Pages

Tuesday, December 9, 2014

"மனசுக்கேத்த மகராசா"வில் இருந்து "தேனிசைத்தென்றல்" தேவா


"மனசுக்கேத்த மகராசா" ராமராஜன் இயக்குநர்  பணியிலிருந்து நாயகனாக அடுத்த கட்டத்துக்குப் போன போது வந்த முக்கிய படமாக இது விளங்கியது.
அப்போது வாய்ப்புத் தேடி அலைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கும் வாழ்க்கைப் பாதையைக் காட்டியது இது.

"மனதோடு மனோ" ஜெயா டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டபோது இந்தப் படத்துக்கு வாய்ப்புக் கிட்டிய அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தார். ஆட்டோ பிடித்து ஆர்மோனியப் பெட்டியையும் போட்டுக் கொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போன போது நடு வழியில் வண்டி நின்று விடவே வாத்தியக் கருவியைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தும், ஓடியும் போய் தயாரிப்பாளரைச் சந்தித்ததாகவும், அந்த வட இந்தியத் தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைக்க ஹிந்திப் பாடலை எல்லாம் பாடிக் காட்டியதாகவும் சொல்லியிருந்தார்.

ராமராஜனைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவின் இசையில் படங்கள் ஆக்கிரமித்த போதும் எஸ்.ஏ.ராஜ்குமார், கங்கை அமரன், தேவா போன்றோர் இசையிலும் நடித்திருக்கிறார். இவர்களில் தேவாவின் இசையில் மனசுக்கேத்த் மகராசா படமே மிகவும் பிரபல்யத்தை அப்போது கொடுத்தது. கிராமிய மெட்டில் அமைந்த பாடல்களில் "ஆறெங்கும் தானுறங்க" (எஸ்.ஜானகி, மனோ குரல்களில்) ஆறு கடல் மீனுறங்க" பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடல் வந்த போது அப்போது ஒன்றாகச் சேர்ந்து பாட்டுக் கேட்கும் நமது ஊர் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருந்தோம். அதே போல சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே "பாடலும் கூட.

மனசுக்கேத்த மகராசா படத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தேவாவுக்குக் கிட்டிய ஆரம்பகால வாய்ப்பிலேயே கே.ஜே.ஜேசுதாஸ் நீங்கலாக பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், உமா ரமணன், சித்ரா, மனோ, என்று 80 களில் கொடிகட்டிப் பறந்த அனைத்துப் பாடகர்களும் இந்தப் படத்தில் பாடியிருந்தார்கள். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது மாதிரியான வாய்ப்பு எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை. இது மாதிரி வாய்ப்பே இனி வராதே.

"மனசுக்கேத்த மகராசா" படத்தின் கூட்டணி நாயகன் ராமராஜன், இயக்குநர் 
தீனதயாள், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் காளிதாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொடுத்த ஒரு அட்டகாச இசை விருந்து "மண்ணுக்கேத்த மைந்தன்" திரைப்படம் வாயிலாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற "சிந்தாமணிக்குயிலே" (மனோ, எஸ்.ஜானகி), ஏ.ஆர்.ஷேக் மொஹமெட் பாடிய "ஓடுகிற வண்டி ஓட", "கண்ணில் ஆடும் நிலவே" (எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா) போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் தனது பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அறிமுகப்படுத்தியிருந்தார். "மண்ணுக்கேத்த மைந்தன்" படத்தின் பாடல்கள் "வைகாசி பொறந்தாச்சு" படத்தின் ஒலிநாடாவில் வெளி வந்து அப்போது புகழ்பெற்றாலும் படம் வெளிவந்த சுவடே இல்லை. 

ராமராஜனுக்கும் பின்னாளில் தேவாவோடு இணைந்து மனசுக்கேத்த மகராசா அளவுக்கு சிறப்பான பாடல் கூட்டணியாக அமையவில்லை.

சினிமாப் பாடல்களைப் பாடிப் பழகிய மெல்லிசைக் குழுவினர் ஒரு கட்டத்தில் தாமாகவே இசையமைக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். தேனிசைத் தென்றல் தேவா கூட அப்படித்தான். போஸ் (சந்திரபோஸ்) - தேவா இரட்டையர்களாக மெல்லிசை மேடைகளில் கிட்டிய பயிற்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்)  அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. தேவாவின் இசை நேர்மை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் "மனசுக்கேத்த மகராசா" வில் தொடங்கி "வைகாசி பொறந்தாச்சு" தந்த நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு அவர் தனித்துவமாகக் கொடுத்த பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உணமையில் இந்தப் பதிவு எழுத முன்னர் மனசுக்கேத்த மகராசா படத்தில் இருந்து "முகமொரு நிலா" என்ற பாடலைப் பற்றித் தான் எழுதுவதாக இருந்தது. அந்தப் பாடலைக் கேட்டாலே போதும் தேவா தனக்கான வெற்றிப் பாதையை எவ்வளவு சிறப்பாகப் போட்டிருக்கிறார் என்பதை. மெட்டமைத்ததில் இருந்து வாத்தியக் கருவிகளின் பயன்பாடு வரை சிறப்பாக அமைந்திருக்கும்.
இதோ அந்தப் பாடல் 



1 comments:

தனிமரம் said...

அருமையான பாடல்கள் மனசுக்குகேத்த மகராஜா பாடல்கள்.மண்ணுக்கேத்த மைந்தன் படத்தில் இன்றைய கிருஸ்னராஜ் பாடிய அம்மா பாடல் இன்னும் மறக்க முடியாது இலங்கை வானொலியில் அதிகம் ஒலித்தது.