இன்று வானம்பாடிக் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அகவை 85. அவர் இலக்கிய உலகத்துக்கு இதுநாள் கொடுத்ததெல்லாம் தமிழ் உலகம் அறியும். கவிஞராக, பன்முகப் படைப்பாளியாக அடையாளப்பட்டவர் திரையிசையிலும் ஒரு பாடலை எழுதிய வகையில் அங்கும் ஒரு அடையாளத்தை நிறுவியிருக்கின்றார்.
“மலர்களே.....
நாதஸ்வரங்கள்.......
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய பாட்டு அதுதான்.
இசைஞானி இளையராஜாவின் திரையிசை இலக்கியங்களில் பெருவாரியான இலக்கிய கர்த்தாக்களும் பாடல் சமைத்திருக்கின்றனர். அவர்களில் சிற்பி அவர்களும் விதிவிலக்கல்ல என்று நிறுவிய பாட்டு.
ஆனால் இயக்குநர் சிகரம் பாரதிராஜாவின் “ராசி”க் கணக்கில் படமாக்காத ஏராளம் பாடல்களின் தொடக்கப் புள்ளியாக “கிழக்கே போகும் ரயில் படத்தில் இந்தப் பாட்டு.
“மலர்களே......நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே.....
https://www.youtube.com/watch?v=wp53bQPlqAg
ஒரு கல்யாண நிகழ்வினை நடத்திக் காட்டும் பாட்டு அப்படியே மணப்பெண்ணின் அலங்கார அறையின் கதவு தட்டி உள் நுழைந்து பார்க்கின்றது.
“பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள்
காதல் தேவன் கைகளில் சேர.......”
அதுவரை காதலன் நிகழ்த்திக் காட்டிய அந்தக் கற்பனைத் திருமண நாளின் மணவறைக் கோலத்தில் கூட்டுச் சேரும் காதலி
“கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும்
இணையட்டுமே.......”
வெட்கத்தில் மேல் தொடராமல் அவள் ஒதுங்க அப்படியே பற்றித் தொடர்கிறான் காதலன்.
மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே
காதல் வானம் பூமழைத் தூவ
மலர்களே...... நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில்......மணக்கோலம்....
மலேசியா வாசுதேவனுக்கான ஒரு மெல்லிசைக் காதலன் ரூபத்தைக் காட்டும் பாட்டு. கூடவே ஆலாபனைகளாலும், ஆங்கே இரண்டடி வரிக் குரலோடும் தோள் கொடுக்கும் காதலியாக எஸ்.ஜானகி.
“மலர்களே....” என்று மலேசியா அண்ணன் பாடும் போது அப்படியே திருமண மண்டபத்தில் உயரே எறியும் பூக்களாக மேலேழும்.
எஸ்.ஜானகியின் ஆலாபனை மட்டுமே மலேசியா வாசுதேவனோடு கூடப் பயணிக்கும். மணவறையில் இருக்கு தன்னவனுக்கான எண்ண அலைகளாக அது ஆமோதிக்கும்.
எஸ்.ஜானகி பாடும் பகுதிக்கு மட்டுமே தோழிமார் கூட்டுக்குரல் பின்னணியில் சங்கமிக்கும்.
மண அலங்காரத்தோடு மணமகள் எதிர்ப்படும் போது லாலீல லாலீ ஆலாபனையோடு மிதக்கும் சரணத்தில் தான் மலேசியா வாசுதேவன் அவரோடு நட்புப் பாராட்டுவார்கள் அந்தக் கோரஸ் குரல் தோழிமார்.
இப்படி நுணுக்கமான சங்கதிகள் கொண்ட அற்புதமான பாட்டு அது.
அதே ஹம்சத்வனி ராகத்தில் 11 வருடங்கள் கழித்து வருகிறது ஒரு பாட்டு. பாரதிராஜாவின் சீடர் மனோபாலா Manobalam Mahadevan இயக்கிய “என் புருஷன் எனக்கு மட்டும் தான்” படத்தில் வரும்
“பூ முடித்துப் பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா”
https://www.youtube.com/watch?v=SA3cIpyUOZQ
அங்கே ஹம்சத்வனியின் சந்தம் சேர்ந்தது சிற்பி எழுதியதில்,
இங்கே வாலியாரின் கை வண்ணத்தில் பூ முடித்துக் கல்யாணப் பந்தல் வருகிறது பாட்டு.
அங்கே “லாலில லாலி....” போடும் தோழிமார்,
இங்கே “மாங்கல்யம் தந்துனானே” வோடு மணப் பந்தலில் மந்திரம் ஓதுகிறார்கள்.
Made for each other என்பார்கன் இதைத் திரையிசைப் பாடல்களைக் கேட்கும் தோறும் சில பாடக ஜோடிக் கூட்டணியின் சங்கமத்தில் நினைப்பூட்டுவதுண்டு. “தென்றல் வரும் முன்னே முன்னே” என்று தர்மசீலனுக்காக அருண்மொழியும், மின்மினியும் ஜோடி சேர்ந்த போதும், “பூங்கதவே தாழ் திறவாய்” எனும் போது தீபன் சக்ரவர்த்தியையும், உமா ரமணனையும் அவர் தம் குரலில் எழும் ஒத்த அலைவரிசையின் போதும் இவ்விதம் சொல்லத் தோன்றும். அது போலவே அரிதாகப் பாடினாலும் இம்மாதிரிப் பத்துப் பொருத்தமும் வாய்த்த பாட்டு ஜோடி ஜெயச்சந்திரன் - சுனந்தா.
எப்படி ஜேசுதாஸ் வழியாக சுஜாதா இசைஞானி இளையராஜாவிடம் அறிமுகமாகினாரோ அது போலவே சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரன் வழி பிறக்கிறது. புதுமைப் பெண் படத்தில் ஜேசுதாஸ் & உமா ரமணனுக்கு “கஸ்தூரி மானே” பாடலை எழுதி வைத்தது போல, இங்கே சுனந்தாவுக்கும் ஜெயசந்திரனுக்குமாக அழகிய காதல் மயக்கம் தரும் பாட்டு. சுனந்தாவுக்குத் தமிழில் கிட்டிய அறிமுகம் வழிகாட்டியவருக்கே ஜோடியாக அமைகிறது.
“காதல் மயக்கம்” ஒரு காதலன் & காதலிப் பாட்டென்றால் அடுத்து ஒரு கல்யாணப் பாட்டு. இந்தப் பாட்டையெல்லாம் திருமண மண்டபத்தில் சத்தமாக ஒலிக்க விட்டாலே போதும் கல்யாணக் களை அந்த அரங்கம் முழுதும் வியாபித்து விடும். அதுதான் 👇
பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
இந்தப் பாட்டை எவ்வளவு தூரம் எனக்குப் பிடிக்கும் என்பதற்கு ஒரு ஆதாரம் பல்லவி தொடங்குவதற்கு முன்னால் நெய்திருக்கும் அந்தப் புல்லாங்குழல் இசையோடு வயலின் ஆவர்த்தனத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பது.
பாடலின் அந்த ஆரம்ப இசை ஒரு வண்டியில் பொருத்தி இழுக்கப்படும் Camera வின் அசைவியக்கத்தோடு பயணப்படும்.
கூட்டுக் குரல்களை சரணத்துக்கு முன்பாக "மாங்கல்யம் தந்துனா" பாட வைத்து விட்டு பின்னர் அதே ரிதத்தை இரண்டாவது சரணத்தில் வாத்திய ஆலிங்கனம் செய்ய வைத்து அதே கூட்டுக் குரல்களை ஒலிக்க மட்டும் விடும் நுட்பம் இருக்கிறதே அதுதான் ராஜ முத்திரை.
முதல் சரணத்துக்கு இரண்டாவது சரணத்துக்கு குழந்தைப் பேறு என்ற விதத்தில் அமையும் காட்சியமைப்புக்கு நியாயம் கற்பிப்பது போல அந்த இரண்டாவது சரண கூட்டுப் பாடகிகளின் ஓசை இன்பத் தாலாட்டாக விளங்கும்.
"மாங்கல்யம் தந்துனா" பாடி முடித்ததும் தபேலாவால் "தடு திடுதிடு தடு திடு" என்று ஓசையால் வழித்து அப்படியே ஜெயச்சந்திரனிடம் கொடுக்க "மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்" என்று அவர் ஆரம்பிக்க அந்தக் கணத்தை உச் கொட்டி ரசிக்கலாம்.
“தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா”
எனும் போது அந்த தீர்த்த என்ற சொல்லையே எவ்வளவு அழகாக நறுக்கிக் கொடுக்க முடியும் என்பதை ஜெயேட்டன் காட்டுவார். ஒரு மணப்பெண்ணுக்குண்டான வெட்கப் பூரிப்பு சுனந்தா குரலில் இருக்கும்.
இந்தப் பதிவை எழுதியதும் பாடல்களைப் பொருத்தும் போது அலெக்ஸ் இவ்விரண்டு பாடல்களையும் ஒப்பிட்டுச் சிலாகித்துப் பேசிய காணொளியும் கடந்த வாரம் வெளியாகியிருப்பது கண்டேன்.
சொல்லப் போனால் அவரின் காணொளியொன்றை முழுமையாகப் பார்த்தது இதுதான். கலகப்பாகவும், அற்புதமாகவும் நியாயம் பண்ணியிருக்கிறார். அதை நீங்கள் முன்பே பார்த்திருப்பீர்கள்.
https://www.youtube.com/watch?v=arvrXn5qCcM
இந்தப் “பூ முடித்துப் பொட்டு வைத்த” கல்யாணப் பாடல்களுக்கு முன்னோடியாக இதே மனோபாலாவுக்காக ராஜா அந்த “லாலி லாலி”யை வைத்துக் கொடுத்த அற்புதமான கரகரப்ரியா
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
https://www.youtube.com/watch?v=zHq3jyS5BBw
மு.மேத்தா எழுதிய அந்தக் கல்யாணப் பாட்டில் கே.ஜே.ஜேசுதாஸுடன் சேர்ந்திருப்பதும் சுனந்தா தான்.
விந்தையாக “மலர்களே நாதஸ்வரங்கள்” பாடல் போய்ச் சேர வேண்டிய ராதிகாவும், “பூ முடித்துப் பொட்டு வைத்த வட்ட நிலா” வில் சேர்ந்த விஜயகாந்தும் இதில் இணைந்திருகிறார்கள்.
பாருங்கள் ஒரு பாட்டை எழுதத் தொடங்கினால் “ஒரு பாடு” எத்தனை எத்தனை விஷயங்கள் பேசலாம்.
பாரதிராஜாவின் “மலர்களே நாதஸ்வரங்கள்” கல்யாண ஹம்சத்வனி
மனோபாலாவின் “பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலாவில்” ஒரு பூரண திருமணக் கொண்டாட்டதை நிகழ்த்திக் காட்டுகிறது.
ஆனாலும் இந்தக் குறும்புக்கார இளையராஜா வேண்டுமென்றே இதை மீண்டும் வைத்தாரா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
கானா பிரபா
மனோபாலா படம் உதவி : பழனியப்பன் சுப்பு
4 comments:
இனிமை சகோ! ❤️👏
Alexander Babu மிக்க நன்றி சகோதரா
பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
இந்தப் பாட்டை எவ்வளவு தூரம் எனக்குப் பிடிக்கும் என்பதற்கு ஒரு ஆதாரம் பல்லவி தொடங்குவதற்கு முன்னால் நெய்திருக்கும் அந்தப் புல்லாங்குழல் இசையோடு வயலின் ஆவர்த்தனத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பது.
என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பாடல் அண்ணா. நான் விரும்பிக் கேட்கும் ஒரு பாடலை இன்னொருவக்கும் பிடித்து ,கேட்டு நம் மனதில் உள்ள அதே கருத்துகளை அவர் பதிவிடும் போது அதை படிக்கும் போது வரும் ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது . மிக்க நன்றி அண்ணா.
வினோத் செல்வம்// அருமை அருமை மிக்க நன்றி சகோதரா
Post a Comment