Pages

Tuesday, July 7, 2015

#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு


இன்றோடு இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டி நிகழ்ச்சி https://radiospathy.wordpress.com
தனது 500 வது போட்டியோடு இனிதே நிறைவை நாடுகின்றது.

இசைஞானி இளையராஜாவின் அள்ள அள்ளக் குறையாத இசைக் கடலில் எத்தனையோ முத்துகளைத் தேடியெடுக்கும் நல் வாய்ப்பு இந்தப் போட்டி வழியாக அமைந்தது.

இந்தப் போட்டிக்கு முன்னோடியாக அமைந்தது 2007 ஆம் ஆண்டில் எனது றேடியோஸ்பதி தளத்தின் வாயிலாகக் கொண்டு நடத்திய றேடியோஸ்புதிர் http://www.radiospathy.com/2007/10/blog-post.html

அந்தப் போட்டி அறுபது போட்டிகளைக் கடந்து, இளையராஜா மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களது போட்டிகளோடும் தொடர்ந்த நிலையில் இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடத்துவதற்கான உந்துதலாக நண்பர் ரெக்ஸ் அருள் நடத்திய போட்டி அமைந்தது.

இசைஞானியின் பாடல்களை வைத்துப் புதுமையானதொரு போட்டி வைக்க வேண்டும் என்று நினைத்த போது அவரின் பாடல்களில் தனித்துவமாக அமைந்த கோரஸ் குரல் ஓசையை வைத்துப் பண்ணலாமே என மனதில் திடீரென்று எண்ணம் உதித்தது.

"இரு விழியின் வழியே நீயா வந்து போனது"  (சிவா) பாடலோடு பெப்ரவரி 25 இந்தப் போட்டி ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போட்டியில் தமிழில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது தேர்வு இன்னும் மட்டுப்படுத்தப்பட்டது.

நிதமும் சராசரியாக 50 பேர் அல்லது அதற்கும் மேலாகப் போட்டியில் பங்கெடுத்த சுற்றுகளும் இருந்தது இந்தப் போட்டியின் வெற்றி எனலாம்.

ஒவ்வொரு படத்திலும் கோரஸ் பாடல்கள் அமைவது அபூர்வம், சில சமயம் ஒரே படத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கோரஸ் பாடல்களும் இருந்ததுண்டு. ஆரம்பத்தில் எனது மனதில் சட்டென்று தோன்றிய பாடல்களைக் கொடுத்து வந்தேன். பின்னர் கையிருப்பு வற்றிய போது தேடல் மிகவும் சவாலாக அமைந்தது.
குறிப்பாக பாடகர்/கவிஞர் சிறப்பு வாரம் அமையும் போது ஒவ்வொரு நாளும் குறித்த ஆளுமையின் வெவ்வேறு தன்மை பொருந்திய பாடலைத் தர வேண்டும் என்று தேடிய போது பெரும் சவாலாக அமைந்தது.
குறிப்பாக கவிஞர் வைரமுத்து வாரத்தில் ஒரேயொரு பாடலைத் தேர்ந்தெடுக்க 6 மணி நே வரை பிடித்தது.
ஒவ்வொரு வாரமும் சராசரியாக இரண்டு மணி நேர உழைப்பு இந்தப் போட்டிக்குத் தேவைப்படுகிறது.
வார இறுதியில் ஒரே தொனியில் அமையும் பாடல்களுக்கும் சிறப்புக் கவனம் தேவைப்பட்டது.

இலக்கியா பிறக்க முன்பும், பிறந்த அந்த நாளில் வைத்தியசாலையில் வைத்தே இந்தப் போட்டியை வெளியிட்ட நாட்களும் மறக்க முடியாது. வார இறுதியில் சில சமயம் இலக்கியாவை மடியில் வைத்துக் கொண்டு தான் பாடலைத் தேர்ந்தெடுப்பேன்.

இந்தப் போட்டிகளில் பங்கெடுத்த உங்களைக் கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு நூறு போட்டிகளிலும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்ததோடு முதலில் தமிழில் பதிலளிக்கும் போட்டியாளருக்கு முதல்வர் என்ற சிறப்புப் பிரிவிலும் கெளரவம் வழங்கப்பட்டது.
கடந்த 400 வது போட்டியின் சுற்று மற்றும் இந்த 500 வது போட்டியின் சுற்று ஆகியவற்றுக்கான வெற்றியாளர் விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

இத்தனை நாட்களும் தொடர்ந்து இந்தப் போட்டியில் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அடுத்த போட்டி எப்போது, எப்படி அமையும்
என்ற தீர்க்கமான முடிவை எடுத்த பின்னர் இன்னொரு வெற்றிகரமான பயணத்தில் சந்திப்போம்.
அதுவரை நன்றி வணக்கம் 🙏

1 comments:

ரிஷி said...

பிரபா,
இனிமையான இந்த பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு முதற்கண் நன்றி & சிரம் தாழ் வணக்கம்! உங்கள் அர்ப்பணிப்பும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது! இது போன்ற பயணங்களால்தான் நம் இசை சுரபியின் தெவிட்டாத அமுதம் மேன்மேலும் செவிகளை சென்றடைகிறது! இன்னும் ஒரு நூற்றாண்டு ”இசை”பட வாழ்க!