அந்தப்புரத்தில் ஒரு மகராணி ❤️❤️❤️
இளையராஜா ஒரு படத்துக்காவது இசையமைப்பாரா என்ற கேள்விக்குறியை மாற்றிப் போட்டது அன்னக்கிளி. இளையராஜாவுக்குக் கிராமியப் பாட்டுத்தான் வரும் என்ற கூச்சலுக்கும் பதில் சொல்ல ஒரு மேற்கத்தேய இசைப் பின்னணியோடும் பாடல் கொடுப்போம் என்று பஞ்சு அருணாசலத்தாரிடம் இளையராஜா தன் ஆரம்பத்தில் சொன்னதை “திரைத்தொண்டரில்” பஞ்சு சார் நினைவுபடுத்தி இருந்தார்.
ஆனால் அன்னக்கிளியைத் தொடர்ந்து சத்தமில்லாமல் ஒரு அரச படத்துப் பாட்டு
தன் இசையில் எப்படி இருக்கும் என்பதைச் சத்தமில்லாமல் முன்னோட்டம் காட்டி விட்டார். அதுதான்
“அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்”
ஒரு கனவுப் பாடலை சஹாராவுக்கும் கொண்டு போகலாம், தாஜ்மஹாலுக்கும் அழைத்துப் போகலாம். ஆனால் இங்கே ராஜா அந்தப்புரத்து உப்பரிகையில் நம்மை இருத்தி விட்டுப் பாடலை நடத்திக் காட்டுகிறார். அவர் தன்னோடு கூட அழைத்தது
அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் அவர்களை.
“அந்தபுரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்
அன்பு உலகம் தன்னை அரசாளும் - அந்த
ஆனந்தமே இவர்க்கு உறவாகும்”
இப்படியாகத் தொடரும் இளையராஜாவின் மெட்டுக்கு கங்கை அமரன் எழுதிய நீள் வரிகளில், ஆரம்ப ஈரடிகளை மட்டும் புலவர் புலமைப்பித்தன் எடுத்துக் கொண்டு
தன் குறும்புத்தனமான காமத்துப்பாலைப் பாடல் முழுக்க இறைத்து விட்டார்.
அன்று தொடங்கிய பந்தம், நானொரு பொன்னோவியம் கண்டேன், ஓ வசந்த ராஜா, மான் கண்டேன் நான் கண்டேன், ராத்திரியில் பூத்திருக்கும் என்று நீளும் அரசர் காலத்துப் பாடல்களாய் பிரதிபலிப்பதில் எல்லாம் இந்த அரசவைக் கவிஞரை இளையராஜா அழைத்துக் கொடுத்தார்.
கே.பாலாஜியின் “தீபம்” படத்துக்கு முன்பே, அதாவது அன்னக்கிளி வருவதற்கு முன்பே ஜெமினி கணேசன், பத்மினி ஜோடியாக நடிக்க “தீபம்” என்ற பெயரில் ஒரு படத்துக்கு இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் வரிகளில் “சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு” என்ற பாடலை T.M.செளந்தரராஜன் பாடி விட்டார்.
இரண்டு பாடல்கள் பதிவான நிலையில் படம் முடங்கிப் போய் விட்டது.
“அந்தப்புரத்தில் ஒரு மகராணி” பாடலில்
அதீத நாணம் கொண்ட காதலியின் குங்குமப் புன்னகை முகம் போல ஜானகியம்மாவின் குரல், அடடா அன்னக்கிளியில் குதூகலித்த அந்தக் குரலா என்று அதிசயம் கொள்ள வைக்க, “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” சோகராகம் கொடுத்த செளந்தரராஜன் இங்கே பகட்டாகக் குரல் கொடுப்பார்.
இந்தப் பாடலுக்கு மூன்று சரணம் ஆனால் பல்லவியோடு சிறு துளி கிட்டார் இசையை வழிய விட்டு ஜானகியிடம் கொடுப்பார் ராஜா.
காதலி பாடும் வரிகளில் மிகக் கவனமாகச் சொற்களை அடுக்குபவர்,
எதிராளியாய் காதலன் பக்கம் வரும் போது அவளின் சொற்களை வாங்கி மன்மதக் கணை தொடுப்பார் புலவர்.
“சாமந்திப்பூக்கள் மலர்ந்தன” வைத் தொடரும் வரிகளைக் கேட்டால் அந்தக் குறும்புச் சேஷ்டைகளை அவதானிக்கலாம் 😃
“அமுத ரசம் தேவை” என்று அவன் பாட
“என அழைக்கும் பார்வையோ”
அவன் பார்க்கும் பார்வை பொல்லாத பார்வை என்று முதற்சரணத்திலேயே பொய்க்கோபம் போல எச்சரிக்கை விடுவாள்.
அவனோ பிடி கொடுக்காமல் அடுத்த சரணத்துக்கும் துரத்திக் கொண்டு வருவான். சமயம் பார்த்து ஒன்று கொடுப்பான் பாருங்கள் இப்படி
“அவன் கொள்ளை கொள்ள துடித்தது
என்ன பார்வை?” என்று மீண்டும் அந்த விஷமப் பார்வையை அவள் கோடிட்டுக் காட்ட
“அது பார்வை அல்ல பாஷை என்று
கூறடி என்றாள்” என்று முடித்து விடுவான், மேற்கொண்டு அந்த இடத்துக்கே அவள் வரமாட்டாள்.
இவளை எப்படி மடக்கலாம்?
ஆபரணத்துக்கு மயங்காத பெண் உண்டோ?
சரி இப்படி முதலில் ஐஸ் வைப்போம் என்று
தொடங்குவான்
“சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை”
அவள் குளிர்ந்திருப்பாள் தானே சரி அடுத்த அடி
“அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை”
மீண்டும் குறும்புத்தனம்.
இப்படியாகக் காமத்துப்பாலை ஒரு பாடலின் இண்டு இடுக்குகளில் எல்லாம் வழிய விட்டுப் புலவனார் எழுத, செளந்தரராஜன் , ஜானகி ஜோடியோ மெய்மறந்து அந்தக் கட்டிப் போட்ட மெட்டில் ஊஞ்சல் ஆடி மகிழ்வார்கள்.
அதுவும் செளந்தரராஜன், சிவாஜி கணேசன் முகபாவத்துக்கு முன்பே குரல்பாவத்தில் ஒத்திகை பார்த்த்து விடுவார்.
“அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை” இது இந்த “அந்தப்புரத்தில் ஒரு மகராணி”யில் புலவர் புலமைப்பித்தன் வடித்தது.
“அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்” இது கங்கை அமரன் எழுதியது.
இரண்டுமே மாயா மாளவ கௌளை”
இசையா? வரியா? சரி சரி பாடலுக்குள்ளேயே மீண்டும் போய் விடுவோம்
“ஆராரிரோ…ஆரி ராரோ ஆராரிரோ….”
பாடல் முடியும் போது அவர்கள் இருவரும் தாலாட்டுக் கட்டிலில் மூழ்கிடுவார்கள் என்பதைக் கட்டியம் கூறுமாற்போல அந்தக் கடைசிச் சரணத்துக்கு முன்னோட்டமாக வீணை இசை “ஆராரிரோ” கொடுக்கும் பாருங்கள் ஆகா அப்படியே அரச சபையை சொர்க்க லோகத்தில் அமர்த்தியது போல ஒரு இசையனுபவத்தில் மூழ்க வைக்கும்.
இன்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக நான் கேட்டுக் கொண்டிருப்பது பாண்டியனுடன் சுர்முகி மேடையில் பாடிய இது. என்னவொரு தேன் இனிமை 😍
https://youtu.be/jGxN0PCas3Q?si=BYwURf8_ADpeYoo2
மூலப்பாடல்
https://youtu.be/pJ9aIpxZjcs?si=fyYYUndZS9FAjcx7
T.M.செளந்தரராஜன் நினைவு தினம் இன்று 🙏
கானா பிரபா
0 comments:
Post a Comment