Pages

Friday, October 28, 2022

💚 Arziyan saari main…….❤️

ரஹ்மான் தமிழுக்கு அதிகம் தருவதே இல்லை என்ற குறையை கேட்டிருப்போம். ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட போது எனது எண்ண அலை வேறாக இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழையும், ஹிந்தியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 

இரண்டு களங்களிலும் ரஹ்மானுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பார்த்தால் ரஹ்மானின் வற்றாத இசை வெள்ளத்துக்கு வடிகாலாகவும், அவரின் இசைத் தேடலுக்கு வாய்ப்புகளாகவும் ஹிந்தியில் எப்பேர்ப்பட்ட வெவ்வேறு பரிமாணங்களில் எல்லாம் மனுஷரைப் பாவித்திருக்கிறார்கள் என்று புரியும்.

இந்த விஷயத்தில் மணிரத்னம், கெளதம் எல்லோருமே ரஹ்மானுக்கான சரியான களத்தைக் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். 

ஒரு பக்தி இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்?

அது இந்து மதமோ அல்லது கிறீஸ்தவமோ என்று இஸ்லாமியப் பாடலோ எதுவாகிலும் மதம் கடந்து கைகூப்பித் தொழ வைக்கும். 

அதனால் தான் 

“கனலில் கருவாகி புனலில் உருவான கந்தன் ஊர் எந்த ஊர்”

“தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே”

“ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான்”

என்றெல்லாம் கேட்டபோது மெய்யுருகி நிற்கும் நம் சிந்தை.

ஏ.ஆர்.ரஹ்மான் புகழேணிக்கு வந்த பின்னர் அவரின் தனி ஆல்பங்களைக் கேட்டு ரசித்த போது இஸ்லாமியப் பாடல்கள் கொண்ட “தீன் இசைமாலை” ஐக் கூட விட்டுவிடாமல் ரசித்தோம்.

புகழேணியில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் பக்தி இலக்கியங்களைத் திரையிசையிலும், அது கடந்தும் செய்திருக்கிறார்கள். 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனின் “கிருஷ்ண கானம்” தொட்டு, வி.குமார், இளையராஜா, ஆயிரம் பக்திப் பாடல்களுக்கு மேல் இசையமைத்த தேவா என்போரெல்லாம் ஆகச் சிறந்த உதாரணங்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் வட இந்தியருக்காகத் தன்னை மாற்றிக் கொண்டவரல்ல, அவர்களைத் தன் பக்கம் ஈர்த்து விட்டுத் தான் அவர்களின் அடையாள செவ்வியல் இசையிலும் தன்னால் கொடுக்க முடியும் என்று தான் கற்ற சுபி இசை மரபுகளையும் கொடுத்தார்.

ரஹ்மான் தன் திரையிசையில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவற்றை வெவ்வேறு பரிமாணத்தில் காட்டிச் சென்றார்.

இந்து, முஸ்லீம் காதலின் அடி நாதமாய் விளையும் பாட்டு,

பாடலில் அப்படியே ஹிந்துஸ்தானியும், கவாலியும் நாத வெள்ள சங்கமமாய்.

Raanjhanaa படத்தில் கொடுத்த Piya Milenge

https://www.youtube.com/watch?v=QlHeJ7cWD38

அதற்கு முன்பு கொடுத்த 

Tere Bina  (Guru)  

https://www.youtube.com/watch?v=7HKbt19q3Rc

வில் காட்டிய பரிமாணம், அதைத் தாண்டி 

ஜோதா அக்பரில் நிகழ்த்திய இசைப் பெரு வெள்ளம் Khwaja Mere Khwaja

https://www.youtube.com/watch?v=4YbAaRFk70o

கேட்கும் போதெல்லாம் இசை ஒரு அசையும் உருவமாக வந்து அரவணைத்து சிலிர்த்து அழ வைக்கும். அதுதான் தெய்வீக இசையின் அடி நாதம்.




“மெய்யான இசை கேட்பவனிடம் வன்முறை எண்ணம் தோன்றாது” என்ற ராஜாவின் கூற்றின் ஆழத்தை நிரூபிக்கும் பாடல்கள் என்று என் எண்ணம் பல்வேறு திசைகளையும் தொட்டுக் கிளற வைத்து விட்டது இந்த Delhi 6 படப் பாட்டு.

Delhi 6 வந்த காலத்தில் இருந்தே வீட்டம்மா Masakali https://www.youtube.com/watch?v=SS3lIQdKP-A பாடலை ஆயிரத்துச் சொச்சம் தடவை கேட்டிருப்பார், அவர் மட்டுமல்ல இந்தப் பாடலை அதிகம் கொண்டாடியதால் இதே படத்தில் இடம்பெற்ற மற்றைய வைர மணிகளையும் அதிகம் கொண்டாடத் தவறி விட்டோமோ என்று எண்ண வைக்கிறது. ஒரு நல்ல இசை ஆல்பத்தில் ஒரு பாடல் தான் இன்னொரு பாடலுக்கு எதிரி.

ஆனால் நம் போலன்றி வட இந்தியர்கள் இன்னும் அதிகம் நேசித்துக் கொண்டாடுவது இந்த Arziyan ஐத் தான்.

இந்தப் பாடலுக்கு YouTube இல் பின்னூட்டியவர்களின் கருத்துகளைப் படித்துப் பாருங்கள். மதவாதம், இனவாதம் எல்லாம் கரைந்து விடும் இந்த மாதிரி நல்லிசையால்.

இந்து முஸ்லீம் ஒருமைப்பட்டின் ஒரு கூற்றாக விளைந்த இந்தப் படத்தில் ரஹ்மான் தன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொடுத்த பாடல்  Arziyan.

ஜாவேத் அலியின் குரல் என்னமோ செய்கிறது, கூடவே கைலாஷ் கர் சேரும் போதும் அது கிளை பிரிந்து இன்னோர் வகை உணர்வலைகளைக் கிளப்புகிறது. ஜாவேத் அலியை அணுக்கமாகக் கேட்டால் ஒரு ஊதுபத்தியின் சுழல் புகை பேசுவது போலிருக்கும்.

இந்த இரண்டு நதிகளையும் இணைக்க வைத்த ரஹ்மானிய சிந்தனைக்கு ஒரு சபாஷ் போடலாம் இல்லையா?

ஜாவேத் அலி தேர்ந்த சுபி இசை வல்லுநர்  அதை மேடையில் பிரதிபலிக்கும் பாங்கையும் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=7z-3JjHT2v4

கைதட்டல் தான் எல்லா மதங்களையும் இணைக்கிறது. இரு கை ஓசை தான் ஒற்றுமையின் வெளிப்பாடு. இந்தப் பாடலின் அடி நாத இசையில் தபேலாக் கட்டும் அதையே பிரதிபலிக்கிறது.

Arziyan பாடலால் இந்த வெள்ளிக்கிழமை என் மனமெல்லாம் ஊதுபத்தியின் சந்தன மணமாக வெள்ளமாக நிறைந்திருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=JA09HEGTzCU

0 comments: