Pages

Monday, September 16, 2013

பாடல் தந்த சுகம் : ஞான் ஞான் பாடணும்

எழுபதுகளின் இறுதிக்காற்பகுதியில் இருந்து எண்பதுகளின் முற்பகுதிவரை தமிழ் சினிமாவில் தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்தவர்களில் நடிகை சுஜாதாவும் பாடகி ஜென்ஸியும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இருவருமே மலையாளத்திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் இருவரையும் சுவீகரித்துத் தக்க அங்கீகாரத்தைத் கொடுத்ததென்னவோ தமிழ்த்திரையுலகம் தான். அவள் ஒரு தொடர்கதை மூலம் சுஜாதாவும் திரிபுர சுந்தரி மூலம் ஜென்ஸியுமாக தமிழ்த்திரையுலகில் காலடியெடுத்து வைத்தார்கள். இருவரையும் இணைத்த புள்ளியாக "பூந்தளிர்" என்ற படத்தில் வரும் "ஞான் ஞான் பாடணும்" பாடலைச் சொல்லலாம். இதற்கு முன்போ பின்போ சுஜாதாவுக்காக ஜென்ஸி பாடியதாக நினைவிலில்லை. இந்த விசேஷம் மட்டுமல்ல பாடல் முழுதுமே மலையாள வரிகளைத் தாங்கி வந்த சிறப்பையும் கொண்டிருக்கிறது இந்தப் பாட்டு.

தமிழ் சினிமாவில் வேற்று மொழிப்பாடல்கள் என்ற ஒரு தொகுப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நிகழ்ச்சிக்காகப் படைத்திருந்தேன். ஜெமினி தயாரித்து நடித்த கே.பாலசந்தர் இயக்கிய நான் அவனில்லை படத்தில் வரும் "மந்தார மலரே " தவிர மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" பாடல்களைத் தவிர " நெஞ்சினிலே நெஞ்சினிலே" (உயிரே) , "லாலா நந்தலாலா" ( நரசிம்மா), திருவோணம் திரு நாளும் (கும்பகோணம் கோபாலு) பாடல்களிலும் ஒரு சில மலையாள வரிகளை உள்ளடக்கி வந்திருக்கின்றன.

இசைஞானி இளையராஜாவின் இசையில் "பூந்தளிர்" படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களையும் தனித்தனியே சிலாகிக்கும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தவை. "ஞான் ஞான் பாடணும்" பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார்.

இளையராஜாவின் ஆரம்பகாலப்படங்களில் கணிசமான பங்களிப்பை எம்.ஜி.வல்லபன் வழங்கியிருக்கிறார். எம்.ஜி.வல்லபனே இயக்கிய தைப்பொங்கல் போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் இவர் கொடுத்த பாடல்கள் கவிச்சிறப்பு மிக்கவை. குறிப்பாக இங்கே நான் தரும் பாடலை ராஜா நினைத்தால் ஒரு மலையாளக் கவிஞரை எழுத வைத்திருக்கலாம். எம்.ஜி.வல்லபனுக்கான விசேட அழைப்புக்குக் கண்டிப்பாகக் காரணமிருக்கும். அந்த வாய்ப்பையும் நிறைவாகவே வழங்கியிருக்கிறார் இவர்.

"மரத்தைச் சுற்றிப் பாடும்" மரபோடு சரி சமமாகப் பயணப்பட்டது காதலியோடு "ஒளித்துப் பிடித்து தேடி விளையாடும்" பாடல்கள். குறிப்பாக இந்தப் பாடலை ஒத்த பாடல்களாக சம காலத்தில் வந்த "கண்டேன் எங்கும்" (காற்றினிலே வரும் கீதம்), மற்றும் "தெய்வீக ராகம் திகட்டாத பாடல்" (உல்லாசப் பறவைகள்) வகையறாவில் அடக்கக்கூடியது இந்தப் பாட்டு.

ஜென்ஸிக்குக் கிடைத்த இந்த இரண்டு பாடல்களில் "தெய்வீக ராகம் திகட்டாத பாடல்" இன்னொரு திசையில் உச்ச ஸ்தாயியில் பயணப்படும் போது இந்தப் பாடல் அடக்கமாக வந்து மனதைக் கவர்கின்றது. இந்த இரண்டு பாடல்களையும் இன்னொருவருக்குப் பொருத்திப் பார்க்க முடியுமென்றால் அவர் ஸ்வர்ணலதா ஒருவர் தான். அதனால் தான் முன்னொரு முறை ஜென்ஸியின் மறுபிறவி ஸ்வர்ணலதா என்றேன். ஓணம் பண்டிகை நாளில் இதம் தரும் இந்தப் பாடலைக் கேட்பதே சுகம் தரும் அனுபவம்.7 comments:

மாதேவி said...

ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

பலபாடல்களை அறியத் தந்துள்ளீர்கள்.

தனிமரம் said...

பிடித்த பாடல் பகிர்வுக்கு நன்றி !

சுசி said...

இலங்கை வானொலியில கேட்ட நினைவு.. பிறகு இப்பதான் கேக்கிறன்.. பகிர்வுக்கு நன்றிகள் :))

கானா பிரபா said...

மாதேவி உங்களுக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள்

தனிமரம்

வருகைக்கு நன்றி சகோதரா

சுசி

கேளுங்கோ கேளுங்கோ :-)

nagoreismail said...

சார், ஒரு கேள்வி, காலங்கள் புது கோலங்கள் என தொடங்கும் பாடல் எந்த திரையில் இடம் பெற்றுள்ளது என்ற தகவல் தர இயலுமா? நன்றிகள்...

கானா பிரபா said...

வணக்கம் நண்பா

நீங்கள் கேட்ட காலங்கள் மழைக்காலங்கள் பாடல் இதயத்தில் ஓர் இடம் படத்தில் வந்தது https://www.youtube.com/watch?v=-tntUwzGlnY

கோமதி அரசு said...

இதம் தரும் இந்தப் பாடலைக் கேட்பதே சுகம் தரும் அனுபவம்//
உண்மை. அருமையான பாடல் பகிர்வு.
நன்றி..