Pages

Wednesday, May 8, 2024

ஆகாயத் தாமரை… அருகில் வந்ததே…..❤️❤️❤️

ஆகாயத் தாமரை…அருகில் வந்ததே…..❤️❤️❤️

புன்னகை முல்லை 

புது விழிக் குவளை

அழகிய அதரங்கள் 

அரவிந்தப் பூவோ?

“அரவிந்தப்பூ ” எது என்று கூகிளானிடம் கேட்டுப் பாருங்கள். அவனே திணறுவான்.

இங்கே தான் கவிஞர் வாலியாரின் கை வண்ணம் இருக்கிறது.

“அரவிந்தப்பூ” என்பது தாமரை மலரின் இன்னொரு பெயர். ஆனால் அது கையாளப்படும் இடம், காதல் தெய்வம் மன்மதன் தன் மலர்க்கணையாக் தாமரை மலரைப் பாவிக்கும் போது..

தன் காதலியின் புன்னகையை முல்லை மலரின் செந்தழிப்புக்கும், அவளின் விழிகளைக் குவளை மலர்களுக்கும், கன்னங்களை ரோஜாக் கொத்துக்கும், கொடி இடையை அல்லிச் செடிக்கும், அவளின் சிவந்த மேனியை செவ்வந்திப் பூவுக்கும் உவமை அணி செய்யும் கவிஞர் குறும்பாக இந்த அரவிந்தப் பூ ஆகிய தாமரையை அவளின் உதடுகளில் பொருத்துகிறார். விரிந்த தாமரை உதடுகளின் அச்சொட்டாக இருப்பது போலவும் அதே வேளை காதல் மயக்கத்தைக் கொடுக்கும் மன்மத பாணமாகவும் கையாண்டிருக்கிறார் கவிஞர் வாலி.

அது மட்டுமா?

ஒரு மட மாது உருகுகின்றாளே

உனக்கா புரியவில்லை ( நெஞ்சம் மறப்பதில்லை)

என்று கவியரசு கண்ணதாசன் திரையிசையிலும், 

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி (பட்டினத்தார் பாடல்), 

 மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன் (சுந்தரமூர்த்தி சுவாமிகள்),

என்று பக்தி இலக்கியங்களிலும் கையாளப்பட்ட “மடமாது” உமா தேவியாரின் இன்னொரு பெயரும் கூட.

“மடந்தை” என்னும் பெண்ணின் பருவ நிலையில் காதல் கூடும் பருவம் அது. அதுவே மடமாது ஆகி நிற்கின்றது.

வாலியாரும் தன் பங்குக்கு

“ஒரு மடமாது 

இணை பிரியாது

இருக்குமோ 

மறக்குமோ…”

என்று முத்தாய்ப்பார்.

நாடோடிப் பாட்டுக்காரன் படத்தில் கவிஞர் வாலியோடு, முத்துலிங்கம், நா.காமராசன், பிறைசூடன், கங்கை அமரன், பரிணாமன் என்று சக படைப்பாளிகளுக்கும் பகிர்ந்தளித்தார் இசைஞானி.

ஒரு படத்தில் எல்லாப் பாடலும் எனக்கே வேண்டும் என்று பேராசைப்பட்ட கவிஞர்கள் அல்ல இவர்களும்.

சங்கிலி முருகன் நாடகங்கள் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவரிடம் போய்ச் சேர்ந்தவர்கள் இளையராஜா சகோதரர்கள். அந்த நன்றியும், விசுவாசமும் என்றும் இருப்பதால் தான் இரண்டு படங்களுக்குப் பணமே வாங்காமல் இசை கொடுத்தார் இளையராஜா என்று வாயாரச் சொல்லி மகிழ்வார் சங்கிலி முருகன்.

“ஆகா…யத்…தா ம ரை

அருகில் வந்ததே

நாடோ..டிப் பா டலில் 

உருகி நின்றதே……”

ஊர் ஊராய்ப் பாட்டுப் பாடிப் பிழைப்பை நடத்தும் நாடோடிப் பாட்டுக்காரனின் இந்த “ஆகாயத் தாமரை” யில் ஒரு நாடகத்துக்குண்டான பாடலின் நளினம் அதன் ஆரம்பத்தில் தேங்கி நிற்கும். அதையே Zee Tamil சரிகமப வில் பாடகர் ஶ்ரீனிவாஸ் சிலாகித்திருப்பார்.

இதே படத்தில் “வனமெல்லாம் செண்பகப் பூ” பாடலை ஒரு தெருப் பாடகன் பாடுவது எப்படியென்று எஸ்பிபிக்கும், 

https://youtu.be/PAEnFZvS5iY?si=K3exIAZbXWK6vOR5

ஒரு தேர்ந்த சங்கீத ஞானம் விளைந்த பரதம் கற்கும் மாணவி எப்படிப் பாடுவாள் என்று சுசீலாவுக்குமாக 

https://youtu.be/stKH4kWXgYQ?si=D-2Kg3ptnfJThF6V

வேறுபடுத்திக் காட்டியிருப்பார் ராஜா.

அது போல் முன்னிசையாக தாரை, தப்பட்டை, தபேலா ஆவர்த்தனத்தில் தாள வாத்தியக் கையாளலை “வனமெல்லாம் செண்பகப்பூ”, “ஆகாயத் தாமரை” போன்ற சந்தோஷங்களில் மட்டுமல்ல

“காதலுக்குக் கண்கள் இல்லை மானே”

https://youtu.be/a74oKc89ieY?si=CtmN8mUl8Th86kG9

சோகத்தின் முன்னிசையிலும் தொடர்புபடுத்தியிருப்பார்.

இசைஞானி இளையராஜா & எஸ்.ஜானகி ஜோடி கட்டிய பாடல்கள் எல்லாமே தித்திக்கும். ஆனால் இது இன்னும் அதிகம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என நினைப்பேன்.

அந்த  Zee Tamil ஆட்டோக்காரத் தம்பி புண்ணியத்தில் இன்று நாடோடிப் பாட்டுக்காரனின் இந்தப் பாடல் மீண்டும் இன்னொரு சுற்று கொண்டாடப்படுவது என் போன்ற ரசிகர்களுக்கெல்லாம் ஏதோ நம் படைப்பைக் கொண்டாடுவது போல ஒரு பூரிப்பு. பாடல் வெளியான மின்சாரமற்ற ஈழத்து வாழ்வியலில் சைக்கிள் டைனமோ சுற்றிச் சுடச் சுடக் கேட்ட காலம் எல்லாம் மீண்டது போல.

மின்னும் வண்ணப் பூக்கள் 

எல்லாம் மாலை என்று 

ஆகலாம்

மன்னன் தந்த மாலை எந்தன்

நெஞ்சைத் தொட்டு 

ஆடலாம்

நெஞ்சைத் தழுவியது துலங்கிட 

உறவு விளங்கிட

இனிய கவிதைகள் புனைந்திட

ஆகாயத் தாமரை

அருகில் வந்ததே

https://youtu.be/NbqioJCGW_A?si=128Kvu6GmW5GqfgZ

✍🏻 கானா பிரபா


#அரவிந்தப்பூ #அரவிந்த பூ

0 comments: