Pages

Friday, July 23, 2021

“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்


“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்
“எல்லோரிடமும் எல்லாச் சந்தர்ப்பதிலும்
பரிபூரணமான பங்களிப்பை வாங்க முடியாது.
Perfection கடவுளாக்கும்’
அப்படியே நச்சென்று வந்து மனதில் கோடு போட்டது போன்ற ஒரு வார்த்தையை உதித்தார் டி.வி.கோபாலகிருஷ்ணன்.
அவரின் முகத்தை ஒளிப்படத்தில் பார்க்கும் போதே அந்த மிடுக்கான தோற்றத்தில் ஓரச் சிரிப்பு மாதிரிப் பிரகாசம் மின்னுவதை ரசிப்பேன்.
அதுவே பேட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா?
அந்த சங்கீதக்காரருக்கே உரித்த “ஆக்கும்” சேத்து ஆக்கம் மிகுந்த ஒரு பேட்டியைக் கண்ணுற்றேன்.
நான் ரொம்பவே எதிர்பார்த்த ஒரு மகோன்னத சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன் அவர்களது பேட்டி Social Talkies இல் போய்க் கொண்டிருக்கிறது.
முதலில் மூன்றாம் பாகத்தைப் https://www.youtube.com/watch?v=DeTmgNlWMW0
பார்த்த பின் தான் முன்னைய பாகங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.
இன்று 89 வயதில் தொடர்ந்தும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து சாதகம் பண்ணும் இவரின் கற்றல் இன்னும் தொடர்கிறதாம். முதல் கச்சேரி வாசிப்பு 9 வயதில், அப்படியென்றால் 80 வது ஆண்டாக இசையின் அணுக்களைக் கற்றுத் தேர்ந்தவர் இன்னும் கற்கிறார்.
இதுதான் மேதைகளுக்கான இலட்சணம்.
இசைஞானி இளையராஜாவின் சாஸ்திரிய சங்கீதத்தின் குருவானவர் என்றே என் போன்ற ராஜா ரசிகர்களுக்குப் பரவலாக மனதில் பதிந்தவர் என்ற நிலை இருக்க, இந்திய இசை ஞான உலகில் உச்சம் தொட்டர்வர்களில் இவரும் ஒருவர் என்பதை இவர் போன்றவர்களைத் தேடிக் கற்கும் போது இன்னும் தெள்ளறத் தெளிவாகும்.
இந்த மூன்று பாகங்களிலேயே ஏகப்பட்ட அனுபவத் திரட்டுகள். இளையராஜா தொட்டு ரஹ்மான் வரை நீளும் அனுபவங்கள் ஒருபக்கம்,
தன் குருவானவர் செம்பை வைத்யநாத பாகவதர், புல்லாங்குழல் மேதை மாலி, ரவிசங்கர் என்று இன்னும் பல சங்கீதச் சிகரங்கள் குறித்த அனுபவப் பகிர்வுகள் சேர்ந்த மிகப் பெறுமதியான பேட்டித் தொடர் இது.
தன்னை நேசித்துக் கனம் பண்ணும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பற்றிய பேச்சு வரும் போது மேலே பார்த்துக் கும்பிடுகிறார்.
நாகசுர வாத்தியம் எவ்வளவு சிறப்பானது என்பதைப் பற்றி ஒரு குறும் விரிவுரை கொடுக்கிறார் பாருங்கள் எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி அது.
இந்தப் பேட்டியைப் பார்த்து விட்டு அப்படியே இவற்றையும் தேடி ரசியுங்கள்
பொதிகையில் அற்புதமான இசை முழக்கம்
இளையராஜாவுடன் இவரின் சந்திப்பின் காணொளி
“அகாரம்” ஓதி அப்படியே பாடலோடு கலக்கும் முறைமையை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா என்று சிலாகிக்கிறார் டிவி.கோபாலகிருஷ்ணன்.
இந்த இடத்தில் அதற்கு உதாரணமாய் விளைந்த அவரைக் கொண்டே பாட வைத்த ராஜாவின் அற்புதமான பாடல்களைச் சொல்ல வேண்டும்.
“ஜொதயலி ஜெத ஜெயதலி” (கீதா) https://www.youtube.com/watch?v=tPAwMueyrSU
என்று கன்னடம் கொண்டாடும் நாற்பது ஆண்டுகள் கடந்தும் காலத்தால் அழியாத கானம் (அதன் தமிழ் வடிவம் “விழியிலே மணி விழியிலே”)
நாதர்ந்தின்னனாவுக்கு ஒரு புது காம சூத்திர இசை கற்பித்த
“அட மச்சமுள்ள மச்சான் நான் புதுவித ரகம்” (சின்ன வீடு)
அப்படியே “ ஆஆஆ நகர்தன்ன திரனன்ன திரன்ன” பரிமாணத்தில்
“அது ஒரு நிலாக்காலம்” (டிக் டிக் டிக் )
அல்லது இன்னும் பரவலாகப் போய்ச் சேர்ந்த “அந்தி மழை பொழிகிறது” பாடலில் எழும் ஆலாபனையாகவும் என்றும்
இடையிசைக் குரலாக மிளிர்ந்தவர் எஸ்.ஜானகியோடு முழுப் பாடலையே பாடியிருக்கிறார். சாஸ்திரிய இசை தவழும் அந்தப் பாடல்
“மார்கழி மாதம் முன்பனி வேளையிலே”
இசைஞானி இளையராஜா இசையில் பஞ்சமி (வெளி வரவில்லை) படத்துக்காகப் பாடியிருக்கிறார்.
இளையராஜா தன் கன்னடப் பட இசையமைப்புகளுக்குக் கூடவே அழைத்துச் செல்வாராம். நீங்கள் என் கூட இருந்தால் இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் எழும் என்பாராம் ராஜா. இவரைப் பாட அழைப்பதும் இவ்விதம் தானாம் பாடல் உருவாகும் போது வெளியில் இருக்கும் டி.வி.கோபாலகிருஷ்ணனை அழைத்து வரச் சொல்லி உடனேயே பாட்டைக் கொடுத்து விடுவாராம் ராஜா.
ஒருமுறை குருவாயூருக்கு இருவரும் போய் விட்டு வரும் போது “தொரக்குனா” வை சுதி மீட்டுகிறார் டிவிஜி. அடுத்த நாள் அதே பிலஹரியில் “கூந்தலிலே மேகம் வந்து” https://www.youtube.com/watch?v=dOIPh4tIZdI பாடலைப் பிரசவிக்கிறார் ராஜா.
இதையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயம் இசைஞானி இளையராஜாவுக்குத் தன் குரு T.V.கோபாலகிருஷ்ணனே மிருதங்கம் வாசித்தும் ஒரு பாடல் பதிவாகியிருக்கிறது.
கவரிமான் படத்தில் “புரவோ பாரமா” என்ற தியாகராஜர் கீர்த்தனை
தான் அது. அதில் இன்னொரு சிறப்பும் சொல்லாத சேதியாகப் பொதிந்திருக்கிறது. செம்பை வைத்திய நாத பாகவதரிடம் சங்கீதம் கற்ற சீடப் பிள்ளைகள் டி.வி.கோபாலகிருஷ்ணனையும், கே.ஜே.ஜேசுதாஸ் ஐயும் இணைத்து இம்மாதிரியானதொரு சங்கீதக் கச்சேரியைத் திரையில் படைத்திருக்கிறார் இளையராஜா.
தம் முன்னோர்களைப் போற்றித் துதிப்பது மட்டுமன்றித் தகுந்த நேரத்தில் அவற்றைத் தன் ஆளுமைத் திறனோடு பதிப்பிக்கும் மாண்பின் இலக்கணம் இது.
“அடியார்க்கும் அடியேன்” என்று பாடுமாற் போல இசையுலகில் இம்மாதிரியான ஆழம் நிறைந்த சங்கீத சமுத்திரத்தின் பேட்டியைக் கேட்பதும் சிலாகிப்பதும், போற்றித் துதிப்பதும் வரம்.
நம் எந்தத் துறையில் இருந்தாலும் அதன் ஆழம் தேடி நம் ஆயுள் வரை தேடுவோம் பதிப்போம். இவ்விதமான பேட்டிகள் தரும் போதனை அதுதான்,
கானா பிரபா


0 comments: