Pages

Saturday, October 23, 2021

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்....



“அல்லிப்பூவின் மகளே

கன்னித்தேனை தா ஹோய்....”

சில பாடல்களை நினைக்குந் தோறும் குறித்த பாடலின் இடை வரிக் கீற்றாக வெட்டி மறையும், அப்படித்தான் முன் சொன்ன சங்கதியும் இந்தப் பாட்டை நினைக்கையில் முன் வந்து நிற்கும். 

அந்த வரிகளை ஒப்புவிக்கும் போது எஸ்பிபியிடம் என்னவொரு குழைவு ஆகா 

“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலைக் கேட்கும் போது

கண்மணியே பேசு

மெளனம் என்ன கூறு

https://www.youtube.com/watch?v=B1aC-9MmMEY

பாடலையும் கூடவே கேட்டு விட்டுப் போ என்று மனம் உந்தும்.

நியாயமாகப் பார்த்தால் இந்த “ரோஜா ஒன்று” பாடல் கூட கமல்ஹாசனுக்கான பட்டியலில் போய்ச் சேர வேண்டியது.

அந்த அளவுக்கு உணர்ச்சிப் பிரவாகமாக எஸ்பிபி இங்கேயும் கொடுத்திருப்பார்.


“மயக்கத்தில் தோய்ந்து

மடியின் மீது சாய்ந்து”


வரிகள் இன்னொரு முறை வரும் போது

மடியின்

       மீது

           சாய்ந்து


என்று அப்படியே வரிகளை மடித்து நிமிர்த்துவார்.

அது போலவே ரோஜா ஒன்று என்பதை ஆரம்பத்தில் இணைத்தும் பின் சங்கதியில் 

ரோஜா

ஒன்று

என்று பிரித்தாண்டும் ஜாலம் காட்டுவார்.

எஸ்பிபி & எஸ்,ஜானகி கூட்டுப் பாடல்களில் தவிர்க்க முடியாத ரத்தினம் இந்தப் பாட்டு.

எண்பதுகளின் பாடல்கள் என்ற டெம்ப்ளேட்டில் கச்சிதமாக ஒட்டிப் பார்க்கும்.

“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலை எவ்வளவு தூரம் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு ஸ்மூலில் இருந்து யூடியூப் ஈறாக இறைந்து கிடக்கும் திடீர்ப் பாடகர்களே சாட்சி. அது தவிர இந்தப் பாடலை மீண்டும் காணொளியாக்கிச் செறிவானதொரு படைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள் இங்கே.

https://www.youtube.com/watch?v=yluZlQ0qUs8

இந்தப் பாடல் இடம்பெற்ற கொம்பேறி மூக்கன் படத்தை இயக்கிய ஏ.ஜகன்னாதனின் இன்னொரு படமான ஓ மானே மானே படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் இதே எஸ்பிபி & எஸ்.ஜானகி “ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது” https://www.youtube.com/watch?v=8BIpecchHk0 இன்னொரு பரிமாணத்தில் பாடியிருப்பார்கள். இந்த இரண்டு பாடல்களயும் எழுதியது கூட வைரமுத்து தான்.

இரண்டு பாடல்களிலும் இன்னொரு பொது ஒற்றுமை கிட்டார் வாத்தியத்தின் அபரிதமான பயன்பாடு.  

“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” பாடலில் சம்பந்தா சம்பந்தமில்லாதது போலத் திடீரென்று தபேலாவும், புல்லாங்குழலும் பேசிக் கொள்ள அதற்கு விடை கொடுக்குமாற் போல ஒரு துள்ளல் இசையில் வரும் கிட்டார்,  அப்படியே ஒரு வயலின் குழுவினரிடம் சங்கமிக்கும் அழகியல் பிறக்கும் இரண்டாவது சரணத்தில். இந்தப் பாடல் ஒரு போதை மருந்து. கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

மயக்கத்தில் தோய்ந்து

மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று

முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும்

ஒன்றாய் இன்று சேரும்


https://www.youtube.com/watch?v=lhxjW2SzBSU


1 comments:

Krubhakaran said...

அருமையான ரசனை