Pages

Friday, August 12, 2022

மின்மினி 💕 சிறகடிக்க ஆசை ❤️

எழுத்தாக்கம் Kana Praba

"சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

பாடலை எதேச்சையாக எப்போது கேட்டாலும் புத்துணர்வு தருகிறது, 

மாற்றம் என்பது அப்படி இருக்கவேண்டும்"

என்று சற்றேறக்குறையப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்திருந்தேன். 

குளிர் காற்றுச் சில்லென்று முகத்தில் படும் அந்த உணர்வுக்கு புத்திசை நாயகன் ரஹ்மான், வரிகளை மணிமணியாகப் பகிர்ந்த வைரமுத்து இவர்களை எல்லாம் பிரதிபலித்த குரலாக மின்மினி. 

அதற்கு முன்பே மின்மினி குரலைக் கேட்டுப் பழகியவர்களுக்குக் கூட இந்தப் பாடல் ஏனோ புதுக்குரல் தரும் பிரமையைக் கொண்டு வந்தது.

இப்படியாகத் தமிழ்த் திரையிசையின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்ததில் மின்மினியை இன்றைய தலைமுறையும் இன்னும் ஞாபகத்தோடு மனதில் இருத்தி வைத்திருக்கின்றது. கொஞ்சம் அதிகப்படியான உரிமையோடு, மின்மினியை ரஹ்மான் தான் அறிமுகப்படுத்தினார் என்பதைக் கூடச் சொல்லி வைக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் "மீரா"திரைப்படத்தின் மூலம் தமிழில் பாடகியாக வந்த அவருக்கு, அந்த ஆரம்ப காலத்தில் நிறையைப் பாடல்களைக் கொடுத்து வாய்ப்பளித்திருக்கின்றார் ராஜா. மலையாள தேசத்துக் குரல்களின் மீது ஏனோ ராஜாவுக்குத் தீராக் காதல். சுஜாதா, சித்ரா, சுனந்தா, செர்ணலதா (இவர் எம்.எஸ்.வி இசையில் தான் அறிமுகமானார் ஆனால் ராஜா கொடுத்த பாடல்களால் கிடைத்த புகழை இங்கே சொல்லவா வேண்டும்), என்று நீளும பட்டியலில் மின்மினியும் இணைந்து கொண்டார். ரோஸில்லி என்ற இயற்பெயர் கொண்ட “மினி ஜோசப்” என்ற பெயரிலேயே வலம் வந்திருக்கின்றார் இது தமிழ்த்திரையுலகுக்கு வரமுன்னர். மினி ஐ மின்மினி என்று பெயர் சூட்டியதும் ராஜாவே தான். 

சொர்ணலதா போல இவருக்கும் ஓரவஞ்சனை இல்லாது நிறைய நல்ல நல்ல பாடல்களை ராஜா கொடுத்திருக்கின்றார். 

ஆனால் அன்றைய சூழலில் ஜானகி, சித்ரா போன்ற முதல் வரிசைப் பாடகிகள் அளவுக்கு வராமற் போயிருந்தார். 

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமாக, அந்தப் படத்தின் முத்திரைப் பாடல் "சின்னச் சின்ன ஆசை" பாடல் மின்மினிக்குக் கிடைக்க அவர் அதுவரை தொடாத உயரங்களைத் தொட்டார் இந்தப் பாடல் கொடுத்த புகழால். இசைஞானியின் பாடகிகளில் செர்ணலதாவையும், மின்மினியையும் வைத்து ரஹ்மான் தன் ஆரம்ப காலப் படங்களில் நிறையவே கொடுத்திருக்கின்றார். ஆனால் மின்மினி என்பது வானத்தில் ஒளிர்ந்து மறையும் என்பது இவரின் வாழ்க்கையிலும் எழுதப்பட்ட துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. மின்மினிக்குத் திடீரென்று பேச்சாற்றால் இழக்கப்பட, அதுவரை சேர்த்த அத்தனை புகழும் அங்கீகாரமும் ஒரே நாளில் கலைந்து போகின்றது. 

பாடகி மின்மினி, தமிழ்த்திரையுலகின் முக்கிய ஆளுமைகள் இளையராஜா, ரஹ்மான் தவிர தேவா உள்ளிட்ட மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடினாலும் இந்த இருவரிடமிருந்து  பெற்ற பாடல்கள் அளவுக்கு இல்லை என்பதையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும்.

ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது(உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) https://www.youtube.com/watch?v=eATA-QcfSOw  பாடலை எஸ்.பி.பி என்ற ஜாம்பவானுடன் பாடும் போது, தன்னிலையில் இயங்கும் மின்மினி பளிச்சென்று மின்னுவார் அதுவும் அந்த 2.30 வது நிமிடத் துளியில் ஆகா https://www.youtube.com/watch?v=eATA-QcfSOw

 "ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே" https://www.youtube.com/watch?v=W_4nPYWfCEU  (திருமதி பழனிச்சாமி) என்று ( 2.21 நிமிடம்) அதுவரை கலாய்த்துப் பாடிய எஸ்.பி.பி, சுந்தரராஜன் குழுவுக்குப் போட்டி போட்டுப் பாடுவதிலாகட்டும் மின்மினியின் குரலின் கனிவுக்கு சில சான்றுகள்.

கிட்டத்தட்ட இதே தொனியில் மின்மினி, மலேசியா வாசுதேவனோடு பாடிய “குத்தாலக் காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு" (சின்ன தேவன்) https://www.youtube.com/watch?v=HFhpp-wc0JQ அதிகம் பிரபலமடையாத அற்புத கானம். 

"அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக் கிளி) 

https://www.youtube.com/watch?v=TzflTNcAX4I

பாடலில் மனோவோடு இணைந்து பாடும் மின்மினிக்கு மாற்றீடாக இந்தப் பாடலில் இன்னொரு குரலைப் பொருத்திப் பார்க்கமுடியவில்லை. ஆர்.வி.உதயகுமாரின் உதவியாளராக இருந்து இயக்குநராக வந்த செய்யாறு ரவியின் இயக்கத்தில் வந்த தர்மசீலன் படத்தில் வரும் "தென்றல் வரும் முன்னே முன்னே" https://www.youtube.com/watch?v=aGnSSv-WvOw  பாடல் மின்மினிக்கு ராஜா கொடுத்த அங்கீகாரங்களில் ஒன்று. தாம்பத்திய உணர்வின் பிரதிபலிப்பு அந்த இனிய சங்கீதத் தாலாட்டு அதில் மிகவும் உருகிக் கொடுத்திருப்பார் மின்மினி.

அதே படத்தில் வரும் “ராத்திரியில் பாடும் பாட்டு" https://www.youtube.com/watch?v=BpgR1O_aHZY  பாடலின் வழி அருண்மொழியோடு மீண்டும் இணை சேரும் போது அந்த ஒத்த அலைவரிசை அழகாக அமைந்திருக்கும்.

“முத்துமண்டபம் நட்ட நடுவே....

சித்திரக்கிளி தன்னந்தனியே

துணை கிட்டுமா.......

வந்து சேருமா.......”

என்ற தொகையறாவுடன் கொடுக்கும் “அன்பே வா அன்பே வா” (ஏழை ஜாதி) https://www.youtube.com/watch?v=wXRhO_s2x-s ராஜா இவருக்குக் கொடுத்த சவாலான பாடல்களில் ஒன்று. 

வள்ளி படத்தில் வரும் "என்னுள்ளே என்னுள்ளே" என்ற பாடலில் சொர்ணலதா வழியாக ஏங்கும் காதலியின் உணர்வைக் கொண்டு வந்த ராஜா,  உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் "தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே" https://www.youtube.com/watch?v=U_-8mmcg-Ds  பாடலை மின்மினிக்குக் கொடுத்து அதே பரிமாணத்தை இன்னொரு வழியாகக் காட்டியிருக்கிறார். 

இவையெல்லாவற்றுக்கும் மேலாக என் மனசுக்கு நெருங்கிய பாடல்களில் ஒன்றான 

"நல்ல தலைவனும் தலைவியும்" (பிள்ளைப்பாசம்) பாடலில் 

"எங்கும் பொழியுது ஒளிமழை 

வண்ண விளக்குகள் பலவகை... 

ஊரெல்லாம் திருவிழா" 

https://www.youtube.com/watch?v=L29mVbzhzcA

என்று பாடும் அந்தக் கணங்களில் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றார்.

"மேகங்களைத் தொடுப்பேன் 

மஞ்சமதை அமைப்பேன் 

எந்தனுயிரே எந்தனுயிரே, 

வானவில்லைப் பிடிப்பேன் 

ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன் 

கண்ணின் மணியே கண்ணின் மணியே,

உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே”

https://www.youtube.com/watch?v=KQywnZ-rjtc

அப்பாவித்தனமும், அவர் கொடுக்கும் மின்னி மின்னி மறையும் சங்கதிகளுமாக ஒரு பள்ளிக்காதலிக்குரிய தோரணையில் கொஞ்சும் குரல்.

 “மலையோரம் மாங்குருவி" (எங்க தம்பி),  

https://www.youtube.com/watch?v=S0VJHEcr2QM

மெதுவாத் தந்தி அடிச்சானே (தாலாட்டு) மனோவுடன், 

ஜேசுதாசுடன் அரிதாகச் சேர்ந்த “ஓ மாரி” https://www.youtube.com/watch?v=_Egs4Q-3jyY  (பாட்டு வாத்தியார்)

ஐ லவ் இந்தியாவில் “குறுக்குப் பாதையிலே”, “காற்று பூவைப் பார்த்துக் கூறுது" என்று எஸ்பிபியுடனுமாகக் அந்தக் குறுகிய காலத்தில் பாடிக் கொடுத்தார்.

இளையராஜா இசையில் 1991 – 1995 கால நான்கு ஆண்டு காலத்துக்குள் 46 பாடல்களை அள்ளிப் பாடியவர், 

“மணமகளே மகளே வாழும் காலம் சூழும் 

மங்கலமே மங்கலமே” 

https://www.youtube.com/watch?v=ijbqgzWZgDk

ஸ்வர்ணக் குரலுடன் ஜோடி “மின்”னும். 

தனித்தும் குழுப் பாடகிகளோடும், சக பாடகிகளோடும் என்று இன்னும் இணைக் குரலாக அமைந்திருக்கின்றார்.

“நிலவ நிலவ இப்போ நான் புடிக்கும் நேரம்” மனோ & குழுவினரோடு போட்டி போட்டுப் பாடியிருப்பார்.

https://www.youtube.com/watch?v=70ae7_ZY028

“வாடி என் செங்கமலம்” 

https://www.youtube.com/watch?v=J3JBurIjUTY

தன் தாய் தேசம் கேரளத்தில் குறைச்சலாகப் பாடினாலும்

ரவீந்திரன் மாஸ்டரின் சங்கீதத்தில் 

“செளபர்ணிதா மித”

https://www.youtube.com/watch?v=nxaNfaFd9io

ஆகா என்னவொரு சாஸ்திரியப் பிரவாகமாய்ப் பாயும்.

இன்னும் ஜான்சன் மாஸ்டர் இசை கொடுத்த “வெள்ளித்திங்கள்"

https://www.youtube.com/watch?v=roNaea_HFdA

இன்னொன்று பாலகிருஷ்ணனின் இசை கொடுத்த வியட்னாம் காலனி “பாதிராவி நேரம்"

https://www.youtube.com/watch?v=JxfbL3nTRLQ

என்று அங்கும் குறைவாகப் பாடினாலும் நிறைவாக நிலைத்திருக்கின்றார் ரசிகர் மனதில்.

கானா பிரபா

இன்னொரு பக்கம் ரஹ்மானின் தொடக்கத்தில் இருந்து மின்மினிக்கு ஆரம்ப கால வாய்ப்புகளில் “பாக்காதே பாக்காதே” (ஜென்டில்மேன்) ஜெயச்சந்திரனோடு “சித்திரை நிலவு” (வண்டிச் சோலை சின்ராசு) கேட்கும் போது ஆகா இந்த ஜோடிக் குரல்களை மனதில் வைத்துக் கொண்டே மெட்டுக் கட்டியிருப்பாரோ என்னுமளவுக்கு அச்சொட்டான ஜோடிக் குரல் பொருத்தம் இசையோடு இழைந்திருக்கும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் “எடுடா அந்தச் சூரிய மேளம்” (புதிய மன்னர்கள்) பாட்டுத்தலைவனோடு கூடச் சேர்ந்து பாடும் மிதப்பு இருக்கும்.

அப்படியே துள்ளிசை ஆட்டம் போட்டு

மால்குடி சுபாவுடன் “சம்போ சம்போ பக்திப் பாடல் பாடட்டுமா (புதிய முகம்)

https://www.youtube.com/watch?v=2njd4p8MEsY

கொடுத்திருக்கும் விதமே வெகு அற்புதமாக இருக்கும். சின்னச் சின்ன ஆசைக்கு நேரெதிர் விளைவாக அந்தக் குரலின் பரிமாணம் இருக்கும்.

மின்மினியின் தொடர் பயணத்தில் ஒரு தடைக்கலாகப் பாடுவதற்கு அவர் சிரமப்பட்ட சோகம் நிகழ்ந்து, முடங்கிப் போய் மீண்டும் வெளியே வந்தவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்தத் தொண்ணூறுகளின் மின்மினியாகவே மேடையில் தன் குரலால் ஒளிர்ந்தார் இப்படி

https://www.youtube.com/watch?v=9TnTIEHSfRQ

மின்மினி தன் குரலை அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்லாமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று விளையாடுவார். அனுபவப்பட்ட பாடகிகள் அநாயாசமாக ஏற்ற இறக்கங்களோடு கொடுக்கும் சங்கதிகளோடு பாடுவதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு மின்மினியின் அந்தக் குரலில் மிளிரும் பெப்பர்மிண்ட் உணர்வு மறக்கடிக்க வைத்து விடும்.

நான் ஒரு

வீணையைப் போலே

நீ என்னை மீட்டுகிறாய்

ராகத்தின் சாயல்கள்

எல்லாம்

மோகத்தில் காட்டுகிறாய்

அன்புடனே தினம்

தாலாட்டுப் பாட

தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்  ❤️

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மின்மினிப் பாடகிக்கு 

கானா பிரபா

12.08.2022


0 comments: