Pages

Tuesday, September 3, 2013

பாடல் தந்த சுகம் : "வீரபாண்டிக் கோட்டையிலே"

சமீபத்தில் "திருடா திருடா" பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இப்போது வரும் எந்த வெற்றிப்படங்களுக்கும் குறைவில்லாத சுவாரஸ்யமான பொழுதுபோக்குச் சித்திரமாக அது இருந்தது. நாயகி ஹீராவுக்கு சுஹாசினி கொடுத்த பின்னணிக் குரல் உறுத்தல் தவிர. மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் கைகோர்த்த முதல் தோல்விப்படம் ஆனாலும் ரஹ்மானைப் பொறுத்தவரை நின்று விளையாடியிருக்கிறார். அந்தப் படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

சாகுல் ஹமீது பாட, கோரஸ் குரல்கள் மட்டுமே பின்னணியில் வரும் "ராசாத்தி என் உசிரு" பாட்டும், அந்தக் காலத்தில் கொழும்பின் பண்பலைவரிசை முளைவிட்ட காலத்தில் FM 99 ஒலிபரப்பிய "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" அனுபமா பாடிய "கொஞ்சம் நிலவு", "புத்தம் புது பூமி வேண்டும்" இதையெல்லாம் கடந்து "தீ தீ தித்திக்கும் தீ" பாட்டுத்தான் என்னை முதலில் ஈர்த்தது. ஒரு மேடையில் சீனப்பெண் ஒருத்தி இந்தப் பாடலைப் பாட ரஹ்மானும் மெய்மறந்து ரசித்த காட்சி அழகு.

திருடா திருடா படப் பாடல்கள் வந்த நேரம் எமக்கோ ராஜா பாடல்கள் மீதான பாசப்போராட்டம். டியூசனுக்கு வரும் நண்பர் கூட்டத்தில் எம்மைச் சீண்டுவதற்காகவே ரஹ்மான் பாடல்களை வந்த கையோடு கேட்டு ரஹ்மானைப் பாரடா என்ன மாதிரி வெஸ்டேர்னில் கலக்கியிருக்கிறார் என்று வெறுப்பேற்றுவார்கள். ஆனால் ராஜா என்றால் எதிராளியின் சட்டையைப் பிடித்து உலுப்பி நியாயம் கேட்கும் சதீஷ் இருக்கும் வரை கவலை இல்லை நமக்கு. இதுக்கெல்லாம் பதிலடி கொடுக்க ஏதாவது பதிலைத் தயாரித்து வைத்திருப்பான். "வீரபாண்டிக் கோட்டையிலே" எண்ட பாட்டைக் கேட்டனியே? ரகுமான் கலக்கியிருக்கிறார் மச்சான்" சைக்கிளில் உடன் வந்த ரமேஷ் அப்பாவித்தனமாகப் பேசவும், காத்திருந்த கொக்காக "அடி ராக்கம்மா கையத்தட்டு" என்று பாடிக்கொண்டே "மச்சி உங்கட ஆள் எங்கை எடுத்திருக்கிறார் தெரியும் தானே" என்று பதிலுக்கு சதீஷ். அவனளவில் ரஹ்மானின் பாட்டை நல்லது என்று சொன்னவனுக்குச் சூடு போட்ட திருப்தி.

உண்மையில் "வீரபாண்டிக் கோட்டையிலே" பாடல் என்னை அவ்வளவுக்கு ஈர்க்கவில்லை அப்போது. ஆனால் இப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் போது, இன்னும் ஒருக்கா என்று மனசு கேட்கும். உன்னிமேனன் போன்ற மென்மையான குரல்வளம் மிக்க பாடகரை, மனோவோடு மல்லுக்கட்ட வைத்து இடையில் "ரெட்டைச் சூரியன் வருகுதம்மா ஒற்றைத் தாமரை கருகுதம்மா" என்று சித்ராவையும் இணைத்த இந்தப் பாடல் ரஹ்மானின் முத்திரைகளில் ஒன்று என்பதை இன்று உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்குன் சதீஷ் உடன் வாதிட என்னைத் தயார்படுத்தும் அளவுக்கு நான் தயார்.

பாடகர்களைக் கோர்த்துவிட்டு, வாத்தியங்களைப் பொருத்தமான இடங்களில் ஏற்றியும் இறக்கியும் நீட்டியும் குறுக்கியும் செய்யும் ஜாலங்களை உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். ரஹ்மான் தமிழ்ச்சூழலில் இருந்து அந்நியப்படாத காலத்தில் வைரமுத்துவின் தெள்ளு தமிழோடு துள்ளி விளையாடிய பாட்டு, காலம் கடந்து உருசிக்கும் திராட்சைப் பழரசத்துக்கு ஒப்பானது.

0 comments: