Pages

Tuesday, September 6, 2022

நேருக்கு நேர் 25 ❤️ தேவாவின் தேனிசையில்



நேருக்கு நேர் படம் வந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆனதை நடிகர் சூர்யாவின் ட்விட்டர் பகிர்வு ஞாபகப்படுத்தியது. காரணம் சூர்யா நடிகராக அறிமுகமாகியும் இன்றோடு 25 ஆண்டுகள் தான்.

மணிரத்னம் தனது நண்பர் ஶ்ரீராமோடு படங்களைத் தயாரித்த போது 

ஆரம்பத்தில் “ஆலயம்" என்ற தயாரிப்பு நிறுவனமாகவும், பின்னர் மெட்ராஸ் டாக்கீஸ் ஆன போது வெளியார் என்ற வகையில் இயக்குநர் வஸந்த் ஐ “ஆசை” படத்தை இயக்க வைத்தார். 

தேவாவின் புத்துணர்வான இசையோடு படத்தின் திரைக்கதையோட்டமும் சேர அஜித்குமாருக்கு ஒரு நம்பகரமான வெற்றியை நிறுவியது.

அதன் பின்னர் மணிரத்னத்தின் நேரடித் தயாரிப்பில் மீண்டும் அஜித்குமார் & விஜய் கூட்டணியில் “நேருக்கு நேர்" உருவாகிறது.


கதை என்னமோ அக்னி நட்சத்திரத்தில் இருந்து உருவிய இன்னொரு முட்டல் மோதல் தான். 

இதற்கு முன்னர் “ராஜாவின் பார்வையிலே” படத்தில் இருவரும் இணைந்திருந்தாலும் அதில் அஜித்துக்குத் துக்கடா வேடம் தான்.

ஆனால் “நேருக்கு நேர்" படப்பிடிப்பின் தொடக்கத்திலேயே அஜித்குமார் விலகிக் கொள்ள விஜய் பரிந்துரையில் சரவணன் என்ற சிவகுமாரின் மூத்த பையன் சூர்யாவாக அறிமுகமாகிறார். 

ஆனால் ஆறாண்டுகள் முட்டி மோதி, இடையில் படங்கள் சரியில்ல்லாமல் போய் விஜய் சூர்யாவுக்குக் குரல் கொடுத்த “பெரியண்ணா”, 

நிஜத்தில் தானும் தன் தம்பியோடு இப்படி மல்லுக்கட்டுவேன் என்று “உயிரிலே கலந்தது" எல்லாம் கண்டு, 

 “நந்தா”வுக்குப் பின்னர் உயர்ந்த அவரின் நடிப்பின் ஏற்றம் எல்லாம் தனியாகப் பேச வேண்டியது. அதுவும் “மெளனம் பேசியதே” சூர்யா எனக்கு என்றைக்கும் பிடித்தவர்.

“நேருக்கு நேர்" படத்தில் மீள் வரவாக நடிகை சாந்தி கிருஷ்ணா, சேலை காட்டாத, ஜீன்ஸ் போட்ட நவ நாகரிக அழகியாக கெளசல்யா, இதற்கு முந்திய ஒன்ஸ்மோர் இல் விஜய் ஜோடியானவர் அறிமுக நாயகன் சூர்யாவுக்காக என்று சிம்ரன் கச்சிதமாக இருப்பார்.

“நேருக்கு நேர்” படத்தை நினைத்தாலேயே முந்திக் கொண்டு நினைப்பில் வருவது தேவாவின் தேனான இசை தான். ஒவ்வொரு பாட்டும் லட்டுகள். “அகிலா அகிலா” பாட்டில் மட்டும் பாப் மார்லியிடம் கை நீட்டினாலும், “எங்கெங்கே எங்கெங்கே” பாட்டால் அந்தக் குறையை மறக்கடித்து விட்டார் தேவா.

இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், ரஹ்மான் வரிசையில் தேவாவும் ஆஷா போஸ்லே ஐப் பாட வைத்துப் புண்ணியம் தேடிக் கொண்டார்.

ஹரிஹரனும், ஆஷாவும் ஜாலம் செய்யும் இசைப் பிரவாகம் அந்தப் பாட்டு. அந்தப் பாடல் எல்லாம் தேவாவின் திரையுலக வாழ்வின் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய முத்திரைப் பாட்டு.

“கொஞ்ச நாள் பொறு தலைவா” (ஆசை) ரேஞ்சில் இங்கே “அவள் வருவாளா” பாடலில் ஹரிஹரனையும், சாகுல் ஹமீதையும் இணைத்துக் கொடுத்த வித்தை இன்னொரு அழகியல்.

“துடிக்கின்ற காதல்” பாடல் மட்டும் தேவாத்தனமாக இருக்கும்.

அந்தக் காலத்தில் உன்னிகிருஷ்ணனுக்கும் ஒன்று என்று ஒரு பாடல் நேர்ந்து விடப்பட்டிருக்கும். அது போலவே இங்கும் ஹரிணி தனியாகவும், உன்னி கிருஷ்ணன் தனியாகவும் பாடிய “மனம் விரும்புதே உன்னை” பாடல் அமைந்தது.

ஆசை, நேருக்கு நேர் படங்களின் பாடல்களில் ஒரு புத்துணர்ச்சி மட்டுமல்ல, ஒலித்தரத்திலும் தேவாவை உச்சிக்குக் கொண்டு போனவை அவை.

அந்தக் காலத்தில் மெல்பர்னில் படங்களை University இல் இருக்கும் திரையரங்கில் தான் போட்டுக் காட்டுவார்கள். அந்தச் சமயம் மெல்பர்னில் படித்துக் கொண்டிருந்த நானும் Agora Cinema, La Trobe University இல் பார்த்ததும் என் ஆரம்ப காலத்து ஆஸி வாழ்வின் பசுமையான நினைவுகளை மீட்கும்.

கானா பிரபா

06.09.2022

புகைப்படங்கள் IMDB மற்றும் Thandora


0 comments: