Pages

Thursday, June 14, 2007

நீங்கள் கேட்டவை 9 - ஆண்பாவம் படப்பாடல்கள்

வணக்கம் நண்பர்களே,

நீங்கள் கேட்டவை 9 பதிவிலே சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பதிவு சற்று வித்தியாசமாக ஒரே ஒரு நேயரின் விருப்பத்தேர்வில் அமைந்த ஒருபடப்பாடல்களாக அமைகின்றது. அந்த வகையில் குட்டிப் பிசாசு ( நல்ல பேருப்பா ;-)) என்ற நேயரின் விருப்பமாக "ஆண்பாவம்" திரைப்படத்தில் இருந்து இன்றைய பாடல்கள் இடம்பெறுகின்றன.

கே.பாக்யராஜின் உதவியாளராக இருந்து "கன்னி ராசி" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜன், தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமான "ஆண்பாவம்" மூலம் இரட்டைக் கதாநாயகர்களில் ஒருவராக வந்து தன் திருட்டு முழி நடிப்பால் வெற்றியும் பெற்றார். மிகச் சின்னப்பையனாகவே தான் இயக்குனராக வந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அவர். ஆள் இன்னும் சின்னப்பையனாகவே இருக்கிறாருப்பா.

1985 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான ஆண்பாவம் வெள்ளிவிழாக் கண்டது. ரேவதியின் குறும்புத்தன நடிப்பு, திருமதி முன்னாள் பார்த்திபன் சீதாவின் அறிமுகம், பாண்டியன், பா-ராஜனின் இயல்பான நடிப்பு, கூட ஒட்டிக்கொண்ட ஜனகராஜ், வி.கே.ராமசாமி தவக்களை போன்றோரின் கச்சிதமான வேடம் என்று இந்த வெற்றிக்குப் பல காரணங்களைப் பங்கு போடலாம். பெரிய பாண்டி (பாண்டியன்), சின்னப்பாண்டி (பாண்டியராஜன்), கனகராஜ் (ஜனகராஜ்), தவக்களை (தவக்களை) என்று பாத்திரங்களின் பெயரை நிஜத்தோடு ஒட்டி வைத்ததும் புதுமை. படம் வந்த காலத்தில் சேலைக்கடையில் லட்டுக் கொடுத்து ஏமாற்றும் நகைச்சுவை ஏக பிரபலமாம்.

இந்தப் படத்தில் சொல்லிக்கொள்ள வேண்டிய, விலத்த முடியாத ஒரு அம்சம், இளையராஜாவின் இசை. பாண்டியன் சீதா சந்திப்பில் வரும் சந்தோஷம் கலந்த வயலின் பின்னணி இசை, பின் அவர்களின் பிரிவுக்காட்சிகளில் அதே சந்தம் சோக இசையாக ஜொலிப்பது இப்போதும் என் காதில் கேட்கின்றது.

ராஜா Title song பாடினால் படம் வெற்றி என்பதை தெரிந்தோ தெரியாமலோ நிரூபித்திருக்கின்றது ஆரம்பப் பாடலான "வந்தனம் வந்தனம்" என்ற பாடல்.

அது போல் "காதல் கசக்குதையா" பாடல் ஒரு காலகட்டத்து இளைஞர்களின் தாரக மந்திரம். இந்த இரண்டு பாடல்களையும் இளையராஜாவே பாடியிருக்கின்றார்.



அண்மையில் குமுதம் பத்திரிகையின் அரசு கேள்வி பதிலில் ராஜாவை விட யுவன் தான் இயற்கையாக இசையமைக்கின்றார் என்றும் கூடவே "பருத்தி வீரனை" உதாரணமும் காட்டினார். அவர் ஆண்பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி பாடிய "ஊட்டி வந்த" என்ற கிராமியச் சந்தத்தைக் கேட்கவில்லைப் போலும்.



"என்னைப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன்" என்று தடாலடியாகவும், "என்னைப் பாடச் சொல்லாதே, நான் ஊமையான சின்னக்குயிலு" என்று சோகமாகவும் இரண்டு பாடல்களில் இனிக்கிறார் எஸ்.ஜானகி.






இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியில் நான் என் விருப்பப் பாடலாகப் பிரத்தியோகமாகப் பாடல் ஒன்றைத் தராததற்குக் காரணம், இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன், சித்ரா இணைந்து பாடும் "குயிலே குயிலே, பூங்குயிலே" என்ற பாடல். இன்றைக்கு அல்ல என்றைக்குமே என் விருப்பப் பட்டியலில் விலக்கமுடியாத தெரிவு இது.
காதலர் இருவர் இணையும் காட்சியைத் தன் கிளாரினெற் கலந்து இசைஜாலத்தால் முன் நிரப்பும் இப்பாடல் தொடந்தும் அதே உணர்வோடு பயணிக்கின்றது.
சிட்டுக்கென பட்டுத்துணி கட்டித்தரவா, மொட்டுக்கென முத்துச்சரம் கொட்டித்தரவா"
என்று துள்ளிக் குதிக்கும் சந்தமாகட்டும்,
"குயிலே குயிலே பூங்குயிலே" என்று பாடும் போது அதைக் கேட்டு வரும் புல்லாங்குழல் ஆலாபனையாகட்டும்,
"ராசாதி ராசனத் தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப்பட்டா"
"ராசாத்தி என்ன செய்வா, அவளுக்கின்னு ராசாவா நாம்பொறந்தா என்று எசப்பாட்டுக் கலப்பதாகட்டும்,
எதைச் சொல்ல...எதை விட...., ராசா ராசாதான் போங்கள்.

11 comments:

குட்டிபிசாசு said...

என்னுடைய விருப்பத்திற்கு செவிசாய்த்து பாடல்களையும் அழகானவிளக்கமும் அளித்தமைக்கு நன்றி!!

☼ வெயிலான் said...

வழக்கமான நீங்கள் கேட்டவையாக இல்லாமல் ஒரு படப்பாடலாக மலர்ந்தது சிறிது இனிமைக்குறைவாக உள்ளது என்பது என்னுடைய கருத்து.

குட்டிபிசாசு said...

மறுமுறையும் நன்றி! ஆண்பாவம் படத்தில் அனைத்து பாடல்களும் சிறந்தவை. இருப்பினும் தோழர் வெயிலான் சொன்னதுபோல... ்

நீங்கள் ்கேட்டவையில்
"ஆதிபராசக்தி" திரைப்படத்திலிருந்து "அழகாக கண்ணுக்கு அழகாக" என்று தொடங்கும் அருள்கூர்ந்து ஒலிபரப்பவும்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
காதல் கசக்குதையா!
குயிலே! குயிலே!
என்றும் கேட்க எனக்குப் பிடிக்கும் பாடல்.

கானா பிரபா said...

தொடந்தும் பாடல்களைக் கேளுங்க குட்டிப் பிசாசு, பாட்டுக்கள் வரும்

சினேகிதி said...

எல்லாமே புதுப்பாட்டாயிருக்கு...காதல் கசக்குதய்யா பாட்டு நல்லாத்தானிருக்குது :-) நான் பெண்பாவம் என்று படம் எடுக்கப்போறன் பிரபாண்ணா ரெடியா இசையமைக்க?

கானா பிரபா said...

வணக்கம் வெயிலான்

தங்கலின் மேலான கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். நீங்கள் கேட்டவை பதிவினை சற்று வித்தியாசமாகப் படைக்கவேண்டும் என்று ஏற்பட்ட ஆசை தான் இந்தப் பதிவாக வந்தது.

அடுத்த பதிவு வழக்கம் போல் ;-)

கானா பிரபா said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
காதல் கசக்குதையா!
குயிலே! குயிலே!
என்றும் கேட்க எனக்குப் பிடிக்கும் பாடல். //

யோகன் அண்ணா

இளையராஜாவின் இசையும் உங்களை மகிழ்வித்திருக்கின்றதா? அருமை

☼ வெயிலான் said...

அடுத்த பதிவு வழக்கம் போல் ;-)

எதிர்பார்க்கிறேன்...... நன்றி!!!

கானா பிரபா said...

//சினேகிதி said...
எல்லாமே புதுப்பாட்டாயிருக்கு...காதல் கசக்குதய்யா பாட்டு நல்லாத்தானிருக்குது :-) நான் பெண்பாவம் என்று படம் எடுக்கப்போறன் பிரபாண்ணா ரெடியா இசையமைக்க//


தங்கச்சி

உவை புதுப்பாட்டில்லை, பழைய பாட்டுக்கள்.

இசையமைக்க நான் ரெடி, ஆனால் நான் தான் கதாநாயகனாக நடிப்பேன், சரியா?

நிஜமா நல்லவன் said...

ஆஹா...கலக்கல் பதிவு...இன்றும் என்னுடைய கைத்தொலைபேசியில் இருக்கும் பாடல் "குயிலே குயிலே, பூங்குயிலே". மிக பிடித்த பாடல்.