Pages

Thursday, October 26, 2023

மனோவை ரசித்த காலங்கள் ❤️


வாழ்த்துச் சொல்லுங்கள்

வாழச் சொல்லுங்கள்

வண்ண நிலவை வாழ்த்தச் சொல்லுங்கள்

https://www.youtube.com/watch?v=JBNW0yl5HNY

இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்தக் கால ஆல் இந்தியா ரேடியோ காலத்துக்குப் பறந்து போய் யாழ்ப்பாணத்தில் உட்கார்ந்து விடுவேன். அப்பாவின் சன்யோ டேப் ரெக்கார்டரில் இருந்து சென்னை வானொலி நிலையத்தின் அந்த ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பத்தில் இருந்து இந்தப் பாட்டுக் கேட்குமாற்போல இருக்கும்.

இசைஞானி இளையராஜாவின் பொற்காலப் பாடகர்களில் ஒருவராக நமக்கெல்லாம் பாடகர் மனோ அறிமுகமான சமயம், நாமும் அதி தீவிரப் பாடல் விரும்பிகளாகக் களத்தில் இறங்கிய சூழல் அது.

அதனால் தான் இளையராஜாவைத் தாண்டி மனோ பாடிய பாடல்களைத் தேடித் தேடி ரசிக்க முடிந்தது. அதற்கு முதற்காரணமே மனோவை அறிமுகப்படுத்திய ராஜா தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இளையராஜா இசையில் மழை போலக் கொட்டிருந்த மனோ

சந்திரபோஸ் இசையில் முதன் முதலில் பாடிய “பூ பூப்போல் மனசிருக்கு” https://www.youtube.com/watch?v=DPcxnoJYfYQ

இடம் அறிந்து பொருத்தமாக ரஜினிக்குப் போனது. 

தெலுங்கில் ரஜினி படங்களுக்குக் குரல் கொடுப்பது மனோ தானே?

அது போல் கமல் படங்கள் என்றால் எங்கள் எஸ்பிபி.

“நான் பாடும் பாடல் நீயல்லவா

 நீயே என் வாழ்வின் நிழலல்லவா

 நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா?”

https://www.youtube.com/watch?v=pY7vMkmHDPY

தேடல் மிக்க இசை ரசிகர்கள் இசையமைப்பாளர் பாரபட்சமில்லாமல் கேட்டு ரசிப்பார்கள் என்பதற்கு இந்தப் பாடல் ஓர் உதாரணம்.

சிறைக்கதவுகள் படம் வந்ததும், ஜெயதேவ் என்ற இசையமைப்பாளர் இருந்ததும் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ இப்படி ஒரு அருமையான பாடலைக் கொடுக்காமல் போயிருந்தால்?

ஏழு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பாடலை நான் பகிர்ந்த போது அதற்கு வந்த பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள் ஏதோ புதையலைத் தேடிய புளகாங்கிதம் கொண்டிருக்கிறார்கள்.

அதுதான் மகத்தான இசையின் சக்தி.

“புள்ள புள்ள வயசுப்புள்ள

பூட்டிக்கிட்டேன் மனசுக்குள்ள”

https://www.youtube.com/watch?v=od-fQz12f44

பாடலாசிரியர் கங்கை அமரன் இசையில் எத்தனை தித்திக்கும் பாடலைப் பாடியவர், அதே கங்கை அமரன் இசையில் இந்தக் “கோயில் மணியோசை” தித்திப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது.

அம்மம்மா அசத்துறீங்களே

நீங்க ஆளையும் தான் மயக்குறீங்களே

https://www.youtube.com/watch?v=f8ZVjq4pQTQ

என் சித்தியின் மகன் சுதாவுக்குப் பிடித்த பாட்டு என்பதால் எனக்கும் பிடித்துப் போனது. சைக்கிள் டைனமோ சுத்திப் பாட்டுக் கேட்ட காலத்தில் வந்ததால் இந்தப் பாடலைக் கேட்டு ரசித்த “வலி” இன்னும் நெஞ்சில் நீங்காதிருக்கும்.

இசையமைப்பாளர் ராஜேஷ்கண்ணா “ நான் வளர்த்த பூவே” படத்துக்கு இசையமைத்த போது ஒவ்வொரு பிரபல பாடகர்களுக்கும் தனித்தனியாக இசை விருந்து கொடுத்திருப்பார் அப்படி மனோ கணக்கில் சேர்ந்த பாட்டு இது.

“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடல் பிறந்த போது மெல்லிசை மன்னரின் வாத்தியக்காரர்களாக இருந்தவர்கள், பின்னர் வாத்தியாரின் கலையுலக வாரிசுவின் “என் ரத்தத்தின் ரத்தமே” படத்தில் அதே பாடலை மீளுருவாக்கம் செய்தாலும் மிகவும் ரசிக்கும் படி கொடுத்தார்கள் அதுதான் சங்கர் – கணேஷ்.

அப்படி அவர்களின் இசையில் மனோ பாடியதில் எனக்குப் பிடித்த ஒன்று

“இந்த ராகமும்”

https://www.youtube.com/watch?v=GK--UVLYLpM

தன் குரு ஸ்தானத்தில் இருந்து கடவுள் உயரத்தில் வைத்திருக்கும் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள் மீண்டும் இணைந்த “எங்கிருந்தோ வந்தான்” படத்துக்கு முதலும் முடிவுமாக மனோவுக்கும் ஸ்வர்ணலதாவுக்கும் “அந்த ஶ்ரீராமனும்” பாடல் பாடும் பேறும் கிட்டியது.

புது வசந்த அலையில் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் Rajkumar Sa கைவண்ணத்தில் கொடுத்த “வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே” https://www.youtube.com/watch?v=QC9CbhoaH1I

அந்தப் படத்தின் மற்றைய பாடல்களோடு கூட்டணி போட்டு ஜெயித்தது.

மனோவை ஒரு துள்ளிசைப் பாடகராக மட்டும் அதிகம் பயன்படுத்தாமல் ஒரு அழகான இறை பக்திப் பாடலிலும் கனிவை எழுப்ப வைத்ததில் சிற்பி அவர்களின் 

“சரவண பவ என்னும் திருமந்திரம்” எப்போது கேட்டாலும் நெஞ்சை நிறைக்கும்.

https://www.youtube.com/watch?v=KkruAXBXXz8

அது போல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏராளம் பாடினாலும் அவரின் ஆரம்ப கால வசந்தம் “ஹலோ ஹலோ” https://www.youtube.com/watch?v=183ZJm9VtbU மனோ குரலில் கேட்கப் பிடித்தமானது.

மல்லிகைப் பூக்களை மெல்லிய உந்தன்

புன்னகை சிந்துதடி

மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்

கண்ணே.. உன் கைகளடி

https://www.youtube.com/watch?v=6QlClbSxzb8

“சின்னஞ்சிறு பூவே உன்னைத் தொடும் போதே 

மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே”

பாடலுக்கெல்லாம் தனிப்பதிவே அர்ப்பணித்துள்ளேன் அவ்வளவுக்குத் தேனிசை தடவிய தேவா இசையில் மனோவின் குரல் ஜானகியம்மாவுடன் இனிக்கும். இதைக் கேட்கும் போது அந்தத் தொண்ணூறுகளின் வசந்தம் கண்களில் பனிக்கும்.

அந்தப் பாடல் ரசனைக்குப் பின்னால் ஒரு வலி நிறைந்த சோக வரலாறு உண்டு, அதைப் பின்னால் சொல்கிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மனோ

கானா பிரபா

26.10.2023

0 comments: