Pages

Saturday, July 3, 2021

அமர்க்களமாய் வந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்

“எங்க குடும்பத்தோட வாழ்க்கை

ஏதோ பிறந்தோம் ஏதோ வளர்ந்தோம்னு

ஒரு சாதாரண வாழ்க்கையா இல்லாம

குடும்பம்னா இப்பிடிதான் இருக்கணும்னு

இந்த ஊரே சொல்ற அளவுக்கு சிறப்பா இருந்துச்சு

அந்த சந்தோஷம் ஊஞ்சல்ல ஆடிக்கிட்டிருந்த எங்களுக்கு

காத்தடிச்சா அனுபவிக்கிற மனநிலையை கொடுத்த ஆண்டவன்

புயலடிச்சா எதிர்த்து நிக்கிற பலத்த குடுக்காம விட்டுட்டான்”


ஈராயிரத்தின் ஆரம்ப காலத்து வானொலி நாட்களை அசை போட்டால் இந்தப் பாடல் தவிர்க்க முடியாமல் வந்து நிற்கும். தினம் ஒரு சில வேளையேனும் வானொலியில் ஒலிபரப்பாகும் இந்தப் பாட்டு.


திரையிசையை என்பது குறித்த கதையோட்டத்துக்கான காட்சிச் சூழலுக்கானது என்றாலும் நமது வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்டதொன்று. அப்படி நம் நிலைக்கண்ணாடியாக புலம்பெயர் தமிழரின் துயரத்தின் வடிகாலாக இந்தப் பாடல் தொனிக்கும்.


https://www.youtube.com/watch?v=qHRiLtd3vJA


போர் முற்றிய காலத்துக்கு முந்திய வசந்த காலத்து அனுபவங்களை மனதில் அசைபோட்டு நிற்பர் வானொலி நேயர்கள். இந்தப் பாடலோடே நான் பல நேயர் நேரடி உரையாடல்களைச் செய்திருக்கிறேன். மடை திறந்தது போலத் தம் வாழ்வியல் அனுபவங்களைக் கொட்டி விட்டுப் போவார்கள். இடைக்கிடை இந்தப் பாடல் ஒலிக்கும் இப்படி இரண்டு மணி நேரம் கடந்து விடிகாலை இரண்டு மணி வரையெல்லாம் நிகழ்ச்சி செய்த அனுபவம் உண்டு.


இந்தப் பாடலில் இசைமைப்பாளர் பரத்வாஜ் இன் குரல் வரிகளில் உணர்வை அப்படியே தோய்த்துக் கொடுக்கும்.


இது போலவே வானொலி யுகம் ஒரே நாளில் போட்டுப் போட்டுச் சலிக்காத நம்பிக்கை விதையாக


“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே”


பாடகி சித்ராவுக்கும், பாடலாசிரியர் பா.விஜய்க்கும் தேசிய விருதைக் கொடுத்தது எல்லாம் அவர்களுக்கான அங்கீகாரம். ஆனால் அதற்குப் பின் பரத்வாஜ் அவர்களின் நேர்மையான உழைப்பு இசையாகப் பரிணமித்திருக்கின்றது. அதனால் தான் சோர்ந்து போனவனைத் தட்டி எழுப்பி ஒத்தடம் கொடுக்கின்றது.


“ஒரு மூங்கில் காடெரிய

சிறு பொறி ஒன்று போதும்

அந்த பொறி இன்று தோன்றியதே……”


வைரமுத்து - பரத்வாஜ் - சரண் கூட்டணிக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த அஜித் படங்களில் தலையாயது “காதல் மன்னன்”.

“வானும் மண்ணும் வந்து ஒட்டிக் கொண்டதே”

பாடல் பரத்வாஜ் இன் இசை யாத்திரையில் அற்புதமான இசைக்கம்பளம்.


சரணுடன் இணைந்து கூட்டணி அமைத்து காதல் மன்னன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பரத்வாஜ் அடிப்படையில் ஒரு பட்டயக் கணக்கறிஞர். காதல் மன்னன் முதல் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ரோஜா வனம், பாண்டவர் பூமி, ஆட்டோ கிராப் என்று இவரின் பெரும்பாலான படங்களில் தனித்துவமான இவரிசையை ரசித்திருக்கின்றேன். பல படங்களின் மண்டலின் இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து அசத்தியிருப்பார் இவர். இளைராஜா - வைரமுத்து காலம் ஓய்ந்த பின் வைரமுத்துவை சிறப்பாக அதிகம் பயன்படுத்தி வருபவர் இவர். பாண்டவர் பூமி போன்றே ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் போன்ற பசுமை நினைவுகளை மெல்லிசையால் வருடியவர்.


“காதல் என்ற ஒற்றை நூல்தான்

கனவுகள் கொடுக்கின்றது

அது காலத்தை கட்டுகின்றது

என் மனம் என்னும் கோப்பையில் இன்று

உன் உயிர் நிறைகின்றது”

காதல் வயப்பட்டவர் மன நிலையை நாடி பிடித்து மெட்டுப் போட்டால் எப்படி இருக்கும் அப்படியொரு பாட்டு இது. உயிர் கொண்டு திளைத்தல் என்ற சொலவாடைக்குப் பொருத்தம் தேடினால் இப்படியான பாடல் தான் கிட்டும். கேட்கும் போதெல்லாம் முறுவல் எங்கொருந்தோ வந்து ஒற்றைக் காலை நீட்டிப் பூவில் பதிக்கும் வண்டாய் ஒட்டிக் கொள்ளும்.


உன்னி கிருஷ்ணன், ஹரிணி ஜோடியே ஏதோ ஆத்மார்த்தமான காதலர்களின் பரிபாஷை போலவே ஒத்திசைக்கின்றது. அந்தக் குரல்கள் வரிகளைச் சுரம் பிரித்துப் பாடும் போது ஒரு அழகான சாஸ்திரிய சங்கீதத்தின் நிரவலைப் பூசி மெழுகுமாற் போல இருக்கும். அப்படியொரு வெட்கப் புன்னகையோடே பாடியிருப்பாரோ ஹரிணி....

மீசை மழிக்காத பணக்காரக் களை ஒட்டிய வாலிபன் பிரசாந்த், அழகிய லைலா, உன்னி கிருஷ்ணன், ஹரிணி பாடல்கள் அந்த அழகிய காலகட்டத்தில் உறைந்து விடாதா உலகம் என்று எண்ண வைக்கும்:

பரத்வாஜ் - சரண் - வைரமுத்து கூட்டணியின் வெற்றிக்காலத்தை இது மெய்ப்பிக்கும், உயிர்ப்பிக்கும்.


“வார்த்தை என்னைக்

கைவிடும் போது

மௌனம் பேசுகிறேன்

என் கண்ணீர் வீசுகிறேன்

எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்

உனக்கேன் புரியவில்லை......


வாத்திய இசைக் கோப்பில் பரத்வாஜ் எப்போதுமே தன்னை அடையாளப்படுத்தி நிற்பவர். இங்கே வாத்தியங்களை ஓட விடுகிறார் அவை உள்ளுணர்வின் ஓசையாகக் குதூகலித்தும், ஆர்ப்பரித்தும் இவர்களின் காதலை மொழி பெயர்க்கின்றது. இரண்டாவது சரணத்தில் மிதக்கும் அந்த வயலின் இழுவையின் நளினத்தோடு கூடிய இசையைத் திரும்பத் திரும்பக் கேட்பேன் நான்.


அது போலவே “உனை நான் உனை நான்” என்று ஜேஜேயில் ஆர்ப்பரிக்கும் ஹரிஹரன் குரல். அந்த ஒற்றை வயலின் படம் முழுக்க பரத்வாஜ் முத்திரைகள்.


“அன்பே அன்பே அன்பே அன்பே

நீயின்றி நான் இல்லையே......”


https://www.youtube.com/watch?v=Gu_DkUQzQEw


ஹரிஹரன் & சாதனா சர்க்கம் சாதனை ஜோடிக்கு ஒவ்வொரு இசையமைப்பாளரும் மணி மணியாகப் பாடல்கள் கொடுத்திருக்கின்றார்கள். அதில் பரத்வாஜ் இன் பங்கில் இது தலையாயது என்பது என் கருத்து. இதே ஜோடியின் இன்னுமிரண்டு என்றால்“மொட்டுகளே மொட்டுகளே” (ரோஜாக்கூட்டம்), “காடு திறந்து கிடக்கின்றது” (வசூல் ராஜா MBBS)


ஏவிஎம் பாசறையில் ஜெமினி, அன்பே அன்பே படங்களுக்கு இசையமைத்துச் சிறப்பித்தது போன்றே கே.பாலசந்தரின் கவிதாலயாவின் கோட்டையில் கொடுத்த “பூவேலி”, “ரோஜா வனம்”, “ஐயா”, பாடல்கள்.


“ஆப்பிள் பெண்ணே நீ யாரோ”


இது கூட அந்தக் காலத்து வானொலிகளின் அறிவிக்கப்படாத காதல் தேசிய கீதம்.


ஆஸ்கார் ரவிச்சந்திரனின் “ரோஜாக் கூட்டம்” படத்தில் அறிமுக நாயகக ஜோடிக்குப் பெரும் பலமான இருந்தது பரஜ்வாஜ் கொடுத்த பாடல்கள்.


இருமனம் சேர்ந்து ஒருமனம் ஆகும் திருமணம் இன்று

இரு உயிர் சேர்ந்து ஓருயிர் ஆகும் ஒத்திகை இன்று

உனக்கென ஒரு சொந்தம் இன்று தான் ஆரம்பம்

உனக்கதில் ஆனந்தம் அதுவே என்னின்பம்

வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ


https://www.youtube.com/watch?v=emOn_Qm_C00


ஈராயிரத்தின் ஆரம்ப காலத்துத் திருமண ஒளி நாடாக்களில் ஒட்டிக் கொண்ட உன்னிகிருஷ்ணன் பாட்டு. வானொலியில் திருமண நாள் வாழ்த்துப் பாடல்களிலும் மறக்காமல் நேயர்கள் கேட்கும் பாட்டு இது.


இசையமைப்பாளர் பரத்வாஜ் குறித்து எந்த அறிமுகமும் இல்லாமல் தயாரிப்பாளரின் வேண்டுகோளில் அவரோடு முதல் படம் பண்ண வேண்டிய நிர்ப்பந்தத்தில் இயக்குநர் சரண்.

மூன்று நாட்கள் பாடல் உருவாக்கத்துக்காக முயன்றும் இருவரின் அலைவரிசையும் ஒத்துப் போகவில்லை.

கடைசி நாள் ஒரு 15 நிமிட அவகாசத்தில் பரத்வாஜே டம்மி வரிகளைப் போட்டு ஒரு பாட்டை வார்க்கிறார்.


“உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே”


இதோ வெற்றிக் கூட்டணி ஐக்கியப்படுகின்றது.


அந்த வரிகளை நீக்காமல் வைத்து விடுகிறார்கள்.


இப்படியாக இந்தக் கூட்டணியோடு பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பந்தத்தையும் சொல்லி வைக்க வேண்டும்.


பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைப் பற்றி பரத்வாஜ் சொல்லும் போது,

“இசையமைப்பாளரை எந்த விதமான பதற்றமும் இல்லாமல், மிகவும் இயல்பாக வைத்து வேலை வாங்குபவர்”


என்று எஸ்பிபி மறைவின் போது சிலாகித்தார்.

ஒருமுறை நடிகர் விவேக் இசைப்புயல் ரஹ்மானிடம்

“என்ன நீங்க பாட்டுப் பாட வர்ரவங்களுக்கு ஜோக் அடிச்சு ஜாலியா வச்சிருப்பீங்களாமே” என்று கேட்ட போது

ரஹ்மான் சொன்னார்

“அவங்களை முதலில் பயத்தைத் தெளிய வச்சு இயல்பாக நம்ம பக்கம் மாற்றணும் அதனால் தான் இந்த ஜோக், கிண்டல், ஜாலி எல்லாம்”

என்பார். எப்பேர்ப்பட்ட ஒரு உளவியல் ரீதியான அணுகுமுறை பாருங்கள்.


காதல் மன்னனைத் தொடர்ந்து பரத்வாஜுக்கு

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் – அமர்க்களம்

மேகங்கள் என்னைத் தொட்டு -

மனமே மனமே தடுமாறும் மனமே – ரோஜாவனம்

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி – ஜெமினி

ஓ போடு – ஜெமினி

மங்களம் பொங்கிடும் தினம் (வல்லமை தாராயோ)

https://www.youtube.com/watch?v=d_k3M93vpVs


என்று எஸ்பிபி கொடுத்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்திரை ரகம்.

பரத்வாஜின் முதல் படமாக இசையமைத்த Sogasu Chuda Taramaa படத்தில் இருந்து எஸ்பிபி அவரோடு பயணித்திருக்கின்றார்.


https://www.youtube.com/watch?v=ysSfmjgIniY


இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்கள் முன்னெடுத்த ஒரு வாழ் நாள் பணியாக மெச்சக் கூடியது உலகப் பரப்பில் வாழும் ஒவ்வொரு நாடுகளின் தமிழர் குரலில் திருக்குறள் வரிகளைப் பாட, இன்னும் மூவர் அந்தந்தப் பாடல்களுக்கு விளக்கம் கொடுக்க வைத்து இசை கொடுத்த பாங்கு.


https://www.youtube.com/.../UCtszezMObCPwhgcee5GW2Rw/about


அதில் ஆஸி நாட்டுக்கு நான் பொறுப்பாக இருந்து மூன்று திருக்குறள் பகிர்வுகளை அவர் கேட்டவாறு சேர்த்தது எனக்கு இன்று வரை மன நிறைவாகக் கொள்ளும் காரியம்.


இனிய “அமர்க்களமான” பிறந்த நாள் வாழ்த்துகள்.


கானா பிரபா

0 comments: