

Azhagan said...

\\அவர் அரசனாக்கப்பட்டார், பிறகு இசைத்தவையெல்லாம் அரசனின் இசையாக விற்கப்பட்டது.//.... Absolutely right. I agree with வழிப்போக்கன் completely.
99% of what ARR gives the public is compiled after several trial runs. Does he compose music? I dont think so. He just makes a combination by trial and error.

geethappriyan said...

தல நல்ல பதிவு,
இசைப்புயலுக்கு அளித்தமரியாதை மிகவும் அருமை

யோ வொய்ஸ் (யோகா) said...

thanks Kana Anna for writing about our A.R. Rahman

சாஷீ said...

நல்ல பதிவு ,அருமையான தகவல்கள் ,,ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள விதியாசம் என்று கொள்ளலாம் ,இவர் பதினாறு அடி பாய்ந்திருக்கிறார்,இருவருமே ஜாம்பவான்கள் அதில் சந்தேகமில்லை

கோபிநாத் said...

கலக்கல் தல ;)

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி நண்பர்களே

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று இங்கே ரஹ்மானின் சாதனை ஆண்டில் ஆரம்பிக்கும் இந்தத் தொடர் அவரின் தனித்துவமான திறமை குறித்த பகிர்வாகவே அமையவிருக்கின்றது. அந்த வகையில் பதிவுகள் தொடரும்.

Unknown said...

வளரும் வரை தமிழனாய் போராட வேண்டும்.வளர்ந்த பின் இந்தியனாய் மாறி விட வேண்டும்.ஏஆர் இந்தியனாய் மாறிவிட்டார்.அவ்வளவே.

Anonymous said...

கானா எனது பதில் மிகவும் பெரிது என்றதால் தனி பதிவாகவே எழுதிவிட்டேன்.

http://panimalar.blogspot.com/2009/12/blog-post_30.html