Pages

Monday, September 28, 2026

இசைஞானி இளையராஜாவின் காதல் ரோஜாவே


 "இளவேனில் இது வைகாசி மாதம்" காதல் ரோஜாவே படப் பாடலைத் தான் மனசு முணுமுணுத்தது, சாய் வித் சித்ராவில் நடிகை ஷீலாவின் பேட்டி வருவது தெரிந்ததும்.

ஷீலா - ரவிச்சந்திரன் ஜோடியின் மகனான ஜார்ஜ் விஷ்ணுவோடு, பின்னாளில் கமல்ஹாசனோடு விஸ்வரூபம் எடுத்த பூஜாவின் அறிமுகப் படம்.  இசைஞானி இளையராஜா இசையில் 1997 இல் ஆஸ்கார் மூவீஸ் இயக்குநர் எம்.பாஸ்கரின் குடும்பத் தயாரிப்பில் கேயார் இயக்கம் என்று ஏகப்பட்ட நட்சத்திரம் இருந்தாலும் காதல் ரோஜாவே மூன்று வருட இழுபாட்டில் தான் வெளியே வந்து வாடிப் போனது.

பத்துப் பாடல்களும் பலாச்சுளைகள். நினைத்த வரம் கேட்டு, இளவேனில் இரண்டும் முன்னிற்கும் ரகம்.

https://www.youtube.com/watch?v=7cc4PujeX78

இதற்கு முன் தன் வாரிசு விஜய் ஐ வைத்து ஒரு படம் தயாரிக்கச் சொல்லி எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டவும், அவரையே இயக்குநராக்கி பாஸ்கர் தயாரித்த திரைப்படம் "விஷ்ணு". ஆனால் அந்தப் பட அனுபவம் கொடுத்த கசப்பை குமுதத்திலும் பகிர்ந்து கொண்டார் பாஸ்கர்.

இன்னொரு வாரிசைக் களத்தில் இறக்கிக் காட்டுவோம் என்று நினைத்தார் போல. ஆனால் காதல் ரோஜாவே படமும் அவருக்குக் கை கொடுக்கவில்லை.

நடிகை ஷீலா & பிரேம் நஸீர் ஜோடி 100+ படங்கள் ஜோடியாக நடித்து சாதனை படைத்தவர்கள். ஷீலாவின் மகன் ஜார்ஜ் விஷ்ணு போலவே பிரேம் நஸீர் மகன் ஷா நவாஸ் கூடத் தம் பெற்றோர் அளவுக்குப் பெரிய அளவில் எடுபடாதது காலத்தின் தீர்ப்பு.


தன்னுடைய மூன்று மகள்களை எப்படிக் கரை சேர்ப்பேன் என்று பத்திரிகையாளர் மதி ஒளி சண்முகம் தன்னுடன் பேசும் போது குறைப்படவும், அவரைத் தயாரிப்பாளராக்கி, தானே நிதி ஏற்பாட்டைச் செய்து ஷீலா இயக்கி நடித்த படம் தான் யக்‌ஷ கானம். இதை சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் படம் தான் ஆயிரம் ஜென்மங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்பங்களில் முக்கிய படமாக அமைந்தது.

சமீபத்தில் ஜென்ஸீ கிட்ஸ் ஊடகர் ஒருவர் தர்மன் படத்தில் தான் ரஜினி டாக்டர் வேடம் ஏற்று நடிக்கப் போகிறார் என்று இந்த வரலாறு தெரியாமல் போட்டிருந்தார்.

எனக்குப் பேய்ப் பயம் வந்து, அந்த ஏரியாப் படங்களே பார்க்கக் கூடாது என்று முடிவெடுக்க வைத்தது, என் சின்ன வயசில் நியூ விக்ரேர்ஸ் இல் வீடியோ கேஸட் காலம் வந்த புதிதில் அண்ணன்மார் இந்தப் படத்தை அப்பப்பா வீட்டில் போட்டுக் காட்டிக் கிலி கொள்ள வைத்ததுதான்.

தன்னுடைய "சிகரங்கள்" கதையைக் கூட பஞ்சு அருணாசலம் உரிமை பெற்று "ருசி கண்ட பூனை" படமாக எடுத்ததை சாய் வித் சித்ராவில் பெருமையோடு நினைவுகூர்ந்தார் ஷீலா.

மதி ஒளி சண்முகம் குறித்து எனக்கு ஸ்பெஷலாகப் பிடிக்கக் காரணம், இளையராஜாவின் குரு நாதர் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் நெஞ்சில் ஒரு முள், காஷ்மீர் காதலி ஆகிய இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார்.

இரண்டு படங்களின் பாடல்களுமே பூந்தி லட்டுகள்.

அட இளையராஜாவில் ஆரம்பித்து ஜி.கே.வெங்கடேஷில் முடிக்க வைத்திருக்கிறதே இந்தப் பதிவு :-)


கானா பிரபா.

Friday, September 25, 2026

உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு போனவனைப் பார்த்தியா

பாடல் வெளிவந்த போது ஒரு தடவை கேட்டு விட்டு, இன்று தான் மீண்டும் மூன்று சுற்றுப் போய் வந்தேன்.

ஆசையைக் காத்துல தூதுவிட்டு தூவல் இருப்பதை ராஜாவின் ஜென்ஸீ கிட்ஸ் வெறியர்களே கண்டு பிடித்தாலும், அந்த இழையை வைத்துக் கொண்டு அவர் இசையிலும், பாடல் மெட்டிலும் கொடுக்கும் புதுமை அதகளம்.

பிரியா ஜெர்சன் தன்னுடைய சூப்பர் சிங்கர் காலத்திலேயே மோகக் குரல் பாடல்களால் பிரபலமானவர், அவரோடு தீப்தி சுரேஷ், ஶ்ரீஷா விஜயசேகர் இணைந்து பாடிய பாடல். ஶ்ரீஷா தொடர்ந்து ராஜாவின் இசைமேடைகளில் பயணிக்கிறார்.

இந்தப் பாட்டு வேக நடையில் போகும் போதும் "கண்ணமா" என்று வரும் போது ஒரு நெகிழ்வானதொரு இறக்கம் கொடுத்துத் தளர்த்தி விடுகிறார் இசைஞானி.

பாட்டு முடியும் போது "நான் போகும் பாதைகள்" வருமிடத்தில் அச்சொட்டான ஸ்வர்ணலதாக் குரல், தீப்தி அல்லது ஶ்ரீஷாவாக இருக்கலாம்.

"ஆசையைக் காத்துல" பாடல் மீளுருவாக்கத்தில் 

ஸ்ருதி ஹாசன் பாடிய "ஷமிதாப்" பாட்டு

Stereophonic Sannata 

https://www.youtube.com/watch?v=o0PFiyuhRz4

அட்டகாஷ் மேற்கத்தேய விருந்து படைத்திருக்கும்.

மோகன்பாபு மகள் லஷ்மி மஞ்சு இயக்கிய படத்தில் ஶ்ரீவர்த்தினி பாடிய Gundello Godari படத்தின் 

"ராத்திரி நேரத்து"

https://www.youtube.com/watch?v=WdhgPpm2384

பாடலாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் - மிலிந்த் இரட்டையர்கள் வழக்கம் போல உருவிப் போட்டிருக்கிறார்கள் இப்படி https://www.youtube.com/watch?v=sKX7r0OcNK4

"ஆசையைக் காத்துல" பாடலைப் போலவே வேண்டியிருப்பார் கார்த்திக் சுப்பாராஜ் போல. ஏனெனில் இந்தப் பாடலின் ஒளியோட்டத்திலும் ஜானி ரஜனியின் சுவர் அலங்காரங்கள்.

அது மட்டுமல்ல தளபதி ஒலிப்பேழை, ராக்கம்மா கையத்தட்டு சுவர் அலங்காரம் என்று

இசைஞானி இளையாராஜா & சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவர் மேலும் வெறித்தனமான ஒரே ரசிகர் எப்படி இருப்பாரோ அப்படிக் கொடுத்திருக்கிறார் கார்த்திக். 

இம்மட்டுக்கும் ரஜினியை வைத்து பேட்டையை இயக்கியும் கூட ரஜினி மீதான ரசிக நேசம் எள்ளளவும் குறையவில்லைப் போல.

ஆக, கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கி, அதற்கு இசைஞானி பாட்டுப் போட்டால் பட்டாசாக இருக்கும் போல.


கானா பிரபா

25.09.2026

கங்கை அமரன் எனும் பன்முகம்

கங்கை அமரன் எனும் பன்முகம்'


தன் ஆத்ம நண்பன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது ஆறாவது நினைவு தினத்தில், கங்கை அமரனின் திரைப்படமான “லெனின் பாண்டியன்” வெளியாகின்றது.

ஒரு முழு நீள நடிகராக அவருக்கு இது புது அவதாரம் அல்ல, “ஏற்கனவே ஆர்யா சூர்யா’ என்ற படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் கங்கை அமரன் என்ற அடையாளத்தோடே “பயணங்கள் முடிவதில்லை”, “இதயம்", "பிரம்மா", “ஜோடி", “பாட்டுப்பாடவா”, “உள்ளம் கொள்ளை போகுதே”, “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்", “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்திருக்கிறார். இதுவும் ஒரு புதுமையான சாதனை இல்லையா?

ஒரு கதாநாயகனாக நடிக்க வேண்டிய “புதிய வார்ப்புகள்” வாய்ப்பை இவர் மறுத்ததும், அது கே.பாக்யராஜுக்குப் போய்ச் சேரவும், 

அவருக்குப் பின்னணிக் குரல் கொடுத்த வகையில் பின்னணிக் குரல் கலைஞராகவும் கங்கை அமரனுக்கு இன்னொரு அவதாரம்.

செந்தூரப் பூவே செந்தூரப் பூவே……. பாடலைக் கேட்டு முடித்தாலோ அல்லது இந்தப் பாடலை நினைத்தாலோ கூட மனம் செந்தூரப் பூவே…. செந்தூரப் பூவே…. என்று தான் கூவும். 

பாடலாசிரியாரக கங்கை அமரனுக்கும் 16 வயதினிலே தான் பிறப்பு. தன் 30 வயதினிலே தொடங்கிய ஓட்டம், இதோ 50 ஆண்டுகளைத் தொடப் போகின்றது. 

இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை "செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.

“மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள் 

சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்”

தன் பாடல்களில் கொடுஞ்சொல் வராமல் பார்ப்பேன் என்பார் தன்னம்பிக்கையோடு பாடலாசிரியர் கங்கை அமரன்.

இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது 

அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.

“இசைக்கவோ நம் கல்யாண ராகம்.....”

இந்தப் பாடலை இலங்கை வானொலிக் காதலர்கள் மறக்க மாட்டார்கள். கங்கை அமரன் இசையமைப்பாளராக உருவெடுத்த காலத்தில் வந்த ஆரம்பப் படங்களில் ஒன்று “மலர்களே மலருங்கள்”. விஜயகாந்த், ராதிகா, சுதாகர் என்று நிறம் மாறாத பூக்கள் படத்தின் நடிகர்கள் கூட்டத்தோடு (ஆயிரம்) மலர்களே மலருங்கள் என்று தலைப்பு ஈறாகக் கவர்ந்த படம் ஆனால் ரசிகர்களைக் கவராது பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனது. ஆனாலும் பாடல்களைச் சுளை சுளையாகக் கொடுத்திருந்தார் கங்கை அமரன்.

“மலர்களே மலருங்கள்” படத்தைச் சொல்லும் போது கங்கை அமரனுக்கு முதலில் வாய்ப்புக் கிட்டிய “மலர்களிலே அவள் மல்லிகை” படத்தையும் சொல்லி வைக்க வேண்டும். இதுதான் கங்கை அமரன் இசைத்த முதல் படம். ஒரு தயாரிப்பாளரிடம் மலேசியா வாசுதேவன் கங்கை அமரனைப் பரிந்துரைத்து அந்தப் பட வாய்பைப் பெற்றுக் கொடுத்ததை கங்கை அமரன் வேடிக்கையாகப் பேட்டியில் பகிர்ந்திருக்கின்றார்.

ஆனால் வெளிவராத பாவத்தால் “விடுகதை ஒரு தொடர்கதை” படம் அந்த லாபத்தைப் பெற்றுக் கொண்டது.

“சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்”

சுசீலாம்மாவோடு பாடும் கங்கை அமரன் ஆற்றொழுக்கான பாடகர் என்பதை இன்று வரை கெடாத அவரின் குரல் வளம் நிரூபிக்கும்.

கங்கை அமரனுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதம் அவரைப் பாடலாசிரியராகப் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியது போலவே இளையராஜா தொட்டு, பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய மகத்துவம் பெறுகிறார்.பதிவு கானா பிரபா

ஐந்து பாடல்களை வைத்து எப்படியாவது கதை பண்ணி விடலாம் என்ற கதைக்கே இடமில்லை. கோழி கூவுது தொடங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் கதையம்சத்திலும் கூடத் தன் முத்திரை பதிப்பார் கங்கை அமரன்.

இயக்குநராக கங்கை அமரன் தன் பயணத்தைத் தொடங்கி 40 ஆண்டுகள் கடந்து விட்டது.

பிரபுவை பொழுது விடிஞ்சாச்சு, கும்பக்கரைத் தங்கையா, சின்னவர் ஆகிய படங்களை இயக்கியவர்.

இன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே "செண்பகமே செண்பகமே" என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் "எங்க ஊரு பாட்டுக்காரன்" . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனின் தலையெழுத்தை மாற்றியது.

ராமராஜன் இயக்குநராக இருந்த போதும் அவருக்கு கங்கை அமரன் இசையமைப்பாளராக இயங்கினார் என்பதும் புதுமையானதொரு தொடர்பு.

"செண்பகமே செண்பகமே" பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தலைப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். பதிவு கானா பிரபா

ஒரு வருடம் ஓடி மிகப் பெரும் சாதனையைக் கொடுத்தது இசைஞானி இளையராஜா இசையில் கங்கை அமரனுடன், ராமராஜன் இணைந்த"கரகாட்டக்காரன்". 

இயக்குநராக விஜயகாந்த், பிரபு, ராமராஜன் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து வெற்றிப் படங்கள் கொடுத்த வகையிலும் தனி முத்திரை பதித்தார்.

அண்ணனுக்கு ஜே உட்பட அவர் இயக்கிய மற்றைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் இன்றும் பார்த்து ரசிக்க வைக்கும் தரம் கொண்டவை.

இன்னும் அவரின் பணிகளை விரித்துச் சொல்ல வேண்டுமென்றால் சின்னத்திரை நிகழ்ச்சி நெறியாளராகவும் தொடர்ந்தவர்.

பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற அவதாரங்களோடு ஒரு இயக்குநராகவும் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொண்டவர் கங்கை அமரன்.

அவர் அளவுக்கு பன்முகத்தோடு பணியற்ற இன்னொருவர் வரலாம் ஆனால் அவர் அளவுக்கு அந்த நேர்த்தியை எதிர்பார்க்க முடியாது.

அதுதான் கங்கை அமரன் எனும் பன்முகத்தின் தனித்துவம்.

கானா பிரபா

25.09.2026

Sunday, September 20, 2026

இசைஞானி இளையராஜா 50 ❤️ ஆஸி இசைச் சுற்றுலா 2026


அரே ஏமண்டி….

இப்படிப் பாடிக் கொண்டே இசைஞானியின் தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி வந்தால் எப்படியிருக்கும் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நடந்தது.

அதைக் கேட்டதுமே கிருஷ்ணா நதி நீர் தமிழ் நாட்டுக்குத் திசை திருப்பிய குளுமை.

இளையராஜா சாருக்கெல்லாம் அறிமுகமா என்ன? நீங்களே அவரைக் கூப்பீடுங்களேன் அப்படியே என்றுவிட்டு

ராஜா சார்ர்ர்ர்ர்ர்!

என்று கத்தியது தொகுப்பு தெலுங்கு பாப்பா.

ராஜா சாஆஆஆஆர்ர்ர் (கூட்டம்)

மள்ளி (தொகுப்பு பாப்பா)

ராஜா சாஆஆஆஆர்ர்ர் (கூட்டம்)

“ஐ லவ் யூ இளையராஜா”

பின்னிருக்கையில் இருந்து ஒரு இருபது வயது  அம்மாயி கத்தியது இளையராஜாவைப் பார்த்து.

சமக்கு சமக்கு சம் குத்துப் போட்டுக் கொடுத்த பாட்டுகளின் இளமையிலேயே தம் ராஜாவையும் வைத்திருக்கிறார்கள் போல.

ஒரு துளி பயம் இல்லை, துப்பாக்கி பட காஜல் அப்பாக்கார மனோபாலாவைக் கையாள்வது போல.

ஆனால் தமிழ் ரசிகர்கள் கண்டிப்பான தந்தையாக ராஜாவிடம் அனுபவப்பட்டதால், தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே “மாமன் மகள்” படத்தில் ஜெயச்சித்ராவிடம் பம்மும் மணிவண்ணன், கவுண்டமணி ரேஞ்சில் நடுக்கம் ஏற்படாத குறையாக இளையராஜாவை அணுகினார்கள்.

கோதண்டராமரெட்டி ரேஞ்சில் இருக்கும் வாடுகளும், 

சிரஞ்சீவிக்கே அம்மா வேஷம் கட்டும் அம்மாயிகளும் வயது பேதமின்றி ஆடியும்,  பாடியும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஆந்திரா, தெலுங்கு தேசம் வாலாக்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நாலைந்து சிரஞ்சீவி, ஏழெட்டு பாலகிருஷ்ணா இருப்பார்கள் போல.

ஆட்டம், பாட்டம், ஹார்டின் என்று ஒரே அமர்க்களமாகக் கொண்டாடி ரசிக்கிறார்கள்.

இந்த மாதிரி அயல் மொழிக்காரர் ராஜாவை எப்படி அணுகுகிறார்கள் என்பதற்காகவே இசைஞானியின் தெலுங்கு இசை நிகழ்ச்சிக்குச் சென்றேன்.

இளையராஜா 50 என்பதால் தான் இசையமைப்பாளராக வந்த வரலாற்றுக்கு 15 நிமிடங்கள்.

தொடர்ந்து சரண் வருகிறார்.

ஒரே சமயத்தில் பாலகிருஷ்ணாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வந்தால் எப்படியிருக்கும் சொல்லுங்கள்.

அப்படியொரு அதிர்வலையில் கூட்டம் அமளிப்பட்டது. 

அப்படியொரு மரியாதை அவருக்கு.

ராமராஜ்ஜியம் படத்தில் வந்த “ஜகதானந்த காரக” 

ராஜா ராஜாதி ராஜனெங்கள் (தெலுங்கு)

பாடலைத் தொடர்ந்து 

ஜல்லெண்ட (ஆத்தாடி அம்மாடி) கீதாஞ்சலி பாடலை அனன்யா பட் அட்சர சுத்தமாகப் பாடினார்.

குயில் சத்த ஆரம்பத்தைக் கேட்டாலே தெலுகுவாலாக்கள் கூவி ஆர்ப்பரிக்க

ஆமனி (காவியம் பாட வா தென்றலே)

ஆனால் சித்தாராவில் வந்த Vennello Godari Andam (தூரத்தில் நான் கண்ட உன் முகம்) சுர்முகி பாடும் போது ஊசி விழுந்தாலும் கேட்காத அமைதியில் ரசித்தார்கள்.

இந்தா ஹோரஸ் கேட்டதும் மீண்டும் ஹோவென ஆர்ப்பரிப்பு

வேறென்ன சம்மதம் தந்துட்டேன் பாடலின் தெலுங்கு மூலத்துக்குத் தான் அந்த வரவேற்பு.

Hello Guru Prema Kosame பாட்டுக்கு அந்த அரங்கத்தின் சிமெண்ட் தூண் எழுந்து ஆடாத குறை.

நின்னுக்கோரி பாட்டுக்கும் எல்லை கடந்த ரசிகப் பட்டாளம் இருக்கு என்று நிரூபித்தார்கள்.

மாட்டரானி மெளம் இதே வேற லெவல்யா என்று ஆர்ப்பரிப்பு.

சூப்பர் ஸ்டாருக்கும் சேர்த்து “ராக்கம்மா கையத் தட்டு” வைக் கொண்டாடினார்கள் போலும்.

கீரவாணி, மறக்குமா செழும் மலரைக் காற்று, இதழில் கதை எழுதும்

இதெல்லாம் தமிழும் அரவணைத்துக் கொண்டாடியதாயிற்றே. நாங்க தான் முதலில் கேட்டோம் என்று இந்த வாலாக்கள் உரிமை எடுக்கிறார்கள் போலும்.

பாட்டனி பாடம் பாட்டுக்கு அதிர்ந்தது அரங்கம். சிரிச்சுச் சிரிச்சு ரசிச்சார்கள்.

எனக்கு அந்த இசை ராட்சசன் SPB தான் கண் முன்னே வந்தார்.

இப்படிப் போய்க் கொண்டிருந்த தெலுங்கு ராஜா பாட்டுகளில் ஒரு திருப்பமாக அதிகம் தமிழ்ச் சூழலில் அறியப்படாத Challenge படத்தின் Induvadana Kundaradana பாட்டுப் பாடியது இன்ப அதிர்ச்சி.

மிளகாய்ப் பொடியைக் கண்ணில் தூவி விட்டு இளையராஜாவின் பாடலை ஒலிக்க விட்டாலும், கண் எரிச்சலை மறந்து கைத்தாளம் போட்டு ரசிப்பார்கள் இந்த தெலுங்கு ராஜாக்கள், ராணிகள் என்று மட்டும் புரிந்தது.

அடுத்தது தமிழ் நிகழ்ச்சி

ரசிகர்களே அமைதி அமைதி 😁

இன்னும் நான்கு நிகழ்ச்சி இடம்பெறவிருப்பதால் பாடல் பட்டியல் போட மாட்டேன் 😁

ஜானகிம்மாவின் mini version சுர்முகி

ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்.

இந்த அனன்யா பட் தெலுங்கு, தமிழ் இரண்டிலும் பட்டையைக் கிளப்பினார்.

ஸ்வேதா வரவில்லை.

தமிழ் நிகழ்ச்சிக்கு முன்பதாக உள்ளூர் இளசுகள் இளையாராஜா பாடல்களுக்கு வித்தியாசமான வடிவம் காட்டி நடனம் ஆடியது அருமையோ அருமை.

தெலுங்கு ரசிகர்கள் போல் ரசிப்போடு கைத்தாளம் போடத் தெரியாது என்று (!) தமிழ் நிகழ்ச்சி அன்பர்கள் செய்து காட்டினார்கள். 

தெலுங்கு நிகழ்ச்சியில் தகராறு பண்ணிய ஒலிச் சமநிலை, தமிழில் சீரானது.

பெரிய எதிர்பார்ப்பு ஆனால் ஏமாற்றம்

கங்கை அமரன் வராதது.

தெலுங்கு போல, தும்பி வா (மலையாளம்), ஜெதயலே (கன்னடம்) என்று முழுமைப்படுத்திக் காட்டி இருக்கலாம்.  இளையராஜா 50 ஆச்சே.

இன்னுமொரு பேராசை 

அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணைக்காகப் பாடியதை அர்ப்பணித்திருந்தால் எப்படியிருந்திருக்கும்.

இம்முறை ராஜாவின் முகத்தில் அந்தத் தெய்வீகக் களையும் இருந்தது.

இன்று காலை அந்தப் பாடலை என் மனசு பாடிக் கொண்டிருக்க மெல்பர்னில் இருந்து சிட்னிக்குத் திரும்பினேன் ;

போற்றிநின்.. பேரருள்

போற்றி நின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய

அருட்பெருஞ் ஜோதி 

❤️

கானா பிரபா

20.09.2026

Wednesday, September 16, 2026

எம்.எஸ்.சுப்புலட்சுமி அறிமுகமான திரைப்படம்


இன்று இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வயது 110.

நேற்றிலிருந்தே எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த செய்திகள் பரவலாக அடிபடக் காரணம், அவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்ற செய்தியே.

அதிலும் குறிப்பாக, இந்தப் படத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகி இருப்பதாகவும், இதெல்லாம் தேவையா என்று வலையுலகத்தார் பரபரப்பில் இருக்கிறார்கள்.

ஆனால் இதற்குப் பின்னால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கவிருக்கிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியை நடிகையாக அறிமுகப்படுத்தியவர் வேறு யாருமல்ல, அனிருத்தின் கொள்ளுத்தாத்தா கே.சுப்ரமணியம் அவர்கள் தான்.

ஸேவாஸதனம் என்ற திரைப்படம் 1938 ஆம் ஆண்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களது நடிப்பில் வெளியானது.

அந்தத் திரைப்படத்தில் இவர் நாயகியாக நடிக்க அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமானது. 

முன்னொரு சமயம், நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி கே.சுப்ரமணியத்திடம் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அறிமுகப்படுத்தி இவருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கக் கோருகிறார். பின்னர் ஸேவாஸதனம் படத்தில் இவரே பொருத்தமானவர் என்று தீர்மானித்து எம்.எஸ்.சுப்புலட்சுமியை நாயகியாக்கி வெளியிடுகிறார். படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பாப நாசம் சிவன் இசையில் பரபரப்பான வெற்றியைக் கொடுத்து, ஸேவாஸதனம் பெரு வெற்றி கொடுக்கிறது. இந்த அறிமுகச் செய்தி வி.ரமணன் அவர்கள் எழுதிய "காற்றினிலே வரும் கீதம்" என்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி நூலிலும் பதிவாகி இருக்கிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியை இவ்விதம் அறிமுகப்படுத்திய நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி கே.சுப்ரமணியத்தின் இரண்டாவது தாரமாகிறார்.


இங்கே பகிந்த ஸேவாஸதனம் படத்தின் திரைப்படக் காட்சிகளை MADRAS LOCAL HISTORY GROUP குழுமத்தில் Lakshmi Priya Pakanati பகிர்ந்ததை நன்றியோடு குறிப்பிடுகிறேன்.

இந்தப் படக் காட்சியில் அந்தக் குட்டிப் பெண் வேறு யாருமல்ல, பின்னாளில் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கிய எஸ்.வரலட்சுமி தான். உன்னை நானறிவேன் குணா பாட்டு ஞாபகம் வர வேண்டுமே?

ஸேவாஸதனம் படத்தின் கதை குறித்து இரு மாறுபட்ட கதை சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு தாசியிடம் அடைக்கலம் புகுந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பின்னர் சமூகப் பணியிலும், இறை பணியிலும் தன்னை அர்ப்பணிப்பதாகக் கதை முடிச்சை எடுத்துக் கொள்ளலாம். பதிவு கானா பிரபா. பாருங்கள் 90 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சமூக சீர்திருத்தப் பின்னணியில் ஒரு படம்.

இப்படியாக எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்க வந்து 90 ஆண்டுகளை எட்டும் சூழலில், அவரை நடிக்க அழைத்து வந்த கே.சுப்ரமணியத்தின் கொள்ளுப் பேரன் அனிருத், எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு இசையமைப்பது காலக் கணக்கு. இது இந்திய சினிமாவில் மட்டுமே நிகழக் கூடிய அதிசயம்.

1990 இல் பிறந்த அனிருத்துக்கு ஒரு மாதம் தள்ளி அடுத்த மாதம் 16 ஆம் திகதி பிறந்த தினம் 😊

எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்துக்கு அனிருத் நியாயம் செய்வாரா என்பதற்கு என் பதில். கண்டிப்பாக அந்தத் திறமை அவரிடம் உண்டு. DC படத்தில் அந்த ஆலாபனையோடு இணைந்த சாஸ்திரிய இசை ஒன்றே போதுமே? அந்த இரைச்சலைத் தவிர்த்து விட்டால் அப்பழுக்கற்ற சாஸ்திரிய இசையாகத் தொனிக்கும் அது.

கானா பிரபா

16.09.2026

Tuesday, September 15, 2026

அன்னக்கிளியும் ஒருதலை ராகமும்

அன்னக்கிளியும் ஒருதலை ராகமும் இணைந்த பாடல் என்ற அறிவிப்போடு T.ராஜேந்தர் இசையில் இசைஞானி இளையராஜா பாடிய பாடல் ஒலிப்பதிவை இப்போது வெளியிட்டிருக்கிறார்.

இந்த ஒருதலை ராகம் படத்தின் பின்னால் இருக்கும் இரண்டு நிகழ்வுகள்.

படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதி, மெட்டுக் கொடுத்தவர் ராஜேந்தர் தான். ஆனால் அவர் முதல் படத்தில் அனுபவம் இன்மை காரணமாக அந்தப் பாடல்களுக்கு இசைக் கோப்பைக் கொடுத்தவர் (orchestra arrangement) தெலுங்கு இசையமைப்பாளரான A.A.ராஜ்.

தமிழ் சினிமாவில் இதுவொன்றும் புதிய காரியமில்லை. பின்னாளில் இசையமைக்க வந்த பாக்யராஜ் கூட ஒரு கூட்டம் இசை உதவியாளர்களை வைத்திருந்ததை நன்றியோடு இது நம்ம ஆளு படத்தின் எழுத்தோட்டத்திலேயே பதிவு செய்திருப்பார். அத்தோடு  பாக்யராஜ் படங்களில் இசைக் கோப்பைக் (orchestra arrangement) கவனித்தவர் மூத்த வாத்தியக் கலைஞர் தாஸ் டேனியல்.

சம்பத் - செல்வன் இரட்டையர்களிடம் இசை கற்று தன் மாமனார் அவிநாசி மணி தயாரிப்பில் நெத்தி அடி படத்தை இயக்கிய பாண்டியராஜன் இன்னொரு ரகம்.

வட நாட்டு இசையமைப்பாளர்கள் மனோஜ் & கியான் இரட்டையர்களை அந்த வட இந்திய இசை வாசம் வந்துவிடாமல் அற்புதமான பாடல்களை வாங்கி, இணை இசையமைப்பாளராக இருந்தவர் ஆபாவாணன்.

ஒரு தலை ராகம் படத்தின் கதை வசனகர்த்தா ராஜேந்தரை ஓரமாக நிறுத்தி, வசனப்பயிற்சி கொடுக்க மட்டும் பாவித்தார்கள். படத்தை இயக்கியவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளர்களான ராபர்ட் - ராஜசேகரன் இரட்டையர்கள்.

ஆனால் தயாரிப்பாளரான E.M.இப்ராஹிம் தானே படத்தின் இயக்குநராகவும் பெயரைப் போட்டுக் கொண்டார்.

"ஒருதலை ராகம்" படத்தை இதுவரை பார்க்கவே இல்லை என்று ராஜேந்தர் கூற்று உண்டு.

E.M.இப்ராஹிம் பின்னர் தயாரித்து, இயக்குநராகவும் (?)பெயர் போட்ட இன்னொரு படம் "தணியாத தாகம்". இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், சுபத்ரா ஜோடி. ஜெயம் ரவி மாமியார்.

"பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்"

https://www.youtube.com/watch?v=gdNEPiePGOA

"அவள் ஒரு மோகன ராகம்"

https://www.youtube.com/watch?v=GucvNqTQX-s

ஆகிய அற்புதமான பாடல்கள் A.A.ராஜ் இசையில் கொடுத்தார்.

பின்னர் A.A.ராஜ் இசையமைத்த இன்னொரு தமிழ்த் திரைப்படமான "உதயமாகிறது" படத்தில் "ஒரு தலை ராகம்" நாயகன் சங்கர் தான். ஆனால் படம் உதயமாகியும் பெரிய அளவில் பேசப்படாத படம் ஆகியது.

கானா பிரபா

15.09.2026

Friday, September 11, 2026

மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்களோடு ஏழாவது மனிதன்


காக்கைச் சிறகினிலே நந்தலாலா

நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா….

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் எண்ணற்ற பாடல்கள் திரையிசையில் வந்தாலும், 

“ஏழாவது மனிதன்” திரைப்படப் பாடல்கள் தனித்து நின்று மிளிரும்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாரதியார் பாட்டுக்கும் தனித்துவம் மிகுந்த இசையளித்திருப்பார் எல்.வைத்யநாதன்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கையைப் படமாக்குவதற்காகத் தான் அவரின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து இசையமைத்தார்களாம். ஆனால் பாரதியின் குணாம்சம் என்பது புதிர் நிறைந்தது, அதைத் திரையில் அப்படியே கொண்டு வர முடியாது என்ற நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டு, பதிவு செய்த பாடல்கள் அனைத்தையும் புதிதாகத் தேர்ந்தெடுத்த கதைக்குப் பொருத்தப்பட்டு “ஏழாவது மனிதன்” உருவானான்.

இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் ஹரிஹரன், சாய் வித் சித்ராவில் பகிர்ந்திருந்தார்.

பாரதியார் கதை இல்லாவிட்டாலும், சமூக சிந்தனை கொண்ட ஒரு கருப் பொருளை எடுத்துக் கொண்டு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்த ரகுவரன் நாயகன் ஆக்கப்பட்டு ஏழாவது மனிதன் உருவானது.

சிறந்த தமிழ்த்திரைப்படமாகத் தேசிய விருது கண்டது. 

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா” 

https://youtu.be/d4TCldCmG_I?si=koVIHwC7u07EzD4G

எவ்வளவு மென்மை படைத்ததோ அதற்கு எதிர்மாறாக

உச்சி மீது 

உச்சி மீது வானிடிந்து

வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை என்பதே…

https://youtu.be/MBM_HFi3kdg?si=i8_y9A3DWgA1mR3w

SPB இன் நையாண்டித் தனமும் ஆக்ரோஷமும் கொண்ட குரல் அந்தப் பாடலின் தொனியை உயிர்ப்பிக்கும்.

“வீணையடி நீ எனக்கு 

மேவும் விரல் நானுனக்கு”

https://youtu.be/XordYIAkv1o?si=i6Kcm3JQyzkRY9C6

ஒரு காதல் படத்துக்கு பாரதியாரே பாட்டு எழுதியது போலத் தொனிக்கும்.

ஜேசுதாசோடு B.நீரஜாவின் அழகுப் பாடல்.

பாரதியாரின் கொள்ளுப் பேரன் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதிக்கும் இங்கே மகத்துவம் கொடுக்கப்பட்டது.

“நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி” 

இன்றுவரை ரசித்துப் போற்றப்படும் பாடல்களில் ஒன்று.

மேலும்

செந்தமிழ் நாட்டென்னும் போதினிலே, விடுதலை விடுதலை விடுதலை,

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, மனதில் உறுதி வேண்டும், எந்த நேரமும், நல்லதோர் வீணை செய்தே, ஓடி விளையாடு பாப்பா, ஆகாவென்றெழுந்தது பார்

என்று மொத்தம் 13 பாரதியார் பாடல்கள் ஏழாவது மனிதன் திரைப்படத்தில் கையாளப்பட்டது.


முழுப் பாடல் தொகுதி https://youtu.be/P4WWjlwUCsE?si=W5tp5ZTPMRMRdEdn

மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு தினத்தில் அவர் நினைவை அவர் தம் பாடல்களால் போற்றுவோம்.

❤️🙏

கானா பிரபா

11.09.2026

Wednesday, September 2, 2026

ஆயிரம் பதிவு கண்ட றேடியோஸ்பதி ❤️📻

என்னைத் தினமும் உயிர்ப்போடும், துடிப்போடும் வைத்திருப்பது பாடல் கேட்பது மட்டுமல்ல, இசை ரசனையில் மூழ்கி அவற்றைப் பதிவாக்குவது. காலை, மாலை ரயில் பயணங்களிலும், காத்திருக்கும் நேரங்களில் கிடைக்கும் அவகாசங்களிலும், நள்ளிரவு தாண்டிய நித்திரை இல்லாப் பொழுதுகளிலுமாகப் பெருகிப் பெருகி இன்று ஆயிரம் கடந்து நிற்கிறது என் றேடியோஸ்பதி வலைப்பதிவு.

மார்ச் 7, 2007 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்தப் பயணம் 20 வருடங்களைத் தொடப் போகிறது.

இடைப்பட்ட காலத்தில் செல்போனில் பதிவு எழுதும் வசதி வந்து விட்டது எனக்குப் பெரும் வரப்பிரசாதம் ஆகியது.

இசைஞானி இளையராஜா போற்றும் முன்னோர்கள் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தொட்டு இன்றைய இசையமைப்பாளர்கள் வரை என் ரசனைக்குத் தீனி போட்டவர்களை இந்தத் தளத்தில் களஞ்சியப்படுத்தியிருக்கிறேன்.

ஆபாவாணன் தொட்டு வி.எஸ்.நரசிம்மன் உள்ளிட்ட அரிய பல திரைப் படைப்பாளிகளைப் பேட்டி கண்டு பதிவாக்கி இருக்கிறேன்.

சின்னத்தாயி இயக்குநர் கணேசராஜ் இன் புகைப்படம் ஒரு காலத்தில் இணையத்தில் இல்லாத சூழலில் என் ஆவணப் பகிர்வு பலருக்குக் கை கொடுத்திருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் தேர்ந்தெடுத்த 40 படங்களின் பின்னணி இசையை அவற்றின் பின்னணி அலசலோடு பகிர்ந்திருக்கிறேன்.

இன்னும் இன்னும் தொடர்வேன்

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் 

அணையா விளக்கே ❤️

தமிழோடு இசை, பாடல் 

மறந்தறியேன் ❤️❤️❤️

❤️ கானா பிரபா ❤️