கல்யாண்குமாரை கன்னடத்தில் தேடிப் பிடித்து "நெஞ்சில் ஓர் ஆலயம்" படைத்த ஸ்ரீதர், விஷ்ணுவர்த்தனைத் தேடிப் பிடித்து "அலைகள்" படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுலகுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். நடிகை லட்சுமி இயக்கிய (கே.பாலசந்தர் மேற்பார்வையில்) 1980 ஆம் ஆண்டு குழந்தைகள் தின ஆண்டுப் படமாக "மழலைப்பட்டாளம்' வந்தபோது அதில் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லற்படும் கெளரி மனோகரி என்ற எழுத்தாளராக வந்து நகைச்சுவையான நடிப்பிலும் கலக்கினார். சமீபத்தில் கூட நண்பர்களோடு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன். "குர்பானி" ஹிந்தித்திரைப்படம் தமிழுக்கு பாலாஜி மூலம் "விடுதலை"யாக தயாரிக்கப்பட்ட போது அதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் இவர். இவரின் சிறந்ததொரு கன்னடத்திரைப்படம் (பெயர் ஞாபகம் வரவில்லை) தமிழில் சிவகுமார் நடித்த "பிரேம பாசம்" என்று மீள எடுக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் தமிழில் நேரடியாகப் படங்கள் செய்தது குறைவு என்றாலும் கன்னடத்தில் இருந்து இவரின் படங்கள் சில மொழி மாற்றம் கண்டிருக்கின்றன. மசாலாப்படங்கள் மட்டுமன்றி கதையம்சமுள்ள படங்களையும் தேடி எடுத்து நடித்தது இவரின் சிறப்பு.
தமிழில் வெற்றி கண்ட சில படங்களை கன்னடம் சுவீகரிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் "வானத்தைப் போல" படம் "எஜமான" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விஷ்ணுவர்த்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் கொடுத்த நம்ப முடியாத வெற்றியால் படத்தினைத் தயாரித்த விஷ்ணுவர்த்தனின் உறவினர் மாரடைப்பால் இறந்ததாக அப்போது பரபரப்பான செய்தி கூட வந்திருந்தது."எனக்கு அரசியல் பிடிக்காது, அரசியலுக்கும் என்னை பிடிக்காது" என்று சமீபத்தில் ஆனந்த விகடனில் தன் மனம் திறந்த பேட்டியை வழங்கியிருந்தார். சினிமா நடிகை பாரதியை கைப்பிடித்துக் கொண்டவர். நடிகராக மட்டுமன்றி பாடகராகத் திரைப்படங்களில் மட்டுமன்றி பக்தி ஆல்பங்களிலும் பாடியவர். தேசிய மட்டத்திலும் மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் "விஷ்ணுவர்த்தன்"

விஷ்ணுவர்த்தன் என்ற கலைஞனின் ஆத்மா சாந்தியடைவதாக
விஷ்ணுவர்த்தன் நடித்த சில படங்களில் இருந்து பாடல்கள்
அலைகள் படத்தில் இருந்து "பொன்னென்ன பூவென்ன கண்ணே"
மழலைப்பட்டாளம் திரைப்படம் தரும் "கெளரி மனோகரியைக் கண்டேன்"
விடுதலை படத்தில் தேன்றிய காதல் பாட்டு "நீலக்குயில்கள் ரெண்டு"
நிறைவாக விஷ்ணுவர்த்தன் குரலில் மலரும் "தூத்து அன்னா துன்னகே" "ஜிம்மி கள்ளு" படத்தில் இருந்து
விஷ்ணுவர்த்தன் படங்களில் குறிப்பிடத்த படமாக இருக்கும் Mutthina Hara படத்தில் இருந்து பாடல் ஒன்று காணொளியாக
உபகுறிப்புக்கள் உதவி: விஷ்ணுவர்த்தன் இணையம், விக்கிபீடியா
