Pages

Friday, June 24, 2022

தேன்மல்லிப் பூவே ❤️🎸

இன்று கவியரசு கண்ணதாசனுக்கு 96 ஆவது அகவை பிறந்திருக்கிறது. நேற்றே அதைக் கட்டியம் கூறுமாற் போல நான் கட்டுண்டு கிடந்தேன் “தேன்மல்லிப் பூவே” பாடலோடு.

அன்னக்கிளிக்குப் பின்னான அடுத்த சில ஆண்டுகளில் தான் அதுவரை அடைகாத்த சங்கீதத்தை மடை திறந்தாற் போலக் கொண்டிய போது கிட்டிய மாணிக்கங்களில் இந்தப் பாடலும் ஒன்று.

தன் முன்னோர்கள் கட்டியாண்ட சங்கீதத்தின் பிரதிபலிப்பில் எழுந்த பாடல்களில் இதுவுமொன்று என்று சொல்லாமற் சொல்லும்.

மாற்றம் என்பது பாதிப்பின் நீட்சியாகத் தான் வளர்ந்து மெல்லத் தன் தனித்துவத்தை விளைவிக்கும் என்பதற்கு இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பயணமும் நீட்சியும் நல்லுதாரணம்.

பாட்டுத் தொடங்கும் போது ஒரு சூறாவளிச் சுழற்சி போலச் சுழரும் வாத்திய இசை வட்டப் பாதை அப்படியே மெல்ல மெல்ல உறையும் சமயம் “தேன்மல்லிப் பூவே” என்று ஞாபகப்படுத்தும் வயலின் ஆர்ப்பரிப்பு. அப்படியே தேன்மல்லியைத் தேடும் வண்டின் ரீங்காரம் போலவும் ஆரம்ப இசைத்துணுக்கு ஒன்று மெல்ல எழும்பி அடங்கும்.

செளந்தரராஜன் கட்டுக்கடங்காத சுதந்திரப் பறவையாக “தேன்மல்லிப் பூவே” என்று ஒலிக்கும் போது மலையுச்சியில் இருந்து கூப்பிடுவது போலவும், மெல்லிய வெட்கத்தோடு தொடருமாற்போல ஜானகியுமாக வருவார்.

இளையராஜா இசையில் இவ்வளவு விஸ்தாரமான தொடக்கத்தோடு TMS பாடிக் கேட்பது இனிய அனுபவம்.

“என் கண்ணா”, “என் மன்னா” எனும் போது இலேசான தாமதத்தோடு தலைவனை வேண்டுமாற் போல ஒரு சின்னச் சாதகம் கொடுப்பார் ஜானகிம்மா. 

அப்படியே படிக்கட்டில் உருண்டு போகுமாற் போலத் தொடரும் இடையிசையோடு மீண்டும் வயலின் கோவை சரணத்தை ஞாபகப்படுத்தி ஒலிக்கும்.

முத்தாரம் மார் மீது தவழ்கின்றது

எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு

தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு

திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா

ஆகா போட்டி போட்டுக் கொண்டு பாடலைக் காதலிப்பார்கள் இருவரும். காது கொடுத்து வேடிக்கை பார்க்கும் எங்களுக்கோ கொண்டாட்டம் தான் போங்கள்.

கவியரசு வரிகளில் ஆன்மிகத்தையும் உரசிப் பார்ப்பார்.

 “திருவுறைமார்பன்” என்பது திருமாலின் இன்னொரு பெயர். அதன் அர்த்தம் திருமாலின் மார்பில் திருமகள் உறைகிறார் என்று பொருட்படும். இங்கே பாருங்கள் கவிஞர் குறும்பாக 

“திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா”

எனும் போது காட்சிச் சூழலுக்கும் பொருந்திப் போக, இன்னொரு முரண் நிகழ்வையும் காட்டிச் செல்கின்றார்.

இந்த மாதிரியான சாகித்தியர்களோடு தானும் கூட்டுச் சேரும் போது, நிறை கொள்ளாத பூரிப்பைக் கொடுக்குமாற்போல அந்த இரண்டாவது சரணத்துக்கு முந்திய இசை ஆவர்த்தனத்தில் வாத்தியங்கள் ஒவ்வொன்றாய் அணிவகுத்து சூரியகாந்தித் தோட்டத்தின் அழகியலைப் பிரதிபலிக்கும். 

அந்த இசைப் பரிமாணம் தான் முன் சொன்னமாற்றத்தின் திறவுகோலாய் அழகுறக் காட்டி நிற்கும் வீணை மீட்டலோடு, புல்லாங்குழலும், வயலினும் கலக்கும் நாத சங்கமமாக.

முடிக்கும் போது ஜானகிம்மா ஒரு சாதகம் கொடுப்பாரே

ஆஹா ஹா ஹா 

ம்ம்ம்ம்ம்ம் 😍

உலகமெல்லாம் ஒரு நிலவு

இதயமெல்லாம் ஒரு நினைவு

என் வாழ்வின் ஆனந்தம் நீயே

தேன்மல்லிப் பூவே........

“தேன்மல்லிப் பூவே” பாடலைக் கேட்டால் தேன் குடித்த வண்டாகி விடும் மனசு.

https://www.youtube.com/watch?v=OSSPpxL9dwU

கவியரசர் கண்ணதாசனுக்கும், மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கும் பிறந்த நாள் புகழ் வணக்கங்கள்.

கானா பிரபா

24.06.2022


0 comments: