Pages

Tuesday, December 2, 2014

பாவலரு பாட்டு


வழக்கமாக நடத்தும் ராஜா இசையில் கோரஸ் பாடல்கள் போட்டிக்காக இரு மாதங்களுக்கு முன்னர் எடுத்து வைத்த பாட்டு "பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு". ஆனால் ஒவ்வொரு வாரமும் வேறு பாடல்களை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது இந்தப் பாடல் ஒலித்துணுக்கு மட்டும் அமைதியாக இருந்தது. ஏனோ திடீரென்று நேற்றைய போட்டிக்காக இந்தப் பாடலைப் பகிர வேண்டும் என்று நினைத்துப் போட்டியிலும் பகிர்ந்து கொண்டேன்.

சில மணி நேரங்கள் கழித்து பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் பாவலர் சிவாவின் ஃபேஸ்புக்கில் இன்று டிசெம்பர் 2 ஆம் திகதி பாவலர் வரதராஜனின் நினைவு தினம் என்று பகிர்ந்தபோது எனது எண்ண அலையின் ஒற்றுமையை நினைத்துக் கொண்டேன். இது போலவே ஏதாவது ஒரு பாடலை நினைக்கும் போது அதைப் பற்றி யாராவது பேசுவதோ அல்லது வானொலி வழியாக எதேச்சையாக அதே பாடல் அந்த நேரம் ஒலிபரப்பப்படும் அதிசயமும் நிகழ்வதுண்டு. இம்மாதிரி ஒத்த உணர்வு உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் சகோதரர் கங்கை அமரனில் இருந்து இன்றைய தலைமுறை வரை ஏதோவொரு வகையில் சினிமாவோடு சம்பந்தப்பட்ட துறையில் இயங்குகிறார்கள். விதிவிலக்காக இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் இந்தத் துறையில் நேரடியாக இயங்காத குறையைப் பல வடிவங்களில் தீர்த்து அவரை நினைப்பூட்டுமாற் போலச் சில காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.

அவற்ற்றில் ஒன்று "பாவலர் கிரியேஷன்ஸ்" இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக இளையராஜாவின் இன்னொரு சகோதரர் மறைந்த ஆர்.டி பாஸ்கர் அவர்களே பெரும்பாலும் தயாரிப்பாளராக இயங்கிய படங்கள் வந்திருக்கின்றன. 
பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் இன்னும் ஒரு படி சுவை கூடிய பாடல்கள் இருப்பது போலத் தோன்றும். குறிப்பாக அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 

பாவலர் வரதராஜன் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். பிரச்சார மேடைகளே இசைஞானியின் ஊற்றுக் கண்ணாய் அமைந்தவை. பாவலர் வரதராசன் கவிதைகள் கவிதா வெளியீடாக வந்திருக்கிறது. அதைவிட இன்னொரு சுவாரஸ்யம் ஒன்றுள்ளது.
"இதயக் கோவில்" திரைப்படத்தில் வெளிவந்த "வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்" என்ற பாடல் அவரின் கவிதை ஒன்றை அடியொற்றியே படத்துக்காகச் சிற்சில மாற்றங்களோடு திரைப்பாடல் ஆனது. இந்த மூலக் கவிதையை இளையராஜாவின் நூலொன்றில் (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது?) வாசித்த ஞாபகமுண்டு.

கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பிடித்த "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடல் பாவலர் வரதராஜன் பெயரிலேயே வெளியானது. அந்தக் குறிப்பு எல்.பி ரெக்கார்ட்டிலும் பதிவாகியுள்ளது. ஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் போது கங்கை அமரன் முன்னிலையில், இந்தப் பாடலை எழுதியது கங்கை அமரன் என்றும் பாவலர் வரதராஜன் அவர்களைப் பெருமைப்படுத்தவே அவர் பெயர் உபயோகிக்கப்பட்டது என்றும் சொன்னார்.

பாவலர் வரதராஜனின் மகன்களில் எனக்கு பல்லாண்டுகளுக்கு முன்பே தன் இசையால் ஆட்கொண்ட இளையகங்கையைத் தான் முதலில் தெரியவந்தது. "ஆகாயம் கொண்டாடும் பூபாளமே" என்ற அற்புதமான பாடலை "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" படத்துக்காக இசையமைத்தவர். இளைய கங்கை குறித்துப் பிறிதொரு சமயம் தனிப்பதிவாகத் தரவுள்ளேன். இன்னொரு புதல்வர் பாவலர் சிவா இசைக்கலைஞராகவும், முக நூல் நட்பிலும் இருக்கிறார்.

பாவலர் வரதராசன் அவர்களின் பாடல்கள் இன்னும் பல திரைப்படப் பாடல்களாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். குறிப்பாக அவரின் எழுச்சிக் கவிதைகள்.

"எலே படிக்கிறதெல்லாம் பாட்டாயிருமாய்யா பாவலர் வரதராசன் பாட்டைக் கேட்டாக் காட்டுப் புள்ளைக்குக் கூடப் புத்தி வந்திரும்" என்ற பிரபலமான வசனம் "என் ராசாவின் மனசிலே" படத்துக்காக ராஜ்கிரண் குரலில் வந்தது ஞாபகமிருக்கும்.
"சின்னப் பசங்க நாங்க" படத்தில் பாவலர் வரதராசன் மன்றம் என்ற ஒன்றை நாயகன் முரளி சக நண்பர்களோடு நடத்துவதுபோலக் காட்சி இருக்கும்.

 பாவலர் வரதராஜன் என்ற பெயரை 90 களில் வெளிவந்த கோஷ்டி கானங்களில் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். அதில் முத்தாய்ப்பாக அமைவது தான் இந்த "பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு"
அடடா ஒரு பாட்டு என்னை எங்கே எல்லாம் கூட்டிக் கொண்டு போய் விட்டது :-) சரி மறக்காம இந்தப் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்.
http://www.youtube.com/watch?v=iFqDmdwjmxE&sns=em

புகைப்படம் நன்றி : மாலை மலர்

0 comments: