பாடகர் விஜய் உடன் பாடகி ஷோபா சந்திரசேகர்
பாடகராக விஜய் மூன்றாந் தலைமுறையைச் சேர்ந்தவர்.
விஜயின் தாய் வழிப் பாட்டி லலிதா நீலகண்டன் 25 ஆண்டுகளாகத் திரையிசையில் கூட்டுக் குரல் பாடகியாகத் திகழ்ந்தவர்.
திரையிசையில் பாடகியாக ஷோபா சந்திரசேகர் அறிமுகமானது மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் 1967 இல் வெளியான இருமலர்கள் என்ற திரைப்படத்தில் T.M.செளந்தரராஜன், சதன் ஆகியோருடன் இணைந்து மழலைக் குரலாக "மகராஜா ஒரு மகராணி என்ற பாடலைப் பாடியிருக்கிறார்.
அந்த வகையில் ஷோபா சந்திரசேகர் அடுத்த ஆண்டு பாடகியாக 60 ஆண்டுகளைத் தொடுகிறார். ஷோபா சந்திரசேகர் குறித்த விரிவான பகிர்வை முன்பே எழுதி வைத்துள்ளேன், கால நேரத்தில் அதுவும் வரும்.
கடந்த ஆண்டு, விஜயின் தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தர் விஜயிற்காகப் பாடிய பாடல் தொகுப்பைக் கொடுத்திருந்தேன்.
விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த “சட்டம் ஒரு விளையாட்டு” படத்தில் தாயார் ஷோபா குரல் கொடுத்துப் பாடிய “ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது”
https://www.youtube.com/watch?v=ntfwYT4LdZw
பாடலில், ஷோபாவோடு, அவரின் சகோதரி ஷீலாவும் இணைய, மூலப் பாடகர்களாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் அணி செய்திருப்பார்கள். பாடல் காட்சியில் விஜயிற்குக் குரல் கொடுத்தவர் அவரின் சித்தி ஷீலாவின் குரலாகவே படுகிறது. (ஆர்த்தி) கணேஷ் மற்றைய சிறுவன், அவருக்கு ஷோபா குரல்.
இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படம்.
சமீபத்தில் வைரல் ஆகிய “இது எங்கள் நீதி" படத்தில் “சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு" மனோ பாடிய அந்தப் பாடலை விட இன்னொரு கனமான பாடல் உண்டு. பதிவு கானா பிரபா
அதை ஷோபா சந்திரசேகர்தான் பாடியிருக்கிறார் கூடவே மனோ, சித்ரா, பிரபாகர் இணைந்துள்ள அந்தப் பாடல்
“புத்திசாலி ராஜா வெற்றிமாலை சூடு,
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க"
https://www.youtube.com/watch?v=Lo0NsbAA3no
விஜய் தனது அம்மா ஷோபாவுடன் பாடிய பாடல்கள் வரிசையில்,
தேனிசைத் தென்றல் தேவா இசையில் “விஷ்ணு" படத்துக்காக,
“தொட்டப்பெட்டா ரோட்டுல கொத்து பரோட்டா”
“ஒன்ஸ்மோர்" படத்துக்காக
“ஊர்மிளா....ஊர்மிளா” ஆகிய பாடல்கள் அமைந்திருக்கும்.
“ரசிகன்” படத்தில் விஜயோடு பாடமுடியாவிட்டாலும், எஸ்பிபியுடன், ஷோபா பாடிய
“L O V E லவ்வு மாமா”
இந்தப் படங்களையும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இயக்கியுமிருந்தார்.
“சிவகாசி" படத்தில் “கோடம்பாக்கம் ஏரியா” பாடலில் ஶ்ரீகாந்த் தேவா இசையில் திப்பு, ஶ்ரீலேகாவுடனும், சுறா படத்தில் மணி சர்மா இசையில் “நான் நடந்தால் அதிரடி” பாடலில் நவீன், ஜனனி மதன் உடனும்,
“வேட்டைக்காரன்" படத்தில் விஜய் ஆன்டனி இசையில் “என் உச்சி மண்டைல" பாடலிலும் பாடகர் குழுவில் ஷோபாவும் இருப்பார்.
நடிகராகவும், பாடகராகவும் விளங்கிய விஜயின் பிறந்த நாட்களில் இந்த ஆண்டு கூடுதலாகத் தமிழக முதல்வர் என்ற பதவியோடு கொண்டாடுகிறார்.
கானா பிரபா
22.06.2026


0 comments:
Post a Comment