Pages

Saturday, March 20, 2021

ஹரிச்சரண் ❤️


"ஹே...... உன்னுடைய நெற்றி
உன்னைப் பற்றிக் கூறுதே.....
உள்ளிருக்கும் பொட்டு
உந்தன் குட்டு சொல்லுதே...."

இந்த இடத்தில் இருந்து ரசித்து விட்டு அப்படியே முன்னோக்கிப் போய்
“அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா”


பாடலை ரசிப்பேன்.

இம்மாதிரி முன் சரணத்தில் ஒரு ஜாலம் காட்டுவதில் யுவன் சமர்த்தர். பல்லவி சாதாரணமாக இருக்கும் ஆனால் சரணத்தில் ஒரு அசாதாரண சங்கதி மிளிரும்.
எப்படி தேவாவுக்கு ஒரு ஹரிஹரன் வாய்த்தாரோ அது போல யுவன் ஷங்கர் ராஜா சக ஹரிச்சரண் கூட்டில் ஒரு புதுப் பொலிவு மிளிரும்.
“ராசாத்தி போல அவ என்னைத் தேடி வருவா”

“வா வா நிலவைப் புடிச்சுத் தரவா”

“வானத்தையும் மேகத்தையும் ஒடைச்சுக்கிட்டேன்”

போன்ற பாடல்கள் எல்லாம் “துளித் துளி மழையாய் வந்தாளே”, யார் இந்தப் பெண்தான்” போன்ற அதி உச்சம் பெற்ற பிரபல பாடல்களுக்குச் சற்றும் சளைக்காதவை.
புதிய தலைமுறைப் பாடகர்களுள் ஹரிச்சரண் ஒரு குறுகிய காலத்தில் ரசிகர்களை ஈர்த்தவர். ஆனால் எனக்கு அவரின் முதல் பாடல் “உனக்கென இருப்பேன்” பாடலைக் கேட்டாலேயே அந்த நாளே இருண்டு விட்டதொரு பிரமை எழும். அதனால் அதைக் கேட்காமல் தவிர்த்து விடுவேன். உண்மையில் அங்கே தான் ஹரிச்சரணின் சக்தி இருக்கிறது. ஒரு பெரும் சோகக் குவியலை அப்படியே தூக்கி நம்மேல் போட்டு விடுவார்.
“கண்மணியே..... கண்மணியே....
அழுவதேன்…….”
என்று அந்தப் பாடலில் ஈனஸ்வரத்தில் பாடும் போது உடம்பெல்லாம் சுடும் கொள்ளிக் கட்டையால் தேய்த்தது போல இருக்கும். ஒரு பாடலின் சூழலாகவே குறித்த பாடகன் உறையும் தருணம் அது.
ஹரிச்சரண் நல்ல பாடகர் என்பதைத் தாண்டி நல்லதொரு ரசிகர். அதனால் தான் இளையராஜா காலத்துப் பாடல்களை அவர் மீள மீட்டும் போதும் சேதாரமில்லாது கொடுப்பார். முன்பு அவர் பாடிய “தானா வந்த சந்தனமே” பாடல் குறித்து நான் எழுதிய ரசனைப் பகிர்வு.
இசைஞானி இளையராஜாவின் “சித்திரையில் நிலாச்சோறு” வெளிவந்த காலத்தில் அதிகம் சீண்டாமல் ஆனால் பல வருடங்களுக்குப் பின் எதேச்சையாகக் கேட்ட
“கல்லால செஞ்சு வச்ச சாமி”
பாடலோடே அந்த நாள் முழுதும் குளிப்பாட்டியதில் எல்லாம் ஹரிச்சரணும் பங்கு போடுகின்றார்.
இவை எல்லாவற்றையும் தாண்டி, ஹரிச்சரண் என்ற பாடகரின் ஒரேயொரு பாட்டோடு மட்டும் வழ வேண்டும் என்ற கொடுப்பினை வந்தால் நான் தேர்ந்தெடுப்பது
“எப்போ வருவாரோ.....
எப்போ வருவாரோ......”

அற்ப சுக வாழ்வில்
ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தைக் காணேன்
பொன்னம்பலவாணன்
பாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்....
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே...
காதல் கொண்டேன்
வெளிப்படக் காணேனே……
எப்போது கேட்டாலும் இனம் புரியாதவொரு நோவை மனதில் எழுப்பும், இன்பமான வலி அது. கதைச் சூழலில் அந்தப் பெண்ணின் உணர்வுகளைச் சரியாக மொழி பெயர்த்துத் தன் பாட்டுக் குரலில் ஹரிச்சரண் கொடுக்கும் பாங்குக்கே அவர் இருக்கும் திசை பார்த்துக் கும்பிடலாம்.
இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்
ஹரிச்சரண்.
புகைப்படம் நன்றி : விக்கிப்பீடியா

0 comments: