“கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன்
உன்னைக் காணும் வரை”
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது.....
https://www.youtube.com/watch?v=_lRUiintKMM
அதி தீவிர ராஜா ரசிகனான எனக்கு ரஹ்மான் வருகை மனசில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்க, அசைத்து உருக்கிப் போட்டு புயலில் மையம் கொள்ள வைக்கக் காரணமான பாட்டுகளில் இதுவுமொன்று.
தமிழ் திரையிசையில் பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம் இசைஞானி இளையராஜா இசையூட்ட எவ்வளவு ரம்யமாக இருந்ததோ அது போலவே அவர் பாசம் கொட்ட “திலீப்” என்றழைக்கும் ரஹ்மான் வழி மீள் வரவிலும் நிகழ்ந்தது.
“மினி ஜோசப்” ஐ மின்மினி ஆக்கி இளையராஜா அறிமுகப்படுத்த, ரஹ்மான் திருப்புமுனை கொடுத்து போல.
ஆனால் 90ஸ் குழந்தைகளுக்கு மட்டுமல்ல 70ஸ் & 80ஸ் குழந்தைகளில் கூட இன்னமும் சுஜாதா, மின்மினியை ரஹ்மானோடு வந்தவர்கள் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.
பாடகி சுஜாதாவின் குரல் குளிர் பதனப் பெட்டியில் உறைந்த நீரை அந்த ஆவி பறக்கும் குளிரில் குடித்து விட்டுக் கதை பேசுவது போன்ற ஈரப்பதன் ஒட்டியிருக்கும்.
சொல்லப் போனால் சுஜாதாவின் குரலை நேர்த்தியாகப் பாவித்த இசையமைப்பாளர்களில் இளையராஜா இசையில் அவரின் ஆரம்ப காலமும், ரஹ்மானின் இசையிலும் அது போலவேயும் கொள்ள முடியும். காரணம் வேறு பல இசையமைப்பாளர்கள் அவரின் குரலின் பண்பை அறியாது உச்சஸ்தாயியில் கீறல் விடும் ஆலாபனையைக் கேட்ட போதெல்லாம் இது நம்ம சுஜாதா இல்லை என்று மனம் துடித்திருக்கின்றது.
தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.
எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது “காயத்ரி” என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல்
“காலைப்பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்”
https://www.youtube.com/watch?v=Dp5hpkm43Vw
அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.
அந்தவகையில் அமைந்தது தான் “காலைப்பனியில் ஆடும் மலர்கள்” என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா.
ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது “கவிக்குயில்” வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது
“காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ”
https://www.youtube.com/watch?v=2lIyJj4t08A
இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய “காதல் ஓவியம் கண்டேன்” பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். “காதல் ஓவியம் கண்டேன் கனவோ” 42 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.
மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் “கா” என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.
சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.
“செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே
பாடுங்களேன் கொண்டாடுங்களேன்
ஒரு தோழன் துணைக்கு வந்தான்
ஆடுங்களேன்....”
https://www.youtube.com/watch?v=LAqOZiG9btM
நாங்கள் பிள்ளை வரம் வேண்டி எதிர்பார்த்த காலத்தில் எல்லாம் இந்தப் பாடலை அடிக்கடி கேட்பேன். என்னைத் தூக்கிக் கொண்டு வானத்தில் மிதக்க வைப்பார்கள் சுஜாதாவு வாணி ஜெயராமும்.
இப்போது கேட்டாலும் மயிர்க்கூச்செறிய வைக்கும் அனுபவம் அது.
தொண்ணூறுகளில் இசைஞானியின் இசைக் கூடத்தில் சுஜாதா வருகையில்
“மின்னாரம் மானத்து மழவில்லொடிஞ்செல்லோ”
https://www.youtube.com/watch?v=D0Sz9PlfI7k
குரு மலையாள சங்கீதம் பறைஞ்சாலும்,
“ஹே கோபமில்லை கொஞ்சிப் பேசு ராசைய்யா
ஹே ராசாமேலே ஆசை வெச்சேன் நானைய்யா...
https://www.youtube.com/watch?v=Wf1UTBUMYGo
என்று சோடாப் போத்தலை உடைக்கும் நுரைப் பூரிப்பில் பாடும் அந்த சுஜாதா குரல் ஆஹாஹா. ராஜாவின் ஜோடிக் குரலாக ஜானகி, சித்ரா தான் கச்சிதம் என்ற நினைப்பை உடைத்த பாட்டு அது.
கண்ணம்மா ஹோ...... கண்ணம்மா ஹோ.......
“நிறம் பிரித்துப் பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன…….”
https://www.youtube.com/watch?v=1IUZGAt9FIo
ஒவ்வொரு பாடலையும் கேட்கும் போது காட்சி வடிவம் பெறும் போது அது எப்படி அழகாக அமையும் என்று மனசின் உள்ளே இயக்குநர் ஒருவர் ஒளிந்திருந்து வடிவமைத்துப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வார். ஆனால் இந்த ‘ நிறம் பிரித்துப் பார்த்தேன்” பாடலை மட்டும் ஒவ்வொரு நினைப்பிலும் விதவிதமான சோடனைகளை மனது போட்டுப் பார்க்கும்.
மேற்கத்தேயரிடம் கேட்டுப் பாருங்கள் நம் இசையை என்று மார்தட்டிக் கொண்டாடக் கூடிய பாட்டு.
இருந்து பாருங்கள் இன்னும் இருபது முப்பது வருடங்களுக்குப் பின்னர் இந்தப் பாடல் இன்னும் எக்கச்சக்கமாகக் கொண்டாடப் படப் போகிறது என்று இன்றிலிருந்தே எதிர்வு கூறக் கூடிய இசை வடிவமும், பாட்டில் குழைத்த கவி வரிகளும். இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் ஒரு மோன நிலைக்கும் இட்டுச் செல்லும். இதுவெல்லாம் சராசரி சினிமாச் சங்கீதத்தில் அடக்க முடியாத மகோன்னதம்.
சகோதரர் பாடலாசிரியர் பழநி பாரதி Palani Bharathi அவர்கள் திரையிசைக்கு வந்ததன் காரணத்தை நியாயம் கற்பிக்கும் பாட்டு.
“ஓவியத்தில் எந்தக் கோடு
எங்கு சேரக் கூடும்
எல்லாமே...எல்லாமே
நம் கையிலே”
“நிறம் பிரித்துப் பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன…….”
பறந்தேன் திரிந்தேன்...
உன் ஆசையில் ஓ.....
கரைந்தே உறைந்தேன்
உன் காதலில் ஓ.....
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடகி சுஜாதா
கானா பிரபா
2 comments:
kana praba,
Thaena odum oda karaiyae paatai solli irukaname....
indha paatil Sujathavin kural...... Haunting styleil irukum.
Usha
kana praba,
en post vandhadha?
https://www.youtube.com/watch?v=3S8MZDB1vlM
Usha
Post a Comment