Pages

Sunday, July 11, 2021

இன்னிசை வேந்தர் சந்திரபோஸ் வழங்கிய ஏவிஎம் படைப்புகள்



“வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே”


https://www.youtube.com/watch?v=hCdIy7SAOWE


“மனிதன்” திரைப்படம் வெளிவந்து 34 ஆண்டுகளாகி விட்டன. இலங்கையின் ஏதாவதொரு பண்பலை வானொலியின் அலைவரிசை தேடிப் பிடித்துத் திருப்பினால் இந்தப் பாட்டு காதில் விழுமளவுக்குத் தலைமுறை தாண்டிய தத்துவ முத்தாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

எண்பதுகளில் திரையிசை வாழ்க்கையை அனுபவித்தவர்கள் அதன் ஆகச் சிறந்த பரிமாணத்தின் அந்தத்தோடு அடுத்த தலைமுறைக்குள் நுழைந்தவர்கள். அதிலும் நம் பள்ளிக்கால வாழ்க்கையில் வீதிக்கு வீதி ரெக்கோர்டிங் பார், ஒவ்வொரு வீதி முடக்கிலும் இருக்கும் அந்தப் பாட்டு ஒலிப்பதிவு கூடங்களைக் கடக்கும் போது புதிய புதிய பாட்டுகளாகக் காதில் விழும். அதில் இளையராஜா என்றும் சந்திரபோஸ் என்றும் பாரபட்சமில்லாமல் கேட்ட எத்தனை எத்தனை பாடல்களைப் பின்னாளில் தேடித் திரிந்து ஒலிப்பதிவு செய்து கேட்டிருப்போம்.
இளையராஜா காலத்தில் எத்தனையோ அருமையான இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருமே அவரவர் அளவில் உச்சம் கண்டவர்கள். இன்றைக்கும் யாராவது ஓரு ரெக்கோர்டிங் பார்க்காரரைச் சந்தித்தால் சந்திரபோஸ் பற்றிப் பேசாமல் விடமாட்டார்.

ஏன் சந்திரபோஸ் தனித்துவமானவர்? அவர் கொடுத்த ஏராளம் ஹிட்ஸ் ஒவ்வொன்ன்றுமே வேறுவேறாய் இருக்கும். ரிதத்தில் கூட ஒன்றின் சாயல் இன்னொன்றில் விழாமல் பார்த்து விடுவார். ஒரு பாட்டு ஹிட் அடித்தால் அதை வைத்தே பிழைப்பை ஓட்டமாட்டார்.

கலைமாமணி சந்திரபோஸ் அவர்களது YouTube தளத்தில் நான் வழங்கிய பகிர்வில் இதையே முன்னுறுத்திக் குறிப்பிட்டேன்.

https://www.youtube.com/watch?v=6SMQRB1CWOE


அதனால் தான் தேடித் தேடிக் கேட்டோம் அவரின் பாடல்கள்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் இன் திரையிசைப் பயணம் குறித்து நீண்டதொரு தொடர் எழுதப் பல்லாண்டுகளாகப் பேராவல். ஆனால் அந்தத் தொடருக்கு முன்பு அச்சாரமாக ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து இன்று தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடும் சந்திரபோஸ் அவர்களுக்கான புகழ் மாலையாகச் சூட்ட விரும்புகின்றேன். சந்திரபோஸ் அவர்களோடு பணியற்றிய வி.சி.குகநாதன் உட்பட இயக்குநர்கள் ஒரு பக்கம், இன்னோர் பக்கம் ஏவிஎம், கே.பாலாஜி, டி.ராமாநாயுடு, கலைப்புலி தாணு என்று உச்சம் கண்ட தயாரிப்பாளர்கள் இன்னோர் பக்கம் என்று எத்தனை எத்தனை பரிமாணங்களில் அவரைப் பற்றி எழுதிக் குவிக்கலாம்.


ஏவிஎம் & சந்திரபோஸ் கூட்டணியின் தனித்துவம் என்னவெனில் அவர்களின் கூட்டில் ஆகப் பெரிய நட்சத்திரத் தயாரிப்புகளும் வந்திருக்கின்றன, இன்னோர் பக்கம் தமிழ் நாட்டின் கடைக்கோடிக் குடும்பங்கள் பார்த்து ரசிக்கக் கூடிய கதையம்சம் உள்ள படங்களும் எழுந்திருக்கின்றன.

இன்னொரு பக்கம் ஏவிஎம் நிறுவனத்தின் சின்னத்திரை முயற்சிகளில் ஆச்சி இண்டர்நேஷனல், நிம்மதி உங்கள் சாய்ஸ், சொந்தம் போன்ற பிரபல தொடர்களுக்கும் இசை வழங்கினார் சந்திரபோஸ்.


ஏவிஎம் என்ற மாபெரும் தயாரிப்பு நிறுவனத்தின் எண்பதுகளின் கணிசமான வெற்றிகளை அறுவடை செய்த படங்களில் சந்திரபோஸ் அவர்களது இன்னிசை நிரம்பியிருகின்றது.
அதன் தொடக்கமாக அமைவது “சங்கர் குரு”. ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஏற்கனவே திரையுலகில் இயங்கினாலும் அவருக்கான ஒரு பரவலான ரசிகர் வட்டத்தை எகிற வைத்ததில் சங்கர் குரு மிக முக்கியமானது.

சங்கர் குரு சம காலத்தில் தமிழ், தெலுங்கு என்று எடுக்கப்பட்ட படம். அதில் என்ன புதுமை என்றால் தமிழுக்கு சந்திரபோஸ் தெலுங்குக்கு (சின்னாரி தேவதா) சக்ரவர்த்தி தான் இசை.

அந்தக் காலத்தில் பேபி ஷாலினியை முக்கிய பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. அதனால் இங்கேயும் அவரைச் சுற்றிய கதை.

சின்னச் சின்னப் பூவே ஜேசுதாஸ் குரலில் சந்தோஷம் பாடல்

https://www.youtube.com/watch?v=5hTs4XiQc8s


அதே பாடலை எஸ்.ஜானகி சோக ராகம் இசைத்தார்

https://www.youtube.com/watch?v=XXIVD93dnXU




காக்கிச் சட்டை போட்ட மச்சான் மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜா துள்ளிசையில் பட்டையைக் கிளப்ப

https://www.youtube.com/watch?v=jNRv_kXxkWE

இன்னொரு பக்கம் எஸ்பிபி & எஸ்.ஜானகி “என்னைப் பத்தி நீ என்ன நெனக்கிறே...” https://www.youtube.com/watch?v=jwIJ_FzfXZA
என்று மெல்லிசை மயிலிறகாய் வருடினார்கள்.

சந்திரபோஸ் அவர்களுடைய பாடல்களின் ஒலித்தரம் உச்சமாக இருக்கும். இன்றும் நான் “காக்கிச்சட்டை போட்ட மச்சான்” பாடலை நவீன ஒலிக்கருவிகளில் ஒலிக்கவிடும் போது அதன் இசை தெறித்துத் துள்ளும், பின்னணி வாத்தியங்களில் துல்லியம் எழும்.
அவர் காலத்தில் கொடுத்த பாடல்களில் இந்த மாதிரியான ஒலித்தரத்தை அவர் பேணியது வெகு சிறப்பு.

நடிகர் அர்ஜீன் வாழ்வில் பெரும் திருப்புமுனை கொடுத்த சங்கர் குரு படம் இன்னோர் பக்கம் சந்திரபோஸ் & ஏவிஎம் நிறுவனம் தொடர்ந்து இயங்கப் பெரும் பலமான பாலமாக அமைகின்றது.

அர்ஜீனை வைத்து பின்னாளில் ஏவிஎம் தயாரித்த படங்கள் “தாய் மேல் ஆணை” மற்றும் “சொந்தக்காரன்”. சங்கர் குரு இயக்கிய அதே ராஜா இயக்கிய படங்கள்.

“ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு”

https://www.youtube.com/watch?v=RI-LYczdEWA

இன்றும் ஊர்க்கார சொந்தங்களின் ரேடியோப் பெட்டியில் ஒலிப்பார்கள் எஸ்பிபியும் & எஸ்.ஜானகியும் “தாய் மேல் ஆணை” வழியாக.

“சின்னக் கண்ணா செல்லக் கண்ணா” பாடல் மட்டும் மூன்று குரல்களில், நான்கு வடிவங்களில் இருக்கும்

சித்ராவுக்கு சந்தோஷத்திலும்

https://www.youtube.com/watch?v=MGNncSPNm_Q

சோகத்திலும்

https://www.youtube.com/watch?v=vhog8avd2L0

ஜேசுதாஸுக்கும்

https://www.youtube.com/watch?v=rCZ6zJJeIbY

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும்

https://www.youtube.com/watch?v=R47co17b0V4

என்ற புதுமையோடு இன்னொன்றாக
கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய பெரும் பாடகர்களோடு பழம் பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியையும் இணைத்து
“எந்தக் கதை சொல்ல நான் எந்தக் கதை சொல்ல”
https://www.youtube.com/watch?v=XJANyblxnVw

என்ற அற்புதமான பாடலையும் ஆக்கியளித்திருப்பார் கலைமாமணி சந்திரபோஸ் அவர்கள்.


“சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்”
https://www.youtube.com/watch?v=AQrgGHr_el4


உரை பேசும் கவிஞர் வைரமுத்துவையும், பாடும் எஸ்பிபியோடு சேர்த்துக் கொடுத்த தத்துவப் பாட்டு.

இங்கேயும் பாடல்களில் தன் அடையாளத்தை நிறுவினார் சந்திரபோஸ். அங்கே சின்னச் சின்னப் பூவே கொடுத்த பாங்கில் இன்னொரு மெட்டு இன்னொரு பாட்டு
கட்டித்தங்கமே உன்னைக் கட்டியணைத்தேன் ( கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி)
https://www.youtube.com/watch?v=GWXewzdihhc

அதே பாடல் சோக ராகத்திலும் உண்டு.

“சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா”

எனது ஐபோனில் சேமித்திருக்கும் இந்தப் பாடல் அனிச்சையாக காரை இயக்கும் போது ப்ளூடூத் வழி தானாக எழும் போது எனக்கே பாடுவது போன்றதொரு தத்துவ வெளிப்பாட்டைக் காட்டும்.

ஏவிஎம் நிறுவனம் - இசையமைப்பாளர் சந்திரபோஸ் - பாடலாசிரியர் வைரமுத்து வெற்றிக் கூட்டணி கொடுத்த படம் "வசந்தி".

வெற்றிக் கூட்டணி என்று இங்கே அடைமொழி கொடுக்கக் காரணம் படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி அருமையான பாடல்களால் ரசிகர் மனதை ஆட்கொண்ட படங்களில் இதுவுமொன்று.


"ரவி வர்மன் எழுதாத கலையோ" (கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா)
https://www.youtube.com/watch?v=kODHZ4BGEag

என்ற முத்திரைப் பாடல் வைரமுத்துவின் திரையிசைப் பயணத்தில் விலத்த முடியாத பாட்டு.
அந்தப் பாடல் இடம் பிடித்தது வசந்தி திரைப்படத்தில்.
"பாட்டி சொல்லைத் தட்டாதே" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே திரைப்படத்தின் கதாசிரியர் (பழம்பெரும்) இயக்குநர் சித்ராலயா கோபு வசந்தி திரைப்படத்தை இயக்கினார்.

ஒரு பாடலை ஆண் குரல் தனித்தும் பெண் குரல் தனித்தும் பாடும் வகையில் ஏராளம் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் வந்திருக்கின்றன. ஆனால் சந்திரபோஸ் இசையில் வெகு அரிதாகவே இது நேர்ந்திருக்கிறது. "பாட்டி சொல்லைத் தட்டாதே" படத்தின் "வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள" பாடலைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சந்திரபோஸ் வசந்தி படத்தில் "சந்தோஷம் காணாத" பாடலுக்கு இரண்டு வடிவம் கொடுத்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய "சந்தோஷம் காணாத வாழ்வுண்டா" பாடலுக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா பாடியதும் தனித்தனியான வெவ்வேறு வரிக்களை சரணத்தில் கொண்டிருக்கும். ஒப்பீட்டில் சித்ரா பாடியதில் கொஞ்சம் எளிமையும் ஜேசுதாசுக்குத் தத்துவார்த்தம் சற்றே தூக்கலாகவும் இருக்கும்.
"இந்தப் பாடல் பாடுவதற்கு நான் தானே பணம் கொடுக்கணும்" என்றாராம் ஜேசுதாஸ் வைரமுத்துவிடம் பாடல் பதிவு முடிந்ததும்.
எண்பதுகளில் எழுந்த தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு என்றும் இடமுண்டு.
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கேட்க
https://youtu.be/xal-3n8f9A0
காட்சி வடிவில்
https://youtu.be/QFk5lKCwT4Q
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - சித்ரா குரலில் கேட்க https://youtu.be/klASf89CbZU


“வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு உள்ளூரு முழுக்க உன்னைப் பத்திப் பேச்சு”

https://www.youtube.com/watch?v=c8_R-UVpw5c

அந்தக் காலத்துக் கல்யாண வீடுகளில் மட்டுமா ஒலித்தது?
கோயில் திருவிழாக்களில் கூட நாதஸ்வர மேளப் பாடல்களில் கேட்டு அனுபவித்தது ஒரு பொற்காலம். இந்தப் பாட்டு வந்த “பாட்டி சொல்லைத் தட்டாதே” ஏவிஎம் நிறுவனத்தின் ஆகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. பறக்கும் கார் அதியசத்தோடு பாடல்களையும் பறந்து பறந்து ரசித்தோம்.

“வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா” சந்தோஷத்தையும்
https://www.youtube.com/watch?v=NivyvVCdCsI

“வெத்தலை மடிச்சுக் கொடுத்த பொம்பள” சோகத்தையும்
https://www.youtube.com/watch?v=CDuDLuIFeWc

பாடலையும் கொண்டாடித் தீர்த்தோம். இன்னும் கேட்டு இன்புறுகிறோம்.

ஒரு பக்கம் பழம் பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியை வைத்து “கார் கார் சூப்பர் கார்” பாட்டு, இன்னொரு பக்கம் “ஆச்சி” மனோரமாவுக்கு அடையாளமாய் அமைந்த “டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே” https://www.youtube.com/watch?v=udsQAA0k9L8

இந்த மாதிரியான ஜாலியான படத்திலும் எத்தனை எத்தனை விதமான முத்துகளை அள்ளி வீசியிருக்கிறார் எங்கள் சந்திரபோஸ் அவர்கள்.

“பாட்டி சொல்லைத் தட்டாதே” படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆனதும் அதை அப்படியே தெலுங்கிலும் ராஜசேகரே இயக்க, பானுமதி, மனோரமா வேடத்திலும், Bamma Maata Bangaru Baata என்ற பெயரில் ராஜேந்திரபிரசாத் & கெளதமி ஆகியோர் நடிப்பில் வெளியான போது அதற்கும் இசை வழங்கியது சந்திரபோஸ் தான்.
“டில்லிக்கு ராஜான்னாலும்” மனோரமா தமிழுக்கு, தெலுங்கில் பாடியது பானுமதி https://www.youtube.com/watch?v=K9GXKJokzx8 அவர்கள் என்று ஒரு தனித்துவம் கொடுத்தார் சந்திரபோஸ்.


ஒரு விடயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று உட்கார்ந்தால் சில சமயம் எதுவுமே வெளிக்காது. ஆனால் அதையே மனசில் போட்டு வைத்தால் வேறு ஏதாவது வேலை செய்யும் போது அவ்வப்போது குறித்த விடயம் பற்றி எழுத வேண்டியது, எப்படியெல்லாம் தகவல்கள் அமைய வேண்டியது எல்லாமே தானாக உதித்து விடும்.
சில பகிர்வுகளை iPhone Notes இல் சிறுகச் சிறுகக் கோர்த்து வைத்துப் பதிவாக அமைத்த அனுபவமும் உண்டு. இதையே எழுத்தாளர் முத்துலிங்கம் சொல்லுவார் “மனசுக்குள் ஊறப் போட்டு எழுதுவது” என்று.
இப்படித்தான் இசையமைப்பாளர் சந்திரபோஸ் இற்கும் ஒரு அனுபவம்.
ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஆஸ்தான இசையமைப்பாளராகவே எண்பதுகளின் இறுதிப் பகுதியில் கோலோச்சியவர் சந்திரபோஸ்.
பெரும் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ந்து
தக்க வைக்க வேண்டிய பொறுப்பு இவருக்கு. அதை நிரூபிக்கும் வகையில் ஏவிஎம் உடன் சந்திரபோஸ் கூட்டுச் சேர்ந்த படங்கள் எல்லாமே பாரபட்சமின்றி சூப்பர் ஹிட் பாடல்களோடு அமைந்திருந்தன.
இயக்கு நர் செந்தில் நாதன் "பூந்தோட்டக் காவல்காரன்" என்ற சூப்பர் ஹிட் படத்தை விஜய்காந்துக்குக் கொடுத்த வகையில் அவருக்கு நல்லதொரு அறிமுகம் அமைந்திருந்தாலும் தொடர்ந்து வந்த படங்கள் முதல் படம் அளவுக்கு அமையவில்லை. அப்படியிருந்தும் ஏவிஎம் தயாரிப்பில் "பெண் புத்தி முன் புத்தி" படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. வழக்கம் போல சந்திரபோஸ் தான் இசை.
இயக்குநர் செந்தில்நாதன் குறித்த காட்சியினை விளக்கி பாடலை எதிர்பார்த்து சந்திரபோஸிடம் கேட்கிறார். அந்த நேரம் பார்த்து சந்திரபோஸ் கொடுக்கும் மெட்டுகள் சந்திரபோஸ் இற்கே திருப்தி இல்லாமல் போகிறது.
அப்படியே விட்டு விட்டுக் கலைந்து போகிறார்கள்.
அடுத்த நாள் தன் காரில் பயணிக்கும் போதும் சந்திரபோஸ் நினைவெல்லாம் கொடுக்கப் போகும் பாட்டிலேயே தங்கி நிற்கிறது.
ஒரு வீதிக் கடவை நிறுத்தத்தில் கார் நிற்கிறது.
கார் இருக்கையில் இருந்த சந்திரபோஸுக்குத் திடீரென்று ஒரு மெட்டு மனதில் பிறக்கவும் கை கார்க் கதவிலேயே தாளம் போட்டுப் டம்மியாகப் பாடிப் பார்க்கிறார்.
அதுவே ஒலிப்பதிவு கூடத்தில் பாடலாக உருவாகி இன்னொரு சூப்பர் ஹிட் பாடலை ஏவிஎம் இற்குக் கொடுத்த திருப்தி சந்திரபோஸ் இற்குக் கிட்டுகிறது. அந்தப் பாடல் தான் "கொலுசே கொலுசே எச பாடு கொலுசே" https://www.youtube.com/watch?v=6eaWVkHDnN0

இந்தப் பாடல் வந்த காலகட்டத்தில் ஆகாசவாணியும் சுவீகரித்துக் கொண்டது போல கொண்டாடிய காலம் மறக்க முடியாது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடிக் குரலாக எஸ்.பி.சைலஜா. ஏனோ சந்திரபோஸ் இற்கு எஸ்.பி.சைலஜா குரலில் ஈர்ப்பு. தன்னுடைய படங்களில் இவருக்கான தனித்துவமான வாய்ப்புகள் கிட்டியது.
ஒரு பாடலுக்கு இன்னும் மகத்துவம் செய்வதே அதன் காட்சி வடிவத்தைக் பங்கமில்லாது பயன்படுத்துவது தான். இந்தப் பாடலின் திரை வடிவமும் சிறப்பாக அமைந்திருக்கும்.
குறிப்பாக அந்தக் கிராமியச் சூழலும் ராம்கி, கெளதமி ஜோடியும் சிறப்புச் சேர்க்கும்.
இந்தப் படத்தில் கவுண்டமணியையும் பாட வைத்திருப்பார் சந்திரபோஸ்
போனால் போகட்டும் போடா கவுண்டமணி குரலில்
https://www.youtube.com/watch?v=9odWqTSYcCc



“வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்” இந்தப் பதிவின் ஆரம்பத்தில் கொடுத்த பாட்டு, அதுவொரு தத்துவப் பாட்டு. எனவே மேற்கொண்டு இன்னொரு தத்துவப்பாட்டா என்ற கேள்வி எழுந்தது.
“என்ன ஸார்....இவ்வளவு அழகான வரிகளைப் படத்தில் சேர்க்க மாட்டேனெங்கிறீர்களே?” என்று வைரமுத்து ஆதங்கப்பட சரி பாடல் இசைத்தட்டு, ஒலி நாடாவில் மட்டும் ஆறாவது பாட்டாக இதைச் சேர்த்து விடுவோம் என்று முடிவெடுத்தார்கள்.
ஒரு நாள் ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் இருந்த எஸ்.பி.முத்துராமனின் அறையில் குளித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் இந்தப் பாடலைக் கேட்டு விட்டார்.
“இவ்வளவு அருமையான பாட்டு படத்தில் இல்லாமல் இருப்பதா நோ நோ நிச்சயம் வேண்டும் உள்ளே போட முடியாவிட்டால் டைட்டில் கார்டில் போடலாம் நான் நடித்துத் தருகிறேன்” என்று பிடிவாதம் பிடித்து நடித்தும் கொடுத்தார் ரஜினி.

அந்தப் பாட்டுத் தான்

“மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்”
https://www.youtube.com/watch?v=OapXIwg0HEc

அந்தப் பாட்டு பெற்ற உயரத்தைத் தனியே சொல்லவும் வேண்டுமா?

“ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது”
https://www.youtube.com/watch?v=Y6PXMwgu1xE

கே.ஜே.ஜேசுதாஸின் மென் குரலை ரஜினிக்குப் பொருத்திய அழகான பாடல்களில் இதுவும் ஒன்றாய்க் கொடுத்தார் சந்திரபோஸ். சித்ரா ஜோடி போட்டார்.

சந்திரபோஸ் ஏவிஎம் இற்குக் கொடுக்கும் செண்டிமெண்ட் பாட்டு வரிசையில் வாணி ஜெயராமின் அழகான பாட்டாய்
“முத்து முத்துப் பெண்ணே முத்தம் தரும் கண்ணே”
https://www.youtube.com/watch?v=Q53jxuKrshA

மனிதன் படமும் நாயகன் படமும் வெளியான போது ரஜினியே சலனப்பட ஆனால் வென்று காட்டியது மனிதன். அந்தப் படத்தின் பெரு வெற்றியில் சந்திரபோஸ் அவர்களின் பங்களிப்பைத் தவிர்க்க முடியாது அச்சடித்து ரசிகர் மனதில் எழுதி வைத்தன பாடல்கள்.


ரஜினிகாந்தின் நட்சத்திர அடையாளத்தை நிறுவிய பாடல்களில் ஒன்றாய், பின்னாளில் “வீரத்தில் மன்னன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி” க்கு முன்னோடியாக அமைந்த பாட்டு
“காளை காளை முரட்டுக் காளை”

https://www.youtube.com/watch?v=zA_Touzz-W0

பின்னர் ரஜினிகாந்த், ஏவிஎம், எஸ்.பி.முத்துராமன் சந்திரபோஸ் கூட்டணி எழுந்த போது இன்னொரு நட்சத்திரப் பாட்டாக
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்”
https://www.youtube.com/watch?v=9MsmYMKJZqk

ராஜா சின்ன ரோஜாவில் அதே எஸ்பிபி & எஸ்.பி.சைலஜா கொடுத்தது காலம் கடந்தும் ரஜினிக்கான சின்னப் பாடலாக அமைந்து விட்டது.

“ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தானாம்”

https://www.youtube.com/watch?v=gpNhoL__Woc

கார்ட்டூன் சித்திரங்களோடு ரஜினி, ஷாலினி, குழந்தைகள் ஆடிப்பாடும் அந்தப் பாட்டு ஒரு புதுமை என்றால் அந்தப் புதுமைக்கு இசை கொடுத்த பெருமை சந்திரபோஸுக்கு.

“ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை” தத்துவம் ஜேசுதாஸுக்கு. “ஒங்கப்பனுக்கும் பே பே” என்றதொரு துள்ளிசையில் மீண்டும் எஸ்பிபி & எஸ்.சைலஜா என்று “ராஜா சின்ன ரோஜா” காட்டிலும் சந்திரபோஸின் தேனிசை மழை.

இதோ ஏவிஎம் இற்குத் தன் வழக்கமான குழந்தைப் பாட்டு
“பூ பூ போல் மனசிருக்கு”
https://www.youtube.com/watch?v=NOQ8VlfvPsE

இம்முறை மனோவை முதன் முதலில் பாட அழைத்து சந்திரபோஸ் இந்தப் பாட்டைக் கொடுத்ததை மனதோடு மனோவில் அவர் முன்னிலையிலேயே நெகிழ்ந்து சொன்னார் மனோ.

2018 இல் கலையுலகில் நாற்பது வருடங்களை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கொண்டாடிய போது குறித்த சிறப்பு நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி ஒன்று வழங்கிய போது அந்த நிகழ்ச்சியின் அடி நாதமாக ஒலித்தது மாநகர காவல் படத்தில் போலீஸ் அதிகாரி விஜயகாந்த் அறிமுகமாகி
எதிரிகள் பணயம் வைத்திருக்கும் அப்பாவிகளைக் காப்பாற்ற அவர் வேட்டையாடப் போகும் போது பயணிக்கும் இசை.

https://www.youtube.com/watch?v=6_hWLRh8cBU

இந்த மாதிரி பின்னணி இசைக்கான கெளரவம் என்பது அவ்வளவு சுலமாக இளையராஜா தாண்டி வாய்க்காத தருணத்தில் இசையமைப்பாளர் சந்திரபோஸுக்குக் கிடைத்திருக்கிறது.
எண்பதுகளில் இளையராஜாவுக்கு நேரடிப் போட்டி என்றால் அது சந்திரபோஸ் தான் என்ற வகையில் ரஜினிகாந்துக்கும், விஜயகாந்துக்கும் அவ்வாறே ஒரு நட்சத்திர இசையமைப்பாளராக அமைந்தார்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் இன் திறமைக்குப் பலமாக இருந்தது ஏவிஎம் என்ற பெரும் நிறுவனம் தொடர்ந்து வழங்கிய வாய்ப்புகள் ரஜினிகாந்துக்கு
ராஜா சின்ன ரோஜா, மனிதன் என்று வெற்றிகரமான இசை பவனியாகவும் விஜயகாந்துக்கு மாநகர காவல் என்றும் அமைந்தது. சந்திரபோஸின் வெற்றிகரமான திரையுலக வாழ்வு நிறைவு நோக்கித் தள்ளப்பட்ட போது மாநகர காவல் படமே அவரின் ஆகப் பெரும் இறுதி வெற்றியாக அமைந்தது. அதை உள்ளுணர்ந்தாரோ என்னமோ எல்லாம் தேனான பாடல்கள் என்று அளித் தெளித்தார். “தோடி ராகம் பாடவா.....மெல்லப் பாடு” https://www.youtube.com/watch?v=0-EdIAvC08U

இந்தப் பாடலில் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சித்ரா கொடுக்கும் அந்தக் கனிவான மெல்லிசைக் குரல் நயம் ஆதியில் சந்திரபோஸ் தந்த “ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது” (மனிதன்) என்ற பாடலின் உறவும் சொல்லும் இனிமை.
“வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர சண்டித்தனம் செய்யலாமோ குதிர”
https://www.youtube.com/watch?v=GgSDBmFo5F4

எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.பி.சைலஜா அண்ணன் தங்கை ஜோடி போட்ட பாட்டு. பாடல் முழுக்க எஸ்.பி.பி இன் நையாண்டி மேளக் குரல் தான். எவ்வளவு ஜாலியாகக் கொட்டியிருப்பார் கூடவே சைலஜாவும் ஹோய் ஹோய்.

இந்தப் பாடலின் இசையும் பாட்டுக் குரல்களுமாக ஒரே துள்ளிசைப் பரவசத்தை இறக்கி விடுவார்கள் கேட்கும் போதே. சந்திரபோஸ் பாடகி சைலஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் தனித்தும் ஜோடியாகவும் பாட நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார்.
இங்கேயும் சைலஜாவுக்கு ஒரு தனிப்பாடலாகத் “திருவாரூர் தங்கத் தேர் வருது” அமைந்திருக்கிறது. அது போலத் “தலைவாரிப் பூச்சூடும் இளம் தென்றலே” https://www.youtube.com/watch?v=vfcPeZt-9OI என்று பாச மொழியில் தனித்து உருகுவார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

கே.ஜே.ஜேசுதாசுக்கும் ஒரு தனிப்பாடலாக “காலை நேரம் இதமானது”
https://www.youtube.com/watch?v=xX003Q_dDrU
என்றொரு அழகிய மெட்டு விடிகாலையில் மெல்ல மொட்டவிழ்க்கும் மலர் போல மெதுவாக, இதமாக. வழக்கமாக ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான கவிஞராக இருக்கும் வைரமுத்து பாடல்கள் எழுதாமல் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியது புதுமை.

மொத்தத்தில் சந்திரபோஸ் என்ற இசையமைப்பாளருக்கான உச்ச பட்ச இறுதி மரியாதையை இசை மீட்டியது மாநகர காவல்.

“ஊருக்குச் சிந்தும் வான்மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகளுண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு
பகல் வந்த போது வெளிச்சம் உண்டு
இருள் வந்த போது விளக்கு உண்டு
எறும்புக்குக்கூட சுகங்கள் உண்டு

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா...”


என்றென்றும் நம்மோடு வாழும்
தமிழ் திரை அரசர் சந்திரபோஸ் அவர்களுக்கு
இனிய 71 வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

4 comments:

வினோத் செல்வம் said...

அருமை அருமை அருமையான கட்டுரை பதிவு அண்ணா. தங்களுடைய கட்டுரை பதிவுகளை திரு. கிருஷ்ண சந்திரன் அவர்களது பிறந்த நாள் பதிவாக படிக்க தொடங்கினேன். பின்னர் எனக்கு மிகவும் பிடித்த திரு. மலேசியா வாசுதேவன் அவர்களின் பிறந்த நாள் படித்து களித்தேன். புத்தகம் வாசிப்பது எனக்கு பிடிக்கும். தங்களுடைய சொல்லாடல், வார்த்தை உச்சரிப்பு , தாங்கள் எழுதிய உவமைகள் எனக்கு மிகவும் பிடித்து அனைத்து கட்டுரைகளையும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டி வாசித்தேன்.

வினோத் செல்வம் said...

தெலுங்கு பாடல்களில் சமீபத்தில் வருகின்ற பாடல்களில் தான் விரும்பி கேட்டு இருக்கிறேன். ஆனால் தாங்கள் பதிவிட்ட தெலுங்கு பாடல்களின் தொகுப்பான இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் எஸ்பிபி அவர்களுடைய கூட்டணியில் வந்த பெறும் வெற்றி பெற்ற திரைப்படங்களின் கட்டுரை மிகவும் பிடித்தது. பின்னணி பாடகர் திரு மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல் தொகுப்பினை அவர்களது பிறந்த நாள் பகிர்வாக தாங்கள் பதிவிட்ட விதம் , தாங்கள் சிலாகித்து கூறிய உவமைகள் இன்னும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன. மிக்க நன்றி அண்ணா 🤩💐👌

வினோத் செல்வம் said...

பூத்தது பூந்தோப்பு பாடல் மற்றும் தங்க மனசுக்காரன் பட பாடல்களின் கட்டுரை,
மலையாள பாடகர்களின் கட்டுரை அருமை அருமை 👌.

கானா பிரபா said...

வினோத் செல்வம் // மிக்க நன்றி சகோதரா