Pages

Tuesday, July 6, 2021

டாக்டர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா திரையிசைப் பாடகர் | இசையமைப்பாளர்



இன்று ஈழத்து நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மஞ்சத்திருவிழா! முத்துக்குமார சுவாமி திருவுலா வரும் நாள்!!!
(இந்த முத்துக்குமரனில் எனக்கு மாறாப் பிரியம்; அழகொழுகும் சிலை)
இந்த நாளில் முதல் முதல் தங்கரதம் இழுத்த அன்று
.) சுவாமி வெளி வீதி சுற்றி வந்து , தேர் முட்டியடியில் திரும்பிக் கோவிலைப் பார்த்துக் கொண்டு ;தேரில் இருந்து இறங்கத் தயார் நிலையில் நிற்கும் போது; இன்குழல் வேந்தன் என்.கே. பத்மநாதன் குழலில் இருந்து பீறிட்டு வந்தது.
கலைக் கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற பாலமுரளி கிருஷ்ணா பாடிய "தங்கரதம் வந்தது நேரிலிலே.. என்ற பாடல் . எல்லோர் முகமும் ஓரத்தே ஒதுங்கி நின்று சகலதையும் அவதானிக்கும் கோவில் அறக்காவலர் குகதாஸ் மாப்பாண முதலியார் பக்கமே திரும்பியது. அவர் முகத்திலோ சிறு குறு நகை... திரையிசைப் பாடலுக்கே இடமில்லாத நல்லூர்க் கந்தனாலயத்தில்; வித்துவான் மறுப்புச் சொல்லமுடியாவண்ணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்பவாசித்து விட்டாரே; சட்டத்தையே தகர்த்து; விதி விலக்கு அளிக்க வைத்துவிட்டாரே என்பதாக நினைத்தாரோ!! யாரறிவார்.
வித்துவானுமோ சுரப் பிரயோகங்களுடன் அழகு சேர்த்து மிக விஸ்தாரமாக வாசித்து; இசை ரசிகர்களை மகிழ்வித்தார்.
அந்த நாள் நான் வாழ்வில் மறக்கமுடியாதநாள்.
இத்தருணத்தில் அதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்.
இப்படியாக 2007 ஆம் ஆண்டில் நான் நல்லூர்த் திருவிழா காலத்து 25 நாள் தொடர் பகிர்வுகளைக் கொடுத்த போது பாரீஸ் யோகன் அண்ணா வந்து கருத்துரைத்த நாள் அது.
“தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட....”
ஈழத்துக் கோயில் திருவிழா மரபில், மகா உற்சவ காலத்தில் வரும் மஞ்சத் தேர்த்திருவிழாவிலும் சரி, ரதோற்சவ நிகழ்விலும் சரி அறிவிக்கப்படாதொரு நாகசுர ஆலாபனையாக இடம்பெறுவது இன்று நேற்றல்ல.
இற்றைக்கு 57 வருடங்களுக்கு முன்னர் இயக்குநர் ஶ்ரீதர் “கலைக்கோயில்” படத்தின் கதையைச் சொல்லப் போய், அது பிடித்துப் போய் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தானும் தயாரிப்பாளராக இயங்கி உருவான படம். கலைக்கோயில் அப்போது வசூல் கணக்கில் எழும்பவில்லை. ஆனால் அது விட்டுச் சென்றது காலத்தால் அழியாத இந்த கானத்தை. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக “சுவாமி சேவை” செய்து கொண்டிருக்கின்றது இந்தப் பாட்டு. சாஸ்திய சங்கீத விற்பன்னர் டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா, இசைக் குயில் பி.சுசீலாம்மா பாடிய காதல் பாட்டு, ஆனால் அந்த நேசத்தைப் பக்தி மார்க்கத்தில் சேர்த்து விட்டது இந்த மாசற்ற இசை.
“தங்கரதம் வந்தது வீதியிலே” பாடலோடு மெல்லிசை மன்னரும், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவும் உரையாடுவதைக் கேளுங்கள்.
டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் திரையிசையில் பாடகராக, இசையமைப்பாளராகப் பல்வேறு மொழிகளில் இயங்கிச் சாதனை படைத்திருக்கின்றார். அதற்கு அடையாளமாக, கேரளாவில் ஸ்வாதித் திரு நாள் படத்துக்காகவும், கிராமம் படத்துக்காகவும் மாநில அரச விருது, தமிழ் நாடு அரசின் சிறந்த பாடகராக (2009)“அன்பாலே அழகாகும் வீடு”(பசங்க) வரை திரையிசை விருதுகளைக் கவர்ந்திருக்கின்றார். தேசிய அளவில் சிறந்த இசைமைப்பாளருக்காக “மத்வாச்சார்யா” (கன்னடம்) படத்துக்காகவும், இதற்கு முன்பே சிறந்த பாடகருக்காக கன்னடத்திலேயே “ஹம்சகீதே” படத்திற்காகவும் பெற்றிருக்கின்றார்.
இப்படியாக ஒரு இந்தியச் செவ்வியல் இசை மரபில் துறை போன வித்தகர், மகானுபவர் என்று சொல்லக் கூடியவர் பல்வேறு இந்திய மொழிகளில் திரையிசையூடாக எழுப்பிய சாதனையை வேண்டுமானால் ஒரு புத்தகமாக எழுதலாம். இங்கே அதைக் குறுக்கிக் கொண்டு தமிழோடு பயணிக்கலாம் என்று தொடங்குகின்றேன்.
“ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா”
வித்துவ மகா கனம் பொருந்திய ஹேமநாத பாகவதராகப் பிறக்கிறார் பாலமுரளியார் “திருவிளையாடல்” இல் கே.வி.மகாதேவன் இசையில்.
“ஆ” என்ற அந்த ஆரம்ப ஆலாபனையிலேயே கங்கா நதி உச்சியிலிருந்து வழிந்தோடும் சுகம். அந்த ஹேமநாத பாகவதரின் கர்வத் தொனியோடு பார்த்ததாலோ என்னமோ அச்சொட்டாக “ஒரு நாள் போதுமா?” “இன்றொரு நாள் போதுமா?” எல்லாம் சவாலாகப் பிறக்கும் பிரவாகம்.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் தன்னிசையில் பாலமுரளிகிருஷ்ணா அவர்களுக்குக் கொடுத்த நன் முத்துகளாக
அம்பலத்து நடராஜா உன் பலத்தைக் காட்டுதற்கு
என் குலத்தைத் தேர்ந்தெடுத்தனேனய்யா
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
என்று இரண்டு பாடல்களைக் “கண்மலர்” படத்துக்காகக் கொடுத்தார்.
“புத்தம் புதுமேனி இசைத்தேனி” https://www.youtube.com/watch?v=CI_fL2hio-k
என்று பி.சுசீலாவை இவரோடு இணைத்து வாலிப வாலியாரின் வரிகளைக் கொண்டு பாடல் சமைத்த கே.வி.மகாதேவனின் அந்த “சுபதினம்” படப் பாடலைக் கேட்டால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இளையவரோ என்றெண்ணத் தோன்றும்.
“தாயாய் இருக்கும் அனைவர்க்கும் தாயே”, “மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்” ஆகிய பாடல்களையும் கே.மகாதேவன் எண்பதுகளிலே தோன்றிய “மகாசக்தி மாரியம்மன்” இற்காகப் பா கொடுத்தார்.
“உண்மைக்கு ஒரு சாட்சி...
பொய் சொல்ல பலசாட்சி...
யாருக்கும் நீயல்லவா.....
நெஞ்சே!
மனிதனின் நிழல் அல்லவா...
மெளனத்தில் விளையாடும் மனச்சாட்சியே”
இம்மாதிரியான இக்கட்டான சூழலுக்கு, சூழ்நிலைப் பாடலாக அசரீரி கொடுக்கும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், அந்த “நூல்வேலி” ஐ பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் கொடுக்கிறார், அவரும் சாஸ்திரிய முத்திரை களைந்து கொடுத்த பாட்டு என்பதால் எண்பதுகளில் தத்துவப் பாடல் கொத்துகளில் தவிர்க்க முடியாமல் இருந்தது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா பாடிய வகையில்
“சுப்ரபாதம்” படத்தின் முகப்புப் பாடலான “கோசலையில்” என்ற குறும் பாடலோடு “வட திசையில் சில வைகுந்தங்கள்” (வாணி ஜெயராம் இணைந்து) என்ற பாடலைப் பாடியிருக்கிறார். அப்படி என்ன வி நோதமோ இவருக்குக் கிட்டிய திரையிசைப் பாடல்களில் கூட கிருஷ்ணன் பாட்டுகளே.
“அருட்சோதித் தெய்வம் எனை
ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
“திருவருட் பிரகாச வள்ளலார்” இராமலிங்க அடிகளாரின் அந்தப் பாட்டை இசை கோத்து, பாலமுரளியாரிடம் பாட வைத்தார் மெல்லிசை மன்னர்.
எம்.எஸ்.வி இசையில் பாலமுரளிகிருஷ்ணா கொடுத்த ஏராளங்களில்
“தங்கம், வைரம், நவமணிகள்” (தெய்வத் திருமணங்கள்) வாணி ஜெயராமுடன்
“இது கேட்கத் திகட்டாத கானம்” (மிருதங்கச் சக்கரவர்த்தி)
High on a hill என்று வாணி ஜெயராம் மேற்கத்த வாசனை பிடிக்க
கூடவே கர்னாடக சங்கீதக்காரராக பாலமுரளிகிருஷ்ணா என்றதொரு கலவை, குன்னக்குடி வைத்யநாதன் இசையில் “நவரத்தினம்” படத்துக்காக் கொடுத்தது புதுமை.
சங்கர்- கணேஷ் இரட்டையர் இசையில் “காமன் பண்டிகை” படத்தில்
“கலை நிலா ஆடினாள்” ( மாறன் கணையால் மயங்குகின்ற ஊர்வசியாள்) https://www.youtube.com/watch?v=cbTFURAU3wQ
அந்தக் காலத்து இலங்கை வானொலிப் பிரியர்களைத் தட்டியெழுப்பும்.
“கண்கள் சொல்கிற கவிதை
இள வயதில்
எத்தனை கோடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
ராதையை...பூங்கோதையை
பாலமுரளிகிருஷ்ணா “சின்னக் கண்ணன்” ஆன போது அவருக்கு வயசு 47. இசைஞானி இளையராஜாவின் தொடக்க காலத்துப் பாடல்களில் இதை விலத்தி இன்னொன்றா என்று சொல்லக் கூடிய அற்புதம் நிறைந்தது.
“இந்த உலகத்தில் இனிமேல் அவர் மாதிரி யாரும் பிறக்க முடியாது
இன்னமும் கொடுக்காமல் அவர் உள்ளே வைத்துக் கொண்டு தான் சென்றிருக்கிறார்” என்று புகழ்ந்த இசைஞானி இளையராஜா ஒரு வேடிக்கை நிகழ்வையும் சொன்னார்.
ராஜாவின் குரு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களது படத்தில் ஒரே பாடலை டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவும், இன்னொரு இசை மேதை பண்டிட் பீம்சன் ஜோஷியும் பாட வந்திருக்கின்றார்கள்.
பாடல் பதிவுக்கு முன்னர் பாலமுரளி கிருஷ்ணா ப்ளாஸ்கில் இருந்து ஊற்றி ஊற்றிக் குடித்துக் கொண்டே, பீம்சன் ஜோஷிடம் வேண்டுமா என்று கேட்கிறார். அவர் வேண்டாம் என்று மறுக்கிறார்.
சரி அடுத்து மோர் வேண்டும் என்கிறார் பாலமுரளிகிருஷ்ணா.
அப்போதும் பீம்சன் ஜோஷியிடம் கேட்டால்
“வேண்டாமே பின்னர் குரல் கெட்டு விடும் பாட முடியாது போய்விடும்”
என்கிறார்.
அப்போது பாலமுரளிகிருஷ்ணா சொன்னாராம்
“ஏய்யா ஒரு மோருக்கு நிக்காத குரல் என்ன குரல்யா அது”
என்று வேடிக்கையாக.
இளையராஜா குறிப்பிட்ட அந்தக் கன்னடப் படப் பாடல்
“ஈ பரிய சுபகு இன்னாவதேவதனைக் காணேன்”
சந்த்யா ராகம் என்ற படத்தில் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவும், இன்னொரு இசை மேதை பண்டிட் பீம்சன் ஜோஷியும் பாடியிருக்கிறார்கள்.. அற்புதமானதொரு ஹிந்துஸ்தானியும், தென்னக சங்கீதமும் கலக்கும் பாட்டு அது. இதே படத்தில் “நம்பிதே நின்ன நாடா” என்ற பாட்டை தனித்தனியாக இருவரும், எஸ்.ஜானகியுமாகப் பாடியிருக்கிறார்கள்.
“ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையில் நாயகன் நீயே
சின்னக் கண்ணனை அதிகம் மோகித்தவர்கள் அதே கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் வந்த இந்தப் பாட்டை அதிகம் கேட்காமல் இருந்து விட்டார்கள்.
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், மலேசியா வாசுதேவன், கூடவே எஸ்.ஜானகி என்ற மகா சங்கீத நதிகளை இணைத்தார் “தாயே மூஹாம்பிகே” https://www.youtube.com/watch?v=sVVBuQM4eJU ஆக.
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம் நடிகர் கமல்ஹாசன் இசை கற்றிருக்கிறார். இன்னும் தொடர்ந்திருந்தால் சாகித்யன் ஆகியிருக்கலாம் என்று கமல்ஹாசன் முன்னிலையிலேயே ஆதங்கப்பட்டவர், கமல் நடித்த உயர்ந்தவர்கள் படத்தில் தானே திரையிலும் தோன்றி சங்கர் கணேஷ் இசையில்
“ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே”
பாடியளித்தார்.
பாலமுரளிகிருஷ்ணா தானே இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கிய படம், “தலைவனுக்கோர் தலைவி” எண்பதுகளின் நட்சத்திர நாயகன் மோகன் நடித்த படம் அது.
“கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல்” என்ற தத்துவப் பாடலையும் தானே இசைத்துப் பாடினார். அந்தப் படத்தின் பூஜையில் ரஜினிகாந்த், தாணு கலந்து கொண்ட (புகைப்படம் நன்றி ரியாஸ் கே.அகமெட்)
நாம் வாழும் காலத்தில் கண் முன் கண்ட உச்சம் கண்ட இசை மேதை, திரையிசையைச் சங்கீதத்தையும் தன் சாஸ்திரிய மேடையில் கொடுத்த பாங்கில், T.ராமமூர்த்தி அவர்களது இசையில்
“சாது மிரண்டால்” படத்தின் இந்தப் பாடலைச் சேர்த்துக் கொண்டு புகழ் பரப்பினார். இதைக் கேட்டாலேயே ஆன்மீகம் உடலெங்கும் புகுமாற் போலொரு உணர்வு.
“அன்பின் திருவே அழகின் உறவே!
எல்லோரும் மகிழ்ந்திடவே
உன் கருணை வேண்டும்
உன்தன் எல்லையிலே
உலகமெலாம் வாழ்ந்திட வேண்டும்
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!”
டாக்டர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா அவர்களை ஈழத்துக்கு அவர் வந்த போது என் சிறுவயதில் அம்மாவின் சிறிய தந்தை வீட்டில் அவர்களின் அழைப்பில் சந்தித்த மங்கலான அனுபவம், ஆனால் வருடங்கள் கடந்து அவரை நான் வானொலிப் பேட்டி எடுப்பேன் என்பதெல்லாம் கனவு போல வந்து போனதொரு கொடை.
எங்களோடு இசையாய் வாழும்
டாக்டர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவுக்கு
91 வது பிறந்த நாள் வாழ்த்துகள்.
கானா பிரபா

0 comments: