"மலேசிய மண் இன்னொரு கலைஞனை இன்று இழந்து நிற்கின்றது" காலை அலுவலகத்துக்குக் கிளம்பும் வேளை என் ஐபொட் இல் இருந்த THR ராகா வானொலி நடிகர் ரவிச்சந்திரனின் மறைவுச் செய்தி பறைகின்றது. நடிகர் ரவிச்சந்திரன் சமீபகாலமாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தார் என்ற செய்திகள் வந்தாலும், இந்த இழப்பை ஏற்க மனம் மறுத்தது.
எண்பதுகளில் அத்திப்பூத்தாற் போல ரூபவாஹினியில் ஏதோவொரு வெள்ளிக்கிழமை மலரும் தமிழ்த்திரைப்படங்கள். அப்படி ஒன்றில் வந்தது தான் அதே கண்கள் திரைப்படம். அதுவரை சினிமா என்றால் சிவாஜி, எம்ஜிஆர், கமல், ரஜினி என்று சுற்றிக்கொண்டிருந்த வயசில் ரவிச்சந்திரன் என்ற நடிகரை ஒரு மர்மப்படத்தில் முதன் முதலில் காணும் போதே அந்த வயசில் அவரின் கலகலப்பான நடிப்பில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது. பின்னர் ரவிச்சந்திரன் நடித்த எல்லாப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படாவிட்டாலும் அவர் நடித்த நல்ல படங்கள் சிலதையாவது பார்க்கக் கூடியதாக இருந்தது. காதலிக்க நேரமில்லை என்ற அவரது அறிமுகப்படத்தில் இருந்து, உத்தரவின்றி உள்ளே வா என்று வேறு சில பெயர் தெரியாத படங்களை எல்லாம் சினிமா ஈடுபாடு அதிகம் இல்லாத வயதில் பார்த்திருக்கின்றேன்.
தமிழ்சினிமாவில் எப்போதுமே இரண்டு பரபரப்பான நாயகர்கள் இருக்க, அவர்களுக்கு மாற்றாக அடுத்த தரவரிசை நாயகர்களையும் வைத்து அழகு பார்க்கும். எண்பதுகளில் ரஜினி கமல் என்றிருக்க, கார்த்திக், பிரபு , மோகன் என்று ஒரு அடுக்கு இருந்தது போல, அறுபதுகளில் இருந்து எழுபதுகளில் கமல், ரஜினி சகாப்தம் வரும் வரை எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், என்ற வட்டத்தில் ரவிச்சந்திரனையும் விலக்கமுடியாது. ஒரு கல்லூரி மாணவனுக்குரிய களையான தோற்றம், கூடவே அழகாக நடனமாடவும், நளினமாகப் பேசவும் தெரிந்த நடிகராக அறியப்பட்டவர் ரவிச்சந்திரன். அரவிந்தசாமி, மாதவன் வகையறாவுக்கு எப்படி வேட்டி கட்டி மண்வெட்டியைக் கையில் கொடுக்க முடியாதோ அதே மாதிரியான ஒரு நாகரீகக் களை ரவிச்சந்திரனுக்கு. ஶ்ரீதர், சி.வி.ராஜேந்திரன் போன்ற இயக்குனர்களுக்குக் கட்டுப்பட்டு கதையோட்டத்தோடு நாயகன் நாயகி, நகைச்சுவை, நடிகர், குணச்சித்திரங்கள் என்று சமமாக இழைய வரும் பாத்திரங்களுக்காக படைப்புக்களில் ரவிச்சந்திரன் போன்றோர் தான் தெரிவாக அமைந்து விட்டனர்.
கல்லூரிப் பருவத்தில் நடிக்க வந்து இளமை எச்சமிருந்தாலும் நடிப்புத்துறையில் ரவிச்சந்திரனுக்கான இடம் இல்லாமல் போகவே ஒரு இடைவெளி. திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் தலைமையில் பரபரப்பாக இயக்கிய "ஊமை விழிகள்" படத்திலே குதிரை வண்டியில் கம்பீரமாக வந்து பெண்களின் கண்களைப் பறிக்கும் ஒரு வில்லனாக மறுபடியும் வந்த இவருக்கு இந்தப் படத்தில் கூட காதல் இழப்பில் குணம் மாறும் ஒரு பாத்திரமாக அமைந்தது. தொடந்து பலபடங்களில் குணச்சித்திரமாகத் தன் அடுத்த சுற்றை நிகழ்த்தினார், கூடவே படம் ஒன்றையும் இயக்கினார். நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஊமை விழிகள் படத்தைத் தவிர வேறு படங்கள் அவரின் அடுத்த சுற்றை மெய்ப்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் ரவிச்சந்திரனுக்கான இடம் தமிழ் சினிமாவில் என்றும் உண்டு.
ரவிச்சந்திரன் நினைவில் அவரின் திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில
"நாளாம் நாளாம் திருநாளாம்" - காதலிக்க நேரமில்லை
"தொடுவதென்ன தென்றலோ" - சபதம்
"தோள் கண்டேன் தோளே கண்டேன்" - இதயக்கமலம்
"நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா" - காதலிக்க நேரமில்லை
"கண்ணுக்குத் தெரியாதா" - அதே கண்கள்
"மாதமோ மார்கழி" - உத்தரவின்றி உள்ளே வா
"விஸ்வநாதன் வேலை வேணும்" - காதலிக்க நேரமில்லை பாடற் காட்சி
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
RIP for another Malaysian artist! :(
இந்த மாதம் நான்காம் தேதி ஆழியார் அணையை சுற்றிப்பார்த்த போது காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் கோஷ்டி பாடி ஆடும் "விஸ்வநாதன் வேலை வேண்டும்" பாடலில் பாலையா,காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நின்று கொண்டு பார்க்கும் பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகையில் நின்றுகொண்டு என் உறவினர்களிடம் "அந்த பாடல் இங்கு தான் படமாக்கப்பட்டது" என்று சொன்னேன். மாதம் முடிவதற்குள்ளாகவே அந்த அழகிய நடிகரை இழந்துவிட்டோமே! அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே வேலையில் அவரது ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.
அழகான பாடல்கள்.
வீடியோ காட்சிக்கும் நன்றிகள் கானா..
அவரது ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.
//ஒரு கல்லூரி மாணவனுக்குரிய களையான தோற்றம், கூடவே அழகான நடனமாடவும், நளினமாகப் பேசவும் தெரிந்த நடிகராக அறியப்பட்டவர் ரவிச்சந்திரன்//
ஸ்டைலும் கூட! அழகான உடைகள்!
//தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டு பரப்பான நாயகர்கள் இருக்க, அவர்களுக்கு மாற்றாக அடுத்த தரவரிசை நாயகர்களையும்...
எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், என்ற வட்டத்தில் ரவிச்சந்திரனையும் விலக்கமுடியாது//
This Says it All
ரவிச்சந்திரனுக்கு அஞ்சலி!
என் ஆழ்ந்த அஞ்சலிகள்
அஞ்சலிகள்....
எனக்கு இவரின் காதலிக்க நேரமில்லை மட்டுமே பிடித்திருந்தது..
வில்லன், குணச்சித்திர பாத்திரங்களில் சோபிக்காதது மட்டுமல்ல..
மகன் அம்சவிர்தன் தோற்றுப் போனதும் மனிதரைக கவலைப்படுத்தியிருக்கும்..
நல்ல தொகுப்பு அண்ணோய்
ஜெயலலிதாவுடன் அதிக படங்கள் நடித்த கதாநாயகர் இவர் தான் என நினைக்கிறேன்.
நல்ல நடிகர். குறிப்பாக வசன உச்சரிப்பு.
Post a Comment