ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களில் இப்போதும் தேடி ரசிப்பது என்னமோ அன்றைய காலகட்டத்தில் அதிகம் ஆர்ப்பாட்டம் பண்ணாது அடக்கமாக இருந்த இம்மாதிரிப் பாடல்கள் தான். அப்போது வரிசையாக ஒவ்வொரு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியவிதத்தில் பவித்ரா படத்தில் கே.சுபாஷ் உடன் கை கோர்த்திருந்தார் ரஹ்மான்.
படத்தில் "உயிரும் நீயே" , "அழகு நிலவே" பாடல்களோடு "கோயம்முத்தூர் கோயம்முத்தூர் தாண்டி" என்ற எள்ளல் பாடல் அளவுக்குக் கூட செவ்வானம் பாடல் அப்போது பிரபலமாக இருக்கவில்லை. இந்தப் பாடல் வந்த நேரம் நான் கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நேரம் எப்போதாவது அரிதாக இலங்கை வானொலி இந்தப் பாட்டைக் கொடுக்கும் போது நின்று கேட்டுவிட்டுப் போவேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்.பி சைலஜாவிற்கு இளையராஜாவால் ஆரம்பத்திலிருந்து பாடும் வாய்ப்புகள் அதிகம் கிட்டியது போல, எஸ்.பி.பி மகள் பல்லவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்த்திருக்கிறார். காதலிக்கும் பெண்ணின் கைகள் (காதலன்) படப்பாட்டில் தந்தையுடன் சேர்ந்து பாட வாய்ப்புக்கிட்டியது இவருக்கு. ஜீன்ஸ் படத்தில் உன்னிகிருஷ்ணனுடன் "ஹைர ஹைர ஐரோப்பா" வரிசையில் பவித்ராவில் இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் முன்னுறுத்தியும் தொடர்ந்தும் நிறையப் பாடவில்லை இவர்.
நீல மலர்கள் படத்தில் வந்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா பாடலைப்போலவே இந்தப் பாடலின் வரிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
எஸ்.பி.பல்லவியை திரையிசையில் தனித்துவமான பாடகி என்றெல்லாம் உயர்த்த முடியவில்லை என்றாலும், அப்பாவித்தனம் ஒட்டிய அந்தக்குரலில் ஏனோ ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக "செவ்வானம் சின்னப்பெண் சூடும்" பாடல் அவருக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. மனோவை முந்திக் கொண்டு இவர் பாடும் போது கொடுக்கும் நுணுக்கமான சங்கதிகளைக் கவனித்தால் நீங்களும் என் கட்சியில் சேர்ந்துகொள்வீர்கள்.
ரஹ்மான் ஒவ்வொரு புதுக்குரல்களையும் புதுப்புது வாத்தியம் போலப் பயன்படுத்தும் அழகே தனி. அந்த வகையில் பல்லவியின் குரல் அவரின் இசையில் மிளிர்ந்தது எனலாம்.
“செவ்வானம் சின்னப் பெண் சூடும்" பாடல் உண்மையில் Yoddha படத்துக்காக முதலில் பாவித்த இசை வடிவம். அந்தப் பாடல்
“மாம்பூவே” https://www.youtube.com/watch?v=0W30AXI5CZA கே.ஜே.ஜேசுதாஸ் & சுஜாதா பாடியதன் மீள் வார்ப்பு. மலையாளிகள் தங்களுக்குத்தான் முதலில் ரஹ்மான் இசையமைத்தார்கள் என்று பெருமையடிக்கும் படம் இது. எனக்கென்னமோ முன்னதை விட “செவ்வானம்” தான் அருமையாக, இளமையாக வந்திருப்பது போன்றதொரு உணர்வு.
அண்மையில் சாய் வித் சித்ராவில் கலந்து கொண்ட நடிகர் விச்சு என்ற விஸ்வநாத் ஒரு தகவலைச் சொன்ன போது “செவ்வானம்” பாடல் மீது இன்னும் நெருக்கம் அதிகமாகி விட்டது.
அந்தச் சமயம் தன்னுடைய புதுப்படமான “பவித்ரா”வுக்கு இளம் நாயகனை கே.சுபாஷ் தேடிய போது பிரபுதேவா எல்லாம் பரிசீலனையில் இருந்தாராம். ஆனால் அதையும் தாண்டி அஜித்குமாரைப் பரிந்துரைத்தவர் “அமராவதி” இயக்குநர் செல்வா.
ஆனால் அஜித்குமாரோ நடிப்பில் ஆர்வம் இல்லாமல் வெளிநாடு செல்லும் நோக்கத்தில் இருந்தாராம். அப்போது அவர் மோட்டார் பைக் விபத்தில் அடிபட்டு இருந்த நேரமும் கூட.
ஆனால் இந்த ஒரேயொரு படத்தில் மட்டும் நடியுங்கள், அதுவும் நீங்கள் அடிபட்டு இருப்பதால், படத்தின் நாயகன் மருத்துவமனைக் கட்டிலில் இருக்கும் காட்சியமைப்புக்கும் பொருந்தும் என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார்களாம்.
அப்படியாக அஜித்குமாரும் “பவித்ரா” படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடைய அடுத்த படத்துக்கு நாயகன் தேடிக் கொண்டிருந்த இயக்குநர் வஸந்த் கண்ணில் “செவ்வானம் சின்னப் பெண் சூடும்” பாடல் அகப்படுகிறது. அப்படியே அஜித்குமாரை ஒப்பந்தம் செய்து ‘ஆசை” படத்தை உருவாக்குகிறார்.
“ஆசை” பட வெற்றிக்குப் பின் அஜித்குமார் தலையெழுத்தும் மாறிப் போனது உலகறிந்தது. அதற்கெல்லாம் அச்சாரமாக இருக்கிறது இந்த
“செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ”
https://www.youtube.com/watch?v=6iaFid2gqt4
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பரிந்துரையில் அஜித்குமாருக்கு நாயக வாய்ப்புக் கிட்டியது. அஜித்குமாரின் தொடர்ச்சியான ஓட்டத்துக்கு எஸ்.பி.பல்லவியின் பாடல் ஏதுவாக அமைந்தது ஒரு ஆச்சரிய இன்பம்.
கானா பிரபா
11.10.2022
0 comments:
Post a Comment