Pages

Monday, October 25, 2021

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி

இசையின்பம், காட்சியின்பம் கலந்த களிப்புறு பாட்டு. தொடக்கத்தில் இருந்து அடி வரை ஒரு சொட்டு வீணாக்கியிருப்பார்களா காட்சிப்படுத்தலில்?
நாணப் புன்னகையோடு வீணை மீட்டும் பெண் ஶ்ரீதேவி, அந்த வீணை நாதம் பிறக்கும் இடத்தையும், போய்ச் சேர வேண்டிய பெண் பார்க்க வந்தவர் கமல்ஹாசனிடமும் போய்க் காட்டி விட்டு அந்தப் புல்லாங்குழல் இசையில் வீட்டை அளந்தளந்து எல்லோரையும் காட்டி நிற்கும் ஒளிப் படையல்.
அதுவே அடுத்த சரணத்தில் அந்தப் பெண் பார்க்கும் வீட்டில் அசைவின் ஓசையின் காட்சிப்படுத்தல்.
"சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி பாடல்". கண்ணதாசனின் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.சைலஜா பாடியிருக்கிறார்கள். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ஆளுமை கண்ணதாசனையும் விட்டு வைக்கவில்லை, அதனாலேயே ஆரம்பம் தொட்டு செல்லம்மா, வெள்ளிப்பனி என்று வரிகளிலே பாரதியாரின் சொல்லாட்டல் தாக்கம்.
இந்தப்பாடலில் சாஸ்திரீய சங்கீதத்தில் குழையும் ஜேசுதாஸ் குரல் இதே படத்தில் வரும் இன்னொரு அழகான பாடல் "பொன்னான மேனி" பாடலில் எஸ்.ஜானகியோடு ஜீன்ஸ் போட்டு ஆடும். இரண்டுமே வித்தியாச அனுபவங்கள்.
ஒரு பாடலை அந்தப் பாடலின் உள்ளார்த்தம், இசையமைக்கப்பட்ட பாங்கு எல்லாவற்றையும் உள்வாங்கிக் காட்சிப் படுத்திய பாடல்கள் மிக அரிது. அந்த அரிதில் இதுவுமொன்று. பெண் பார்க்க வந்த கமலுக்காக பாடலை ஹம் செய்து கொண்டே குனிந்த தலை நிமிரா வெட்கம் அப்பிய ஶ்ரீதேவி வீணையேந்திப் பாட, கதிரையில் இருந்து கண்சிமிட்டி ரசிக்கும் கமல், கூடவே இருந்து காட்சியின் போக்குக்கேற்ப தன் முகபாவங்களைக் காட்டும் புரோகிதரின் பங்கு, பாக்கு உரலை இடித்து வெற்றிலை குதப்பும் பாட்டி, தாத்தா, பாடல் ஒருபுறம் நடக்க, இன்னொரு புறம் வந்த விருந்தினருக்கு தேநீர் விருந்தளிக்கும் தாய், இடையில் பாடலை ஶ்ரீதேவி மறந்து விட அந்த விட்ட இடத்தில் இருந்து கமல் பாட ஒரு வெட்கப் புன்னகை உதிர்க்கும் ஶ்ரீதேவி,பாடலின் இடையே சமயம் உணராது மிருதங்கத்தைச் சரிபார்க்கும் மச்சினன் தன் தவறை உணர அது தவறே இல்லை என்னுமாற் போல
"சபாஷ்"
"மேல"
என கமலுக்குள் ஜேசுதாசின் இயக்கம்.
தாளத்துக்கேற்ப தலையில் தப்பும் சிறுவர்,
"வெள்ளிப்பனி உருகி மடியில்
வீழ்ந்தது போல் இருந்தேன்"
என கமல் பாடும் கணம் மடியில் இருந்த சிறுவன் உச்சா போக அதையும் இலாவகமாகப் பிரதிபலித்து மாறும் குரல். இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது இந்தப் பாடலில் இன்ன இன்ன அம்சங்கள் வரவேண்டுமென முதலிலேயே அணு அணுவாக இயக்குநர் செதுக்கியிருந்திருக்க வேண்டும்.
"கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றார்"
என்று கமல் ஆரம்பிக்கும் போது புரோகிதரைப் பார்த்து எப்பிடி என்று தலையாட்டுவதாகட்டும், கமல் தடுமாறும் இடத்தில் மெலிதான சிரிப்போடு ஶ்ரீதேவி பாடுவதாகட்டும் இவையெல்லாம் குட்டிக் குட்டிக் கவிதைகள், பொட்டின் கீழே திரு நீறுக் கீற்றுப் போலே.
கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் வர்த்தக ரீதியான களத்தைக் காட்டியதில் கல்யாணராமன் படத்தின் பங்கு முக்கியமானது. அந்தப் படத்தின் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன், எஸ்.பி.முத்துராமனின் உதவி இயக்குநராக இருந்தவர். கமலுடைய ஆரம்பகாலத்தில் ஒரு பெரும் வெற்றிப்படத்தை அளித்த ஜி.என்.ரங்கராஜனுக்காக மகராசன் படத்திலும் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தவர்.
ஜி.என்.ரங்கராஜன் நிறையப் படங்களை இயக்கியிருந்தாலும், கல்யாணராமனுக்குப் பின் பேர் சொல்ல ஒரு படம் என்றால் அது மீண்டும் கோகிலா தான். மகேந்திரன் இயக்கவிருந்த படம், ஜெமினி மகள் ரேகா தமிழிலும் நடிக்க வேண்டியது என்ற முன்னேற்பாடுகள் கலைந்தாலும் பின்னர் எல்லாமே சரிவர அமைந்து விட்டது.
கமல், ஶ்ரீதேவி, சுதாகர், தீபா போன்ற அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்தது. கண்ணைச் சிமிட்டியபடியே நடிகை மேல் சபலம் கொள்ளும் சாதா குடும்பஸ்தராக கமலுக்கு வேடம். இந்தப் படம் நடிகை ஶ்ரீதேவிக்கு பிலிம்பேர் விருதையும் சம்பாதித்துக் கொடுத்தது.
இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே அருமை என்பதை மீண்டும் மீண்டும் ரசிக்கும் போதெல்லாம் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
அதெல்லாம் சரி, பெண் பார்க்கப் போலும் போது பாட்டுப் பாடுவதை சினிமாவில் பார்த்திருக்கிறேன். நிஜ வாழ்வில் கண்டதில்லை. சம்சாரம் அது மின்சாரம் படத்திலும் "ஜானகி தேவி ராமனைத் தேடி" என்று பெண் பார்க்கும் படலத்தில் வரும் பாட்டு வரும். இன்னும் எத்தனையோ உண்டு.
ஆனாலும் பாடலில் ஒரு அழகியலை ஏற்படுத்திய விதத்தில் இந்தப் பாடல் தனித்துவமும் மகத்துவமும் மிக்கது.
கே.ஜே.ஜேசுதாஸுக்கு இது போல் ஏராளம் கிட்டியிருக்கிறது. ஆனால் எஸ்.பி.சைலஜாவுக்கு கண்டிப்பாக இந்தப் பாட்டு ஒரு உச்ச பட்சக் கொடை எனலாம். அவர் தொடக்கத்தில் தரும் வார்த்தையற்ற நீள வாசிப்பை திரும்ப அதே உணர்வோடு, அதே பாங்கில் கொண்டு வந்து தான் பார்க்கட்டுமே?
தமிழ்த் திரையுலகின் மூன்று சகாப்தங்கள் மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் ஆபேரி ராகத்தைக் கையாண்டதில் சூழ் நிலை பொருத்திப் பார்த்தால்,
“குழந்தையும் தெய்வமும்” படத்தில்
“பழமுதிர்ச் சோலையிலே - தோழி
பார்த்தவன் வந்தானடி

என்று மெல்லிசை மன்னர் கொடுக்க,

33 வருடங்கள் கழித்து இசைப் புயல் யுகத்தில்
“கண்ணோடு காண்பதெல்லாம் – தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை


என்று அழகு பார்த்த ஆபேரி

இடைக்காலத்தின் ராஜா கூட்டுக் குடித்தனம் சூழ அப்படியே
தன் இசை வழியே ஒரு கற்பனை சுயம்வரத்தை நிகழ்த்திக் காட்டும் முன்னேற்பாட்டில்,
“சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே” பாடலையே பின்னணி இசையாகக்
கொடுத்து விட்டுத்தான் தன் பாடலுக்குள் புகுவார்.

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோன்றுதடி

காட்சியின்பம்

ஒலியின்பம்

கானா பிரபா
25.10.2021

0 comments: