Pages

Tuesday, September 24, 2013

பாடல் தந்த சுகம் : ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி

வருஷம் 16 வந்த நேரம் பதின்மவயதின் உச்சத்தில் அந்தப் பருவத்துக்கே உரித்தான காதல்  கிறுக்கேறி உச்சத்தில் இருந்தது. வருஷம் 16 நடிகை குஷ்புவின் இரண்டாவது படமாக, அவருக்கு ஒரு திருப்புமுனையாக வந்தபடமென்பதால் ராதிகா என்ற அந்த அத்தைப்பொண்ணையே டியூசன் செண்டரில் பெண்கள் பக்கம் இருந்த "அவளின்" ஜாடையாக மனம் கன்னாபின்னாவென்று கற்பனையெல்லாம் செய்தது. அவளின் ஜடை வேறு இரட்டைப்பின்னல். கூடப்படித்த நண்பர்களை சார்லி வகையறாவுக்குள் போட்டதை அறிந்தால் அடிக்க வருவாங்கள்.

இந்தப் படம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் கடைசியாக ஓடிய படம். பரீட்சை எல்லாம் முடிந்து கணக்காக இந்தப் படத்தின் கடைசி நாள் காட்சி ஓடவும் நண்பர்களுடன் லுமாலா சைக்கிள் புரவியில் யாழ் நகருக்குப் போய்ப் பார்த்தோம். அடுத்த படம் சம்சாரம் அது மின்சாரம் என்று முன்னோட்டம் காட்டினார்கள், அடுத்த நாளே போர் சூடுபிடித்து மின்சாரமும் இல்லாமல் போய் கொஞ்சக் காலத்தில் வெலிங்டன் தியேட்டரே வருஷம் 16 படத்தின் இறுதிக்காட்சியில் வரும் இடிபாட்டு பங்களாவின் நிலையில் குண்டடி பட்டு இப்போது அந்தச் சுவடே இல்லாமல் இருக்கிறது வெலிங்டன் தியேட்டர் இருந்த நிலம்.

வருஷம் 16 படத்தை இப்போதும் ஏதாவது தொலைக்காட்சி ஒளிபரப்பினால் அந்த டியூசன் காலத்துக்குத் தாவிவிடும் மனது. இயக்குனர் பாசில் - இசைஞானி இளையராஜா சேர்ந்த கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும் ஒவ்வொரு பாடல்களும் முத்துக்கள். அப்போது வந்த பாசில் படங்களில் ஜேசுதாஸ் ராசியாக ஒரு பாடலையாவது அவருக்காக எழுதி வைத்துவிடுவார்கள். இந்தப் படத்தின் பாடல்களைப் பொறுத்தவரை "ஏ அய்யாசாமி நீ ஆளைக்காமி" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா கோஷ்டியினர் பாடக் கேட்கும் போது அந்தப் பாடலில் கொடுத்த புதுமையே முன்னின்று என்னைக் ரசிக்க வைக்கும்.

தமிழ்த்திரையிசையில் கோஷ்டி கானங்களுக்கா பஞ்சம்? வாராய் என் தோழி வாராயோ பாடலில் இருந்து எண்ணற்ற பாடல்களை அள்ளிக்குவிக்கலாம். இலங்கை வானொலியில் அப்போது "கோஷ்டி கானம்" எனறொரு தனி நிகழ்ச்சியே இருந்தது. அந்த வரிசையில் வரும் இந்தப் பாடலில் அப்படி என்ன புதுமை?

நாயகனைக் கலாய்க்கும் நண்பர்களின் சேர்ந்திசைக் குரலில் ஒலிக்க ஆரம்பிக்கும் இந்தப் பாட்டு அப்படியே அந்தச் சந்தத்தைப் பட்டென முறிக்காமல் காதலன் காதலியின் ஜோடிப்பாடலாக மெல்ல மாறுகிறது அங்கேயிருந்து மெல்ல தோழியர் கூட்டம் "அடி சின்னப்பொண்ணு நட்டுவச்ச செங்கழனி நாத்துதான் அதை சேர்த்தணைக்க காத்திருக்கு தெக்குதிசை காத்துதான்" எனறொரு சின்னதொரு ஆலாபனைக்குள் போய்விட்டு மீண்டும் காதல் ஜோடியின் தளத்துக்குத் தாவுகின்றது. இடையே இன்னொரு சங்கதி இரண்டாவது சரணத்த்தின் ஆரம்பத்திலே இப்படியாக "அத்தமக ராசாத்திக்கு நெத்திலி மீனு வேணாமா" என்று ஆண்குரல்களின் ஆலாபனையிலிருந்து மெல்ல மீண்டும் காதல் ஜோடியின் பாட்டுக்கு எனத் தாவுகின்றது. இந்தப் பாடலைப் பிரித்துப் பார்த்தால் இசையைத் தவிர, ஆண்குரல்களின் கூட்டு, பெண்குரல்களின் கூட்டு, காதல் ஜோடியின் பாட்டு இந்த மூன்றுமே வெவ்வேறு மெட்டில் இருக்கும் ஆனால் அவற்றை இணைத்து ஒரு பாடலாக இணைத்துக் கேட்கும்போது அந்த வித்தியாசமே தொனிக்காது இனிக்கும். ஒரு கோஷ்டி கானத்திலும் இவ்வளவு மினக்கெடலா ஆகா அற்புதம் என மனம் சொல்லும்.

என்பதுகளிலே ராஜாவோடு பயணப்பட்ட இன்ன பிற இசையமைப்பாளர்களின் பாடல்களின் மெட்டில் இருக்கும் இனிமை வாத்தியகோர்வையில் இருக்காது. பல்லவியில் இருந்து சரணத்துக்குப் போகும்போது அதல பாதாளத்தில் ட்ரம்ஸை உருட்டியது போல இசை, சம்பந்தாசம்பந்தமில்லாமல் வரும் சேர்ந்திசைக் குரல்கள் என்று குழப்பக் கோர்வையாக இருக்கும். இங்கே தான் ராஜா ஜெயித்ததற்கான இன்னொரு சூத்திரமும் விளங்கும். நேர்த்தியாக அணி செய்யும் வாத்தியக் கோர்வையும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் தாவும் போது ரிலே ஓட்டக்காரரின் கையில் இருக்கும் கட்டையை இலாவகமாக வாங்கிக் கொண்டே இலக்கை நோக்கிச் செல்லும் வெற்றியாளன் போலப் பயணப்படும் அந்த இசை.



3 comments:

ஸ்ரீமதன் said...

அடி சின்னப்பொண்ணு நட்டுவச்ச செங்கழனி நாத்துதான் -- இந்த வரிகளுக்கு குஷ்பு ஆடும் மிக இயல்பான நடனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.அருமையான பாடல்.

ஸ்ரீமதன் said...

//அடி சின்னப்பொண்ணு நட்டுவச்ச செங்கழனி நாத்துதான் // --இந்த வரிகளுக்கு குஷ்பு ஆடும் மிக இயல்பான நடனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.அருமையான பாடல்.

S Maharajan said...

மலரும் நினைவுகள் தல!
என் நினைவும் அந்த ராதிகாவை தேடி...........