Pages

Thursday, August 18, 2022

இசையைப் புரிந்து கொள்ளுதல் - நூல் நயப்பு


தமிழ் முதல்வன் அவர்கள் தொகுப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியராக அமைய,அறிவுச் சமூகம் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது “இசையைப் புரிந்து கொள்ளுதல்” என்ற நூல்.

இசைஞானி இளையராஜாவின் 80 ஆவது அகவையின் தொடக்கமாக அமையும் ஜூன் 2022 இந்த நூல் வெளியீடு கண்டிருக்கிறது.

பொதுத் தலைப்பாக அமைந்தாலும் புத்தகத்தின் உள்ளடக்கம் இசைஞானி இளையராஜா குறித்துப் பல்வேறு ரசனையாளர்களின் பார்வையாகவே விரிகின்றது. இருப்பினும் இசைஞானி என்ற மையத்தை வைத்துக் கொண்டு அவரின் இசைப் பரிமாணங்கள், காலச் சூழல், புலமையாளர்கள் மற்றும் இசையின் அடிப்படை நெறி சார்ந்த ஒப்பீடாக அது பரந்து விருகின்றது. அதுவே “இசையைப் புரிந்து கொள்ளல்” ஆகின்றது.

இசைஞானி இளையராஜா பிறந்த ஜூன் மாதத்தை “இசைப் பெருவெடிப்பு வரலாற்று மாதம்” என்று அடையாளப்படுத்தி, கருத்தரங்குகளை வைக்கும் பண்பைக் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து “அறிமுச் சமூகம்” அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.  

இந்த முன்னெடுப்பு உருவான பாங்கைத் தனிக் கட்டுரையாகப் பகிர்ந்ததோடு இளையராஜா குறித்த சமுதாயப் புரிதலை விமர்சன ரீதியாகவும் முன் வைக்கிறார் அறிவுச் சமூகத்தின் தலைவர் தமிழ் முதல்வன் அவர்கள்.

தொடர்ந்து வரும் படைப்புகள் 2021 ஆம் ஆண்டு தமிழ்ப் பெருவெடிப்பு மாதத்தில் பல்வேறு அறிஞர் பெருமக்களும், இசையார்வலர்களும் இந்த நிகழ்வுகளில் வழங்கிய கருத்தரங்கங்களில், தேர்ந்த பகிர்வுகளின் எழுத்து வடிவங்களாக

இந்த நூல் ஆக்கம் பெற்றிருக்கின்றது. அந்த வகையில் எட்டுக் கட்டுரைகளோடு 202 பக்கங்களோடு இந்திய ரூபா 275 க்கு இந்த நூல் இசை ரசிகர்களுக்காகத் திரட்டப்பட்டு வெளிவந்திருக்கின்றது.

“ஒரு ஓவியர் எப்படித் தன் உணர்வுகளைத் தூரிகைகள் மூலம் காட்சிப் படிமங்களாக வடிக்கிறாரோ, அதைப் போல இளையராஜா இசைப் படிமங்களை உருவாக்குகின்றார்” என்ற பார்வையில் பரந்து விரிந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட இளையராஜாவின் இசை குறித்த தன் பார்வையை முன்வைக்கிறார் தத்துவத்துறைப் பேராசிரியரான முரளி அவர்கள். அதில் ஆன்மிகக் கருத்துகளை ஒத்திசைவாக இசைஞானியின் வாழ்வியலோடு பொருதி ஒப்பிட்டுப் பயணிக்கின்றது “இசையே தவமாய்” என்ற இந்தக் கட்டுரை.

இளையராஜாவின் “அன்னக்கிளி” வந்த காலகட்டத்தில் கல்லூரி மாணவனாக அந்த இசையின் முதல் அலையைக் கேட்டு மயங்கிக் கிறங்கியவர், பின்னாளில் இசைஞானியின் கூட தனியறையில் அவர் அருகே அமர்ந்து சி.ஆர்.சுப்புராமன், எம்.எஸ்.விஸ்வ நாதன் போன்ற தன் இசை முன்னோர்களின் பாடல்களைப் பாடிப் பரவசமூட்டிய அனுபவத்தில் திளைத்திருக்கிறார், வேறு யாருமல்ல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே.

“கலையும் – தனிமனிதனும்” என்ற பங்கில் இளையராஜாவோடு தனக்குக் கிடைத்த “கஸ்தூரி மான்” படப் பாடற்பதிவு அனுபவங்களோடு. இங்கே முக்கியமானதொரு கருத்தையும் பதிவாக்குகிறார். கலையையும் தனி மனிதனையும் அதுவும் குறிப்பாக இளையராஜாவையும் இசையையும் தனித்து நோக்கலாகாது என்ற பார்வையை முன்வைக்கிறார். இளையராஜா என்ற ஆளுமையின் வெளிப்பாடு தான் இசை என்பதை நிறுவிப் பயணிக்கிறது அவரது பகிர்வு.

இளையராஜா இசையில் “படித்துறை” படத்தில் ஜெயமோகன் பாடல் எழுதியதற்கான விடையும் இங்கே பகிரப்பட்டிருக்கிறது கட்டுரையின் நீட்சியாக குறித்த கருத்தரங்கில் பங்கு கொண்டோர் கேட்ட கேள்விகளுக்கு ஜெயமோகன் வழங்கிய பதில்களோடு.

பத்திரிகையாளர் ம.சுசித்ரா வழங்கிய “கட்டுடைக்கும் இசை” பேசுவது இளையராஜா ஆக்கியளித்த மானுட நேசமும், சமூக விடுதலை மீதான பார்வையும் கொண்ட பாடல்களோடு, எவ்விதம் மரபு வழி பேணப்பட்ட சாஸ்திரிய சங்கீதம் சார்ந்த இராகங்கள் ராஜாவால் திரையிசையில் கட்டுடைப்பை நிகழ்த்தியிருக்கின்றன என்ற பார்வையுமாக விரிந்திருக்கின்றது.

“இசையைப் புரிந்து கொள்ளுதல்” நூலில் இந்தப் படைப்பைப் படித்து முடித்து விட்டு நினைத்தேன் இந்தக் கட்டுரை மட்டுமே வந்திருந்தால் கூட நூலின் அகப் பெறுமதியை மீறும் பொக்கிஷப் பகிர்வு என்று, அதுதான் முனைவர் ஜோ.ஆன்டனி செபாஸ்டியன் அவர்கள் பகிர்ந்த “இளையராஜாவின் சிம்போனி இசையில் திருவாசகம்”.

இந்தக் கட்டுரையை ஆழப் படித்தால் மேற்கத்தேய இசையில் ராகங்கள், மேலைச் செவ்விசைப் பாடகர்கள் என்று தொட்டு ஆரட்டோரியோ வரையான ஆழ அகலமான புலமைப் பதிவாக அமைந்திருக்கின்றது. இந்தக் கட்டுரையை அப்படியே இளையராஜா கண்களுக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. அவ்வளவுக்கு நுட்பமான கோட்பாட்டு விளக்கங்களைப் பகிரும் புலமைப் பகிர்வு இது.

இளையராஜாவை ஒரு பாடகராக அடையாளப்பட்ட ஆரம்ப வருஷங்களில் அதாவது நாற்பது வருடங்களுக்கு முந்திய காலத்தில் அவரை ஏளனப்படுத்தாத வெகுஜனப் பத்திரிகைகள் ஆகக் குறைவு எனலாம். அந்த விமர்சனப்பார்வை திரையிசை ரசிகர்கள் வரை நீண்டது. ஆனால் காலவோட்டத்தில் இளையராஜாவின் குரலைத் தமது ஆன்ம சங்கீதமாக நேசித்துக் கொள்ளும் சமூகம் உருவாகி விட்டது. அது மாரி 2 என்று இன்றைய மூப்புக் கொண்டாடும் ராசாவின் குரலைக் கூட யாசிக்கின்றது என்பதன் ஒப்புதல் வாக்குமூலமாக அமைகின்றது “கரகரப்பின் மதுரம்” என்ற பகிர்வு நவீனக் கவிதை உலகில் முக்கியமானதொரு படைப்பாளியாகக் கொள்ளப்படும் “இசை” அவர்களால் பகிரப்பட்டிருக்கின்றது.

சமூக வலைத்தளங்களில் பரவலாக அறியப்பட்டிருக்கும் எழுத்தாழுமை, ஊடகர் ப.கவிதாகுமார் அவர்களின் தனித்துவம் என்னவெனில் தமிழ்த் திரையிசையில் அடையாளப்படாத இசைக் கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் என்று தோண்டியெடுத்து வரலாற்று ஆவணப்படுத்துவது. அவரளவுக்கு இவ்விதம் ஆழமான நேசிப்போடு மலர்ந்தும் மலராத படைப்பாளிகள் குறித்த மெய்த்தன்மையான தரவுகளோடு எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு. அவ்விதமான “ராஜா இசையில் வெளிவராத பாடல்கள்” என்ற படைப்பின் வழியாக, நாம் கேட்டு ரசித்த ஆனால் திரையில் வந்திருக்குமா என்ற சந்தேகத்தோடே நிற்கும் பாடல்கள் தொட்டும் இன்னும் பல திரவியங்கள் எவ்வளவு அற்புதமான பாடல்கள் காட்சி வடிவம் பெறாமல் போய் விட்டனவே என்ற ஏக்க உணர்வோ ஆவணப்படுத்தி இந்தக் கட்டுரை வழி அவர் பகிர்கின்றார்.

“காலமும் கலையும் : இளையராஜாவின் ‘இனிமை’ நீங்கிய பாடல்கள்” என்ற தொனியில் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் கருத்துப் பகிர்வில் 1) சமூக அரசியல் மாற்றத்தோடு தொடர்புடைய பாடல்கள், 2) கட்டியங்காரன் பாணியில் அமைந்த நாட்டார் மயப் பாடல்கள் 3) அம்மா பாடல்கள்/ தன்னைப் பற்றிய மெய்ம்மை நோக்கிய பாடல்கள், 4) பக்தி அல்லது அம்மன் பாடல்கள் என்ற பகுப்பாய்வைக் காட்டி நிற்பதோடு, இளையராஜாவின் சமூக மாற்றப் பாடல்கள் முந்திய தலைமுறையில் இருந்து வேறு அமைந்திருக்கும் பாங்கைத் தமிழக அரசியல் மாற்றங்கள், கம்யூனிஸ்ட் இயக்கக் கொள்கை சார்ந்த இளையராஜாவின் ஆரம்ப காலம் அது கொடுத்த திரையிசை வரவுகளாக அரசியற் பின்புலத்தோடு ஆராயும் பகிர்வு இது.

இந்த நூலின் இறுதிப் பகிர்வை பேராசிரியர் இரா.பிரபாகர் “வெகுசன இசையில் இளையராஜா” என்ற தலைப்பின் கீழ் ஆராய்ந்து பகிர்ந்திருக்கின்றார்; அதில் வெகுசன இசைப்பணியில் இளையராஜாவின் தனித்துவம் என்னவென்பதை மெட்டமைக்கும் பாணியில் இருந்து இசை வடிக்கும் நுட்பம் வரை விபரித்துச் செல்கிறார்.

இளையராஜாவைச் சுற்றியே இந்தக் கருத்தரங்கங்கள் அமைந்ததால், கட்டுரையாளர்களின் உள்ளிருக்கும் தீவிரமான ராஜா நேசிப்பு அதீத ஒப்பனைகள் அவ்வப்போது தலைதூக்குகின்றன. ஆனால் அவற்றுக்கான நியாயப்பாடுகளையும் தங்கள் தரப்பில் முன்வைக்கின்றார்கள்.

“இசையைப் புரிந்து கொள்ளுதல்” நூல் இளையராஜா ரசிகர்களுக்கும் புதிய பல சேதிகளையும், உதாரண விளக்கங்களூடு இளையராஜா என்ற இசைப் பேராளுமை குறித்த பார்வையையும் கொடுக்கும் வகையில் பலருக்கும் சென்று சேர வேண்டிய தொகுப்பு இது.

இந்த நூலை வாங்குவதற்குத் தொடர்பு கொள்க achamoogam@gmail.com 

கானா பிரபா

18.08.2022


1 comments:

Anonymous said...

மிக்க நன்றி ஐயா. அருமையான திறனாய்வு.