Pages

Friday, July 24, 2015

பாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி


கை தட்டல்  ஒலியாய் இசையெழுப்ப தொடரும் சலங்கைச் சத்த நடையோடு மேளமும், நாயனமும், இன்ன பிற வாத்தியங்களும் அப்படியே குதியாட்டம் போட்டுத் துள்ளிக் குதித்துப் பிரவாகிக்கும் போதே மனசு அப்படியே டிக்கெட் வாங்காமல் கிராமத்துக்குப் பாய்ந்து விடும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஜோடிக் குரலுக்கு இம்மாதிரிக் கிராமியத் துள்ளிசை சர்க்கரைப் பொங்கலை அளவு கணக்கில்லாமல் சாப்பிடுவது போல, கேட்பவருக்கோ அந்த அதீத இனிப்பின் சுவையை அப்படியே கடத்துவது போல.
பாடல் முழுக்க இந்த ஜோடி கொடுக்கும் நையாண்டித் தொனி பாடலின் சாரத்தை ஈறு கெடாமல் காப்பாற்றும்.

"முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெட்கமா" என்று இரண்டு அடிகளாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரலின் முதன் அடிகளைக் கவனியுங்கள் அந்த "முத்தம்மா"வில் ஒரு கொஞ்சல் இருக்கும் "வெட்கமா" வில் வெட்கம் ஒட்டியிருக்கும். பாடலை எப்படி வளைத்து நெளித்து உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற குறும் பாடம் ஒட்டியிருக்கும். 
அதே போல் "சாடை" (சொல்லிப் பேசுதடி) இல் சாடை செய்யும் பாவனை, "குத்தாலத்து" வில் குதிக்கும் குதூகலம்.

"சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா" எனும் எஸ்.ஜானகியின் எசப்பாட்டில் வண்ணத்துப் பூச்சியாகப் புல்லாங்குழல் ஊடுருவும்.

இடையிசையில் குலவைச் சத்தத்தோடு  "வந்தது வந்தது பொங்கலின்று" என்று கலக்கும் மகளிரணியோடு சேர்ந்து "தந்தகத் தந்தத் தந்தகத் தந்த" சோடி கட்டும் ஆடவருமாகப் போடும் துள்ளாட்டம்
கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தை அப்படியே படம் போட்டுக் காட்டும்.

ரஜினிகாந்த் இற்குக் கிடைத்த பாடல்களில் அவருக்கேயான பாடல்கள் என்ற தெம்மாங்குப் பாடல் பட்டியல் போடும் போது தவிர்க்க முடியாத பாட்டு இது. எண்பதுகளில் வந்த மசாலாப் படங்களில் இயக்குநர் ராஜசேகர் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் பல எஸ்.பி.முத்துராமன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்களும் உண்டு. 
1991 ஆம் ஆண்டு "தர்மதுரை" படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் நூறு நாள் ஓட்டத்தைக் கூடக் காணும் அதிஷ்டமில்லாமல் இறந்துவிட்டார் இந்தப் பட இயக்குநர் ராஜசேகர்.

"தர்மதுரை" படத்தின் பாடல்களைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? "ஆணெண்ண பெண்ணென்ன" பாடல் மட்டும் கங்கை அமரன். மீதி எல்லாம் பஞ்சு அருணாசலம் தன் கணக்கில் வைத்துக் கொண்டார்.
"சந்தைக்கு வந்த கிளி" பாடல் கங்கை அமரனின் பாணியில் எழுந்த வரிகள். "மதுர மரிக்கொழுந்து வாசம்" பாடலுக்கு ஒரு வகையில் உறவுக்காரி.

இசைஞானி தந்த கிராமத்துப் பாடல்களை ஒவ்வொரு தசாப்தங்களாகப் பிரித்து நுணுக்கமாக ஆய்வுப் பட்டம் செய்யலாம். அந்த வகையில் தொண்ணூறுகளின் முத்திரை இது.

அந்தக் காலத்துச் சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பிவிட்டது போன சனிக்கிழமை இரவில் இந்தப் பாட்டு. ஒரு அலுவல் காரணமாக  என் காரில் அந்தச் சனிக்கிழமை இரவு தனியனாகப் பயணித்த போது சிங்கப்பூர் ஒலி "சந்தைக்கு வந்த கிளி" பாடலைக் கொண்டு வந்து தந்தது.
பால்ய நண்பனை வெகு காலத்துக்குப் பின் சந்தித்துக் கதை பேசும் சுகானுபவம் தான் இந்தப் பாடல். அந்த நேரம் என் கார் யாழ்ப்பாணத்துக்கு பஸ் பிடித்து இணுவில் கிராமத்தின் செம்பாட்டு நினைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

https://soundcloud.com/arulselvam-sekar/sandhaikku-vanda 

 http://www.youtube.com/watch?v=z_MQod9HCuY&sns=tw

1 comments:

துபாய் ராஜா said...

அழகான பாடல். அருமையான விமர்சனம்.