Pages

Wednesday, December 21, 2016

தமிழ்த் திரையிசை அலசல் 2016 - இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன்


"கண்ணக் கட்டிக் காட்டில் விட்டுப் போறாளே கண்ணழகி கண்ணழகி தானே" https://www.youtube.com/shared?ci=Cld8cBAMpTc  இந்தப் பாடல் வெளி வந்து சில வாரம் தான் ஆகியிருக்கிறது. ஆனால் இப்போது அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இத்தனைக்கும் பாடல் இடம் பெற்ற "காலக் கூத்து" என்ற இந்தப் படமே இன்னும் வெளிவராத நிலையில் பாடலைத் தேடிக் கேட்க வேண்டும் என்ற தூண்டுதலை உண்டு பண்ண முக்கிய காரணம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தான். அவ்வளவு தூரம் இசை ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இடம் பிடித்திருக்கிறார்.

ஒரு திரைப் படைப்பாக்கத்துக்கு வெறும் நாலு பாடல்களை இசையமைத்துப் பிரபலப்படுத்தி விட்டுப் போய் விட்டால் சரி என்ற நிலையில் தான் சமீபகாலப் போக்கு நிலவுகிறது. ஆனால் குறித்த திரைப்படத்தின் பின்னணி இசையும் உயிர் நாடி என்பதையும் உணர்ந்து சிரத்தையோடு இசை பண்ணிக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. அந்த மிகச் சிலரில் ஜஸ்டின் பிரபாகரன் ஒரு முழுமையான இளைய தலைமுறை இசையமைப்பாளர். அதனால் தான் அவருக்கு "இசை இளவல்" என்ற பட்டம்  இட்டேன்.
"பண்ணையாரும் பத்மினி" படத்தில் தொடங்கி இன்று வரை இவர் இசையமைத்த படங்களைத் தேடி நுகர்வோர் இதை உணர்வர்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை "ஒரு நாள் கூத்து" திரைப்படம் ஜஸ்டின் பிரபாகரனுக்கு அழகிய பூங்கொத்தைக் கொடுத்துக் கெளரவித்தது.
தனிப்பட்ட என் ரசனையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில், தான் எடுத்துக் கொண்ட கருவை வெகு கச்சிதமாகக் காட்சியமைப்போடும் உணர்வு பூர்வமாகவும் கொடுத்த படமாக "ஒரு நாள் கூத்து" படத்தையே முன் வைப்பேன்.
"எப்போ வருவாரோ" https://www.youtube.com/shared?ci=iq4nXbb9ols என்ற கோபால கிருஷ்ணபாரதியாரின் பாடலை மீள் இசையில் அழகாக வடிவமைத்ததோடு ஹரிச்சரணின் பொருத்தமான குரலையும் சேர்த்ததால் ஆகத் திறமான படைப்பாக இந்தப் படத்தின் கதையோட்டத்துக்குத் துணை புரிந்திருக்கிறது.
அத்தோடு "அடியே அழகே" https://www.youtube.com/shared?ci=wF5NOayV9Ug பாடலில் தோய்த்தெடுக்கப்பட்ட காதல் பிரிவின் துயர் காட்டும் அழகியல். இது ஆறு மில்லியன் பார்வையைக் கடந்திருக்கிறது YouTube இல்.
அத்தோடு துள்ளிசை ஏரியாவிலும் கலக்குவேன் என்று காட்டிய "பாட்டைப் போடுங்க ஜி" https://www.youtube.com/shared?ci=emnxMbcqfhg என்று பண்பலை வானொலிகளுக்குச் செமத்தியான தீனியைக் கொடுத்திருக்கிறார். "ஒரு நாள் கூத்து" பாடல்கள் கடந்த ஆண்டே வெளியாகி விட்டாலும் இந்த ஆண்டு படமும் பாடல்களும் ஒரு சேரப் பரவலாகப் போய்ச் சேர்ந்தன.

ஒரு திகட்டத் திகட்ட காதல் பின்னணி கொண்ட ஒரு படம் ஜஸ்டின் பிரபாகரனுக்குக் கிட்டினால் மனுஷர் அடி பின்னி விடுவார் போல அத்தனை இசைக் குணவியல்புகளும் அவருள் இருக்கின்றன.

தொடர்ச்சியாக நல்ல படைப்புகளில் பணியாற்றக் கிடைப்பது ஒரு வரம். அத்தகு நிலை ஜஸ்டின் பிரபாகரனுக்குக் கிட்டியிருப்பதை இந்த ஆண்டில் வெளிவந்த "ராஜா மந்திரி" படமும் நிரூபித்தது.
ஏற்கனவே பண்பலை வானொலிகளின் ஆசீர்வாதம் வேறு இவருக்கு இருப்பதால் "லெகுவா வெகுவா" 
https://www.youtube.com/shared?ci=uf8sP05ABQc பாடல் தான் இந்தப் படத்தில் எனக்கு முதலில் பிடித்துப் போன பாடலாக அமைந்தது. படம் பார்க்கும் போது அப்பாவிக் கிராமத்தான் படிக்காத அண்ணன் காளி வெங்கட்டுக்கு அச்சொட்டாகப் பொருந்தக் கூடிய குரலாக ஏ.சி.எஸ்.ரவிச்சந்திரனை வைத்து "எதிர்த்த வீட்டு காலிஃபிளவரே" https://www.youtube.com/shared?ci=k_mT-UL0Xq8 பாடல் வரிகளில் கூட அந்தக் காட்சி நுட்பத்தை உணர்ந்த வகையில் கொடுத்து வசீகரித்தது. இன்னொன்று "ஸ்நேகிதியே ஸ்நேகிதியே நீ சிரித்தால் போதுமடி" https://www.youtube.com/shared?ci=1ymXr0vFOrA என்று தன் அக்மார்க் மெலடி அட்டகாசத்தையும் காட்டி விட்ட வகையில் "ராஜா மந்திரி" படப் பாடல்களும் முத்திரைப் பாடல்களாக அமைந்தன.

"காலக் கூத்து" மற்றும் "உள் குத்து" படங்கள் இன்னும் வெளி வரவில்லை. காலக் கூத்து படத்தில் ஹரிச்சரணுக்கு அழகிய பொருத்தமாக அமைந்த "கண்ணை கட்டிக் காட்டில் விட்டுப் போறாளே" பாடல் தற்போது வெளியாகியிருக்க மீதிப் பாடல்களுக்குக் காத்திருக்கிறோம்.
உள் குத்து படத்திற்காகக் கொடுத்த
"பெசையும் இசையா என் காதுக்குள்ள கேக்குறான்" https://www.youtube.com/shared?ci=-nz1qMqPdVQ வந்தனா ஶ்ரீனிவாசனுக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷப் பாட்டு. இதே படத்தில் இடம் பிடித்த "குறு குறு கண்ணால்" பாடல் உருவாக்கத்தை முதலில் பார்த்து விட்டு https://www.youtube.com/shared?ci=v3PCYnOlR6Y பின்னர் அதைத் தனியே கேட்கும் இன்பமே தனி https://www.youtube.com/shared?ci=QHeBmT55v1k
இந்தப் பாடலை லதா கிருஷ்ணாவுடன் ஜஸ்டின் பிரபாகரனும் இணைந்து பாடியிருக்கிறார்.

கொசுறுச் செய்தியாக மலையாளக் கரையோரம் போய் "குஞ்சி ராமாயணம்" 

அந்தப் படப் பாடல்களைக் கேட்க 
https://www.youtube.com/shared?ci=XF5_QavpqXo

புதுப் புது இயக்குநர்களோடு ஒவ்வொரு படம், இன்னார் மட்டும் என்றில்லாமல் எல்லாப் பாடலாசிரியர்களோடும் பணி புரியும் திறன் போன்றவை இவருக்குக் கிட்டிய மேலதிக பெறுமதிகள்.

ஜஸ்டின் பிரபாகரன் என்ற மிகச் சிறந்த இளம் படைப்பாளிக்குத் தேவை ஒரு பரவலான மக்கள் வட்டத்துக்குச் சென்று சேரக் கூடிய ஒரு நட்சத்திர வெற்றி. அதை வெளி வர இருக்கும் படங்களோடு 
சமுத்திரக்கனி இயக்கத்தில், காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் தயாரித்துக் கொடுக்கவிருக்கும் "தொண்டன்" படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

(தொடரும்)

இந்தத் தொடரின் முந்திய பதிவு
http://www.radiospathy.com/2016/12/2016.html

0 comments: