Pages

Thursday, August 4, 2022

வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா ❤️


“மீண்டும் மீண்டும் கூடி சேருது 

பொன்னிஆறு

மோகத்தோடு கூடி பாடுது....”

இசைஞானி இளையராஜா அலையில் வாழ்பவர்களுக்கு இந்த வரிகள் அனிச்சையாக வாயில் மிதக்கும். அவ்வளவுக்கு ஊறிப் போன பாட்டு இது.

அந்தக் காலத்து இளவட்டங்கள் நம் ஊர்ப்பக்கப் பெண்களைக் கண்டால் குறும்பாகப் பாடும் பாடல்களில் இதுவுமொன்றாக இருக்கும் 

ஏன் இப்போது கூட விடிகாலை இருளில் எங்காவது பயணப்படும் போதும் அந்தச் சூழலில் மனதில் எழும் பாடலில் இது முதல் இடத்தில் இருக்கும். அதற்குப் பாடலின் அந்த ஆரம்பக் காட்சிப்படுத்தலின் பாதிப்பு இருக்கலாம். 

அந்த ண்ண்ண்ண் என்ற தொடக்க இசையே விடிகாலையின் அழகிய தொடக்கம் போல உவமானப்படும்.

பாட்டு ஒரு அழகியல் என்றால் இதன் காட்சிப்படுத்தல் இன்னோர் அழகியல்.

முகப்பவுடர், உதட்டுச் சாயம் இல்லாத ஏன் ஒப்பனையே இல்லாத ராமராஜனின் அந்தக் களையான முகம், கூடச் சேர்ந்த ரேகாவின் ஜோடிப் பொருத்தம் என்று எண்பதுகளில் ராஜாவின் பாடல்களில் காட்சிப்படுத்திய உன்னதங்களில் இதுவுமொன்று.

https://www.youtube.com/watch?v=ASZVLcLHvWg

இந்த மாதிரிப் பாட்டெல்லாம் போகிற போக்கில் எடுத்து விடுவது போல அந்தக் காலத்தில் ராஜா கொடுத்தது. ஆனாலும் சாதாரணர்கள் நமக்கோ அந்தப் பிரமிப்பு இத்தனை ஆண்டுகாலம் கடந்தும் அந்த எஸ்பிபி & ஜானகி கூட்டணியின் கனிவும், குழைவும், இசையுமாக நம்மை ஒரு வழி பண்ணிவிடும் “தேனகம்” இது.

முன்பெல்லாம் டி.கே.போஸ் இயக்கிய “ராசாவே உன்னெ நம்பி" படத்தோடு, கங்கை அமரன் இயக்கிய இந்த “செண்பகமே செண்பகமே” படத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்வேன். 

பின்னர் ஞாபகத்தில் போட்டு வைத்தது இப்படித்தான் “செண்பகமே செண்பகமே” பாட்டு வந்த “எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்துக்குப் பின்னர் ராமராஜனோடு கங்கை அமரன் சேர்ந்தது என்ற கணக்கு.

“வெளுத்துக் கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி” ராஜாவே எழுதித் தன் தம்பியோடு அந்த முகப்புப் பாடலில் தோன்றிய அழகிய ஒற்றுமைக்காலம் அது.

பின்னாளில் எடுக்கப் போகும் கரகாட்டக்காரன் படத்துக்கு ஒத்திகை பார்த்தாரோ என்றெண்ண வைக்கும் சிலுக்கின் நடனத்தோடு வரும்

“தென்பழனி ஆண்டவனே தெய்வயானை நாயகனே” 

https://www.youtube.com/watch?v=f3Bg1_1vfpo

மலேசியா அண்ணனின் “பதினாறு வந்த மயிலே மயிலே” https://www.youtube.com/watch?v=Lj6eXwNOnvI பாடல் அருமையாக இருந்தும் அதிகம் பேசாப்பொருள் ஆகி விட்டது.

“வாசலிலே பூசணிப்பூ” எண்பதுகளின் காதல் ஜோடிப் பாடல்கள் உள்ளூர் ஒலிப்பதிவு கூடங்களில் தவறாமல் வாடிக்கையாளர் பட்டியலில் ஒன்றாக இருக்கும்.

“ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே....”

ஜானகி முடிக்க அப்படியே 

“ஹ்ஹா” 

“ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே

போதும் போதும் கண்ணால்

என்ன கட்டி இழுக்கற செண்பகமே!”

என்ற தன் அக்மார்க் குறும்பை உதிர்த்து விட்டுத் தான் முடிப்பார் எஸ்பிபி. விடமாட்டாரே பாடல் முடியும் தறுவாயில் கூடக் காத்திருந்து ஒரு ஜாலமா? என்ற வியப்பு வந்து போகும்.

கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது 

உங்க பாட்டு..

கேள்வி போல என்னை வாட்டுது

❤️

https://www.youtube.com/watch?v=n1Sw4pO9Wn4


0 comments: