Pages

Wednesday, March 3, 2021

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️


மலையாளத்தில் “மிடுக்கன்” என்ற சொற் பிரயோகம் உண்டு. எனக்கு அதற்குச் சரியான அர்த்தம் கற்பிக்க நினைத்தால் சங்கர் மகாதேவன் ஞாபகத்துக்கு வருவார். ஆனால் அப்பேர்ப்பட்ட மிடுக்கனைக் கூடப் பாதரசமாக உருகி ஓட வைத்தது இந்தப் பாட்டு.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார், தீவிர இளையராஜா வெறியர் அந்த வெறியிலும் இளையராஜா எண்பதுகளில் கொடுத்த பாடல்களைத் தான் ரசிப்பாராம். 

ஆனானப்பட்ட அவரையே ஆட்கொண்ட பாட்டு இந்தப் பாட்டு. 

"ச்சக் சங்கர் மகாதேவன் கொண்டு போட்டுட்டானப்பா" என்று சொல்லும் போது அந்தக் "கொண்டு போடுதல்" தன்னை மயக்கியதன் உச்ச வெளிப்பாடாகப் பிரதிபலிக்கும்.

"கண்ட நாள் முதல்" படம் ஒரு அருமையான பொழுது போக்கு என்ற ஒரு பார்வை இருக்க, இன்னொரு புறம் அழகான காதல் உளவியல் சார்ந்த படைப்பாக நோக்க வேண்டும். ஊடலின் ஒரு பரிமாணமாகவே வெளியிப்படுத்தப்பட்டிருக்கும்.

"கண்ட நாள் முதலாய்" பாடலைத் தவிர மீதி அனைத்தும் தாமரையின் வரிகள். அதில் "மேற்கே மேற்கே மேற்கே தான்" ஒரு அட்டகாச இசைப் படைப்பு. இதுவும் யுவன் தானா கொடுத்தது என்ற இன்ப அதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் கேட்டு ரசிக்கும் போதும்.

சங்கர் மகாதேவன் பாடிய பாடல்களைக் கேட்கும் போது ஏதோ முழுப்பாட்டையும் ஒரே மூச்சில் பாடித் தள்ளி விட்டுக் கடப்பதைப் போல இருக்கும்.

"கோபம் கொள்ளும் நேரம் 

வானம் எல்லாம் மேகம் 

காணாமலே போகும் ஒரே நிலா"

என்று முதல் சரணத்தில் குரல் வைக்கும் தறுவாயில் "ஓஓஓ" என்ற ஒரு அழுத்தம் கொடுத்துத் தொடங்குவதும் "காணாமலே" என்ற சொல்லை சங்கர் மகாதேவன் ஸ்டைலில் எப்படி நிமிர்த்திச் சுழட்டி அடிக்கிறார் என்ற நுணுக்கத்தையும் அனுபவிக்கலாம்.

அது போல் "நீதானென்று பார்த்தேனடி" யில் கொடுக்கும் விறைப்பும் "சகி" இல் தரும் நெகிழ்வும் அனுபவிக்க வேண்டியவை.

சங்கர் மகாதேவன் குரலுக்கு ஒரு படி தாழ்வாகப் பறக்கும் சாதனா சர்க்கத்தின் குரல் பாடல் உருவாக்கத்தின் சிறப்பு வெளிப்பாடு.

"லை லை லை லை லைலா லஹிலா லஹி லஹி லே" என்ற சங்கதி சங்கர் மகாதேவனுக்காகவே நெய்யப்பட்ட சாதகம்.


சுருக்கமாகச் சொன்னால் "மேற்கே மேற்கே மேற்கே தான்" பாடல் ஒரு மகுடிப் பாட்டு. அது கேட்டால் ஆடிக் கொண்டே இன்பமாக அலையும் மனசு.


தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசை புதுப் புதுக் குரல்களை அரவணைத்த போது சங்கர் மகாதேவனையும் இறக்குமதி செய்யதது. ஆனால் அந்தக் குரல் பத்தோடு பதினொன்று அல்ல என்பதை நிரூபிக்குமாற் போல சங்கர் மகாதேவனை விட்டால் இந்தப் பாடலுக்கு இவ்வளவு மகத்துவம் செய்து விட முடியாது என்று மறு பரிசீலனை செய்ய முடியாத தெரிவுகளாக ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் கொடுத்தார்கள். இன்றைக்கு இயங்கும் இளம் பாடகர்கள் பலர் சங்கர் மகாதேவனின் பாணியை அடியொற்றுவதையும் கவனிக்க முடியும்.

சங்கர் மகாதேவனின் குரல் அடித் தொண்டையாப் கத்தும் கர்ண கடூரமல்ல. அது ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடு. "உப்பும் கருவாடு ஊற வச்ச சோறு" சந்தோஷத்தில் பீறிடும் போதும் "தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே" என்று சோகத்தில் கனன்று வெளிப்படும் போதும் அந்த ஆர்ப்பரிப்பு இருக்கும். சுறுசுறுப்பாய் இருப்பவனுக்குப் பக்கத்தில் இருந்தாலே அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளுமாற் போல இருக்கும் சங்கர் மகாதேவன் பாடல்களைக் கேட்கும் போது.

"பஞ்சவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு" என்னும் அந்தக் கனிவான குரல் கல்லையும் கரைத்து விடும்.

ரிதம் படம் வெளிவந்த போது சங்கர் மகாதேவனை அதிகம் கண்ட பரிச்சயம் இல்லாத ரசிகர்கள் சூழ சிட்னியில் ஒரு திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தேன். "தனியே தன்னந்தனியே" பாடலுக்கு சங்கர் மகாதேவன் ஆடுவதைப் பார்த்து ஆளை அடையாளம் தெரியாது உருவ அமைப்பை வைத்துக் கூச்சலிட்டுக் கலாட்டா பண்ணினார்கள்.

எனக்கோ அந்த நேரம் கடுப்பாக இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிட்னியில் நிகழ்ந்த சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் கூடிய அந்த ஆயிரக்கணக்கானவர்களில் அவர் பாடி ஆடியதைக் கை தட்டி ரசித்தவர்களில் அவர்களும் இருந்திருக்கக் கூடும். இதுதான் உலகம் 😀

ஆனானப்பட்ட மலையாள தேசத்தின் கதவை ஒரு பக்கம் ஶ்ரேஷா கோசலும் இன்னொரு பக்கம் சங்கர் மகாதேவனுமாக அகலத் திறந்து வெற்றி கண்டார்கள். "பிச்ச வச்ச நாள் முதல்" பாடலுக்கு சேட்டன்கள் மாதக் கணக்கில் கிறங்கியிருக்கிறார்கள், இன்னும் கூட. இது மாதிரி நிறையப் பாட்டுகள்.

சங்கர் மகாதேவன் தென்னிந்திய மொழிகளில் வெற்றி கண்ட பாடகர் ஹிந்தியில் வெற்றி பெற்ற கூட்டணி இசையமைப்பாளர்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

சங்கர் மகாதேவன்.

https://youtu.be/EuJ-P3FZzHg


0 comments: