Pages

Friday, September 23, 2022

பாடகர் குமார் சானு தமிழில் பாடிய பாட்டு

தமிழ்ப் பாடல்களை மட்டும் தீவிரமாக மோகித்துக் கொண்டிருந்த எனக்கு,

“அட இப்படியெல்லாம் திரவியம் இருக்கே” என்று எண்ண வைத்தது

பர்தேஷ் படத்தில் வந்த “Do Dil Mil Rahe Hain” https://www.youtube.com/watch?v=eKIpHujNdX0 அந்தப் பாடலை மட்டுமே நாள் முழுக்க வாக்மேனில் வைத்துக் கேட்ட காலமெல்லாம் உண்டு. 

பின்னர் இன்னொரு மெலடி “குச் நா ஹ ஹோ” https://www.youtube.com/watch?v=hH79321JJQ0 மெல்பர்னில் தனிமையின் தவிப்பில் இருந்த புலம் பெயர் வாழ்வின் ஆரம்ப காலத்தைக் கிளப்பி விடும் அந்தப் பாடலை நினைத்தாலே.

ஆர்.டி.பர்மன் கொடுத்த இறுதிச் சொத்து என்ற ஆன்ம பந்தமும் பின்னாளில் சேர்ந்து கொள்ள எப்படியோ தமிழைத் தாண்டி என் வாழ்வில் அதிகம் நேசிக்கும் இரண்டுமே குமார் சானு என்ற பாடகரின் குரல் வழிப்பட்டது என்றாகி விட்டது.

பாடகர் குமார் சானு வட இந்தியாவில் எண்பதுகளில் தோன்றிய பேரலை. அந்த நாசிக் குரல் இல்லாத படங்களே இல்லை எனுமளவுக்கு ஒரு பேராட்சி நடத்திய போது மெல்ல மெல்ல ஹிந்திப் படவுலகிலும் புதிய புதிய நாயகர்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட, இன்னோர் பக்கம் புதிய இசை அலையும் தோற்றம் பெறுகின்றது.

நதீம் & ஷ்ரவன் இரட்டையர்களின் இசையில் பேரெழுச்சி கொடுத்த “சாஜன்" படம் தமிழிலும் மொழி மாற்றம் காண்கின்றது.

அந்த வகையில் ஒரு மொழி மாற்றுப் படத்தில் 2 பாடல்கள் என்ற கணக்கில் குமார் சானு பாடியளிக்கின்றார். 

“எந்தன் நெஞ்சில்", “நிலா வெண்ணிலா” ஆகிய பாடல்கள் பாடகி டி.கே.கலாவோடு சேர்ந்து.

https://www.youtube.com/watch?v=9vNY0BEx8Pk&t=2299s

ஆனாலும் நேரடி ஹிந்திப் பாடல்களையே கேட்டுக் கிறங்கிய தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் பாடல்கள் அவ்வளவு பரிச்சயம் இல்லை.

பிரசாந்த் நடிக்க, தந்தை தியாகராஜனே தயாரித்த இன்னொரு படமாக “மன்னவா” உருவாகின்றது. அந்தப் படத்தின் இசை தேனிசைத் தென்றல் தேவா. இங்கே தான் குமார் சானு 

நேரடியாகத் தமிழில் முதன் முதலில் பாடிய “யம்மா யம்மா” https://www.youtube.com/watch?v=ZEJb5mjZXUM  பிறக்கின்றது. பாடலை கவிஞர் வாலியார் எழுத ஒரு மணி நேரத்துக்குள்ளேயே ஒத்திகை பார்த்து குமார் சானுவின் அபரிதமான பங்களிப்பால் பாடல் பதிவானது என்று குறிப்பிடுகின்றார்கள் இந்தப பாடல் பிறந்த கதையை. 

மன்னவா படம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் குமார் சானு தமிழில் அதற்குப் பின்னர் பாடும் வாய்ப்பு கிட்டவில்லை.

குமார் சானு முக்கிய இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பாடிய பெருமையைத் தக்க வைத்திருக்கின்றார். அதில் தமிழில் தேவா இசையோடு என்று இந்தப் பாடல் அமைந்துள்ளது.

மன்னவா பாடல் ஒத்திகை படம் நன்றி பிரசாந்த் தளம்

கானா பிரபா

23.09.2022


0 comments: