Pages

Tuesday, March 14, 2023

“உன்னைத்தானே தஞ்சமென்று" பாடகி மஞ்சுளா தமிழில் இத்தனை பாடல்கள் பாடியிருக்கிறாரா?என்னடா Youtube காரர்கள் போலத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்காதீர்கள். விஜய் டிவி நீயா நானாவின் அரிய பாடகர்கள் கலந்துரையாடலை அடியொற்றி இன்னும் சில பல பதிவுகள் வர இருக்கின்றன 🙂

கன்னடத் திரையுலகில் எண்பதுகளில் தொடங்கிக் கோலோச்சிய பின்னணிப் பாடகி மஞ்சுளா குருராஜ் எடுத்த எடுப்பிலேயே கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து வந்து தான் பாடிய நான்காவது பாடலாக “நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் சேர்த்துக் கொண்ட “உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே”

பாடல் அமைந்து கொண்டது. கானா பிரபா

அதென்னது நல்லவனுக்கு நல்லவன் படத்தில் “சேர்த்துக் கொண்ட” என்று ஒரு பொடி வைக்கிறீர்களே என்று கேட்டால் அதற்கும் விளக்கம் தரப்படும். ஏனெனில் இந்த ஜேசுதாஸ் & மஞ்சுளா குருராஜ் பாடிய ஜோடிப்பாடல் “நல்லவனுக்கு நல்லவன்" படத்துக்காகப் பதிவு செய்த பாடலே அல்ல.

தர்மாத்முடு" என்னும் தெலுங்குத் திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தமிழில் மீண்டும் எடுக்கலாம் என்று தீர்மானித்தபோது அது தமிழுக்குச் சரிப்படாது என்று தான் முதலில் பலர் அபிப்பிராயப்பட்டார்கள்.  பின்னர் கதையில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ரஜினிகாந்த்தை வைத்தே நாயகனாக்கி இப்படத்தை எடுத்தார்கள்.

"உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே" 

https://www.youtube.com/watch?v=-jqkWhRk-NI

என்ற பாடலினை இயக்குநர்வி.சி.குகநாதன் தன் படமொன்றுக்கு வைரமுத்து பாடலை எழுத இளையராஜா இசையில் உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தக் குறித்த படத்தில் பயன்படுத்த முடியவில்லை. ஜேசுதாசின் பாடல்களை விரும்பி ரசிக்கும் ஏ.வி.எம்.சரவணன் இப்பாடலைப் பயன்படுத்தும் நோ அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வி.சி.குகநாதனிடம் இருந்து பெற்றுப் பயன்படுத்தினார். கூடவே இப்பாடலின் மெட்டை வைத்தே இன்னொரு சிறு சோகப் பாடலும் அமைக்கப்பட்டது. கானா பிரபா

நடிகர் ரஜினிகாந்தை வைத்து இதுவரை எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இது என்று மேலே சொன்ன செய்திகளோடு தனது "ஏ.வி.எம் 60 - சினிமா" என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் தயாரிப்பாளர் சரவணன்.


“உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன்” பாடலை 150 வாத்தியக் கலைஞர்கள், பென்னம்பெரிய பியானோவோடு ஒரு நேரடி ஒலிப்பதிவாகப் பதிவு செய்தார்கள் என்று ஒரு பேட்டியில் மஞ்சுளா குருராஜ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுசரி இவரைத் தமிழில் பாட அழைத்து வந்தது யார் தெரியுமா?

இளையராஜாவின் குரு, கன்னடத்தில் கோலோச்சிய ஜி.கே வெங்கடேஷ் அவர்கள் தான். அவரே இளையராஜாவிடம் மஞ்சுளாவை அறிமுகப்படுத்திப் பாட வைத்தாராம்.

இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு வித்தியாசத்தை நீங்கள் அவதானிக்கலாம். என்னதான் ஜோடிப் பாடலாக இருந்தாலும், ஆரம்பத்தில் பெண் குரலும், அதனைத் தொடர்ந்து ஆண் குரலுமாக அமைந்திருக்கும். பாடலின் இறுதி வரை இருவரும் மாறி மாறிப் பாடுவது போல இருக்காது.  தமிழ் மொழிப் பரிச்சயம் இல்லாத பாடகியைத் தனியாகச் சுதந்திரமாகப் பாட வைக்கும் உத்தியை அப்போது ராஜா கையாண்டிருக்கலாம் என்று எண்ணுவதுண்டு.

எண்பதுகளின் கல்யாண வீடியோக்களில் தாலி கட்டும் நிகழ்வின் அந்தத்தில் வீடியோக்காரர் “உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்” பாடலைப் பொருத்தியிருப்பதை உங்களின் குடும்ப கல்யாண நிகழ்வுகளில் கண்டிருப்பீர்கள்.

கல்யாணத்தோடு சம்பந்தப்பட்டுத் தான் அடுத்த பாட்டு :-)

மஞ்சுளா குருராஜ் தமிழில் பாடிய இன்னொரு பாட்டு, இளையராஜா இசையில் “கல்யாணக் கச்சேரி” படத்தில் இடம்பெற்ற 

“காதல்கிளி கதை பேசுது”

https://www.youtube.com/watch?v=aL3ETlOYQXc

பாடலை மலேசியா வாசுதேவனுடன் பாடியிருந்தார். மிக அற்புதமான பாடலிது. ஆனால் மணிவண்ணன் இயக்கிய இந்தப் படமும் சரி பாடலும் சரி பிரபலமாகாமல் போய் விட்டது.


மலேசியா வாசுதேவனோடு இன்னொரு பாட்டு ஆனால் அதுவொரு கூட்டணிப் பாடலாக சுரேந்தர்,எஸ்.பி.சைலஜா ஆகியோரோடு மஞ்சுளா இணைந்து பாடிய பாடல் “தென்றலே தென்றலே” https://www.youtube.com/watch?v=zUUz2ZNPzHc பாடல் இளமை படத்துக்காக கங்கை அமரனின் இசையில் அமைந்தது.

மேற் சொன்ன மூன்று பாடல்களையும் எழுதியது வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.கானா பிரபா

பாடகி மஞ்சுளாவை கல்யாணத்தோடு சம்பந்தப்படுத்தி இன்னொரு படம் சொல்லவா? 

அதுதான் “கெட்டி மேளம்”. நடிகர் விசு இயக்கி, அவருக்காக இளையராஜா இசையமைத்த ஒரே படமிது. அதுவும் படத்தின் தயாரிப்பாளரிடம், “இளையராஜா இருக்கும் பிசியான நேரத்தில் பாடல்களை வாங்குவது கஷ்டம் என்னுடைய வழக்கமான செட்டையே வைத்து விடுவோம் என்று விசு சொன்னாராம். ஆனால் தர்மயுத்தம் போன்ற படங்களைத் தயாரித்தவராயிற்றே “சாருசித்ரா” சீனிவாசன், அவரோ விடாப்பிடியாக இளையராஜாவையே ஒப்பந்தம் 

செய்தார். விசு போன்ற இயக்குநர்களுக்கும் இளையராஜாவுக்கும் அப்படி என்ன ராசியோ கார்த்திக் நடித்தும் படம் வந்த சுவடே தெரியவில்லை. வழக்கமான குடும்பக்கதை விசு இல்லை என்பதும் ஒரு காரணம்.

“கெட்டி மேளம்” படத்துக்காக மஞ்சுளா மீண்டும் மலேசியா வாசுதேவனோடு இணைந்தார். அப்படியாக வந்த பாடல் “தொட்டுக்கோ பட்டுக்கோ” https://www.youtube.com/watch?v=qNgwNvVC5x8

மலேசியா வாசுதேவனுடன் அப்படி என்ன ராசியோ இளையராஜா, கங்கை அமரனைத் தொடர்ந்து சங்கர் – கணேஷ் இரட்டையர்கள் இசையிலும் “ராசா ஏ உன்னைத்தான்” என்ற பாடலை மஞ்சுளா பாடியிருக்கிறார் மாருதி படத்துக்காக. இராம நாராயணன் பிற்காலத்தில் சாமிப்படங்களை எடுப்பதற்கு முன்னோடியாக அமைந்த அவரின் படங்களில் இதுவுமொன்று. கானா பிரபாமஞ்சுளா பாடியதாகக் “கணக்கு வைத்த” பின்னாளையப் பாடல்களில் “பக் பக் பக் ஏ மாடப்புறா” (பார்த்திபன் கனவு) கூடச் சேர்த்தி. 

கன்னடத்தில் கோலோச்சிய இவர் அங்கே புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான துவாரகீஷ் ( ரஜினியின் நான் அடிமை இல்லை இயக்கியவர்) கன்னடத்தில் எடுத்த “ஆபிரிக்காவில் ஷீலா” படத்தின் தமிழ் மீள் வடிவத்திலும் (கிழக்கு ஆபிரிக்காவில் ஷீலா) பாட வந்தார். மூலப் படத்தில் மூன்று பாடல்களைப் பாடியவருக்குத் தமிழ் ஒரு பாடல் கொடுத்துச் சிறப்பித்தது. 

அந்தப் பாடல் தான் “பூவும் இருக்கு காயும் இருக்கு”

https://www.youtube.com/watch?v=w1zi_YP0nSY

என்னடா ஹிந்திப்பாடல் போல இருக்கா? இல்லையா பின்னே? இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஹிந்தியில் கோலோச்சிய பப்பி லஹரி ஆச்சே.


உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இட்டேன் விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இட்டேன்

உன்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தேன் நானே 

கானா பிரபா

14.03.2023புகைப்படங்கள் நன்றி : பாடகி மஞ்சுளா குருராஜ் ஃபேஸ்புக் தளம்

0 comments: