Pages

Tuesday, September 15, 2026

அன்னக்கிளியும் ஒருதலை ராகமும்

அன்னக்கிளியும் ஒருதலை ராகமும் இணைந்த பாடல் என்ற அறிவிப்போடு T.ராஜேந்தர் இசையில் இசைஞானி இளையராஜா பாடிய பாடல் ஒலிப்பதிவை இப்போது வெளியிட்டிருக்கிறார்.

இந்த ஒருதலை ராகம் படத்தின் பின்னால் இருக்கும் இரண்டு நிகழ்வுகள்.

படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதி, மெட்டுக் கொடுத்தவர் ராஜேந்தர் தான். ஆனால் அவர் முதல் படத்தில் அனுபவம் இன்மை காரணமாக அந்தப் பாடல்களுக்கு இசைக் கோப்பைக் கொடுத்தவர் (orchestra arrangement) தெலுங்கு இசையமைப்பாளரான A.A.ராஜ்.

தமிழ் சினிமாவில் இதுவொன்றும் புதிய காரியமில்லை. பின்னாளில் இசையமைக்க வந்த பாக்யராஜ் கூட ஒரு கூட்டம் இசை உதவியாளர்களை வைத்திருந்ததை நன்றியோடு இது நம்ம ஆளு படத்தின் எழுத்தோட்டத்திலேயே பதிவு செய்திருப்பார். அத்தோடு  பாக்யராஜ் படங்களில் இசைக் கோப்பைக் (orchestra arrangement) கவனித்தவர் மூத்த வாத்தியக் கலைஞர் தாஸ் டேனியல்.

சம்பத் - செல்வன் இரட்டையர்களிடம் இசை கற்று தன் மாமனார் அவிநாசி மணி தயாரிப்பில் நெத்தி அடி படத்தை இயக்கிய பாண்டியராஜன் இன்னொரு ரகம்.

வட நாட்டு இசையமைப்பாளர்கள் மனோஜ் & கியான் இரட்டையர்களை அந்த வட இந்திய இசை வாசம் வந்துவிடாமல் அற்புதமான பாடல்களை வாங்கி, இணை இசையமைப்பாளராக இருந்தவர் ஆபாவாணன்.

ஒரு தலை ராகம் படத்தின் கதை வசனகர்த்தா ராஜேந்தரை ஓரமாக நிறுத்தி, வசனப்பயிற்சி கொடுக்க மட்டும் பாவித்தார்கள். படத்தை இயக்கியவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளர்களான ராபர்ட் - ராஜசேகரன் இரட்டையர்கள்.

ஆனால் தயாரிப்பாளரான E.M.இப்ராஹிம் தானே படத்தின் இயக்குநராகவும் பெயரைப் போட்டுக் கொண்டார்.

"ஒருதலை ராகம்" படத்தை இதுவரை பார்க்கவே இல்லை என்று ராஜேந்தர் கூற்று உண்டு.

E.M.இப்ராஹிம் பின்னர் தயாரித்து, இயக்குநராகவும் (?)பெயர் போட்ட இன்னொரு படம் "தணியாத தாகம்". இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், சுபத்ரா ஜோடி. ஜெயம் ரவி மாமியார்.

"பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்"

https://www.youtube.com/watch?v=gdNEPiePGOA

"அவள் ஒரு மோகன ராகம்"

https://www.youtube.com/watch?v=GucvNqTQX-s

ஆகிய அற்புதமான பாடல்கள் A.A.ராஜ் இசையில் கொடுத்தார்.

பின்னர் A.A.ராஜ் இசையமைத்த இன்னொரு தமிழ்த் திரைப்படமான "உதயமாகிறது" படத்தில் "ஒரு தலை ராகம்" நாயகன் சங்கர் தான். ஆனால் படம் உதயமாகியும் பெரிய அளவில் பேசப்படாத படம் ஆகியது.

கானா பிரபா

15.09.2026