Pages

Wednesday, March 30, 2022

💕🌸 என்ன வரம் வேண்டும் இந்த வரம் போதும் 🍀💕


“இங்கே இரண்டு ஜீவன் இணையும்

இன்பம் என்னும் மழையில் நனையும் 

ஓஓஓஓம்ம்ம்...... 

ஓஓஓஓம்ம்ம்......

துன்பம் என்னும் கனவு கலையும்

தூபம் போட்டு உறவு மலரும் 

தந்தோம் நல் வாழ்வு.......

தமிழ் மந்திர உச்சாடனம் முழங்குகிறது அந்தக் கூட்டுக்குரல்கள் எழுப்பும் சங்கமம்.

என்னவொரு அதீதமான படைப்பாக்க சிந்தனை இது. இந்த மாதிரியானதொரு மந்திர உச்சாடனம் போலே தூய உள்ளங்களின் சங்கமத்தை 

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் 

ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்

ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு 

ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

https://www.youtube.com/watch?v=HOFEt07NE-U

என்று வாலியார் துணையோடு சமைத்திருப்பார்.

அங்கே பட்டாம்பூச்சிகள் கிளப்பிவிட்ட கிளர்ச்சியில் இதயத் துடிப்பு “லப் டப் லப் டப்” “லப் டப் லப் டப்” என்று ஓசையெழுப்புவதைத் தாளக் கட்டில் கொணர்ந்து விடுவார் ராஜா.

இங்கே இந்தப் பாடலில்

“டுடுடு டுடு டும் டுடுடு டுடு டும்” 

என்று வரும் தாளக் கட்டு அந்த உள்ளக் கிளர்ச்சியின் இன்னொரு பரிமாணம். வார்த்தைகள் மெளனிக்கும் போது இசை வார்த்தையாகின்றது. அந்தப் பின்னணித் தாளலயத்தை ஹெட்போன் கொண்டு கேட்டுப் பருகுங்கள் உயர்ச்சி தெரியும்.

இளையராஜாவின் எண்பதுகளிலும் பிரபல பாடகர்களோடு சேர்ந்து சேர்ந்திசைக் குரல்கள் கொடுத்திருந்தாலும் அதிகம் விளைந்தது கோஷ்டி கானங்கள். ஆனால் தொண்ணூறுகளில் அவர் காதல் பாடல்களிலும் அதிகம் கூட்டிசைக்க வைத்திருக்கிறார்.

அப்படி அழகாகப் பிரசவித்தவைகளில்

“வந்தாள் வந்தாள் ராஜகுமாரி” எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி, கூட்டிசைக்க மனோ, லேகா பாடிய வகையிலும், 

“என்ன வரம் வேண்டும்” பாடலிலும் அதே பாங்கில் எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி, சிந்துதேவி கூட்டிசைக்க மனோ & லேகா பாடுகிறார்கள்.

சேர்ந்திசைக் குரல்களைத் தன் பாடல்களில் வெகு அற்புதமாகக் கையாண்டவர் இசைஞானி இளையராஜா. அதனால் தான் தேர்ந்தெடுத்த 500+ முத்துகளை வைத்து இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் என்ற போட்டியை ஏழு வருடங்களுக்கு முன் இணையத்தில் நடத்தியிருந்தேன். அதை மீண்டும் அடுத்த சுற்றில் இறக்கி விட்டிருக்கிறேன். அப்படி நான் பாடல்களைப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கும் போது ரொம்பவே ரசித்து ருசித்துப் பகிர்ந்தளித்த பாட்டு இது.

நந்தவனத் தேரு படம் என்றாலே முந்திக் கொண்டு "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே" பாடல் ஞாபகத்துக்கு வரும். "என்ன வரம் வேண்டும்" இந்தப் பாட்டு ஒப்பீட்டளவில் அதிக கவன ஈர்ப்பைப் பெறவில்லை. எப்படி அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் (ஒட்டு) மீசை வைத்துக் கொண்டு அதற்குப் பின் தன் ஆரம்ப காலப் படங்கள் சிலதில் தோல்வி கண்டாரோ அதே போல மீசை மழித்த கார்த்திக் ஐ மக்கள் தேரில் வைத்து அழகு பார்க்கவில்லை.

"என்ன வரம் வேண்டும் இந்த ஜென்மம் போதும்" இந்தப் பாடலின் சிறப்பு என்ன என்று பார்த்தால்,

"இங்கே இரண்டு ஜீவன் இணையும்" என்று 

கூட்டுக் குரல்கள் ஆரம்பித்து அப்படியே காதல் ஜோடிகளிடம் பாடலைப் பவ்யமாகச் சேர்த்து விட,

தொடரும் பாடலில் காதலனும் காதலியுமாய் மனோ மற்றும் லேகா பகிரும் காதல் மொழிகளுக்கு இடையே ஊடறுக்கும் இடையிசைச் சங்கீதத்தில் மட்டும் உறுத்தாது வந்து ஆமோதிக்குமாற் போல

"தனன நனனா ம்ம்ம்" என்று முதல் இடையிசை, இரண்டாவது சரணத்துக்கு முந்திய இடையிசையில் இன்னும் பலமாக

 "ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்" என்று கூட்டுக் குரல்கள்

அந்த சந்தோஷ கணங்களைக் குதூகலிப்பாய்ப் பகிரும்.

அந்தக் காட்சியமைப்போடு பொருந்தும் ஆரம்பக் குரலோசை அப்படியே தனிமையை விரட்டியடித்துச் சொந்தம் ஒன்று கிட்டியதன் ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாகப் பீறிடும்.

காட்சியின்பத்தில் கார்த்திக்கின் தோள் பற்றும் ஶ்ரீநிதியின் கை அரவணைப்பில் கண்மூடிப் பரவசமாகி அப்படியே பாடலுக்குள் போகும் கற்பனை ஆகா ஆகா 

இசைஞானி இளையராஜாவுக்குப் பல இயக்குநர்கள் பாட்டெழுதியிருக்கிறார்கள். ஆனால் ஆர்.வி உதயகுமார் அளவுக்கு அந்த இசையைப் பருகி, வரிகளால்  மகத்துவ மாலை சூடியிருக்கிறார்களா என்று எண்ண வைக்கும் பாட்டு இது. திருமணப் பாடல்களில் இந்தப் பாடலை மெல்லச் சேர்த்து விட்டால் எவ்வளவு அழகான வாழ்த்துப் பா ஆக அமையும், இல்லையா?

https://www.youtube.com/watch?v=Wefnnt1ntsA

கானா பிரபா

30.03.2022

0 comments: