Pages

Saturday, July 25, 2009

"வண்ணத்துப்பூச்சி" இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி

"பெற்றோர்கள் குழந்தைகளுக்காகத் தான் தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார்கள் என்று சொல்லிக் கொண்டு நாள் முழுவதும் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் அந்த சம்பாதித்த பணம் எல்லாம் வாழ்க்கைக்கு பயன்படுகிறதா என்று சொன்னால் பெற்றோர்களின் பார்வையில் ஆமாம், குழந்தைகளின் பார்வையில் இல்லை என்று தான் எனக்குக் கிடைத்த பதில். ஒரு தோல்வியான வாழ்க்கையை வாழும் பெற்றோரை கண்டேன். குழந்தைகளின் பார்வையில் ஏன் இந்த உலகத்தைச் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். இதைக் கதையாக எடுத்துச் சொன்னபோது பிரபல தயாரிப்பாளர்கள் தாணு, தேனப்பன் போன்ற நண்பர்கள் கோடிக்கணக்கில் போட்டு எடுக்கும் சினிமாவில் இதையெல்லாம் வைத்து எடுக்கிறாயே என்று என்மேல் கொண்ட ஆதங்கத்தில் சொன்னார்கள். நான் யோசித்தேன் ஒரு நல்லவிஷயம் என்று தெரிகிறபோது இன்னொருவர் பணத்தின் மூலமாக பரிசோதனை செய்வதை விட நாமே செய்வோம் என்று நான் கட்டிய வீட்டை அடமானம் வைத்து தயாரிப்பாளராக ஆரம்பித்தேன்."

இப்படியாக "வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்திருக்கும் படைப்பாளி திரு.ராசி அழகப்பனை நேற்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானலையில் சந்தித்தேன். அவரின் மனப்பதிவுகள் 28 நிமிட ஒலிப்பகிர்வாகத் தொடர்கின்றது.
பேட்டியில் இருந்து சில துளிகள் எழுத்து வடிவில்


வலம்புரி ஜான் ஆசிரியராக இருந்த "தாய்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது வாய்ப்புத் தேடிப் போன போது "உனக்கு என்ன தெரியும்" என்று கேட்ட போது "தெரிந்து கொண்டு வாழ்க்கை தொடங்குவதில்லை, தெரிந்து கொள்வது தான் வாழ்க்கை" அவருக்கு நான் சொன்ன ஒரு வார்த்தையைக் நம்பி என்னைத் கணத்தில் துணை ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார். அங்கே தான் என் பத்திரிகை வாழ்க்கை தொடங்கியது.

கதவைத் திற காற்று வரட்டும், நிழல் தேடும் மலர் (கவிதை நூல்), புல்வெளிப்பாதை, மழைத் தேன், கும் இருட்டு, உயிர்க்காற்று, தாய் நிலம் உட்பட 15 கவிதை நூல்கள் எழுதியிருக்கிறேன்.

சாவி இதழில் "ஆகஸ்ட் 15" என்ற கவிதையை எழுதினேன், அந்த காலகட்டத்தில் "வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்று சுவற்றிலும் , பேரூந்துகளிலும் எழுதி வைத்திருப்பார்கள். அப்போது வீடு எங்கே இருக்கிறது மரம் நடுவதற்கு என்று என்னுள் எழுந்த வேகமான சிந்தனையில் அந்தக் கவிதையை எழுதினேன்.
"வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்கிறீர்களே
ஆமாம் நடுகிறோம்
ஒரு மரம் நடுவதற்கு ஒரு வீடு தாருங்கள்"
என்று நான் எழுதினேன். அந்தக் கவிதை தான் எல்லோரும் என்னை திரும்பிப்பார்க்க வைத்தது. அந்தக் காலகட்டத்தில் திரு கமல்ஹாசன் அவர்கள் ஒரு வேகமான இளைஞனை என் திரைப்படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தார். அப்போது நான் அவரை முதன்முதலாக சந்திக்கிறேன்.

"நீங்கள் ஒரு மேற்கத்தேய சிந்தனையுள்ள மனிதராக இருக்கிறீர்கள், நானோ 80 வீடுகள் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ராயப்பேட்டை என்ற நெசவாளர் கிராமத்திலே பிறந்திருக்கிற நான் மக்களுடைய அடித்தட்டு எண்ணங்களைச் சொல்வது தான் திரைவாழ்க்கை என்று கருதிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஆரம்பத்திலேயே நான் சொன்னபோது அவர் சிரித்து விட்டார்.
"என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நான் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறு, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறு, இருவரும் புரிந்து கொள்வோம், திரைப்படத்தில் நாம் கால் ஊன்றுவோம்" என்று சொல்லி மய்யம் என்ற அவர் பத்திரிகை நடத்தி வந்தார், அதில் 60 சதவிகிதம் சினிமா சம்பந்தமாகவும் 40 சதவிகிதம் இலக்கியம் சம்பந்தமாகவும் வரவேண்டும் என்று சொன்னேன். அதை ஏற்றுக்கொண்டார். இரண்டாண்டு காலம் அதை நடத்தினோம்.

அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்திலே என்னைத் துணை இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அது ஒரு சுவையான அனுபவம். முப்பது நாட்கள் குள்ளமான அப்புவாக எப்படி நடிப்பது என்று பயிற்சி செய்து கொண்டிருந்தோம். அதில் தான் நான் எல்லா தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டேன்.பொதுவாக பத்தாண்டுகள் கழித்துத்தான் வசனம் சொல்லிக் கொடுக்கிற வாய்ப்புக்கிடைக்கும் துணை இயக்குனர் என்று சொல்வார்கள். ஆனால் துவக்கத்திலேயே எனக்கு அந்தப்பதவி கிடைத்தது. அது எல்லாவற்றுக்கும் காரணம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் என்மேல் வைத்திருந்த நம்பிக்கை. நான் ஒளிவுமறைவின்றிப் பேசுவது அவருக்கு பிடித்திருந்தது. பெரியார் சிந்தனைகள், சினிமாவில் இலக்கியம் சார்ந்த விடயங்கள் வரவேண்டும் என்பது இவையெல்லாம் இவரிடம் நான் கற்றுக் கொண்டது.

மைக்கேல் மதன காமராஜன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களின் திரைக்கதைக் குழுவில் நான் இருந்தேன். நான் இப்போது வாழ்கிறேன் என்று சொன்னால் திரைப்பட உலகத்தில் அது முழுக்க முழுக்க பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம், தைரியம், புதிதாக எதையாவது செய்யவேண்டும் என்று சொன்ன வார்த்தை தான் என்னை வாழ வைக்கிறது.

ருத்ரைய்யா, குடிசை படம் எடுத்த ஜெயபாரதி, ஏழாவது மனிதன் எடுத்த ஹரிஹரன் இவர்கள் எல்லாம் புதிய செய்திகளைச் சொல்லி அதை மேற்கொண்டு சொல்லமுடியாமல் போய்விட்டார்கள். அருமையான சிந்தனையாளர்கள். ஆனால் நான் யாருக்கு சொல்லவேண்டும், ஏன் சொல்ல வேண்டும், கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற வரையறையோடு ஒரு திரைப்படத்தை வரைந்தேன்.

மலையாளத்திரைப்பட உலகத்தில் பரதன் என்ற ஒரு இயக்குனரிடம் நான் சில காலம் பணியாறிய போது அவர் ஒரு முறை சொன்னார். நான் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று நினைத்தேன். யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் என் ஸ்கூட்டரை ஐயாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து லாரி என்ற படத்தை உருவாக்கினேன். எப்பொழுதெல்லாம் பணம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்தப் படத்தை தொடர்ந்து இயக்கி முடித்தேன் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள் என்றார். என் கதையின் களம் இவர்கள் தான் இதில் சமரசம் செய்து கொண்டு வெற்றி பெறவேண்டிய அவசியம் இல்லை என்று இதுவரையில் சினிமாவை சந்திக்காத நபர்கள், வீட்டுக்கே லாயக்கில்லாதவர்கள் என்று விரட்டிய பிள்ளைகள் இப்படியாக தேர்வு செய்து தேடி எடுத்தேன் "வண்ணத்துப்பூச்சி" நடிகர்களை. மிகப்பிரமாதமாக அவர்கள் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.


வண்ணத்துப்பூச்சி திரைக்கதை வசனத்தை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டது.
எத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியொரு படம் என்று இயக்குனர் மகேந்திரன் சொன்னது இந்தப்படத்தின் கருவுக்கு கிடைத்த வெற்றி.
குழந்தைகள் படம் பார்த்து எவ்வளவு காலமாயிற்று என்று பாலுமகேந்திரா வியந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் பணம் சம்பாதிப்பது போல் அன்பு செலுத்த நேரம் ஒதுக்குவதும் சம்பாத்தியமே என்பதை உணர்வார்கள்
படங்கள் நன்றி: ராசி அழகப்பனின் பிரத்தியோக தொகுப்பு

7 comments:

Admin said...

மிகவும் நல்லதொரு பதிவு அண்ணா வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடரட்டும்....

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்ரு

கலைக்கோவன் said...

// "தெரிந்து கொண்டு வாழ்க்கை தொடங்குவதில்லை, தெரிந்து கொள்வது தான் வாழ்க்கை" //
என்னவொரு வித்தியாசமான சிந்தனை
//"வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்கிறீர்களே
ஆமாம் நடுகிறோம்
ஒரு மரம் நடுவதற்கு ஒரு வீடு தாருங்கள்"//
இவர் எழுதியதது தானா இது..!!!

கிடுகுவேலி said...

படம் பார்க்கவில்லை. ஆனாலும் மனிதர் கதைப்பது சற்று வியக்க வைக்கிறது. படம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுந்திருக்கிறது...! தொடரட்டும் வாழ்த்துக்கள்/

கோபிநாத் said...

நல்லதொரு பகிர்வு தல ;)

படத்தை தேடி பார்த்துவிடுகிறேன்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி கலைக்கோவன், இந்தக் கவிதைகளில் தனித்துவம் இருக்கிறது இல்லையா.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி கதியால் மற்றும் தல கோபி