Thursday, June 7, 2007
அள்ளி வச்ச மல்லிகையே - இளமை தொலைத்தவளின் கதை
"அள்ளி வச்ச மல்லிகையே, புள்ளி வச்ச பொன்மயிலே"
ஒரு காலகட்டத்துப் பாடல்களில் இன்னும் என்னைக் கிறங்க வைக்கும் பாட்டு.
80 களில் தூரதர்சனின் "ஒலியும் ஒலியும்" நிகழ்ச்சியில் அடிக்கடி வராதா என்று யாசித்த பாட்டு இது.இளையராஜாவின் இசையில் கிருஷ்ணசந்தர், பி.சுசீலா , "இளமை இதோ இதோ" திரைப்படத்தில் பாடியிருப்பார்கள். பல நாட் கடந்து இன்று அந்தப் பாடல் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது, குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த ஒரு கட்டுரையைப் படித்தபோது.
சினிமா எனும் மாயலோகம் கொடுக்கும் திரிசங்கு சொர்க்க நிலையில் எத்தனை பேர் பாதை மாறி தம் வாழ்வைத் தொலைக்கின்றார்கள் என்பதைக் கோரமுகத்துடன் காட்டுகின்றது இந்தக் கட்டுரை. ஒரு காலத்தில் மற்றவர்களுக்கு கனவுக் கன்னியாக இருந்தவளுக்கு இப்போது தன் வாழ்வே கனவு.
கட்டுரையைப் படித்துப் பாருங்கள், நடிகை தானே என்று முகம் சுளிக்காமல் இதை வாசித்தால் தன்னைத் தொலைத்தவளின் நிலையை அனுதாபத்தோடு பார்க்கமுடியும்.
முழுக்கட்டுரையைப் படிக்க
கட்டுரையில் இருந்து சில பகுதிகள்
ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நடைப்பிணமாக, ஒரு கட்டிலில் கிடந்த நடிகை நிஷாவை நாம் சந்தித்தோம். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என திகைக்கும் வண்ணம் காய்ந்த கருவாடாக கட்டிலில் கிடந்தார். நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ‘‘சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்!’’ என்று கதறினார்.
அதன் பிறகு, ‘‘சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும்போல ஆசையாக இருக்கு! ஒண்ணு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!’’ என்று கெஞ்சினார். நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்.
நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ‘‘அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!’’ என்றார் இரக்கக் குரலில். நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது.
நன்றி குமுதம் ரிப்போட்டர்
இளமை இதோ இதோ படத்திலிருந்து அள்ளி வச்ச மல்லிகையே பாடல் கேட்க
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
குமுதம் வலைத்தளத்தில் இருக்கும் நிஷாவின் தற்போதைய படம் மிகவும் கொடுமை.
முருகா! அந்த நிஷாவா இந்த நிஷா! என்ன கொடுமை இது.
வெயிலான், ராகவன்
உங்கள் வருகைக்கு நன்றி, கட்டுரையினை வாசித்த போது உங்களின் மன உணர்வு தான் எனக்கும் வந்தது. தற்போதைய அந்தப் படத்தைப் போட எனக்கு மனம் வரவில்லை.
மேலதிக செய்தி
இவர் நேற்று முன் தினம் எயிட்ஸ் நோய் முற்றிக் காலமாகிவிட்டார்,
Post a Comment