“கோவிலிலே நான் தொழுதேன்
கோல மயில் உன்னைச் சேர்ந்திடவே....”
எனக்கு ஒரு விசித்திரப் பழக்கமுண்டு. என்னைக் கவர்ந்த திரைப்படைப்புகளை அந்தந்தக் காலத்தில் வாங்கி வைத்து விடுவேன். அது என்னளவில் ஆகச் சிறந்த பொக்கிஷம்.
அப்படித் தான் “காதல் கோட்டை” படத்தின் வீடியோவும் என் இருப்பாக 25 ஆண்டுகளாக நான் அடை காத்து வைத்திருக்கின்றேன்.
அதுவல்ல முக்கியம். இந்தப் படம் வந்த காலத்தில் நான் ஈழத்தில் இருந்து மெல்பர்னுக்குக் குடி பெயர்ந்து விட்ட பல்கலைக்கழக மாணவன். பகல் படிப்பு நேரம் போக வாரத்தில் பகுதி நேரம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை பார்த்து (இரவு எட்டு மணி முதல் காலை 8 மணி வரை) அப்படியே வீட்டுக்குப் போய்க் குளித்து விட்டுப் பல்கலைக்கழகம் போக வேண்டும். எண்பது டாலர் சம்பளம். யாராவது தன் காருக்கு எரிபொருளை நிரப்பி விட்டு காசு கொடுக்காமல் ஓடினால் எனக்குக் கிடைக்கும் சம்பளப் பணத்தையே அதற்காக் கல்லாப் பெட்டியில் நிரப்பி விட்டு வருவதும் உண்டு. அந்த எண்பது டாலர் சம்பாத்தியத்தில் இந்த வீடியோ காசெட் விலை 18 டாலர் அப்படியும் வாயைக் கட்டி நான் இதை வாங்கி இன்னும் பத்திரமாக வைத்திருப்பதில் இருந்து என்னளவில் இதற்காக நான் கொடுத்த பெறுமதியைப் புரிந்து கொள்வீர்கள்.
“கமலி ! உன் டிக்கெட் கன்பர்ம் ஆயிடுச்சு”
காதல் கோட்டை படத்தில் நாயகி தேவயானியைப் பார்த்து அவரின் தோழி இந்து இவ்விதம் சொல்வது தான் படத்தின் ஆரம்பம்.
தனக்குக் காதல் கோட்டையை விட்டால் வேறு படமே இல்லை இதுதான் என் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது இல்லாவிட்டால் பிறந்தகம் போய் விட வேண்டியது தான் என்றிருந்த நடிகை தேவயானியின் வாழ்க்கையின் அடுத்த 25 ஆண்டுகள் திரையுலகில் இருக்க அமைத்த கோட்டை இதுதான் என்று நெகிழ்ந்தார் தேவயானி அந்த ஆரம்ப வசனத்தை நினைவுபடுத்தி.
“விருப்பப்படி வாழ்க்கை”
என்று அதே ஆரம்பக் காட்சியிலேயே பூடகமாகக் கதை முடிவைச் சொல்லி விட்டதாக இயக்குநர் அகத்தியன் சொன்னார்.
அது தன் வாழ்க்கைக்கும் பொருந்தும் என்றார் தேவயானி.
ஒருமுறை சுஜாதா எழுதிய திரைக்கதை நுட்பத்தில் படத்தின் இடைவேளைக்கு முன்பே எல்லாப் பாத்திரங்களும் ஏதோவொரு வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்ற அந்தக் கருத்து அப்போது நினைவில் வந்து மிதந்தது.
இந்த வாரம் முழுக்க Touring Talkies இல் காதல் கோட்டை படத்தின் உருவாக்குநர்களின் சிறப்புச் சந்திப்பைத் துளி விடாமல் பார்த்து ரசித்தேன் என்பதை விட நெகிழ்ந்தேன் எனலாம். எத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது பாருங்கள்.
காதல் கோட்டை படம் போல எத்தனையோ வெற்றிகளை இந்தத் தமிழ் சினிமா கண்டிருந்தாலும் இந்த 25 ஆண்டு நிகழ்வில் படத்தின் உருவாக்கம் பற்றி ஒவ்வொருவரும் பேசிய கருத்துகளைத் திரட்டினாலேயே ஆகச்சிறந்த திரைப்பட ஆக்கம் குறித்த நூல் ஆகி விடும். அவ்வளவுக்கு அற்புதமான நினைவுப் பகிர்வாக அமைந்தது.
இந்தக் கதையைத் தூக்கிக் கொண்டு அலைந்த கருணாநிதி என்ற அந்த இளம் இயக்குநர் அகத்தியன் ஆகி, அப்படியே சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, சிறந்த படம், சிறந்த திரைக்கதை என்று மூன்று விருதுகள் தேசிய அளவிலும், ஏராளம் உயரிய விருதுகளுமாகக் கொடுத்துத் திக்குமுக்காட வைத்து விட்டது.
ஒரே காட்சியோடு படப் பெட்டியைத் திருப்பி அனுப்பிய (மாங்கல்யம் தந்துனானே) “ராசி” கொண்ட இதே இயக்குநர் தான்
தமிழ் சினிமாவின் வரலாற்றில் முதன் முறை தேசிய விருது வாங்கும் இயக்குநராக அடையாளப்படுகிறார் இந்தக் காதல் கோட்டை வழியே.
ஒரு படத்தின் ஆகச் சிறந்த எல்லாப் பாடல்களுமே ஒரே நேரத்தில் ரசிக்க வைக்காமல் இடைவெளி விட்டு ரசிக்க வைக்கும் பாங்கு நிரம்பியவை. அவ்விதமே காதல் கோட்டை வந்த காலத்தில் வகை தொகையில்லாமல் கொண்டாடித் தீர்த்த பாட்டு “நலம் நலமறிய ஆவல்”.
“எனக்கு ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்பிபி சொன்னார் அந்த நலம் நலமறிய ஆவல் பாட்டு மாதிரி வராது என்று அடிக்கடி சொல்வார்” என்று தேவா எஸ்பிபியை நினைவுபடுத்தினார்.
பின்னர் “காலமெல்லாம் காதல் வாழ்க” பாடலில் கட்டுண்டு கிடந்தேன். இன்னொரு பக்கம் அந்தக் காலத்தில் இலங்கையில் சந்திரிகாவின் ஆட்சி. எனவே “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாட்டு அரசியல் கிண்டல் பாட்டு போலவும் எங்களவரால் பகிரப்பட்டது வேறு கதை.
நான் Oracle இல் வேலை செய்த சமயம் ஒரு தமிழக நண்பரின் காரில் வெறும் தேவாவின் கானா பாடல்கள் மட்டுமே இருக்கும். அதற்கெல்லாம் அந்தமாக அவருக்கு வெறியூட்டியது “கவலைப்படாதே சகோதரா”. இந்தப் பாட்டு இன்றும் மதுப்பிரியர்களின் சடங்கில் தவிர்க்க முடியாத குத்துப் “பாடகி”.
வேடிக்கை என்னவென்றால் “காதல் கோட்டை” கன்னடத்தில் மீளத் தயாரிக்கப்பட்ட போது “தலைவாசல்” விஜய் இன் கெளரவப் பாத்திரத்தில் நடித்தவர் அங்குள்ள உச்ச நடிகர் விஷ்ணுவர்த்தன். தனக்கு எஸ்பிபி பாடுகிறார் தானே என்று உறுதி செய்து விட்டே படங்களில் நடிக்கத் தயாராகும் அவர் தனக்காகச் சேர்த்துக் கொண்ட குரல் எஸ்பிபியுடையது.
https://www.youtube.com/watch?v=cYxove409V8
தெலுங்குக்காரர்கள் இந்தக் கவலைப்படாதே சகோதரா தெலுங்குப் (அங்கும் தேவா) பாடியது) பாடலைப் பாடித்தான் தன்னை இன்றளவும் நினைவுபடுத்துகிறார்கள் என்றார் தலைவாசல் விஜய்.
இப்படியாக காதல் கோட்டை படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதீதமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது என்னளவில். கடந்த வாரம் கூட நண்பர் ஒருவரோடு பேசும் போது
“சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது” பாடலை இருவரும் அக்குவேறு ஆணி வேறாக அலசி ரசித்தோம்.
அதே போல அந்தப் படத்தில் வந்த “சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது....” எஸ்பிபியைத் தன் பாட்டில் பயணிக்க விட்டு ஓரமாக நின்று ரசித்திருப்பாரோ இந்தத் தேவா, எவ்வளவு அழகுணர்ச்சியைக் கொட்டிக் கொடுத்தது அந்தப் பாட்டு.
சூழ்நிலைக் கைதியாகத் தான் பாட்டெழுத வந்த கதையை அகத்தியன் பரிமாறிக் கொண்டார். அப்போது அவருக்கு உதவியாக இருந்தவர் கவிஞர் காளிதாசன் (திருப்பத்தூரான்) என்றும் நினைவுபடுத்தினார்.
அந்தச் சபையில் பேசாத விடயம் ஒன்றை இங்கே பதிவாக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். காதல் கோட்டை வெற்றியில் இன்னொருவர் எப்படித் துலங்கினார் என்று.
“சிவப்பு லோலாக்கு குலுங்குது” பாடலை எழுதிய “பொன்னியின் செல்வன்” உடைய இயற்பெயர் E.S.N.ரவி. இவர் வேந்தன்பட்டி அழகப்பனின் படங்களில் வசனகர்த்தாவாக “ராமாயி வயசுக்கு வந்துட்டா” காலத்தில் இருந்து இயங்கியவர்.
அழகப்பன் இயக்கி ராமராஜன் நடித்த நம்ம ஊரு நல்ல ஊரு படத்துக்கு கங்கை அமரன் இசை. அதில் பின்னாளில் திருப்பத்தூரான் ஆன காளிதாசன், அது போல் பின்னாளில் பொன்னியின் செல்வன் ஆன E.S.N.ரவி ஆகியோர் இதே பெயர்களில் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் E.S.N.ரவி எழுதிய அழகான பாட்டு “சிங்காரக் காத்து” https://www.youtube.com/watch?v=DuhMhYTyiMY
இந்த ரவியைப் பொன்னியின் செல்வன் ஆக்கி அழகான “சிவப்பு லோலாக்கு” அணிவித்துக் காலத்துக்கும் மறக்கவொண்ணாப் பாடலாசிரியாகவும் அழகு பார்த்திருக்கிறது காதல் கோட்டை.
இந்தப் பாடலாசிரியர் பொன்னியின் செல்வனுக்கு எவ்வளவு அழகான பாடல்களை எல்லாம் தேவா கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் பாருங்கள்.
ஒரு பக்கம் கானா பாடல்களாக
White லகான் கோழி ஒண்ணு (ப்ரியமுடன்), வாங்குடா 420 பீடா (கனவே கலையாதே), கோபப்படாதே முனீமா (சந்தித்த வேளை), கொத்தவால் சாவடி லேடி (கண்ணெதிரே தோன்றினாள்), மீனாட்சி மீனாட்சி (ஆனந்தப் பூங்காற்றே), கானங்கொழுக்கு (சுயம்வரம்),
இன்னொரு பக்கம் இனிய மெல்லிசைக் காதலாய்
ஓ தேவதையே (தடயம்), காதலே நிம்மதி படத்தின் முத்தாய்ப்பான பாடலாக கங்கை நதியே, இவையெல்லாம் தாண்டி என் மனசுக்கு நெருக்கமான
“திருமலை நாயகனே” (மாப்பிள்ளைக் கவுண்டர்) என்று அள்ளிக் கொடுத்தார். இளையராஜாவின் தேவதை படத்திலும் பாடல் எழுதியிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் கடந்த 2012 இல் மறைந்து விட்டார்.
லேலோஓஓஓஓ லேலேஓஓஓ
அந்தக் கோரஸ் குரல்களில் எழும் ரம்யம். ஒரு பாட்டைக் கேட்கும் போதே காட்சிகளை மனக் கண் விரிக்கும் என்றால் இந்தப் பாட்டை விலத்த முடியாது. அப்படியே ராஜஸ்தான் கண்ணுக்குள்.
தங்கர்ப்பச்சானின் ஒளிப்பதிவு காதல் கோட்டையில் பெரு வெற்றியில் முக்கிய தூண் என்பதில் எந்தச் சந்தேகமும் 25 ஆண்டுகள் கழித்தும் வராது. ஆனால் பட உருவாக்கத்தில் அவர் கொடுத்த முக்கியமான ஆலோசனைகளும் படத்தைச் செம்மையாகக் காட்டியதை அவர்கள் பேசிய போது அவரின் அறியப்படாத பங்களிப்பைத் தெரிந்து மெச்ச முடிந்தது.
தேனிசைத் தென்றல் தேவா எப்படி இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வளைந்து கொடுத்துச் சிறு முதலீடுகளுக்குப் பெரும் அறுவடை கொடுத்தார் என்பது வெள்ளிடை மலை என்றால் அவரின் அறியப்படாத பக்கம் அவர் ஏராளமான நல்லிசைப் பாடல்களின் முத்தாய்ப்பான ஆரம்ப வரிகளுக்குச் சொந்தக்காரர், “நலம் நலமறிய ஆவல்” உட்பட.
காதல் கோட்டை 25 ஆவது ஆண்டு நிகழ்வில் தான் இவ்விதம் ஆரம்ப வரிகளைக் கொடுக்கும் தேவையைக் காட்டும் உதாரணத்தை “மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுட்டு
பொட்டொண்ணு வச்சுக்கம்மா” (சாமுண்டி)
பாடல் உதாரணத்தோடு விளக்கிய போது தேவாவின் மீதான மரியாதை பன்மடங்கு உயர்ந்தது.
காதல் கோட்டை படத்தில் இயங்கும் ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே தனித்தனிச் சிறுகதை எழுத முடியும், வில்லத்தனமானவரோ என்று நினைத்துப் பார்க்கும் அக்காளின் கணவர் ராஜீவ் உட்பட,
“வயசாகிப் போச்சேடா கலியபெருமாள்” மணிவண்ணன்,
பாண்டு என்று அது நீளும்.
ஒரு பக்கம் விஜய் இதே ஆண்டின் முற்பகுதியில் “பூவே உனக்காக” வால் ஒரு பெரும் திருப்புமுனையைச் சந்திக்க, அடுத்த சில மாதங்களில் அஜித் வருகிறார் “காதல் கோட்டை” உடன். இதற்கு முன்பே ஆசை படம் அஜித்துக்கு நல்லதொரு திருப்பமாக அமைந்தாலும் காதல் கோட்டையின் வாசல் அகலத் திறந்து பெருவாரியான கடைக்கோடி ரசிகன் வரை சேர்த்தது. இந்த மாதிரியான அடக்கமான வெற்றிகள் தான் பின்னாளில் பெரும் உயரங்களுக்கான படிக்கற்களாக.
இந்தப் படத்தைப் பற்றி நான் அடிக்கடி நினைப்பதை
“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கை விடுவதுமில்லை”
இந்துத் தெய்வங்கள் உறையும் தன் தன் சுவாமி அறையில் நாயகி கமலி மேற் கண்ட பைபிளின் வாசகங்களைப் பிரித்துப் படிப்பாள்.
இந்தக் காட்சியோடு தான்
“நலம் நலமறிய ஆவல்”
பாட்டு வரும்.
ஒரு வெற்றி கிட்டும் போது அதுவரை எல்லாமே சரிவர நடந்தது போல இருக்கும், தோல்விக்கும் அதுதான் சூத்திரம்.
இங்கே “காதல் கோட்டை”க்கு முன்னது பொருந்தும்.
வெற்றிகளை ருசிக்கும் போது கடந்து வந்த அவமானங்களையும், தோல்விகளையும் ருசிக்க வேண்டும் அப்போது தான் அந்த வெற்றிகளுக்குக் கனதி இருக்கும்.
ஈழத்தில் எங்கள் அயலூர் மானிப்பாயில் ஒரு கிறீஸ்தவத் தேவாலயம் இருக்கிறது. அதைக் கடந்து போகும் போது அந்தத் தேவாலயத்தின் வாயிலில் இருக்கும் பிரமாண்டக் கம்பிக் கதவில்
“இதய தாகம் இருப்போர் வருக”
இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்,
இந்தப் படத்தின் கமலிக்கு மட்டுமல்ல எனக்கும் இந்த கிறீஸ்தவ மதக் கடவுளரையும் துதிக்கத் தேவாலயம் செல்லும் பண்பை வளர்த்தது இம்மாதியான நம்பிக்கை கொடுக்கும் வாசகங்கள் தான்.
“விருப்பப்படி வாழ்க்கை”
கானா பிரபா
1 comments:
அண்ணா காதல் கோட்டை இந்தியில் அகத்தியன் இயக்கிய போது ராஜா வேடத்தில் நடித்தவர் சல்மான்கான், தலைவாசல் விஜய் வேடத்தில் நடித்தவர் ஜாக்கி ஷெராப், ஹீரா வேடத்தில் சுஷ்மிதா சென்
Post a Comment