Pages

Monday, August 31, 2026

சிரித்திடும் வாவிக் கரையோரம் ❤️ யுவன் ஷங்கர் ராஜா & கவிஞர் தாமரை

சிரித்திடும் வாவிக் கரையோரம்,

காத்து நான் கிடந்தனன்,

பதுங்கி மெல்ல வந்தவன்,

பகடி பகடி என்ன....போங்கடி!

யுவன் ஷங்கர் ராஜாவின் கூட்டணியில் அமைந்த பாடலாசிரியர்களில், கவிஞர் தாமரைக்குக் கிடைத்த அற்புதமான களம் இந்தப் பாடல்.

ஈழத்தமிழர் என்று வரும் போது யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிப் போகும் திரைப் பாடல்களைத் தாண்டி, மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பு வாவியை நினைப்பூட்டும் பாடல்.

காசி ஆனந்தன் கொடுத்த 

"மீன் மகள் பாடுகிறாள் 

 வாவி மகள் ஆடுகிறாள்

மட்டு நகர் அழகான மேடையம்மா

இங்கே எட்டுத்திசையும்

கலையின் வாடையம்மா"

என்று நம் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் வரிகளில், தேனிசை செல்லப்பா கொடுத்த பாடலை வானொலியில் அடிக்கடி அரங்கேற்றுவேன்.

முதன்முறையாக கடந்த பயணமொன்றில் "மீன்பாடும்" மட்டக்களப்பு வாவியைத் தரிசித்த போது இந்த இரண்டு பாடல்களும் மனதில் அலை மோதின.

நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்

என்றும் நினைத்தோம் 

தவறாகதான்,

இங்கும் உறவு உள்ளது...

தமிழர் மனது பெரியது.....

தம் பெரியம்மா தேசம் மீதான ஈழத்தவரின் நன்றியுணர்ச்சியை மெய்த்தன்மையோடு பறையும், "நந்தா" படத்தில் கவிஞர் தாமரை கொடுத்த வரிகள்.

ஓ...நல்லூரின் விதியெங்கும்

திரிந்தோமடி

தேரின் பின்னே 

அலைந்தோமடி....

கிழக்கில் இருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் பாட்டு.

இந்த இரண்டு தமிழர் பிரதேசங்களையும் இணைக்கும் பாட்டு.

நன்றியுணர்ச்சியோடு எம் பெரியன்னை தேசம் தமிழகத்துக்கும் கடல் பிரித்தாலும், நம் தமிழும் , உணர்வும் இணைக்கும் என்று காட்ட வந்த பாட்டு.

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒரு பிறந்த நாள் பதிவு போடுவோமென்று கடந்த 2 மணி நேரமாக ஒரு நீண்ட பதிவைத் தயாரித்து வைத்து விட்டு அதை அடுத்த வருடம் யுவனிசம் 30 க்குக் கொடுக்கலாம் என்று சேமிப்பில் போட்டு விட்டுத் திரும்பினால், இந்தப் பாடல் தான் கிண்ணென்று காதுக்குள் நிற்கிறது.

முழு நிலவு காயும்

நிலவில் மீன்கள் பாடும் தேன் நாடு

அங்கே இருந்து இங்கே

வாழ வந்த பெண்ணே 

நீ பாடு ❤️


இந்தப் பதிவுக்குப் பாடலாசிரியர் தாமரை பகிர்ந்த அனுபவப் பகிர்வு

மிக்க நன்றி கானா பிரபா Kana Praba ❤️

இந்தப்பாடல் நான் எழுதியதையே தனிக்கதையாக எழுத வேண்டும் ! 😊.

ஈழத்தமிழ் எழுதத் தெரிந்த பாடலாசிரியர் வேண்டும் என்று அவர்கள் தேடியதில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு இது 😀. (இஞ்சாருங்கோ எழுதியவர் யாரென்று தேடி என்னைப் பிடித்தார்கள் 😀).

பாலா கதை சொல்லி (அவர் எங்கே சொன்னார் !!!!?!!! 😂, அதுவே தனிகதை 😂), லைலா ஈழத்துப்பெண், அவர் திருமணம் நிச்சயமானதால் வரும் பாடல் இது, ஈழத்து வட்டார வழக்கில் பாடல் வேண்டும் என்றார்.... " எந்த வட்டார வழக்கு வேண்டும் ? யாழ்ப்பாணமா, மட்டக்களப்பா, கொழும்பா ? என்று கேட்டேன் 🤭... ஆடிப்போய் விட்டார்... ஓஹோ அப்படியொன்று இருக்கிறதா ? நான் அப்படி லைலாவைக் குறிப்பாகக் காட்டவில்லையே என்று சொன்னார்... நான் வட்டாரங்களுக்கிடையேயான சில வேறுபாடுகளைக் குறிப்பிட்டதும் யோசித்தார். 'இஞ்சாருங்கோ யாழ்ப்பாணத்து வழக்கு' என்று நான் சொன்னதும், 'சரி இதை மட்டக்களப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்' என்றார்... 😊... ஈழத்தமிழர்பால் கொண்டிருந்த பற்றும் ஈழ அரசியல் குறித்த முழுமையான புரிதலும் இருந்ததால் எங்கள் இருவருக்கும் உடனடியாக ஓர் இணக்கம் தோன்றியது... எனக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தார். யாழ்ப்பாணத்தை விட்டுவிட மனமில்லையாதலால் சரணத்தில் நல்லூர் விதயங்களையும் சேர்த்து விட்டேன் 😄. பாடல் பதிவான போது கூடத்தில் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டோம் 😌... கடல் பிரித்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான் என்றபோது கண்ணீர் தெறித்தது 😭...

எனக்குக் கிடைத்த மிக அற்புதமான வாய்ப்பு இது...

இதற்குப் பிறகு லைலாவுக்குப் பின்னணி பேச (சவிதா பேசினார்) மொழியுதவி செய்ய முகாமிலிருந்து ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து, முழு பின்னணிக்குரலுக்கும் உடனிருந்து உதவி செய்து கொடுத்தேன்.

பாடல்கள் முடிந்து ஒலிப்பேழை வெளியானபிறகு, பின்னணி இசைக்கோர்ப்பின் போது சேர்க்கப்பட்ட பாடல் 'ஏ மனிதர்மீது மனிதர் கொள்ளும்' - அகதிகளை கடல்திட்டிலிருந்து அழைத்துவர இராஜ்கிரண் செல்லும்போது ஒலிக்கும் பாடல்... அதையும் என்னையே எழுதச் சொன்னார்... அதுவும் அற்புதமான பாடல் (ஒலிப்பேழையில் இடம்பெறவில்லை)... என் அரசியல் கருத்துகளை எழுதிக்கொள்ளக் கிடைத்த பொன்னான வாய்ப்பு இந்தப்படம் ! 🙏.

இங்கே எழுதிப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி 🙏❤️

Saturday, August 22, 2026

மாலைப் பொழுதின் மயக்கத்திலே


 மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி….

அடிமனதில் இசைஞானி இளையராஜா பாடுவது போலவே தொனிக்கும் எனக்கு.
ஏனெனில் அவருக்கு உயிருக்கு உயிரான பாட்டு.

“நான் இசையமைப்பாளன் ஆகக் காரணமான பாட்டு. இவர்கள் இல்லாமல் நானில்லை” என்று மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்திக்கு முன்னால் வாக்குமூலம் சொன்னார் அல்லவா?

“நானா பாடலையே நீதான் பாட வச்சே” என்று சுசீலாம்மாவைப் பார்த்து ராஜா பாடுவாராம், அதற்கும் காரணம் இந்த “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” பாடல் தான்.

இந்தப் பாடலைப் பற்றி கடந்த 65 ஆண்டுகளாகப் பேசாத வாய் இல்லை என்போம்.

பாக்யலட்சுமி படத்தை இந்தப் பாடலுக்காகவே ஒரு சமயம் பார்த்திருந்தேன்.
ஆச்சரியமாக இந்தப் படத்தில் ஒரு குறியீடு இருந்தது.
அது
“வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்”
என்று பாரதியார் பாடிய சாட்சாத் சரஸ்வதி தேவி தான்.

அதென்ன குறியீடு?
இளம் விதவையாக அதாவது தன் கணவன் இறந்து விட்டான் என்ற பொய் நினைப்பில் இருக்கிறாள் கமலா (செளகார் ஜானகி).
கமலா (தாமரைப்பூ) வணங்கும் தெய்வமாகப் படத்தில் காண்பிக்கப்படுவது சரஸ்வதி தேவியை.
அத்தோடு கமலாவின் அந்தத் தூய வெள்ளுடை தானே சரஸ்வதியின் சேலையும்?

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி”

பாடலை கமலா பாடுகிறாள், தான் பால்ய விவாகம் செய்த, திரும்பி வந்த கணவன் முன்னால், அவனோ தன் தோழியின் கணவாகக்கப்பட்டவன் ஆகியிருக்கிறான்.
இதேதும் அறியாத அந்தத் தோழி மீட்டுகிறாள் சரஸ்வதியின் நாத வாத்தியமான வீணை !

செளகார் ஜானகியிடம் பேட்டி எடுத்தால் மறக்காமல் ஞாபகப்படுத்துவார்
“பாக்யலட்சுமியை விட்டுட்டீங்களே” என்று. சாய் வித் சித்ராவிலும் நடந்தது.

மெல்லிசை மன்னர்கள், சுசீலாம்மா இவர்களைத் தாண்டி ஆதார சுதியாக இருக்கும் அந்தக் கண்ணதாசன் கவிச்சிறப்பை என்ன சொல்ல?

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி

கனவு => கணவர்
சந்தத்துக்கு எழுதும் கைப்பக்குவம் பாருங்கள் அந்தச் சொல் விளையாட்டு தரும் வியப்பு.

கண்ணதாசன் பாடல்களில் காட்சிச் சூழல் தாண்டி உலகியல் தத்துவம் பொதிந்திருக்கும்.
இந்த வரிகள் எல்லாச் சூழலுக்கும் பொருந்தும் தானே?

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி !

கானா பிரபா
22.08.2026 



Tuesday, August 18, 2026

அடுக்குமல்லி எடுத்து வந்து ❤️



மெட்டுப் போடும் 

செந்தாழம் பூ

கெட்டி மேளம் போட

எட்டிப் பாக்கும் ஆவாரம் பூ

வெக்கத்தோடு ஓட


விடிகாலை சிட்னி வெளியெங்கும் ஒரு 

கனரக வாகனம் ஒன்று ஒரு புகை மண்டலத்தை எழுப்பி விட்டுப் போனது போலப் பனிப்புகார்.

காலை ஏழு மணி டொட் 

மகளைப் பள்ளிக்கூடத்தில் இருத்தி விட்டுத் திரும்பும் போது கனேடிய வானொலி இந்தப் பாடலை ஒலிபரப்பவும் காரை ஓரம் கட்டி, ஒலித்தரம் கொண்ட பாடலைக் கேட்டுக் கொண்டே பயணிக்கிறேன்.


அந்த மூன்றாவது நிமிடத்தில் கூட்டுக் குரல்களுக்குப் பின்னால் ஒரு துள்ளாட்டம் போடுமே ஒரு இசைக் குவியல்? அது போல ஆகிவிட்டது மனம்.

கதாநாயகியைத் தன் முதுகில் சுமந்து செல்லும் நாயகன் போலவே இந்தப் பாடலும் என்னைச் சொகுசாகச் சுமந்தது போல ஒரு உணர்வு.


பட்டம் விட்டு அலை பாயும் காதலர் போல மிதக்குது மனம்.


அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்

விழுந்ததிந்த வேளை ❤️


அதெப்படி காட்சிக்குப் பொருந்தும் போல அந்தக் காதலியைச் சுமக்குமாற் போலச் சந்தம் பாடுகிறது என்று ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் ஆச்சரியம் தான் எனக்கு.


பொம்பள எஸ்பிபி ஜானகியும், ஆம்பள ஜானகி எஸ்பிபியும் பாடிய காலத்துக்கும் நிற்கும் பாடல்களில் இதைத் தவிர்க்கத்தான் ஒப்புமோ மனம்?


அச்சாரம்...அப்பன் தந்த முத்தாரம்...

ஒரு இழுவை கொடுப்பார் பாருங்கள் 😁


சொந்தம் இங்கே வந்தாளுன்னு...

சொன்னான் அவன் லேசா...

ஜானும்மா கொஞ்சம் வெட்கம் கலக்க

இவரோ அந்தச் சந்தம் கெடாமல்

ஹஹ்ஹா போடுவார்


சந்தோஷம்...

தங்கத்துக்கு சந்தோஷம்

இப்போதும்...

கிட்ட வரும் எப்போதும்...


காத்திருந்து தீட்டுவது போல அந்த ராட்சசியும் பதம் பார்ப்பார்.


இந்த அதிகாரப் போட்டியை மாறி மாறி ரசிப்பதே சுகம்.


ஒற்றைப் புல்லாங்குழல் அப்படியே எங்காவது கிராமத்தில் கொண்டு போய் நம்மை நட்டு விட்டுத் திரும்பும்.


இந்தமாதிரிப் பாடல்களின் மெட்டைப் பங்கம் செய்யாமல் சந்தத்தின் மீதேறிப் பாட்டெழுத கங்கை அமரனே துணை.


மலையாள இயக்குநர் பரதனுக்கு பட வாய்ப்பு இல்லாத சூழலில் இளையராஜாவே தயாரிப்பாளர் கேயாரிடம் பரிந்துரைக்கிறார். கேயாரும் ராஜா சொன்னதே வேத வாக்கு என்று பரதனை ஒப்பந்தம் செய்யவும் “ஆவாரம்பூ” பூக்கிறது.

இந்தப் படம் பரதன் இயக்கி, மலையாளத்தில் ஒரு முக்கியமான படமாக விளங்கும் தகரா படத்தின் மீள் உருவாக்கமாகும்.


பாடல் மெட்டுக்கட்ட Ideal beach போனார்களாம். 15 நிமிடத்தில் ஆறு பாடல்களுக்குமான மெட்டுகளையும் போட்டுவிட்டு நிமிர்ந்தார் இளையராஜா என்று தயாரிப்பாளர் கேயார் இன்று கூட ஆச்சரியப்பட்டுப் பேசுகிறார்.

“ஆலோலம் பாடி” பாடலை SPB ஐ வைத்துப் பாட வைக்க ராஜா முடிவெடுத்தும், கேயார் இவரே வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டாராம்.


ஆக, அந்தப் பதினைந்து நிமிடத்துக்குள் பிறந்த ஒரு அபூர்வம் தான் இதுவும் ஆகிய


அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை ❤️


34 வருஷங்களுக்கு முன்னர் இந்த  மெட்டைப் போடும் போது ராஜா நினைத்திருப்பாரா,

அத்தனை ஆண்டுகள் கழித்தும் 

பல்லாயிரக்கணக்கான மைல் கடந்து ஒரு தென் அரைக்கோள முனையில் இருப்பவனுக்குப் பக்கத்தில் தான் போய் இருப்பேன் என்று?


வெற்றி மாலை 

போட்டானய்யா

கெட்டிக்கார ராசா

முத்துப் போல கண்டான் அங்கே

மொட்டுப் போல ரோசா ❤️

Friday, August 7, 2026

பாவலர் சகோதரர்களின் Folk music of Tamil nadu

 


இசைஞானி இளையராஜா நாட்டுப்புறப் பாடல்களை மையப்படுத்தி ஒரு நாவலை உருவாக்குமாறு எழுத்தாளர் சுஜாதாவை வேண்டவும், அவரும் 

“கரையெல்லாம் செண்பகப்பூ” எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பார்.

பின்னாளில் மெல்லத் திறந்தது கதவு படத்திலும் மோகன் கதாபாத்திரம் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் ஆய்வாளராக உருவாக்கப்பட்டிருக்கும்.


இதற்கெல்லாம் ரிஷிமூலம் ஒன்றுண்டு.


மேற்கில் மழை பெய்யவே ஏ ரங்கநாதசாமியோ

மேல் வாய்க்கால் தண்ணீர் வர


Youtube இல்


https://youtu.be/C12qX1XYBxs?si=7ji2BpU6DhDYIrdi


Spotify


https://open.spotify.com/track/3KBA5kwm2qjse85kPn7ide?si=-byLG1xVThqOnUHBdbG4Eg&utm_source=copy-link


இந்தத் தாலாட்டுப் பாடல் 


Folk music of Tamil nadu என்ற

இளையராஜாவின் திரைப் பிரவேசத்துக்கு முன்பாக 

பாவலர் சகோதரர்கள் கொடுத்த இசைப் பெட்டகம்.


சியாமளா பாலகிருஷ்ணன் அவர்கள் சேகரித்த தமிழக நாட்டுப்புறப் பாடல்களுக்கு பாவலர் சகோதரர்கள் இசையில் பத்மா சுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.


பின்னாளில் இந்தப் பாடலின் பல்லவியை அப்படியே கையாண்டு

பேராசிரியர் ஜெகன்னாதன் வரிகளில் “சிறை கதவுகள்” படத்தில் V.ஜெயசேகர் இசையில் இப்படி வந்திருக்கிறது கேளுங்கள்


https://youtu.be/6DaABIcBK0U?si=GcWRgt_C0qWjkd48


அதுவும் மெட்டுக் கூட ஒத்திசைக்கிறது


இரண்டாவது 

தண்ணி கருத்திருச்சு தவளைச் சத்தம் கேட்டிருச்சு

இப்படி அந்த நாட்டுப் பண் பாடலில் வரும் வரிகளை அப்படியே

“இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் வாலியின் வரிகளோடு இணைத்து வந்திருக்கிறது கேளுங்கள்


இன்னொன்று

இந்த நாட்டுப் பண் முடியும் போது வரும் வரிகள்

மருத அழகரோ மாமதுர சொக்கரோ


இதை சுந்தர புருஷன் படத்தில் சிற்பி இசையில் வைரமுத்துவின் பாடலின் பல்லவியாக எழுதப்பட்டிருக்கும்

இப்படி


https://youtu.be/2RMtg963ovk?si=nv2f2XcW4TpR8ijS


இந்த கிராமியப் பண் பாடல்களின் தாக்கத்தால் மேலும் சில பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றைப் பின்னர் பார்ப்போம் 😊


கானா பிரபா

07.08.2026

Wednesday, August 5, 2026

நடிகர் விக்னேஷ் திரையிசைப் பாடல்கள்


நடிகர் விக்னேஷின் பேட்டி Chat with Chithra வில் போய்க் கொண்டிருக்கிறது.

பல நாட்களுக்குப் பின்னர் கூடப் பழகிய கூட்டாளியைப் பார்த்தது போலவொரு உணர்வு.

விக்னேஷ் போன்ற நாயகர்கள் வந்த காலத்தில் தான் சொந்தமாகப் பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும் மாறிய காலம் அது.

சிறு வயதிலேயே விக்னேஷின் தாய், தகப்பன் இறந்து போனதும், முட்டி மோதி வாய்ப்புத் தேடிய கதை எல்லாம் அந்தக் காலத்து சினிமாத் துணுக்குகளாக வந்ததால் இவர் மேல் ஒரு அனுதாபப் பார்வை இருக்கும்.

நடிகர் பிரேம் போலவே ஒரு படத்தில் ஒப்பந்தமாகிப் பின்னர் நீக்கப்பட்ட கதையும் நடந்தது.

வண்ண வண்ணப் பூக்கள் படத்தின் இரண்டாவது நாயகனாக ஒப்பந்தமாகி நீக்கப்பட்ட விக்னேஷ்,  இதே மாதிரி கிழக்குச் சீமையிலே படத்தில் நீக்கப்பட்ட பிரேமுக்குப் பதிலாக நடித்ததும் முரண்.

அது போலவே பாலாவின் அகிலன் படத்தில் (பின்னாளில் சேது) நடிக்கக் கைகூடாமல் போனது இவருக்கு.

அற்புதமான பாடல்கள் கிடைத்த வகையில் நடிகர் விக்னேஷ் உண்மையில் பெரிய அதிஷ்டக் கட்டை என்று தான் சொல்ல வேண்டும்.

பாரதிராஜாவின் “கிழக்குச் சீமையிலே” படத்தில் “ஆத்தங்கரை மரமே” பாடலும், “பசும்பொன்” படத்தில் “தாமரைப் பூவுக்கும்” என்று 

இரண்டு படங்களிலேயே அப்படியொரு நல்வாய்ப்பு.

“ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்னைப் பொறுத்தவரை காவியம்”

இன்று ஜென்ஸீயும் வைப் பண்ணும் “சின்னத்தாயி” நாயகன்,

“நான் ஏரிக்கரை மேலிருந்து” எல்லாம் இவருக்கு வாழ் நாள் வரம்.

விக்னேஷுக்குக் கிடைத்த புது இசையமைப்பாளர்கள் கூட அவருக்கு அருமையான பாடல்களை அளித்தார்கள்.

“அம்மா பொண்ணு” பாடல்களில்

“சுதியோட ஒண்ணா சேருடா” 

https://www.youtube.com/watch?v=JFim27Kbmqk

ஏகாந்தன் இசையில் ஒரு மகுடிப்பாட்டு.

இளைய கங்கை இசையில் “மனதிலே ஒரு பாட்டு” படத்தில்

கண்ணே அழகிய கண்ணே

https://www.youtube.com/watch?v=F3WcYVVBPGg

இவற்றில் பெரும்பாலும் எஸ்பிபி பாடியதும் குறிப்பிடத்தக்கது.

இசைஞானி கொடுத்த “ராமன் அப்துல்லா” பாட்டு

“என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே”

https://www.youtube.com/watch?v=QodNZpcNYVg

என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் “காதலி” படத்தில்

“மும்பை காற்றே மும்பை காற்றே” 

https://www.youtube.com/watch?v=M8AFpflpp4s

கேட்டுப் பாருங்கள் தேனிசைத் தென்றல் தேவாவும் நிகராக அள்ளித் தெளித்திருப்பார்.

ஹரிஷ் ராகவேந்திரா போன்ற இளையவர்களும் கூட விக்னேஷுக்கு அருமையான பாடல்களைப் பாடியளித்திருக்கிறார்கள் என்பதற்கு 

“பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா”

https://www.youtube.com/watch?v=32IH3ELsK-U

உதாரணம் பறையும்.

இதற்கெல்லாம் உச்சமாக ஒரு பாட்டு உண்டு. அந்தப் பாட்டு இடம்பெற்ற திரைப்படம் “செல்லக்கண்ணு”.

விக்னேஷ் பேட்டி என்றால் கண்டிப்பாக இந்தப் படம் பற்றி யாரும் பேசுவார்கள் என்றே எதிர்பார்த்தேன்.

செல்லக்கண்ணு படத்தின் சேலம் உரிமையை வாங்கி அந்தப் படம் பெரு வெற்றி பெற்று 20 லட்சம் லாபம் பார்த்ததாக (இன்றைய கணக்கில் கோடி தாண்டும்) இந்தப் பேட்டியில் விக்னேஷ் குறிப்பிட்டிருந்தார்.

செல்லக்கண்ணு படத்தில் நான் குறிப்பிட்ட அந்தப் பாடல்

“வண்டியில மாமன் பொண்ணு

ஓட்டுறவன் செல்லக்கண்ணு

எங்க வீட்டு ராணி வாரா

எல்லாம் வந்து பாத்துக்குங்க

https://www.youtube.com/watch?v=BZsC-RiejL4

இந்தப் பாடலைப் பொறுத்தவரை எஸ்பிபி & ஸ்வர்ணலதா என்ற இரட்டைக் குதிரைகளை வைத்து தேவா அதகளம் பண்ணியிருப்பார்.

ஒரு மாட்டு வண்டியின் குலுங்கல் சந்தத்தைப் பின் தாளக் கட்டுடன் கொண்டு வருவார். வண்டியின் அடியில் தொங்கும் அந்தக் கட்டை மேலும் கீழுமாக அசைந்து ஒலிக்கும் ஓசை போல.மாட்டு ஆண் பாடகர் வண்டியை ஓட்டிக் கொண்டு, மாடுகளை அரவணைத்து ஒலியெழுப்பி கூடவே ஜோடிப் பாடலாகப்  கொடுப்பது ஒரு புதுமை. 

தேனிசைத் தென்றல் தேவாவின் உச்சங்களில் இதுவுமொன்று.

எஸ்பிபி & ஸ்வர்ணாவின் ரகளை சொல்லவே வேண்டாம்.

இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் கூடக் கொள்ளை அழகு. விக்னேஷ் & யுவராணி ஜோடியின் அந்த கிராமத்து உடைகள் மாற்றி மாறிப் பாடலோடு அழகுணர்வைக் காட்டும்.

https://www.youtube.com/watch?v=tEVHFiKmsUw

இப்படியான பாடல்களை மீண்டும் பார்க்கும் போது நம் கிராமத்து அந்த அழகிய வாழ்வின் நினைவுகள் தான் மிதந்து வரும்.

கானா பிரபா








ஜானுவும் சுப்ரமணியமும்

 


கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலமாடசாமி….


https://youtu.be/CIl5itfu8yk?si=n-Afq3BJWdeDORxk


இழுத்து இழுத்து ஒரு தயக்கக் குரலோடு கொடுப்பார் அந்தக் குண்டுப் பையன்.

அதே பாட்டு தான் ஆனால் நூறு கிமீ வேகத்தோடு ஏற்றுவார் ஜானு.


https://youtu.be/biWEAGVc3nY?si=OYAaHlw6ejaQKIVt


ஒரு பாடலை ஆண் குரல், பெண் குரல் என்று தனித்தனியாக ஒரே பாடலைக் கொடுக்கும் மரபு திரையிசையில் இருக்கிறது.

அங்கு கூட எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரே உச்சபட்ச நியாயம் கற்பித்திருக்கிறார்கள்.


இன்னொன்றைப் பாருங்கள்


இங்கே மானமுள்ள 

பொண்ணு ஒண்ணை 

மனம் துடிக்க விட்டாக 

மறுதலிக்க வச்சாக….


https://youtu.be/Rru5bWyBHoU?si=qq9y98hYO05wW3J7


அடிபட்டுக் கீழே விழுந்த குரலாய் எஸ்பிபி.


என்னை மானமுள்ள 

பொண்ணு இன்னு

மருதையில கேட்டாக 

மன்னார்க்குடியில கேட்டாக

அந்த மாயவரத்துல கேட்டாக


https://youtu.be/BobkirXNQp0?si=ocqzmVF5g_RDBb2D


தெனாவெட்டு மரிக்கொழுந்தாய் அவதாரம் எடுப்பார் ஜானகி.


இவர்கள் ஒன்று சேர்ந்த “இதயம் ஒரு கோவில்” ஜானகி ஆலாபனை கொடுத்ததிலாகட்டும்

“பாடு நிலாவே தேன் கவிதை பூமலர”

ஜோடிப் பாடலிலாகட்டும் ஒற்றைப் பாடகராக ஒரு பிரமையை எழுப்புவார்கள்.


“நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது” ஜோடியாகப் பாடியவர்கள். பதிவு கானாபிரபா அங்கே தனித்து ஜானகிக்கு ஒற்றைப் பாடல் விதைத்திருக்கும்.


இதே மாதிரியான ஜோடிப் பரிமாணத்தில் “வைகை நதியோரம்” பாடலில் இணைந்தவர்கள், இங்கேயும் ஜானகிக்கும், இளையராஜாவுக்கும் ஒற்றைப் பாடல்கள் சோக ராகம் பாடும்.


“ஆடுங்கள் பாடுங்கள்” குரு படத்தின் எஸ்பிபி குழுப் பாடல் போல ஜானகிக்கும் ஒன்றுண்டு.


“காதலின் தீபம் ஒன்று” 

அலுக்க அலுக்க எஸ்பிபியைக் கேட்டாலும் அங்கேயும் ஜானகியின் தனிப் பாடலுக்கும் இதயத்தின் மறுபாதியைக் கொடுத்திருப்போம்.


ஜானகி


https://youtu.be/ix7QcsU7bmE?si=OunjvMVJPipuQwZ_


எஸ்பிபி


https://youtu.be/c6KoQ8eCbKw?si=Hnizb4wglNOCRuz-


“தேனே தென்பாண்டி மீனே”

இங்கே பாசப் பாடல் இதுவும் இரண்டு பரிமாணங்களில் அக்காவும், தம்பியும் அம்மாவுக்கும், மகனுக்காகவும் கொடுத்திருப்பார்கள்.


ஜானகி


https://youtu.be/YqFHrpOEVEk?si=SNIFd6WKpfJCBIPP


எஸ்பிபி


https://youtu.be/eIuB7XiOyuY?si=ZIO9Q1YoYU_Ljbdp


உதயகீதம் கொடுத்த அதே கே.ரங்கராஜின் “நினைவே ஒரு சங்கீதம் தரும்” இருவர் குரலில் தனித் தனியாய்,

“எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் வீணாகத் தான் போகுதே”


ஜானகி


https://youtu.be/ImpesKVIjPQ?si=JXr9byFMqV-Jவ்ச்


எஸ்பிபி


https://youtu.be/qjDPmpcZPU4?si=CeGPHXa5SKI9q1Dc


வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்துநாராணநம்பி நடக்கின்றான்


கேளடி கண்மணி தந்த அந்த ஆண்டாள் பாசுரத்தில் பக்தி என்னும் ஆழியில் இறக்கி விடுவார்கள்.


ஜானகி


https://youtu.be/SFR13To0ZXk?si=Wv_nad73te47GlyV


எஸ்பிபி


https://youtu.be/rv7t0ubd0Zc?si=nGI5kk0U-HOexXNQ


இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்  பாட்டுக் கூட்டணிகள் தந்த வித்தைகள் தான் எத்தனை எத்தனை.



கானா பிரபா

05.08.2026