Pages

Sunday, July 12, 2015

பாகுபலி எப்பிடி எப்பிடி

சிட்னியில் பாகுபலி படம் காண்பிக்கப்படுகின்றது என்பதே இந்தப் படத்தின் பிரமாண்டத்தை மிஞ்சிய செய்தியாக எனக்குப் பட்டது. அதை விட ஆச்சரியம் படம் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு திரையரங்கிலும் தலா இரண்டு அரங்கங்கள் ஒதுக்கியிருந்தார்கள். கடைசியா இன்னொரு ஆஆஹாஆஆச்சரியம் (உங்களுக்குப் பதிலா நானே கொட்டாவி விட்டேன்) இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு சிட்னியில் போடுவதற்கான எந்த ஆரவாரமும் தென்படவில்லை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ராணி சிவகாமி தேவி (ரம்யா கிருஷ்ணன்) ஓஓஓஓடும் காட்சியிலேயே படத்தின் முழு ஓட்டமும் எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடியும் என்றாலும் படத்தின் முடிவு வரை பார்வையாளனைக் கட்டிப் போடுவது இந்தப் படம் தன்னை விளம்பரப்படுத்திய பிரம்மாண்டம் தான்.

தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றும் படங்களின் பொதுவான குறை "தானாடா விட்டாலும் தன் தசை ஆடும்" 
ஐ மீன் பேசுபவரின் வாய் ஒருபக்கம் உச்சரிக்க வசனம் வேறொரு பக்கம் "இழி"படும். ஆனால் இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்தக் குறையே இல்லாத பக்கா தமிழ்ப்படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 
ஆரம்பத்தில் இருந்து உன்னிப்பாக அவதானித்த விடயம் வசனப் பங்களிப்பு. மிக எளிமையாக, நிதானமாக, அழகு தமிழில் எல்லாத்தரப்பு ரசிகனையும் காப்பாற்றிய விதத்தில் வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு ஒரு சபாஷ். படம் முழுக்கத் தன் பணியைச் செவ்வனே செய்த திருப்தி அவருக்கும் கிட்டியிருக்கும்.
அந்த மகிழ்மதி தேசம் ஆகா என்னவொரு அழகான பெயர்.

இந்தப் படத்தின் நடிகர் தேர்வில் முந்திரிக் கொட்டையாய் நான் முன் மொழிவது ரம்யா கிருஷ்ணனைத் தான். ப்பாஆ என்னவொரு மிடுக்கு, தன்னுடைய பாத்திரமாகவே ஒன்றிப் போய் நடித்த வகையில் படையப்பா நீலாம்பரிக்கு அடுத்து பாகுபலி சிவகாமி தேவி இவரின் திரையுலக வாழ்வின் ஏட்டுச்சுவடியில் பொறிக்க வேண்டியது.
நாசரின் பாத்திரம் இன்னொரு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியில் வந்த வில்லத்தனம். அவருக்கே அலுப்புத் தட்டியிருக்கும். சத்யராஜிற்கு கெளரவமான, பெருமைக்குரிய பாத்திரம். இவர்களை விட்டா ஆள் இல்லையா என்று கேட்ட மைசூர் சுரேஷ் ஐ கனவிலும் பொருத்திப் பார்க்க முடியாது.

பிரபாஸ் நடித்து நான் பார்க்கும் முதல் படம் இது. ட்விட்டர் வாழ் பிரபாஸ் ரசிகைகள் தயவு செய்து இந்த வரியோடு என்னை block செய்ய வேண்டாம். மேற்கொண்டு படிக்கவும். 
பிரபாஸ் இற்குக் கிடைத்த வேடங்களை வெகு சிறப்பாகவே செய்திருக்கிறார். அந்த உடன் பிறவாச் சகோதரன் ராணா டகுபதி என்று படம் முடியும் போது போட்ட எழுத்தோட்டத்திலேயே அறிந்தேன். ஆனாலும் பாதகமில்லை.

அனுஷ்கா தலைவிரி முதுமைத் தோற்றத்தில் தோன்றும் காட்சியில் இருந்து கடைசி நிமிட் வரை தோ வருது இந்தா வந்து "குழலில்லை குழலில்லை தாஜ்ஜுமஹால் நிழலு" என்றொரு அழகுப் பதுமைக் குத்துப்பாட்டுக்குக் காத்திருந்து காத்திருந்து அவ்வ்வ் (மண்வாசனை காந்திமதி கணக்கா மண்ணை வாரி வீசிங்)

தமன்னா அழகு சாதனப் பொருள் என்பது உலகறிந்த விடயம் ஃபேர் அண்ட் லவ்லியை யாராச்சும் ஜண்டு பாம் ஆக நெத்தியில் பூசுவாங்களா இல்லை பூசுவாங்களா? தமன்னா கையை நீட்டி வீர வசனம் பேசும் போது ஐயோ இதென்ன தொங்கும் பூந்தோட்டம் என்று துடிக்கிறதே தெம்மாங்கு பாடி.

பாகுபலி முதற்பாதியில் கற்பனைக்கும் எட்டாத ஒரு சில காட்சிகளை வைத்து விட்டு இடைவேளைக்குப் பின்னர் வெகு சிரத்தையாகப் படமாக்கிய போது முன்னதிலும் கவனம் செலுத்தியிருக்கலாமே என்று தோன்றியது. பக்கத்தில் இருந்த என் இனிய தமிழ் மகன் யாரோ ஒருவர் தன் நண்பருக்கு "தோ பார்ரா குருவி விஜய் ரயில் பாய்ஞ்ச மாதிரி மலையைக் கடக்குறான்" போன்ற எள்ளலைத் தடுத்திருக்கலாம்.

முதல் பாடலைத் தவிர மற்ற இரண்டும் வேகத் தடை. காதல் பாடலையும் மன்னித்து விடலாம். ஆனால் அந்தக் குத்துப் பாட்டுத் தேவை இல்லை. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பரந்து விரிந்து சுழன்று எழும்பும் காமெராவோடு ஈடு கொடுக்க வேண்டும் என்று கொஞ்சம் வேகமாக முன்னால் ஓடி விட்டார் மரகதமணி. பின்னர் தான் திரும்பிப் பார்த்து ஒன்றாகப் பயணித்தது போல உணர்வு.

படத்தின் இடைவேளைக்குப் பின்னர் தான் உண்மையான பிரம்ம்ம்ம்மாண்டம். அடேங்கப்பா அந்தப் போர்க்களக் காட்சிகளிலெல்லாம் இருக்கையின் கால் பகுதிக்கு வந்து விட்டேன் என்றால் பார்த்துக்குங்க.

பிரம்மாண்ட்டம்யா என்னும் போதே கர்ணன் படம் எல்லாம் பார்த்த பரம்பரைடா என்று என் மனசாட்சி என்னைத் திட்டுகிறது. (காதல் கோட்டை மணிவண்ணன் குரலில்) வயசாகிப் போச்சேடா கலிய பெருமாள்.
இருந்தாலும் கடைசியில் போட்ட ஒரு முடிச்சால் 2016 இல் அடுத்த பாகுபலி வரும் வரை நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி வெற்றி கண்டிருக்கிறார்.

மொத்தத்தில் "பாகுபலி" பலி எடுக்காத (தேன்) பாகு (சன் டிவி டாப் டென் மாதிரி நானும் சொல்லிட்டேனே யெப்பூடி)

8 comments:

Giri Ramasubramanian said...

அது சிதபெத காந்திமதி இல்லையா?

Anonymous said...

//தமன்னா அழகு சாதனப் பொருள் என்பது உலகறிந்த விடயம்
தமன்னா கையை நீட்டி வீர வசனம் பேசும் போது,
ஐயோ இதென்ன தொங்கும் பூந்தோட்டம் என்று துடிக்கிறதே தெம்மாங்கு பாடி//

தெம்மாங்கு Body?

அடா அடா அடா..
தமன்னாவின் மேனிக்கு = தெம்மாங்கை உருவகம் ஆக்கிய ஒம்ம சுவைத்திறம், ஆயிரம் கார்க்கிக்கும் வருமோ?:)
என்னே ஒரு வியனிலை தொகைவிரி உருவகம் = தெம்மாங்கு Body தமன்னா! கா.பி, என்னே உன் தமிழ்!:)

துபாய் ராஜா said...

நேர்மையான விமர்சனம்.

Anonymous said...

Sir,

This is direct Tamil movie not a dubbed one.

கானா பிரபா said...

ஓ அப்படியா நன்றி தகவலுக்கு

கானா பிரபா said...

அவ்வ்வ்வ்

கானா பிரபா said...

நன்றி துபாய் ராஜா

கானா பிரபா said...

என்ன்ன்னது