Pages

Saturday, October 30, 2021

அதோ மேக ஊர்வலம்....❤️


எங்கோ தொலைவில் மரக்கிளையில் இருக்கும் கூக்காட்டும் குயிலின் குரலுக்குப் போட்டியாக
நானும் குரல் கொடுத்துப் பார்ப்பேன்.
அது இன்னும் வேக மெடுத்துக் கூவும்
நானும் கூ கூஊஊஊ
இப்படியொரு வேடிக்கை விளையாட்டு தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் வீட்டுமுற்றத்தில் நின்று காட்டுவதுண்டு. அந்த வேடிக்கை விளையாட்டு கொடுக்கும்மகிழ்ச்சிக்கு அளவு கணக்கில்லை.
ஆஆஆ….ஆஆ…ஆஆஆ
சுனந்தாவின் குயில் குரலை ஆமோதித்துக் கூவும் புல்லாங்குழல் அதே நினைப்பைஉண்டு பண்ணும். அப்படியே அந்த இரு ஓசையும், ஆரோகணத்தில் சங்கமித்துவிடும் வேளை
படிக்கட்டுப் போல ஒரு இன்னிசை நாதம் அப்படியே பூமிக்கும் முகில்கூட்டத்துக்கும் தொங்கு பாலம் போலே,
அப்போது மனோ பாடத் தொடும்,
“குழலைப் பார்த்து
முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்….”
அந்தச் சரணத்தில் முகிலில் மிதந்து அந்தக் காதலரின் சங்கமமோ என மனம்எண்ணிக் களிப்புறும்.
மேலிருந்து பொத்தென்று விழும்
இளங்குருத்துத் தென்னம் பாளைக்குள் மூடியும் மூடாததும் போலே அந்த மணிகள்பாதி எட்டிப் பார்ப்பது
“தென்னம்பாண்டி முத்தைப்
போல் தேவி புன்னகை….”
“அதோ மேக ஊர்வலம்”
பாட்டெழுதிய புலவர் புலமைப்பித்தன் ஐயா மகா குறும்புக்காரர். வெளிப்படையாகக் கேட்கும் போது காதல் வர்ணனையின் ஆழத்தை உணராதுமெட்டோடு அணி சேரும் வரிகள் வருடும் இதத்தில் மறந்து போவோம். ஆனால்ஆழமாகப் பார்த்தால் காமசூத்திரத்துக்கு உரை எழுதியிருப்பார்.
“மந்திரம் இது மந்திரம்”
பாடலின் அலைவரிசையில் வந்து போகும் இந்தப் பாட்டும். ஆனால் வரிகளில்கொஞ்சம் எளிமையைக் கையாண்டிருப்பார். இங்கே
இலவம் பஞ்சு, வாழைத் தண்டு என்று இயற்கையைப் “பதம்” பார்த்திருக்கிறார் தன்காதலி குறித்த ஒப்புவமைக்கு.
பாட்டைச் சந்தத்துக்குத் தான் எழுதியது என்று வைத்துக் கொள்வோம்அப்படியாயின் எப்படி காற்றில் வரும் கீதமே பாடலில் வாலி சொல்வாரே
“அளவுக்கு அளவு” அப்படி வராமல் ஒரு குறுகிய அடிகளாகக் கொடுத்திருக்கிறார்?
ஒரே நாள் நிலவினில் முகம்
பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன்
இவற்றைக் கேட்கும் போது தொங்கி நிற்குமாற் போல மீதிக்கு இசையை நிரப்பிஅந்த
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன்
வரியில் மட்டும்
வா
இழுத்து நிரப்புவாரே?
“காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல”
புலவர் புலமைப்பித்தனுக்கே பஞ்சமா? இல்லையே ஆனால் தன் காதலியைவர்ணிக்க திருமுடி தேடிய பிரமனே பிச்சை எடுப்பானாம் பாருங்கள்.
ஒரு பாடலில் ஒரு துளி ஆலாபனையைக் கொடுக்கும் பெண்ணின் குரல், பாடல்முழுக்கப் பயணிப்பது போலொரு பிரமை.
“தேன்மொழி எந்தன்
தேன்மொழி…..”
என்று மனோவுக்கான முதல் காதல் வரவுப் பாடலைக் கொடுத்த அதேசொல்லத்துடிக்குது மனசு படத்தில்
“பூவே செம்பூவே”
பாடலில் தலை காட்டிய சுனந்தா இங்கே அந்த ஒரு சொட்டு ஆலாபனைஎன்றாலும் “கெளரவமாக” மிளிர்கிறார்.
பாடகர் மனோவின் தலை பத்துப் பாடல்களில் தயங்காமல் தலையாக உயர்த்திவைக்கக் கூடிய பெருஞ் சிறப்பு
அதோ மேக ஊர்வலத்துக்கு.
காதலின் தெய்வீகத்தை உணத்தவோ அந்தக் கலைவாணியின் வாத்தியத்தைக்கடன் வாங்கி வந்தார் ராஜா?
இந்தப் பாடல் தனிப்பட்ட ரீதியில் மறக்க முடியாத பாட்டு என்பதற்கு இன்னோர்காரணமுண்டு. அந்தத் தொண்ணூறுகளின் போர்க்கால பூமியில் மின்சாரம்இல்லாது சைக்கிள் டைனமோ வழி மின்சாரம் ஏற்றி சென்னை வானொலி ஞாயிறுநேயர் விருப்பம் கேட்கும் போது குறிப்பாக இந்தப் பாட்டு வரும் போதுசமையலறையில் இருந்து வந்து என் அம்மா
“சோக்கான பாட்டு”
என்றது பால்மரத்தில் கீறிய செதுக்கல் போல இன்னும் என் நினைவில்.
அதோ மேக ஊர்வலம்
அதோ
மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே
அந்த இசை பாடி ஓராட்டும் முகில் தொட்டிலில் இருந்து இறங்கி வர மனமிருக்காது நம் மனசுக்கு
கானா பிரபா

0 comments: