Pages

Friday, May 24, 2024

ரெட்டைக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ளே....❤️

ரெட்டைக்கிளி சுத்தி வந்த 

தோப்புக்குள்ளே....❤️


ஏ.. விடியாத பொழுதாச்சு..

அடி ஏ. விழிகூட சொமையாச்சு..

கண்ணீரு கடலாச்சு..

உன் எண்ணம் படகாச்சு..

நீ உள்ள மனம் தானே

எப்போதும் சிறையாச்சு...

அந்த ஈனக்குரல் இளையராஜாவுக்காக வளைந்து கொடுக்கக் கூடியது. அதனால் தான் அவர் பாடும் தொனியிலேயே ஒரு கழிவிரக்கம் கூட்டிவிடும். குரல் கமற அவர் அந்தரத்தில் நிறுத்த,

அப்படியே புல்லாங்குழல் அதை ஏந்தி மீட்டும் போதும் அதற்கும் தொண்டை கட்டி, இலேசான கமறலைப் பிரதிபலித்துக் கடந்து போய் சித்ராவிடம் கொடுக்கும்.

இப்படியான சோகப்பாடல்களின் தொகையறாவில் ஒரு ஆண் குரல் பாடிவிட்டுப் போகும்.  திரும்ப வராது.

ஆனால் இங்கோ நாயகி தன் துன்பியலைப் பாட, இன்னொரு திசையில் நாயகன் குரலைக் கொடுத்திருப்பார் ராஜா. இரட்டைப்படையாக பாடல் பரிணமிக்கும்.

காதலர் கீதங்கள் நிகழ்ச்சியை வானொலியில் நான் படைத்த காலத்தில் அடிக்கடி வந்து போன பாடல் இது.

நேற்று ஏனோ கிராமத்து மின்னல் பாடல்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

இன்று காலை உடற்பயிற்சி நேரத்தில் Touring Talkies  இல் ராமராஜன் கிராமத்து மின்னல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

நம் எண்ணமே வாழ்வு 😍

“கிராமத்து மின்னல்" இசைஞானி இளையராஜாவின் குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ் தயாரித்த படம். கே.ரங்கராஜ் இயக்கி ராமராஜன் நடித்த போது, படத்தின் இறுதிக் காட்சியில் ராமராஜன் இறப்பது போல அமையும்.

“ஆடு மேய்க்கிற நாயகன் செத்துப் போவது போலக் காட்டினா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க" என்று ராமராஜன் ஆலோசனை சொன்னாலும் முடிவு அப்படியே அமைந்ததால் தான் படமும் எழுபது நாட்களோடு ஓடி ஓய்ந்ததாகச் சொன்னார்.

ராமராஜன் மக்கள் எதை விரும்புறாங்களோ அதையே கொடுக்க வேண்டிய நாயகன். தன்னோட ஆள் சிரிச்சுச் சந்தோஷமாக ஒண்ணு சேரணும் என்று கிராமத்தார் நினைத்ததால்தான் அப்படியான படங்களுக்குத் திரும்பத் திரும்ப வந்து போனார்கள்.

ராமராஜன் இயக்குநர்களின் நாயகன் அல்ல. நட்சத்திர இயக்குநர்களை அவர் தவிர்த்ததன் உளவியல் அதுவாகக் கூட இருக்கலாம். அவருக்கு எப்படித் தன் ரசிகர்கள் எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுக்கும் நகாசு தெரிந்ததால் ஐந்து வருஷத்தில் ஹிட்டடிக்கக் கூடிய நாயகனாகவும் ஆகிப் போனவர்.

கிராமத்து மின்னல் பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரன் எழுதினாலும் “ரெட்டைக் கிளி" பாடல் அவருக்கு அருமையான வாய்ப்பு, அந்த இரட்டைக் குதிரைச் சந்தத்துக்குப் பாட்டெழுதி விட்டார்.

சித்ராவின் குரல் அமைதியாய் மனதுக்குள் அழும் ஓசை நயம், 

ராஜாவின் குரலோ தொலைவில் இருக்கும் அந்தக் காதலிக்காய் ஓலமிட்டுப் பரந்து விரியும்.

பாடலோடு பயணிக்கும் இசைக்கும் பின்னால் அடி நாதமாய் இசைக்கும் ஒலிக்கீற்றுகளோடு ஆழமாக உறவாடிப் பார்த்தால் புரியும் அங்கே ஒரு இசை ஜாலம் புரிந்திருப்பார் ஞானியார்.

போராடும் நெஞ்சுக்குள்ளே

ஏதேதோ உண்டாச்சு....

நீரோடும் கங்கை நதி..

ஏன் இப்போ ரெண்டாச்சு

ஏ ஆச ராசா அன்பென்ன லேசா

ஏஆச ராசா 

இவ அன்பென்ன 

லேசா

https://www.youtube.com/watch?v=7K1G1WaNw5Y

 கானா பிரபா


0 comments: